டிசம்பர்-11 மகாகவி பாரதியாரின் தினத்தை முன்னிட்டு புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியாரின் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தில் புதுவை கவிதை வானில் என்ற அமைப்பு கவிதாஞ்சலி ,இசையாஞ்சலி மற்றும் சித்ராஞ்சலி (ஓவியம் தீட்டுதல்) ஆகியவற்றை
09-12-2017 .சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்திருந்தது .ஏராளமான பள்ளி மாணவர்கள்,ஓவியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கவிதை வானில் அமைப்பின் நிறுவனர் திருமதி கலா விசு அவர்களின் அழைப்பின் பேரில் 6 ஆம் வகுப்பு மாணவர் மூவர் .7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ,8 ஆம் வகுப்பு மாணவர் மூவர் ,9 ஆம் வகுப்பு மாணவர் மூவர்,10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்,11 ஆம் வகுப்பு மாணவர் மூவர் என எங்கள் பள்ளி மாணவர்கள் 14 பேரை ஓவியம் வரைவதற்காகஅழைத்துச் சென்றிருந்தேன்.அனேகமாக கலந்துகொண்ட ஒரே அரசுப்பள்ளி எங்கள் பள்ளி மட்டுமே...! தனியார் பள்ளியின் மாணவர்களே அதிகம்.....ஒரு சிலரை பெற்றோரும் அழைத்து வந்திருந்தனர்.
அந்த இடத்திற்கு நான் செல்வதும் இதுவே முதல் முறை.அங்கிருந்த பாரதியாரின் அறிய புகைப் படங்கள், ஓவியங்கள் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தோம்.உள்ளே ஒரு ஹாலில் நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருந்தன.சிலர் இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தனர் ...!சில மாணவியர் பரத நாட்டிய நிகழ்வை நிகழ்த்தினார் ///சில மாணவர்கள் வரைந்துகொண்டிருந்தனர்.அவர்களுடன் அமர்ந்த எங்கள் பள்ளி மாணவர்களும் விதம் விதமாக ...வித்தியாசமான தோற்றங்களில் பாரதியாரை வரைந்தனர் .நான் முன்னரே வரைந்து எடுத்துச் சென்றிருந்த பாரதியாரின் 15 வகையான ஓவியங்களை காட்சிப் படுத்தினேன்.
முனுசாமி என்கின்ற சிற்பி களிமண்ணால் பாரதியாரின் உருவத்தை வடிவமைத்துக் கொண்டிருந்தார் .சில ஓவியர்கள் அமர்ந்து வரையாது தொடங்கியிருந்தனர்.நானு அமர்ந்து 7 நிமிடங்களுக்குள் பாரதி மற்றும் செல்லம்மாள் இவர்களின் உருவத்தை வண்ணமாகத் தீட்டினேன்.எம் பள்ளி மாணவர்கள் சிலர் பென்சில் ஷேடிங் முறையிலும் சிலர் வண்ண ஓவியமாகவும் வரைந்தனர் .ஒரு மாணவன் மணல் கொண்டு பாரதியாரை வரைந்தான் மற்றொரு மாணவர் பருப்பு வகைகள் ,கடுகு உள்ளிட்ட பொருட்களால் அலங்கரித்து வரைந்திருந்தான் .புதுவை மற்றும் காரைக்கால் பகுதி மாணவர்கள் சிறந்த வண்ணங்களைப் பயன்படுத்தி பாரதியின் உருவத்தை ஓவியங்களாகத் தீட்டினர் .
மீண்டும் எனது ஓவியங்கள் அடுக்கப்பட்ட பகுதிக்கு வந்தேன்.அங்கு எனது ஓவியங்களை ஒருவர் வியந்து பாராட்டிக்கொண்டிருந்தார் .அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரைப் பற்றி அவரிடமே வினவினேன்.அவரோ மிக அமைதியாக எனது பெயர் பாரதி என்றார் .பாரதிதாசனின் பேரன் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனின் மகன் என்றும் கூறி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார் .புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பேரன் என்பதை அறிந்து ஒருகணம் என்னுள் திகைப்பு நிலவியது...எவ்வளவு எளிமை?மறுகணம் திகைப்பு நீங்கி மகிழ்வுடன் அவரது கரம் பற்றிக் குலுக்கினேன்.மாணவர்களிடமும்
அவரை அறிமுகப்படுத்தினேன்.அவருக்கு என்னுடைய மனவண்ணங்கள் நூலை நினைவுப் பரிசாக வழங்கினேன்.அவர் முன்னிலையில் பாரதியாரைப் பற்றிய கவிதை ஒன்றை வாசித்து,பின்னர் பாருக்குள்ளே நல்ல என்ற பாரதியாரின் பாடலைப் பாடினேன்.நான் வரைந்த பாரதி செல்லம்மாளின் ஓவியத்தை அதன் வரைநேரம் அறிந்து வியந்து பாராட்டினார் .தந்து தாத்தா பாரதிதாசனின் உருவங்களையும் அவரது பிறந்த தினத்தையொட்டி அவரது படங்களை வரையுமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார்.அவருடன் நின்று எம் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்களுடன் குழுப்படமும் எடுத்துக்கொண்டோம்.
பின்னர் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்கள் .முக்கியமாக சிற்பி முனுசாமி மற்றும் சித்திரக் கவிஞர் ரவி உள்ளிட்ட பல ஓவியர்களின் அறிமுகத்திற்கு காரணமாக இருந்தது இந்நாள்.மாணவர்களுக்கும் இது புது அனுபவம். தாங்கள் வண்ணங்களை பயன்படுத்துவதில் உள்ள நிலைமை பற்றியும் அறிந்துகொண்டனர்.
புதுவைப் பள்ளி மாணவர்களை போல வித்தியாசமான வண்ணங்களை, வண்ணம் தீட்டும் உபகரணங்களை வாங்கவும் ஆர்வம் கொண்டனர்.எங்களுக்கு அழைப்பு விடுத்து அறிய வாய்ப்பை அளித்த திருமதி கலா விசு உள்ளிட்ட அனைவரிடமும் விடைபெற்றபோது பகல் 2.30 மணி .
பின்னர் புதுவைப் பகுதியின் பிரபல ஓவியர் நண்பர் சுகுமாரன் அவர்களோடு தொடர்பு கொண்டு புதுவையில் அன்றைய தினம் நடைபெறுகின்ற ஓவியக் கண்காட்சிகள் குறித்துக் கேட்டறிந்தேன்.மாணவர்களின் புதுவை விஜயம் மேலும் அவர்களுக்கு பலனளிக்க வேண்டுமே.அவர்களது ஆர்வம் ஓவியக் கலையின் மீது இன்னும் அதிகரிக்கவேண்டும் அல்லவா .அதனால் அருகிலிருந்த ஓவியக் கண்காட்சி அரங்கிற்கு அவரே வந்திருந்து அழைத்துச் சென்றார்.
பிரபல ஓவியர் புதுவை முனுசாமி அவர்களின் கண்காட்சி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில்(மேஷன் பெருமாள் ஹோட்டல் ) நடைபெற்றுக்கொண்டிருந்தது .அங்கு சென்று ஓவியங்களை பார்வையிட்டோம் அனைத்துமே நவீன ஓவியங்கள்.அக்ரலிக் மற்றும் என்னை வண்ணம் கொண்டு தீட்டப்பட்டவை.ரியலிசம் பற்றி மட்டுமே அறிந்திருந்த எம் பள்ளி மாணவர்கள் ஓவியங்களின் புதிய பரிமாணங்கள் கண்டு ...புதிய தளங்கள் கண்டு வியந்து பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து அமரன் ஆர்ட் கேலரிக்கு சுகுமாரன் எங்களை அழைத்துச் சென்றார். அங்கும் பல எண்ணற்ற விதம் விதமான ஓவியங்களை பார்வையிட்டனர்.நிச்சயம் அவர்களது ஓவியம் வரைவதன் மீதான தாகம் அதிகரித்து இருக்கும் .அமரன் ஆர்ட் கேலரியில் பண்ணுருட்டிப் பகுதியில் கிடைக்கப் பெறாத பல வண்ணம் தீட்டும் உபகரணங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.வாய்ப்புள்ள மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டனர்.
