Sunday, 1 March 2015

தேசிய அறிவியல் தினவிழா

பண்ருட்டியில் தேசிய அறிவியல் தினவிழா
         28 -02-2015 ,ஸ்வாசிகா இயக்கம் பண்ருட்டியில் தேசிய அறிவியல் தின விழாவைக் கொண்டாடியது .பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக்  பள்ளியில் நடைபெற்ற இந்த அறிவியல் திருவிழாவில் 1000-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துகொண்ட இந்த அறிவியல் திரு விழாவிற்கு திருவள்ளுவர் பள்ளியின் தாளாளர் திரு சேரன் அவர்கள் தலைமை தாங்கினார் . மீனாட்சி மெடிகல்ஸ் உரிமையாளர் திரு சந்திர குப்தா  அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார்.ஸ்வாசிகா நிறுவனர் முத்துக் குமரன் அனைவரையும் வரவேற்றார்,செயலர் சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார்.அறிவியல் கண்காட்சி, வினாடி வினா ,கவிதை ,பேச்சு .கலைப் பொருள் உருவாக்கம் ,ஓவியம் உள்ளிட்ட பல போட்டிகள் நடை பெற்றன.பண்ருட்டி வட்டத்தில் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.விழாவின் துவக்கத்தில் கடந்த கல்வியாண்டில் 10, 12 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்விப் பேரரசர் விருது, கல்விக்கரசர் விருது ,பள்ளி முதல்வர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன .விநாடி வினா போட்டியில் திருவள்ளூர் பள்ளியும், அறிவியல் கண்காட்சியில் ஜான்டூயி பள்ளியும் முதல் பரிசுக் கோப்பையை வென்றன . அதிக கண்காட்சிப் பொருட்களை இடம் பெற செய்து அதற்கான கோப்பையை செயின்ட் ஆன்ஸ் பள்ளி தட்டிச் சென்றது .ரங்கப்பன் செட்டியார், s v  ஜுவல்லர்ஸ் அருள் ,வாசவி கிளப் தலைவர் சத்திய நாராயணன் ,யாமினி புட்ஸ் உரிமையாளர் ,திருவள்ளுவர் பள்ளியின் முதல்வர் சரவணன் ,புலவர் பொன்வேந்தன், பாலூர் ஆசிரியர் முத்துக்குமரன்,வேல் சிஸ்டம்ஸ் வெற்றி வேலன் ஆகியோர் கலந்துகொண்டனர் ஸ்வாசிகா தலைவர் ராஜலிங்கம் நன்றி கூறினார் .ஸ்வாசிகாவின் பொறுப்பாளர்கள் விழா ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர் .