பின்னர் சுகுமாரன் சாருக்கு நன்றி கூறி மணக்குள விநாயகர் கோவிலைதரிசித்து ,அரவிந்தர் ஆசிரமம் சென்று அன்னை சமாதியின் அருகில் கண்மூடி தியானித்து ,புதுவைக்கு கடற்கரையின் காற்றை அனுபவித்து ...அண்ணல் காந்திசிலைக்கு ஹாய் சொல்லி ...நேரு பூங்காவின் ஆயி மண்டபத்தினருகில் ஓய்வெடுத்து புதுவையிடமிருந்து விடைபெறும் நேரம் சரியாக மாலை 6.30.குறிப்பாக மாணவன் பரத் என்பவனைத் தவிர மீதமுள்ள 13 பேருக்குமே இதுதான் புதுவைக்கு முதற் பயணம்...புதுவை மாநகருக்குள் நடத்திய சித்திரப் பயணம் நிச்சயம் மறக்கவே முடியாத ஆனந்த அதிசய அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.கண்டிப்பாக அடுத்தமுறை இவர்களை புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்திற்கு அழைத்து வரவேண்டும்.அது அவர்களது ஓவியக் கலையின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டும் அல்லவா ?
பாரதத் திருநாட்டின் கவிப் புதல்வனே பாரதத்தை பார்க்கே திலகமாக்கி சூட்டி மகிழ்ந்த பாரதியே சுதந்திரச் சூரியனின் கதிர்களை பேரொளியை பாரதத்தில் பரவாமல் தடுத்திட்ட ஆங்கிலேயக் காடுகளை விடுதலை உணர்வை கவிதை நெருப்புகளாய் வீசியெறிந்து வனமழித்த எம் அக்கினிக் குஞ்சே ... வெந்து தணிந்தது காடு...உன்னால் வந்தது ஆனந்த சுதந்திரம் அன்று....!
ஆனால்...அந்தோ இன்று கொள்ளையர் கூட்டத்தால் காரிருளில் மூழ்கி கதிரொளியாம் ஆனந்தம் தொலைத்து கதியற்றுக் கிடக்கிறாள் பாரதத் தாய் அவள் இன்னல் களைய வேண்டாமா ? இன்னுமேன் தயக்கம்....? ஊழல் பேய்களை ஓட ஓட விரட்ட உன் துணை வேண்டும் எமக்கு .
அக்கினிக் குஞ்சே என் அன்பான பாரதியே .. விண்ணுலகம் துறந்து வா ...! அழைக்கிறோம் விரைந்து வா...! எமை நோக்கிப் பறந்து வா ...! மீண்டும் ஒருமுறை பிறந்து வா...! அக்கினிக் குஞ்சே என் அன்பான பாரதியே ...! மீண்டும் நீ பிறந்து வா ...!
சாரணியத்தில் எனது குருமார்கள்...
சாரண இயக்கம் ஒரு உலகளாவிய இயக்கம் .
ஒரு முறை ஒருவன் சாரணன் ஆகிவிட்டால் உயிர் உள்ளவரை அவன் சாரணனே ( ONCE A SCOUT ALWAYS A SCOUT )
நான் சாரணன் ஆனதும் கூட சுவாரஸ்யமான ஒரு தற்செயல் நிகழ்வுதான்.அன்றிலிருந்து இன்று வரை நான் என்னை ஒரு முழுமையான சாரணனாகத்தான் உணர்கிறேன்.என் சுவாசம்,குருதி ,நரம்புகள் எங்கும் சாரணன் என்ற உணர்வும் உலகளாவிய சாரண இயக்கத்தில் ஓர் அங்கம் என்ற பெருமிதமும் விரவிப் போய் ஊறிக் கிடக்கின்றன. படியுங்களேன் ...நான் ஒரு சாரணன் ஆன கதையை ...எனது சாரண குருமார்கள் பற்றியும் கூறுகிறேன்.
முதன் முதலில் புதுப்பேட்டை கிளை நூலகத்தில் 'குருளையர் படை '(cubs )என்ற நூலை படிக்க நேர்ந்தது .நான் அப்போது கிரஸண்ட் ஆங்கிலப் பள்ளி -மழலையர் தொடக்கப் பள்ளி என்ற கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருந்தேன்.1995 என்று நினைவு.அந்நூலை படிப்பதற்கு முன் எனக்கு சாரணியத்தில் துளியும் அனுபவம் கிடையாது.அந்நூலை படித்ததும் ஏதோ ஒரு ஆர்வத்தில் நானாகவே அதில் கூறியுள்ள முறைப்படி scarf மட்டும் தைத்துக் கொண்டு பள்ளிச் சீருடைமேல் மாணவர்களை அணியச் செய்து குருளையர் உறுதிமொழி ,நானாகவே மெட்டு அமைத்த சாரண இறைவணக்கப் பாடல் பரம்பொருள் ஞான பக்தி தா ...( தயா கர் தான் பக்தி கா ...பாடல் எல்லாம் அப்போது எனக்கு அறிமுகமே இல்லை.)கொடிப்பாடலான பாரத சாரண சாரணியர் கொடி பண்பாய் பறக்கிறதே ...ஆகிய பாடல்களை பாடி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன்.பின்னர் எங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள ஒரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் திரு .தங்கபாண்டியன் ஐயா அவர்களை பற்றி என் தங்கை மூலம் ( எனது தங்கை அப்போது அப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.)கேள்விப்பட்டு அவரை அழைத்து வந்து படையை முறைப்படி துவக்கினேன்.அவர் எனது ஆர்வத்தைப் பார்த்து நெல்லிக் குப்பம் என்ற ஊரைச் சார்ந்த சாம்ராஜ் என்ற மூத்த சாரணரை அறிமுகம் செய்து வைத்தார் .சாம்ராஜ் ஐயாதான் எனக்கு 'வாகுல்கள் ' மற்றும் பேடன் பவல் அவர்களின் திரு உருவப்படம் ஆகியவற்றை வழங்கினார் .பின்னர் இருவருடங்களாக அப்படையை நடத்தி வந்தேன்.ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் அதை தொடர்ந்து நடத்த இயலவில்லை .
இந்நிலையில் 2001 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி னக்கு கருணை அடிப் படையில் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி கிடைத்தது.10 தினங்கள் கடந்தன.முதல் மாத சம்பள
கவரை என்னிடம் அளிக்கும்போது அப்போதைய தலைமை ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் என்னிடம் நீங்கள் சாரண இயக்கத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . எனக்கு மகிழ்வாக இருந்தது. மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன்.
பின்னர் 2002ல் கடலூர் தேவனாம் பட்டினம் , பீட்டர் பிஷப் கல்லூரியில் அடிப்படை பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்தது .
(18-09-2002 முதல் 27-09-2002 வரை)திருவாளர் N .R ,என்று அழைக்கப் படும் ராமமூர்த்தி ஐயாதான் அப்போது முகாம் தலைவராக இருந்தார் .D.R. ஐயா .இளைய குமார் ஐயா , வேலாயுதம் ஐயா ,செந்தில் ஐயா ,வீரப்பா ஐயா ஆகியவர்களை எனக்கு பயிற்சியாளர்களாக அறிமுகம் செய்த முகாமும் அதுவே.10 நாட்கள் நடைபெற்ற முகாம் எனக்கு சாரண இயக்கத்தைப் பற்றி தெளிவானதொரு அறிமுகத்தை அளித்தது.
தினசரிப் பணிகள்,இறைவணக்கக் கூட்டம்,குதிரை லாட வடிவ அணிவகுப்பு,,அணிமுறை பயிற்சி,வழிநடைப் பயணம்,விதம் விதமான கைத் தட்டல்கள் ,ஊக்க ஒலிகள் ,,,விதம் விதமான சாரண விளையாட்டுகள்,சாரணப் பாடல்கள்,முடிச்சுகள்,கட்டுகள்,பாடித்தீ நிகழ்வுகள்.பவலாரின் ஆறு உடற் பயிற்சிகள்...இவை எனக்கு மற்றும் ஒரு உலகத்தை அறிமுகம் செய்தன.இவை அனைத்துமே பதின் பருவ சிறார்களை ஒரு ஆசிரியர் பால் ஈர்க்கின்ற அற்புத ...மந்திரங்கள்.அதுவும் குறிப்பாக அந்த சர்வ சமய வழிபாட்டுக் கூட்டம் எனக்கு எல்லையில்லா சிலிர்ப்பையும் ,ஆனந்த பரவசத்தையும் ஏற்படுத்தி ஒருவித அமைதியை மனமெங்கும் வியாபிக்கவிட்டது.
அதுவும் திருச்சோ புரம் அண்மையில் உள்ள அரிவாள் மூக்கு என்ற இடத்திற்கு...மிகப் பெரிய மணல் மேடு ...அழகி ,சொல்ல மறந்த கதை போன்ற படங்களில் கூட அப்பகுதியை நீங்கள் பார்த்திருக்கலாம் ...கடலூர் மாவட்டத்தில் ஒரு மினியேச்சர் ஜெய் சாலமீர் பாலைவனம் போன்ற ஒரு இடம்.அங்கு அழைத்துச் சென்ற நடை பயணம் வாழ்நாளில் முடியாத அனுபவத்தை தந்தது .மீண்டும் மாணவப் பருவத்திற்கே எம் போன்ற ஆசிரியர்களை அழைத்துச் சென்று முழுக்க முழுக்க ஒரு மாணவனாகவே என்னை உணர வைத்த தருணங்கள் அவை.அதன் பின்னர் பலமுறை அந்த இடத்திற்கு... நண்பர்களுடன் ...குடும்பத்தாருடன்.எனது பள்ளி சாரணர்களுடன் என சென்றும் கூட அப்பயிற்சியின்போது சக பயிற்சியாளர்களுடன் சென்று வந்த அனுபவத்தின் மகிழ்ச்சி மற்ற அனுபவங்களை பின்னுக்குத் தள்ளுவது என்னவோ நிஜம்தான்.
அன்று தொடங்கிய எனது சாரணியத்தின் மீதான பற்று இன்று வரையிலும் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கக் காரணம் திரு .ராமமூர்த்தி ஐயா மற்றும் திரு துரை.ராமலிங்கம் ஐயா இவர்கள் எனக்கு அளித்த அடிப்படை பயிற்சி உண்மையிலேயே மிக சிறப்பாக இருந்ததன் காரணமாகத்தான் என்றால் அது மிகை அல்ல .
அதன் பின்னர் என் பள்ளியில் நடந்த படைக் கூட்டங்கள் அற்புதமான தருணங்களை எனக்கும் எனது சாரணர்களுக்கும் தந்ததன் காரணமாகத்தான் இன்னும்கூட பல சாரண மாணவர்கள் என்னுடன் தொலைபேசியிலும் ,முக நூலிலும் இன்னும் தொடர்பில் உள்ளனர் .
பின்னர் ஒரு வருடத்திற்குப் பின்னர் அதே தேவனாம் பட்டினம் ...அதே பிஷப் பீட்டர் கல்லூரி ...மீண்டும் ஒரு 7 நாள் பயிற்சி ..
.(03-12-2003 முதல் 10-12-2003 வரை)இம்முறை அட்வான்ஸ் கோர்ஸ் என்ற முன்னோடி பயிற்சி .இம்முறை முகாம் தலைவராக இருந்தவர் திரு .B . R . என்று அழைக்கப் படும் பா.ராமச்சந்திரன் ஐயா - SCOUTING FOR BOYS -என்ற நூலை அழகுத் தமிழில் ...எளிய தமிழில் ...சிறுவர் சாரணியம் என்ற நூலாக மொழிபெயர்த்து வெளியிட்டாரே ...அவரேதான்.மிகவும் கண்டிப்புடன் வழி நடத்தினார் ...அவரது அணுகுமுறை எங்களுக்கு அப்போது சிம்ம சொப்பனமாக இருந்தது என்றே வேண்டும்.அப்போதும் D.R. N.R. மற்றும் AIR அன்று அழைக்கப்படும் எங்கள் அனைவரின் அபிமானத்துக்கு உரிய இளைய குமார் ஆகிய மூவர் கூட்டணி எங்களுக்கு சிறப்பான பயிற்சியை அளித்தார்கள்.செந்தில் குமார் , வேலாயுதம் ,KGR என அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் போன்றோர் பயிற்சியின் உதவியாளர்களாய் திகழ்ந்தார்கள்.அடிப்படைப் பயிற்சியில் பெறாத பல பயிற்சிகள் சிறப்பாக வழங்கப் பட்டன.DR ஐயா மூலம்தான் சாரண வழி நடைப் பயணத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அணிமுறைப் பயிற்சியின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவம் இவற்றை அறிந்தேன் .இளைய குமார் ஐயா மட்டுமே SIGNALING ,SKY WATCH மற்றும் MAPPING ஆகியவற்றை அவ்வளவு எளிதாய் நடத்த முடியும் .ஆக்கல் கலையை ..கூடாரம் கட்டும் முறைகளை B . R ஐயாவிடம் இருந்து அவ்வளவு எளிதாகக் கற்றோம்.குறிப்பாக இயற்கை வண்ண ஓவியங்கள் ,அடுப்பே இல்லாத ...பாத்திரங்களே இல்லாத சமையல் ஆகியவற்றை இம் முகாமில்தான் நான் தெரிந்து கொண்டேன்.இது எல்லாமே விரைவாக சொல்ல வேண்டுமே என்று சுருக்கமாகக் கூறுகிறேன் .நடந்த சம்பவங்களை ...ஒவ்வொரு நிகழ்வாகக் கூறினால் கண்டிப்பாக ஒரு மெகா சீரியல் போல் நீண்டுகொண்டே செல்லும் ...!கண்டிப்பாக இவ்விடம் N .R அவர்கள் வேடிக்கையாகப் பாடும் சென்னாங்குன்னிக்கும் செவ்வாழை மீனுக்கும் கல்யாணமாம் கல்யாணம் .... முத்து செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை ஆகிய பாடல்களும்....சர்வ சமய வழிபாட்டின்போது மிக உருக்கமாகப் பாடும் சூரியன் வருவது யாராலே என்ற பாடலை குறிப்பிட்டே ஆகவேண்டும்.இதனிடையே டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று எனது முதல் திருமண நாள் கொண்டாட்டத்திற்காய் 7 ஆம் தேதி இரவு அனுமதி பெற்று மறுநாள் காலை அதாவது 8 ஆம் தேதி காலி 9 மணிக்குள் முகாம் திரும்புவதாக ஒப்புதல் அளித்து B R அய்யாவிடம் சிறப்பு அனுமதி பெற்று பரபரவென்று முகாம் திரும்பியது தனி கதை .