Friday, 20 February 2015

MESSENGER OF PEACE STAR -2014

     MESSENGER OF PEACE STAR -2014 ........என்ற பெருமை மிகு சர்வ தேச விருது கிடைத்துள்ளது ,இதனை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உயர்திரு .ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார் .சாரண இயக்கம் ஒரு சர்வதேச இயக்கமாகும்.இதில் உலகமெங்கும் உள்ள சாரணர்கள் உறுப்பினர்களாக இணைந்து சாரணர் சேவை ஆற்றி வருகின்றனர்.நமது பள்ளியின் சாரண ஆசிரியர் முத்துக்குமரன் அவர்களும் இதில் இணைந்து தம் பள்ளி சாரணர்களின் சேவைகளை SCOUT.ORG என்னும்   இணைய தளத்தில் பதிவேற்றி  வந்துகொண்டிருக்கிறார் .பல்வேறு நாடுகளை சேர்ந்த சாரணர்களும் உலக அமைதிக்காகவும் ,நல வாழ்வுக்காகவும் ,தம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தமது பங்களிப்பைத் தந்து அது பற்றிய விபரங்களை   ...........என்ற இந்த இணைய தளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் சாரண ஆசிரியர் திரு முத்துக் குமரன் அவர்களுக்கு  உலக அளவிலான
        இதில் சாரணர் சேவையில் தொண்டு நேரக் கணக்கில் பிலிப்பைன்ஸ் நாடு முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது .இந்திய நாட்டின் MESSENGER OF PEACE குழுமம் தனது பங்களிப்பாக இரண்டு மில்லியன் தொண்டு நேரங்களை ( SERVICE HOURS )-அதாவது -இருபது லட்சம் தொண்டு நேரங்கள் - அளித்துள்ளது .அதில் நமது சாரண ஆசிரியர் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபது மூன்று தொண்டு நேரங்களை பதிவு செய்து பங்களித்திருக்கிறார் .இந்திய நாட்டின் MESSENGER OF PEACE குழுமம் தனது பங்களிப்பாக இரண்டு மில்லியன் தொண்டு நேரங்களை ( SERVICE HOURS )-அதாவது -இருபது லட்சம் தொண்டு நேரங்கள் - அளித்துள்ளது .அதில் நமது சாரண ஆசிரியர் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபது மூன்று தொண்டு நேரங்களை,43 வகையான சேவை நிகழ்வுகளை  பதிவு செய்து பங்களித்திருக்கிறார் . அந்த வகையில் உலகமெங்கும் மிகச் உள்ள சிறந்த சாரணர்களை -சிறந்த சேவைக்காக தேர்வு செய்து அவர்களுக்கு MESSENGER OF PEACE STAR என்ற உயரிய விருதினை உலகளாவிய சாரண இயக்கம் வழங்கி அவர்களை பெருமைப் படுத்தி வருகிறது .அதற்காக இந்த வருடம் இவ்விருது வழங்கும் விழாவானது , இந்தியாவில் ,கொல்கத்தா மாநிலத்தில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள மத்தியம்கிராம் என்னும் ஊரில் இயங்கி வரும் மாவட்ட சாரண பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெற்றது .நாடெங்கும் இருந்து 22 சாரண சாரணியர் தேர்ந்தெடுக்கப்பட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டனர் .அதில் கலந்துகொள்வதற்காக நமது சாரண ஆசிரியர் முத்துக்குமரன் அவர்கள் தனது மனைவி த்திருமதி புவனேஸ்வரியுடன் சென்றார்.அங்கு நடைபெற்ற அந்த சரவதேச பெருமை மிகு விழாவில் உலக சாரண இயக்கத்தின் ஆசிய பசிபிக் மண்டல இயக்குனர் உயர் திரு R .ரிசால் பெங்கினைன் அவர்கள் முன்னிலையில் நமது நாட்டின் தேசிய முதன்மை சாரண ஆணையர் உயர்திரு I .B . நாகரலே அவர்கள் கரங்களால் MoP ஸ்டார் 2014  விருதும் ,சான்றிதழும் ,சிறப்பு ஸ்கார்ப்பும் வழங்கப்பட்டன . இதற்காக இவரை நமது MESSENGER OF PEACE -இந்தியக் குழுமத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர் உயர்திரு கிருஷ்ணசாமி ராமமூர்த்தி அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.அந்த விருதை பெற்றுள்ள ஒரே தமிழர்,அதுவும் நமது கடலூர் மாவட்டத்தை சார்ந்த பண்ணுருட்டி அரசு மேல் நிலைப் பள்ளியின் சாரண ஆசிரியர் என்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும் என்று தலைமை ஆசிரியர் பாராட்டினார்.
        இந்நிகழ்வின்போது பள்ளியின் ஆசிரியர் சங்க செயலர் திரு மோகன் ராஜ்,NCC அலுவலர் திரு பாலச்சந்தர் ,NSS அலுவலர் திரு மோகன் குமார் ,முதுகலை  தமிழாசிரியர் திரு ஞான சேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.முன்னதாக சாரண ஆசிரியர் மாவட்ட செயலர் திரு செல்வநாதன் அவர்களுடன் சென்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் மாவட்ட சாரண முதன்மை ஆணையருமான திரு பாலமுரளி அவர்களையும் ,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சுரேஷ் குமார் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் .விருது பெற்ற சாரண ஆசிரியர் முத்துக் குமரன் அவர்கள் கூறுகையில் சாரண இயக்கத்தில் தன்னை வழி நடத்திய மூத்த சாரனாளர்கள் திரு ராமலிங்கம், திரு ராம மூர்த்தி ,திரு இளைய குமார், திரு வேலாயுதம் ,திரு செந்தில் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு தனது தலைமை ஆசிரியர்களின் ஒத்துழைப்புக்கும் ,சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.மேலும் இவ்விருதினை தனது அத்துணை சாரண மாணவர்களுக்கும் அர்ப்பணித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார் .மேலும் சாரண ஆசிரியர் முத்துக் குமரன் அவர்கள் 80 க்கும் மேற்பட்ட ராஜ்யபுரஸ்கார் (ஆளுநர் விருது ) சாரணர்களையும் ,2 ராஷ்டிரபதி (  குடியரசுத்   தலைவர் விருது  ) சாரனர்களையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
   