அதன் பின்னர் எனது பள்ளியில் படைக் கூட்டம் நடத்துவது, முகாம் நடத்துவது என ஆர்வத்துடனா அல்லது ஆர்வக் கோளாருடனா என்று பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு எனது சாரண நடவடிக்கைகள் இருந்தன.
அதன்பின்னர்தான் சாரணர் கையேடு என்ற தொகுப்பு நூலை DR ஐயா ,N .R ஐயாஇவர்கள் முன்னிலையில் காடாம்புலியூர் அரசு பள்ளியில் நடைபெற்ற ஒரு முகாமில் வெளியிட்டேன் .
அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களின் பங்களிப்போடும் நன்கொடையாளர்கள் துணை கொண்டும் மூன்று நாட்கள் பயிற்சி முகாம்களை மாவட்ட பொறுப்பாளர்களைக் கொண்டும் சகா சாரண ஆசிரிய சகோதரர்களைக் கொண்டும் வருடந்தோறும் நடத்தி வருகிறேன்..எனது இம்முயற்சியில் இரு முறை மட்டுமே சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது
மேலும் இந்த இடையறாத முயற்சிகளும் சாரண மாணவர்களின் ஒத்துழைப்போடும் ஆற்றிவரும் பணிகளும்,எனது சாரண குருமார்களின் ஆசியும் எனக்கு MESSENGERS OF PEACE STAR -2014 என்ற சர்வ தேச விருதை பெற உதவி செய்துள்ளன.அவ்வாறு எனக்கு இவ்விருது கிடைக்க எனக்குப் பரிந்துரை செய்த தேசிய சாரநாத் பொறுப்பாளர்களான
திரு கிருஷ்னமூர்த்தி ,திரு மது சூதன் ஆவலா , திரு .சரத் ராஜ் ஆகியோருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.
மற்றுமொரு பயிற்சி சாரண ஆசிரியர் பெற வேண்டிய மிக உயர்ந்த பயிற்சியான இமய வனக் கலைப் பயிற்சி...இதை நான் பெற்றது உதகை மாவட்டம் குன்னூரில் ...நல்ல கோடை வெயில் கொளுத்தும் மே மாதம் ...குளு குளு என ஒரு பயிற்சி மாநிலப் பயிற்சி மையத்தில் ...அப்போது முகாம் தலைவராக இருந்தவர் மாநிலப் பயிற்சி ஆணையர் திரு C ,அண்ணாமலை அய்யா அவர்கள்.அங்கும்கூட கேத்தி நோக்கிய வழிநடைப் பயண அனுபவமும் கூடாரங்களில் மற்றும் மர வீடுகளில் (HUT) தங்கிய அனுபவமும் மறக்க முடியாதவை.
அதன் பின்னர் மத்திய பிரதேசம் பச்மரியில் தேசியப் பயிற்சி மையத்தில் நான் பங்கேற்ற
RE UNION FOR HIMALAYAN WOOD BADGE .முகாம் ..முகாம் தலைவராக திரு சலீம் குரேஷி ஐயா ..இம்முகாம் பற்றிய அனுபவங்கள் நிச்சயம் தனிப் பதிவுதான்.விரைவில்....
இவ்வாறு எனக்குள் உறைந்த இந்த சாரண உணர்வுதான் நான் புதியதாகக் கட்டியுள்ள என் வீட்டின் வெளிப் புறச் சுவரில் உலக சாரணர் சின்னத்தையும் ,பாரத சாரண சாரணியர் சின்னத்தையும் வடிவமைக்கச் செய்தது எனலாம்.
மிக நீண்டுவிட்டது அல்லவா ...! சரி ...செய்திக்கு வருகிறேன் .27.11.2017 அன்று நடைபெற்ற சாரண ஆசிரியர்கள் பொதுக்குழுக் கூட்டத்திற்கு எனது குருமார்கள் இருவர் ஒருங்கே வருகை தந்திருந்தனர்.இருவரையும் ஏக காலத்தில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.இதோ அந்நினைவாக அவர்களுடன் எடுத்துக்கொண்ட விண்ணப் படம் ...அப்படம் நோக்கியபோது என்னுள் எழுந்த நினைவுகள் ..எண்ண அலைகள்தான் ...அதன் வெளிப்பாடுதான் இப்பதிவு ...
பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.இறை வணக்கக் கூட்டத்தில் நேருவின் திருவுருவப் படத்திற்கு தலைமை ஆசிரியரால் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு பள்ளியில் இயங்கி வரும் ராஜா ரவி வர்மா ஓவிய நுண்கலை மன்றம் சார்பில் பள்ளி அளவிலான ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.பெரும்பான்மையான மாணவர்கள் கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் திரு பூவராக மூர்த்தி அவர்கள் ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.ஓவிய ஆசிரியர் முத்துக் குமரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.என் எஸ் எஸ் அலுவலர் மோகன் குமார் , உதவி தலைமை ஆசிரியர் திருமதி கலைச்செல்வி ,ஆசிரியர்கள் மணிவண்ணன் ,தணிகாசலம் , பேசில் ராஜ், மரிய அந்தோணி ,செந்தில் குமார் உள்ளிட்ட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இயற்கைக் காட்சிகள் ,கார்ட்டூன்கள் ,மனித உருவங்கள்,தெய்வங்கள்,தேசியத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,விழிப்புணர்வு ஓவியங்கள்,பல்வேறு டிசைன்கள், என கண்கவர் வண்ணங்களிலும் ,பென்சில் ஷேடிங் கொண்டும் ஓவியங்களை மாணவர்கள் தீட்டியிருந்தனர்.மேலும் களிமண் கொண்டும் பொம்மைகளை கலந்துகொண்ட உருவாக்கியிருந்தனர்.ஓவிய ஆசிரியர் முத்துக் குமரன் அவர்களின் ஓவியங்களும் தனி அரங்கில் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன,பரிசு பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் ,பங்கேற்ப்புச் சான்றிதழ்களும் வரும் திங்கள் கிழமை இறைவணக்கக் கூட்டத்தில் வழங்கப்படும்.பரிசுகளை பள்ளியின் முன்னாள் மாணவர் ,கவின் கலைக் கல்லூரியில் பயின்று ஓவியத் துறையில் பணியாற்றி வரும் சதீஷ் குமார் அவர்கள் வழங்கியுள்ளார்.நுண்கலை மன்ற மாணவர் செயலர் செல்வன்
விஷ்வா நன்றி கூறினார்.
கடந்த 14-10-2017 சனிக்கிழமை அன்று புதுவை கவிதை வானில் என்ற அமைப்பு பல்வேறு திறமையாளர்களை அங்கீகரித்து விருதுகளை வழங்கிப் பாராட்டியது.அவ்வகையில் எனது ஓவிய திறமையை அங்கீகரிக்கும் வகையிலும் 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவிய பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்தி அக்கலையினை தனது வாழ்க்கைக்கான வழியாக தேர்ந்தெடுக்கச்செய்து அக்கலையில் உயர்கல்வி கற்பதற்கும் வழிகாட்டியாக விளங்குவதை பாராட்டியும் நுண்கலைத் திலகம் என்ற விருதுக்கு என்னை தேர்வு செய்து இருந்தனர்.புதுவையின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் திருமிகு கணேசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் மாண்புமிகு முதல்வரின் பாராளு மன்றச் செயலர் திருமிகு க.லட்சுமி நாராயணன் அவர்களின் கரங்களால் விருது மட்டும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.ஒரு கலைஞனுக்குத் தேவை அங்கீகாரமும் பாராட்டும்தான் .அவைதான் எம் போன்ற கலைஞர்களை தமது துறையில் தொய்வின்றியும் மேலும் ஆற்றலோடு செயல்பட வைத்து அடுத்தடுத்த தலங்களுக்கு கொண்டுசெல்லும் வல்லமை பெற்றவை.அவ்வகையில் இந்த அங்கீகாரம் எனக்கு மகிழ்வையும் இன்னும் எனது துறையில் ஆழ்ந்து செயல்படவேண்டும் என்ற உத்வேகத்தையும் அளிக்கின்றது.என்னை இவ்விருதுக்காக தேர்வு செய்த கவிதாயினி திருமதி கலாவிசு அவர்களுக்கும் புதுவை கவிதை வானில் அமைப்பின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றிகள் பல.