       

Thursday, 8 January 2015

மன வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழா

 



மன வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து நேரில்
வாழ்த்தி சிறப்பித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் .சந்தர்ப்ப சூழலின் காரணமாக .நேரில் வர இயலாவிட்டாலும் முகநூல் மற்றும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் .விழாவின் வெற்றிக்கு அடிநாதமாக இருந்த என் அன்பு மாணவச் செல்வங்களுக்கு -குறிப்பாக மகேஷ்,சரவணன், ராஜலிங்கம்,மதன் ,சுந்தர்,கிருஷ்ணன்,ராஜி ,ரூபி,ப்ரியா,யுவநிதி ,நிரஞ்சன் பாலாஜி மற்றும் பல மாணவர்களுக்கு -மூன்றெழுத்தில் நன்றி என்ற ஒற்றைச் சொல் கூறி என் உள்ளத்தின் அத்துணை உணர்வுகளின் நெகிழ்ச்சிக் கலவையை அர்ப்பணிக்கின்றேன்.இன்னொரு செய்தியும் கண்டிப்பாக இங்கே குறிப்பிட்டே ஆக  வேண்டும்.எங்கள் பகுதியில் வசிக்கும் ஒரு ஆசிரிய சகோதரிக்கு விழாவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி கூறிய போது அவர் இவ்வாறு கூறினார்..."விழா மிக சிறப்பாக இருந்தது ...குறிப்பாக உங்கள் நூலை நேற்று இரவே வாசித்தேன்... எல்லா கவிதைகளுமே மிக அருமை ...குறிப்பாக நிறைய கவிதை வரிகள் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளுக்கும் பொருந்திப் போகின்றன ....சில வரிகள் என் வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்தது போல் உணர்கிறேன் " என்று சொல்லும்போதே அவரது கண்கள் சிவந்து கண்ணீரை எட்டிப் பார்க்கச் செய்தன. அந்தக்  கண்ணீர் துளிகளை நான் என் கவிதை வரிகளுக்கான அன்கீகாரமாய்க் கருதுகிறேன்.....என் 1000 பிரதிகளுக்கான  விலையாகக் கருதுகிறேன்... அந்த 1000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததாய் உணர்கிறேன்....நன்றி சகோதரி...!அதே போல் அங்கு செட்டிப் பாளையம் ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் சாரதா பள்ளியின் நிர்வாகி நடராஜன் அய்யா போன்றோர் 6 நூல்களை வாங்கி தன நண்பர்களுக்கு பரிசளித்ததாகக் கேள்வியுற்றேன்.மிக்க நன்றிகள் அவர்களுக்கும் .எனது நூல்களை வாசித்த பிற முக நூல் நண்பர்களின் எனது நூல் பற்றிய கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளேன்...!

Wednesday, 10 December 2014

பாரதி

பாரதி ....
 பாரதத்தின் பெயரையே தன பெயரிலும் கூட சுமந்தவன் 
 பெயரில் மட்டுமா 
 நெஞ்சிலும் கூட அல்லவா ...
 தேடிச் சோறு நிதம் தின்று 
 என்ற பாடலுக்குத் தன்னையே உதாரணமாக்கி 
 வாழ்ந்து மறைந்தவன் பாரதி ...
 மறைந்தது அவன் உடல் மட்டும்தான் ...
 அவன் உணர்வுகள் இன்னும் உலகம் முழுக்க 
 வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன 
 கவிதைகள் வடிவில் ...
 பாட்டுக்கொரு புலவன் ,முண்டாசுக் கவிஞன்,....
 அவன் தனது முறுக்கு மீசையில் மட்டும் 
 தனது இந்த சமூகத்தின் அவலங்களுக்கு எதிரான 
 தன் கோபத்தை வைத்திருக்கவில்லை ...
 மாறாக தன்  கண்களிலும் கவிதைகளிலும்கூட வைத்திருக்கின்றான் ...
 அவன் உணர்வுப் பிழம்பு 
 கருத்துக் கனல் ...
 சிந்தனைப் புயல் ....
 செயல் சூறாவளி ...
அவன் ஒரு நல்ல கணவன் இல்லை ...
 நல்ல தகப்பனில்லை ...
 சராசரி மனிதனுமில்லை ....
 ஆனால் அப்படி இல்லாததனால்தான் 
 மிகுந்த  போற்றுதலுக்குரிய இந்தியனாக ...
 மிக நல்ல தமிழனாக 
 மிக உயர்ந்த  மனிதனாக ...வாழமுடிந்தது 
 நாம் ஒவ்வொருவரும் பாரதியைப் போல வாழாவிட்டாலும் அவனைபின்பற்றி வாழ முயலுவோமே ...!






Saturday, 6 December 2014

யுவஸ்ரீ கலா பாரதி விருது

யுவஸ்ரீ கலா   பாரதி விருது 

                      எங்கள் பள்ளி மாணவர்களுள் கலை ,விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு யுவஸ்ரீ கலா பாரதி  என்ற பெருமை மிகு விருது 06-12-2014-சனிக்கிழமை  அன்று வழங்கப்பட்டது .மதுரை ,கோச்சடை என்னும் ஊரில் இயங்கி வரும் பாரதி யுவக் கேந்திரா என்ற தன்னார்வ அமைப்பு இதனை வழங்கியது .நெல்லை பாலு என்பவர் இதன் நிறுவனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
        காடாம்புலியூரில் நான் பணியாற்றியபோது கூட அங்கிருந்த மாணவர்கள் வினோத் ,சோழவேந்தன்,ஜெயபாலன்,ஜெயரட்சகன் உள்ளிட்டோருக்கு இவ்விருதுகளுக்கு விண்ணப்பித்து புதுவையில்  இவ்விருதுகளை பெற்று வந்தது குறிப்பிடத் தக்கது .பெரியவர்களாகியபின் சாதனைகள் புரிந்தால்தான் விருதுகள் பெற முடியும் என்ற நிலைமை மாற்றி சிறுவர் சிறுமியரும் அவர்களின் வயதுக்கேற்ற சாதனைகள் புரியும்போது அவற்றை அங்கீகரித்து அவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவப்படுத்துகின்ற நெல்லை பாலு அவர்களின் பெருந்தன்மை நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த  மாணவ மாணவியர்களுக்கு தன்னபிக்கையும் உற்சாகமும் பெருகி மேலும்  மேலும் சாதனைகள் புரிய உந்து சக்தியை வழங்கும் என்பதில் ஐயமில்லை .இதற்கும் முன்னரே என் அன்புக்குரிய மாணவன் சுந்தர் என்பவருக்கும் இந்த விருதை பெற வைத்தது மிக்க மகிழ்ச்சிக்குரியது .
              