கலா உத்சவ் -2017
இந்திய அரசு -மனித வள மேம்பாட்டுத் துறை , RMSA (அனைவருக்கும் இடை நிலைக் கல்வி இயக்கம் ) & SCERT மாவட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழு இனைந்து வருடந்தோறும் கலா உத்சவ் என்ற பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான போட்டிகளை நடத்துகிறது.
அதில் கலந்துகொள்ள உள்ள வெற்றியாளர்களைத் தேர்வு செய்யும் மாநில அளவிலான போட்டிகள் கோவையில் அக்டோபர் 6 ,7 ஆகிய தேதிகளில் கோவையில் PPG கல்லூரியில் மிக வண்ண மயமாக ,கோலாகலமாக நடைபெற்றன ..
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடனம்,இசை,நாடகம் மற்றும் காண் கலை ஆகிய பிரிவுகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்து மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி,அதில் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட குழுவினர் கோவைக்கு அந்த அந்த மாவட்டக் கல்வித் துறை மூலம் அழைத்து வரப்பட்டு பிரபல பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் தலைமையில் ,கல்வி அதிகாரிகள்,தலைமை ஆசிரியர்கள் கொண்ட விழாக்குழுவினர் போட்டியில் கலந்துகொள்ள வருகை தந்த மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்து உபசரித்தனர்.போட்டிக்கான ஏற்பாடுகள், விழாவுக்கான ஏற்பாடுகள் நன்முறையில் செய்யப்பட்டு இருந்தன.
போட்டிநடைபெற்ற கல்லூரி வளாகமெங்கும் பள்ளிச் சீருடைகளிலும் ,வண்ண உடைகளிலும் ,விதம் விதமான ஒப்பனைகளிலும் மாணவ மாணவியர் நிரம்பியிருந்தது வண்ணப் பூங்காவில் மலர்ந்துள்ள வண்ண வண்ண மலர்களை சூழ்ந்து பறக்கும் விதம் விதமான வண்ணத்துப் பூச்சிகளை நினைவூட்டியது.போட்டிகளுக்கான அறிவிப்புகள் ,அவை நடைபெறும் அரங்குகள் குறித்த தகவல்கள் பதாகைககளில் வைக்கப் பட்டு இருந்தன.
அந்த அந்த அரங்குகளில் போட்டி அமைப்பாளர்கள் போட்டியாளர்களுக்கும் , வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் போட்டிகள் குறித்த விதி முறைகளைக் கூறிய பின்னர் போட்டிகள் துவங்கின.
நான் காண் கலைப் பிரிவில் கலந்து கொள்வதற்காக கடலூர் மாவட்டம் சார்பாக வழிகாட்டி ஆசிரியர் என்ற முறையிலும் கலா உத்சவ் போட்டிகளின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற முறையிலும் மாணவர்களை அழைத்து வந்திருந்தேன் .காண் கலைப் பிரிவில் ஒரு குழுவுக்கு 4 பேர் ,ஒரு மாற்றுத் திறனாளி உட்பட.மேலும் கடலூர் மாவட்டம் சார்பாக நடனம் மற்றும் இசை போட்டிகளில் கலந்துகொள்ளவும் முறையே 10 பேர் மற்றும் 8 பேர் அடங்கிய குழுக்களும் - சி கே .பள்ளி மாணவர்கள் தம் வழிகாட்டி ஆசிரியர்களுடன் வந்திருந்தனர்.
பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் இருவரும் ,பண்ணுருட்டி திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவர் இருவரும் சேர்ந்து காண் கலைப் போட்டிக்கான கடலூர் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
போட்டியாளர்களை அந்த அந்த போட்டிகள் நடைபெறும் அரங்கிற்கு அனுப்பி வைத்த பிறகு நான் காண் கலைப் போட்டி அரங்கிற்கு மாணவர்களை அழைத்துச் சென்றேன். போட்டி அரங்கினை நெருங்கும்போதே கண்ணைக் காட்டியது.பிற மாவட்டங்களில் இருந்து காட்சிப் படுத்தக் கொண்டு வந்திருந்த பொருட்கள் மிக பிரம்மாண்டமாக இருந்தன.
அந்தந்த மாவட்டப் பெருமைகளை - அழிந்து வரும் கலைகளை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் உயிர்பிப்பது இக் கலை விழாவின் முக்கிய நோக்கம் ,எனவே தமிழ் நாட்டின் கலை ,பண்பாட்டை வெளிப் படுத்தும் வகையில் படைப்புகள் இருந்தன ,
திருவாரூர் தேர் தொடங்கி,விதான ஓவியம்,கருங்கற் சிலை செதுக்குதல்,சுடுமண் சிற்ப வேலைகள், களிமண் வடிவமைத்தல்,தேங்காய் சிரட்டைகள் கொண்டு கலைப் பொருட்கள் செய்தல் ,தோல் பாவை பொம்மைகள் ,தஞ்சை கோபுரத்தின் நவதானிய வடிவம்,மூங்கில் பட்டைகளாலான கூடைகள் ,மூலிகை ஓவியங்கள்,மரச் சிற்ப வேலைகள்,மணல் ஓவியங்கள் என்று மாணவர்கள் பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். சுற்றுச் சூழல் மாசின்றி வைக்கோல் ,காகிதங்கள் ஆகியவற்றைக் கொண்டு எங்கள் மாணவர்கள் வடிவமைத்து இருந்த வள்ளலார் பொம்மையும்,மிகப் பெரிய வள்ளலாரின் வண்ண ஓவியமும் கொலாஜ் ஓவியம், கருப்பு வெள்ளை ஓவியமும்கூட சற்று அழகாகவும் ,வண்ண மயமாகவும் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இருந்தாலும் கூட அங்கிருந்த மற்ற சில மாவட்டங்களின் படைப்புகளோடு ஒப்பிடுகையில் எங்களுக்கே சற்று குறைவாகத்தான் தோன்றியது.
அப்பா படத்தில் சமுத்திரக் கனியின் மகன் தனது கரங்களால் செய்த தாஜ்மகால் போல நான் எங்களது பண்ணுருட்டி பள்ளி ( அரசு மேல்நிலைப் பள்ளி & திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி ) மாணவர்கள் தாமே செய்த வள்ளலார் பொம்மையை ( கடலூரின் சிறப்புகளில் ஒருவரான வள்ளலார் & பண்ணுருட்டி பெருமைகளுள் ஒன்றான பாரம்பரியமான காகிதக்
கூழ் பொம்மைகள் -இந்த இரண்டையும் முன்னிலைப் படுத்தும் நோக்கில் )கொண்டு சென்றிருந்தோம். அதே போல சில மாவட்டங்களின் மாணவர்களும் எங்களை போலவே தமது படைப்புகளை கொண்டு வந்திருந்தனர் .ஆனால் பல மாவட்ட மாணவர்கள் தம்பி ராமையா ,பாய் கடையில் வாங்கிய தாஜ்மகாலைப் போல மிக அற்புதமாக ...பிரம்மாண்டமாக ...படு ...பிரம்மாண்டமான ...காட்சிப் பொருட்களை தக்க தொழில் முறை கலைஞர்களைக் கொண்டு வடிவமைத்து கொண்டு வந்து காட்சிப் படுத்தினர்.