           இந்த வருடம் எங்கள் பள்ளியின் மாணவர்கள் முரளி கிருஷ்ணன் (இசை)
சுரேந்திரன் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்),ராஜவிக்னேஷ் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்,வினாடி வினா),ராஜி (கட்டுரை),முகம்மது ஆஷிக் அலி (ஓவியம்),சரத்குமார் (அறிவியல் ஆய்வு) ஐயப்பன் (சிலம்பம், ஓவியம்),சபரிநாதன் (சிலம்பம்,),ஜெயவேல் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்),,திலீபன்(வினாடி வினா)ஆகிய மாணவர்கள் விருதுகளை பெற்றார்கள்! அந்த விருதுகளைப் பெற்ற மாணாவர்களின் முகங்களிலும், பெற்றோர்களின் முகங்களிலும் அப்படியொரு பெருமிதம் . அத்துடன் எனது தங்கை மகள் தரணீ ஸ்வரி ( ஓவியம் & இசை ) அவ்விருதைப்  பெற்றது எனக்குப் பெருமிதம் அளித்தது .
           விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .!
    











Thursday, 4 December 2014

மனப்பண்புகள்

        சமீபத்தில் முக நூலில் ஆசிரியர் நாட்குறிப்பு என்ற 
           சக ஆசிரிய நண்பர் ,மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்தில் மனப்பண்புகளை வளர்க்கத்தவறுகிறோமோ?
என்று அங்கலாய்த்து இருந்தார் ....மனப்பன்புகளா ...? அப்படியென்றால் என்ன ? அது எங்கே கிடைக்கும் ...? கிலோ என்ன விலை ? என்று கேட்கும் நிலைக்கு ஏகப்பட்ட மாணவர்களும் அநேகமாக எல்லா பெற்றோர்களும் கேட்கும் நிலைக்குத் தள்ளப் பாட்டிருக்கிரார்கள் ...!
          மனப்பண்புகள் யாருக்கு வேண்டும்....?போய் குப்பையில் கொட்டுங்கள்...!பெற்றோருக்குத் தேவை ...வண்டி வண்டியாய்  மார்க்கு ...நல்ல காலேஜூல சீட்டு ...முடிஞ்சா வெளி நாட்டுல வேலை ...லட்ச லட்சமா பணம்... அதக் காரணம் காட்டி தன மகனுக்கு நல்ல பணம் காய்ச்சி மரமான பொண்ணு ....அவங்க வீட்டுல உறிஞ்சு எடுக்கற காரு ...பணம் ...தான் அனுபவிக்காத வசதிகளை தன் மகன் மூலமா அனுபவிசிடனும்னு துரத்துகின்ற வெறி....இன்னிக்கு படிச்ச ..படிக்காத ...அத்தனை பெற்றோர்களின் ...ஏன் ...ஆசிரியர்களாகிய நாம் உட்பட ...எல்லோருடைய எண்ணமே அப்படித்தானே இருக்கு ...! 
              முதலில்  தனியார் பள்ளிகள் மட்டுமே தேர்ச்சி விழுக்காட்டை முன்னிலைப் படுத்தி ஓடிக்கொண்டிருந்தன ...ஆனால் இப்போது அரசுப்பள்ளிகளே தேர்ச்சி சதவிகிதத்தை நோக்கி முடுக்கி விடப்பட்டுள்ளன...!இதற்கு மூல காரணம் அனைத்து உயரதிகாரிகள் ....அவர்கள் என்ன செய்வார்கள் ...? அவர்களது அதிகாரிகளுக்கு பதில் சொல்லி ஆகவேண்டுமே ...!எனவே அவர்களுக்கே தேவை ... மாணவர்களின் ஒழுக்கமோ ... கட்டுப் பாடான பள்ளிச் சூழலோ அல்ல ....!குறைந்த பட்சம் 90 % கு குறையாத தேர்ச்சி ...!எனவே அதிகாரிகள் ஒரு பக்கம் ...அடங்காப் பிடரி மாணவர்கள் ஒரு பக்கம் ...இடையில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவது பரிதாபத்துக்கு உரிய ஆசிரியர்களே ...!மாணவர்களை கண்டிக்கக் கூடாது ...தண்டிக்கக் கூடாது ...மனம் நோகும்படி பேசக் கூடாது ...ஆனால் அன்பாய் பேசித் திருத்தவேண்டும் ....அன்பாய் பேச ஆசிரியர்கள் தயார் ...கேட்டு உடனே திருந்தக் கூடிய சூழலிலா இன்றைய மாணவர் சமுதாயம் இருக்கிறது ..?இது எப்படி இருக்கிறது என்றால் ....அடுப்பு பற்ற வைக்கக் கூடாது ...பாத்திரம் வைக்கக் கூடாது ...ஆனால் சோறு மட்டும் தயாராகிவிடவேண்டும்....அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் ...முடியுமா...?அது போலத்தான்...!இந்த லட்சணத்தில் ஒரு உயரதிகாரி...ஆசிரியர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்," உங்களிடம் கொடுத்திருப்பது ஓட்டை சட்டி ...அது எங்களுக்கும் தெரியும் ...ஆனால் எங்களுக்கு கொழுக்கட்டை வெந்தாக வேண்டும்: "எப்படி இருக்கிறது கதை ...அதிகாரிகளின் வாயில் விழுந்து எழுந்திரிக்காமல் ...தன்  பணியை பாதுகாத்துக் கொள்வதே பெரும் தலைவலியாய்  இருக்கிற நேரத்தில்  ...நீதி போதனை வகுப்பாவது மண்ணாவது .... !
              அப்புறம் மாணவர்களுடன் நட்பாகப் பழகும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்களே ...அவர்கள் பிற ஆசிரியர்களுக்கு ...துரோகியாம் ...மாணவர்களுக்கு அதிக இடம் கொடுத்து மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் இருக்கும் பயத்தை (!?)நீக்கிவிடுகிறார்களாம் ...அது தெரியுமா உங்களுக்கு ...!
    நல்ல பழக்கங்களை ...வாழ்வியல் திறன்களை கற்பிக்கும் சாரண , நாட்டு நலப் பணி  இயக்கங்களில் உள்ள மாணவர்களையே கூட மதிப்பெண்களைக் காரணம் காட்டி அவர்களை மனதளவில் நசுக்கத் துடிக்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட ஆசிரியர்கள் முதலில் சிந்திக்க வேண்டும் ...!ஓவியம்,இசை ,நடனம், நாடகம் போன்ற தனித் திறன்களை,குழு மனப்பான்மையை வளர்க்கும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ...அதற்காகப் பாராட்டாவிட்டாலும்...நீ இதற்குத்தான் லாயக்கு ...படிப்பில் ஒன்னையும் காணோம் ...இதுல பெருசா கிழிச்சிட்டியா ...? போயி படிப்பப் பாரு ...இதெல்லாம் உனக்கு சோறு போடாது ...என்று மற்ற மாணவர்களிடையே நையாண்டி செய்யும் ஆசிரியர்கள்தன இன்றைய பள்ளிச் சூழலில் அதிகம் ...!
          இதே போல் சூழ்நிலை தொடர்ந்தால் ஆசிரியை ஒருவர் மாணவனால் கத்தியால் குத்தி பலி ... !கணினி ஆசிரியை  கன்னத்தில் மாணவர் அறைந்து காது கேட்கவில்லை ...போன்ற செய்திகள் ...சக மாணவனை குத்திக் கொன்ற மாணவன் போன்ற செய்திகள் என்றோ ஒரு நாள் வருவது போய் அன்றாட செய்திகளாய் மாறும் நிலை அருகில் இல்லை ...என்ன செய்யப் போகிறோம் நாம் ...? வெறும் சாட்சியாய் ...கையாலாகாத  தனமாய் நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர ...!