தமது படைப்புகளை தம் வழிகாட்டி ஆசிரியர்களின் துணையோடு அரங்கினுள் தமக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் ( 8 அடிக்கு 8 அடி தரைப் பகுதியும் 8 ஆதி உயர சுவர்ப் பகுதியும் ஒதுக்கப் படும் ) காட்சிப் படுத்த வேண்டும்.அப் படைப்புகள் நிச்சயமாக இரு பரிமாண ஓவியங்களாகவும் ,முப்பரிமாண ஓவியங்களாகவும் -சிலைகள் ,பொம்மைகள் போன்று- இருக்க வேண்டும் .அவற்றை காட்சிப்படுத்த கொடுக்கப்பட்ட நேரம் 11 மணி முதல் 1 மணிவரை.காட்சிப் படுத்தி முடித்ததும் பொறுப்பாசிரியர் வெளியேறிவிட வேண்டும்.
அதன் பிறகு தாம் காட்சிப் படுத்திய பொருட்களை அந்த அரங்கினுள் மீண்டும் தாம்தான் செய்தோம் என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க மூலப் பொருட்களைக் கொண்டு செய்ய வேண்டும் .அதற்கு 8 மணி நேரம் ஒதுக்கப் படும் .போட்டி இரு நாட்களும் தொடர்ந்து நடைபெறும்.குறித்த நேரத்தில் அக்குழுவினர் செய்து முடிக்க வேண்டும்.தாம் பள்ளியில் செய்த தமது படைப்புக்கள் ,அது பற்றிய களப் பயணங்கள்,கலைஞர்களுடனான நேர்காணல் ஆகியன குறித்த ஆவணப் படக் குறுந்தகட்டை நடுவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.அதற்குத் தனியாக 30 மதிப்பெண்கள் வழங்கப்படும்.அதன் பின்னர் நடுவர்கள் குழு வருகை தந்து போட்டியாளர்களிடம் விளக்கங்கள் பெற்று மதிப்பீடு செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இதுதான் விதிமுறை.
ஆனால் நடைபெற்றதோ வேறு....காட்சி படுத்தலுக்கான இடம் தவிர படைப்புகளை செய்வதற்கான இடம் ஒதுக்கப் படவில்லை.லாட் முறையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதால் எங்கள் மாவட்டம் உட்பட சில மாவட்டங்களுக்கு சுவர் பகுதி கிடைக்காமல் மையப்பகுதியில் இடம் அமைந்ததால் இருபரிமாண ஓவியங்களைக் காட்சிப் படுத்த மிகவும் சிரம பட வேண்டியிருந்தது .அப்படி செய்தபின்பும் பார்வையாகவும் இல்லை.
மேலும் எங்கு அமர்ந்து காட்சிப் பொருளை செய்வது என்று தெரியாமல் காண் கலைப் போட்டிக்கான பொறுப்பாளர்களை அனுகி கேட்டபோது உங்களுக்கு கொடுத்த இடத்தில்தான் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.தற் செயலாக 8க்கு 8 அளவுக்கு தம் படைப்புகளை செய்யாமல் மிகவும் சிரியதாகச் செய்திருந்த மாவட்டங்களின் இடத்தில அவர்களது அனுமதி பெற்று செய்ய வேண்டியதாயிற்று.
பின்னர் மத்திய உணவுக்கு சென்றோம்.உணவு வழங்க 5 பகுதிகள் பிரிக்கப் பட்டு 8 மாவட்டங்களை ஒரு பிரிவில் அனுமதித்து டோக்கன் வழங்கி குழப்பமில்லாமல் உணவு வழங்கச் செய்தனர்.உணவும் மிக சுவையாக ..மீண்டும் கேட்டு வாங்கி உண்ணும்படி இருந்தது. உணவு உபசரிப்புக் குழுவுக்குப் பாராட்டுக்கள்.மாணவர்களை போட்டி அரங்கிற்குள் வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்து ,விடை பெற்று இசைப் போட்டி அரங்கிற்கு சென்றேன். எனக்கு பொழுது போக வேண்டும் அதுவுமில்லாமல் நான் இசை பிரியன் அதுவுமில்லாமல் கடலூர் மாவட்டம் சார்பாக சி கே பள்ளி அணியினர் பாடுவதையும் பார்க்க ஆவல் கொண்டேன்.போட்டியாளர்கள் அங்கே அசத்திக் கொண்டிருந்தனர்.அதுவும் நான் சென்ற சிறிது நேரத்தில் சென்னை அணி மேடையேறியது.காதில் இசை வெள்ளம் பிரவாகம் எடுத்து பாய்ந்து இன்பத்தில் ஆழ்த்தியது.இசைப் போட்டியை நடனத்துடன் செசேர்த்து சிறப்பாக வழங்கினார்கள் .
ஆனால் ஒரு முழுமையான இசைப் போட்டி என்பதற்கு மாறாக நாட்டியம் ,நாடகம் போன்று அளவுக்கு அதிகமான ஒப்பனை ,மேடை பின்னணி அமைப்புக்கள் என இசை நாட்டிய நாடகம் என்ற ஒரு புதிய ட்ரெண்டை நோக்கி நகர்ந்து விட்டது என்னவோ சரியில்லை என்று எனக்குப் படுகின்றது.கண்களை மூடி செவிகள் மூலம் கேட்டு அனுபவித்து இலயித்து இசைக் கடலில் மூழ்கி இன்புற வேண்டிய கலையை ,பின்னணி காட்சிகள்,நடனம், பாத்திர ஒப்பனை போன்றவற்றினால் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக்கியதின் மூலம் செவி இன்பத்தை பின்னுக்குத் தள்ளி இசைப் போட்டி என்ற நிலையை காண் கலை போன்று மாற்றி விட்டால்...பின்னர் நடனப் போட்டிகள் ,நாடகப் போட்டிகள் தனியே எதற்கு.? அதுவுமில்லாமல் அமர்ந்த நிலையில் கர்னாடக இசையை பாடும் மாணவ மாணவியரைவிட ஆட்டம் போட்டு மிகை ஒப்பனையுடன் பின்னணி காட்சிகளுடன் ஆடும் குழு பார்வையாளர்களையும், நடுவர்களை மயக்கி ஒரு வித்தியாசத்தைக் காட்டி அதிக கர கோஷத்தையும் ,ஒரு வேலை அதிக மதிப்பெண்களையும் கூடப் பெற்றுத் தந்துவிடுகின்றதே !இசைப் போட்டி என்பது மெல்லிய ஒப்பனையுடன் ராகம், தாளம் இவற்றிற்கு இசைவான முக பாவங்களுடனும் உடல் மொழியுடனும் இருந்தாலே போதுமானது ஆயிற்றே ...!பின்னர் மிகை பாவனை எதற்கு ?இதனை நெறிப்படுத்தவேண்டிய நடுவர் பெருமக்களும் இதனை தலையசைத்து மகிழ்வுடன் அங்கீகரிக்கின்றனரே...!இசைக் கலை தொடர்பான வல்லுநர்கள் இசைக் கல்லூரி பேராசிரியர்கள்,இசைக்கல்லூரி முதல்வர் பெருமக்கள் தக்க சமயத்தில் குறுக்கிட்டு இசைப் போட்டி முழுமையான இசைப் போட்டியாகவே விளங்கிடத் துணை புரிவார்களாக.!
இது ஒரு புறம் இருக்க....
2 மணிக்கு மாணவர்கள் தம் படைப்புகளை செய்யத் துவங்கினர். சில மாவட்டங்களில் காட்சிப்படுத்தல் இன்றி காலை 11 மணிக்கே நேரடியாக தம் படைப்புகளை செய்யத் துவங்கி இருந்தார்கள்.சில மாவட்டங்கள் காட்சிப் படுத்தலோடு நிறுத்திக்கொண்டனர் .அதுவும் பிரம்மாண்டப் படைப்புகளைக் கொண்டுவந்த மாணவர்கள் ....படைப்புகளை முடித்தபிறகு வரவேண்டிய நடுவர் குழுவோ 2 மணிமுதலே மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்யத் துவங்கினர்.மாலை 5-30 மணிவரை மதிப்பீடு செய்தனர் ;நடுவர் குழு மதிப்பீடு முடிந்து அரங்கை விட்டு வெளியேறிய பின்னரே வழிகாட்டி ஆசிரியர்களும், பெற்றோரும் ,ஏனையோரும் அரங்கினுள் நுழைந்து கலைப் படைப்புகளை பார்க்க முடிந்தது .இரவு 7 மணி வரை சில மாணவர்கள் -எங்கள் பள்ளி மாணவர்கள் உட்பட தம் படைப்புகளை செய்துகொண்டு இருந்தனர்.பின்னர் நேரம் நிறைவடைந்ததாகவும் மறுநாள் வந்து தொடருமாறும் கேட்டுக் கொண்டதனால் இடையில் நிறுத்தி அவரவர் தங்குமிடத்துக்கு கிளம்பிச் சென்றனர்.
இடையில் போட்டியாளராகளுக்கான பங்கேற்ப்புச் சான்றிதழ்களும் முக்கிய பொறுப்பாளர்களை வைத்து வழங்கினார்கள் .தமக்கு பரிசு நிச்சயம் கிடைக்காது என்று தெரிந்துகொண்ட சில மாவட்டங்கள் இரவோடு இரவாக தமது படைப்புகளை எடுத்துக்கொண்டு ...சிலர் விட்டுவிட்டு ...தமது ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர் ...கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்அனுமதி இல்லாமலே ...!
கொடுக்கப்பட்ட சான்றிதழ்களில் ஏகப்பட்ட குளறுபடிகள்
இருந்து ,தொடர்பான குழுவிடம் போராடி அவற்றை சரி செய்து வேறு சான்றிதழ்கள் பெற்றது ஒரு தனிக்கதை.
மறு நாள் காலை வந்து போட்டி அரங்கினுள் பார்த்தால் ஏகப்பட்ட அதிர்ச்சி.அநேகமாக ஒன்றிரண்டு படைப்புகள் தவிர அனைத்தையும் காலி செய்திருந்தனர்.கேட்டதற்கு போட்டிகள் நேற்றே நிறைவடைந்துவிட்டதாக கூறி எங்களையும் படைப்புகளை பேக் செய்யச் சொல்லி சொன்னார்கள். மீதமுள்ள நாடகப் போட்டிகளும் நிறைவு விழாவும் விமல் ஜோதி என்ற பள்ளியில் நடைபெறுவதாகவும் சொல்லி அங்கு செல்லக் கேட்டுக் கொண்டனர். பாவம் ! எங்கள் மாணவர்களின் முகத்தைப் பார்க்க முடியவில்லை .அவர்களுக்கு சமாதானம் கூறி அனைத்தையும் பேக் செய்து புறப்பட்டோம்.நல்ல வேலையாக நாங்கள் கொண்டு சென்ற அனைத்துப் பொருட்களும் மிகப் பாதுகாப்பாக தொலையாமல் இருந்தது பாராட்டப்பட வேண்டும்.பாதுகாப்பு ஏற்பாடுகள் அருமை.
பின்னர் கோவை வந்ததின் நினைவை பதிவு செய்யும் நோக்கத்தில் கல்லூரி வளாகத்தில் அங்கும் இங்குமாக நின்று சில பல வண்ணப்படங்களையும், செல்பிக்களையும் ,குரூப்பிக்களையும் எடுத்து செல்போன் பயன்படுவோர்களுக்கான ஒரு சம்பிரதாயத்தையும் நிறைவேற்றிய திருப்தியுடன் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏறி விமல் ஜோதி பள்ளியை அடைந்தோம்.
அங்கு நாடகப் போட்டிகள் பகல் உணவு இடைவேளை வரையிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.பின்னர் விழா துவங்கியது.விழாத் தொகுப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாக ரசனையோடு இருந்தது .பள்ளிக்கு கல்வி இயக்குனர் RMSA ,இணை இயக்குனர் ,கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ,PPG கல்லூரி தாளாளர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.பங்கேற்பாளர்கள் அனைவருமே வெற்றி பெற்றதாக அறிவித்து வெற்றி வாய்ப்பை தவற விடப்போகும் மாணவ மாணவியரை சமாதானப் படுத்தி ,அவர்களது திறமையைக் கண்டு வியந்து போற்றி பாராட்டி அவர்களின் பாதக் கமலங்களுக்கு தனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொண்ட அவரது அந்த அழகு உரை கேட்ட அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது .நாங்கள் தகுதியால் பெரியவர்கள் ...நீங்களோ திறமையால் பெரியவர்கள் என்று கூறி மாணவ மாணவியரைப் பெருமிதாப் படுத்திய அன்னாரது பெருந்தன்மைக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
கல்வி இயக்குனரின் நீண்ட ஒரு சிறப்புரை அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போன்ற ஒரு உரையாக இருந்தது கல்விக்கு நிகராக கலைகள் வளர்க்கப் படவேண்டும்...மாணவர்களின் தனித்த திறமைகள் கண்டறிந்து வளர்க்கப்பட வேண்டும் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்,அவ்வாறு அவர்களது திறமையின் வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டும் என்ற ரீதியிலான பாராட்டுரை எங்களை போன்ற சிறப்பாசிரியர்களுக்கு ஒரு புத்துணர்வினையும் ,புதுதெம்பினையும் அளித்தது என்றே சொல்லவேண்டும்.ஆனால் இதெல்லாம் சரி ..பள்ளிக்குச் சென்றால் நிலைமையே வேறு அல்லவா ...?அற்புதக் கலைத்திறமை கொண்ட மாணவர்களையும்கூட , மதிப்பெண்களை நோக்கி மடைமாற்றி ,திறமைகளை மழுங்க அடிக்கின்ற ஆசிரியர்களையும்,மதிப்பெண் ,தேர்ச்சி விகிதம் இவற்றை மட்டுமே குறியாய்க் கொண்டிருக்கின்ற பள்ளி மற்றும் சமுதாயச் சூழலில் கலைத்திறமை மிகுந்து உள்ள மாணவர்களிடம் டான்சு டிராமா ,பாட்டு எல்லாம் கிழிச்சது போதும் மொதல்ல படிச்சு நல்ல மார்க்கு வாங்கற வழியப்பாரு என்று கடிந்துகொள்ளும் ஆசிரியர்களையும் பெற்றுள்ள பள்ளிகளின் நிலைமை இயக்குனர் அவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?பெற்றோர்கள் மட்டும் இதற்கு விதி விலக்கல்லவே ! என்னிடமிருந்து இயலாமை பெருமூச்சும் ஏளனச் சிரிப்பும் ஒருங்கே வெளிப்பட்டது.
நிறைவாக ,பரிசு பெற்ற மாவட்டங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.முதல் பரிசு பெற்ற மாவட்டங்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்போது ... கவுண்ட் டவுன் கூறி அறிவித்தது மிகச் சிறப்பு.முதலில் நடனம் அடுத்து,இசை ,பின்னர் நாடகம் தொடர்ந்து கான் கலை என முடிவுகள் பார்வையாளர்களின் பெருத்த கர கோஷத்துக்கு இடையிலும், வெற்றியாளர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு இடையிலும் அறிவிக்கப்பட்டன...! நான் இசைப் போட்டிகளை பார்க்கும் வாய்ப்பு பெற்றமையால் மனதுக்குள் முடிவுகளை என் ரசனைக்கு ஏற்றாற்போல் கணித்து வைத்திருந்தேன்...! வியப்பாக இருந்தது...!என் கணிப்பையொட்டியே முடிவுகள் இருந்தன !அதே போல் காண் கலை போட்டிகளிலும் முடிவு என் கணிப்புப் படியே இருந்தது.யார் யாரெல்லாம்
நேரடியாக அங்கு வந்து கலைப் படைப்புகளை செய்யவில்லையோ,,,காட்சி படுத்தலோடு நிறுத்திக் கொண்டார்களோ ...இவர்கள் இதையெல்லாம் செய்திருப்பார்களா?செய்ய முடியுமா? என்ற ஐயம் பொதுவாக எல்லோருக்கும் இருந்திருக்குமோ அவர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள்.\
ஆம்.! ....பார்வையாளர்களை திருப்தி படுத்துகின்ற வெகுஜன ரசனைக்கு ஏற்றாப்போல் இருந்த மிகுந்த பொருட் செலவுடன் கூடிய படைப்புகள் வெற்றி பெற்றன.!
வெற்றி பெற்ற திறமையாளர்களுக்கும், அதிர்ஷ்ட சாலிகளுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!தேசிய அளவில் தங்களை தயார்படுத்திக்கொள்ள ...தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளை பாரதம் எங்கும் பரப்பி வெற்றி வாகை சூடிட ...எங்கள் நல் வாழ்த்துக்கள்!
மிக முக்கியமான செய்தி ...நாங்கள் எங்கள் வசதியை மீறி தயாரித்துக் கொண்டுபோன இ -ப்ராஜெக்ட் என்ற ஆவணப் படக் காணொளி (https://www.youtube.com/watch?v=3XyS_YL5orw&feature=share)குறுந்தகடுகள் கடைசிவரை பார்க்கப்பட வில்லை ...எங்களது பள்ளிக்கு மட்டுமல்ல....பிற பள்ளிகளுக்கும் இதே நிலைமைதான்.எங்களது பள்ளி தயாரிப்பின் நிறை குறைகளை கேட்டு அறிந்துகொண்டால் இனி வரும் காலங்களில் உதவியாக இருக்குமே என்று அதற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு பகலவன் அவர்களிடம் அணுகிக் கேட்டபோது நாங்கள் இன்னும் அவற்றைப் பார்க்கவில்லை ...உங்களது மாவட்டத்தின் பேரைக் கூறுங்கள் ...பின்னர் பார்த்துவிட்டுக் கூறுகிறேன் ...என்று கூறினார் ,ஆக,ஆவணப் படத்திற்கான மதிப்பெண் இன்றியே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது என்ன வகையிலான தீர்ப்பு என்பது எனக்கு உண்மையில் விளங்கவில்லை.
எனது நோக்கம் நிகழ்வுகளைக் குறை கூறுவதல்ல.பரிசு பெறவில்லை என்ற ஆதங்கத்தில் புலம்புவதல்ல..அங்கு வருகை புரிந்த பெரும்பான்மை சிறப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனா நிலையை பிரதி பலித்து ,அதன் மூலம் இனி வரும் காலங்களில் இது போன்ற சிறு குறைகளைக் களைவதற்கு துணை நிற்பது...!பிழையிருப்பின் கல்வியாளர்கள் பொறுத்தருள்க!
ஆனால்,நான் எங்கள் மாணவர்களிடம் முன்பே கூறியிருந்தேன்,வெற்றி ,தோல்வி முக்கியம் இல்லை பங்கேற்பும் அதன் மூலம் கிடைக்கும் அனுபவமும் மிக முக்கியம் என்று...எங்கள் மாணவர்கள் தம் களப் பயணத்தின் போது அடைந்த அனுபவங்கள்,எழுத்தாளருடனான ,பாரம்பரியக் கலைஞருடனான நேர் கானல் அனுபவங்கள்,இக் கோவை பயணத்தின் போது பெற்ற அனுபவங்கள், போட்டியிடத்துப் பெற்ற அனுபவங்கள்,பார்வையாளர்களின் கருத்துக்கள், நடுவர் பெருமக்களுடன் கலந்துரையாடியது ,பல மாவட்டத்தை சேர்ந்த சக மாணவர்களுடனான கலைப் பரிமாற்றம்,பல்வேறு ஆசிரியர் பெரு மக்களின் அறிமுகம்,நிறைவு விழா தொடங்குவதற்கு சற்றுமுன் நடுவர் குழுத் தலைவரான சென்னை கவின் கலைக் கல்லூரியின் துறைத் தலைவர் திரு செங்குட்டுவன் அவர்களின் அறிமுக சந்திப்பு அவரது கலை ரீதியிலான வழிகாட்டு நெறிமுறைகள்...புதிய பிரம்மாண்ட அழகிய கல்லூரி மற்றும் பெரிய பெரிய பள்ளி வளாகங்களில் வளைய வந்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம்..அப்பப்பா .... ஆம்.இக் கலை விழா --கலா உத்சவ்-- என்ன நோக்கத்துக்காக நடத்தப்பட்டதோ அது வெற்றி அடைந்ததாகக் கருதுகின்றேன்,,,,எங்கள் மாணவர்கள் வெற்றி வாய்ப்பை இம்முறை தவறவிட்டதற்காய் சிறிதும் வருந்தவில்லை,,,,மாறாக பல்வேறு வித்தியாசமான அனுபவங்களை ,நண்பர்களை பரிசாகப் பெற்ற நிறைவில் புன்முறுவலோடும் மகிழ்ச்சிக் களிப்போடும் தம் இல்லத்திற்குப் பயணமாகின்றனர்...எங்கள் மாணவர்கள் தங்களது நிறை குறைகளை அறிந்துகொண்டனர்...குறைகளைக் களைந்து ...நிறைகளைக் கூட்டி...அனுபவப் படிகளில் ஏறி அடுத்த வருடக் கலா உத்சவ் அனுபவங்களைப்பெற ...வெற்றிக் கனிகளை பறிக்க ஆவலோடு முன்னினும் முனைப்பாய் தயாராகிறார்கள்.எங்களுக்கும் இதுதானே விடும்...1
எங்களை கோவை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்த கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் ,கலா உத்சவ் தமிழக விழாக் குழுவுனார்க்கும் நன்றிகள் பல.
அடுத்தமுறை இன்னும் நன்றாகத் திட்டமிட்டு இப் போட்டி நிகழ்வுகளில் உள்ள சிறு சிறு குறைகளையும் களைந்து இதை விடவும் சிறப்பாக கலா உத்சவ் நடக்க வேண்டும்.மறைந்து வரும் கிராமியக் கவின் கலைகள் மீண்டும் புதுப் பொலிவு பெற வேண்டும்.மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட கலைகள் புதிய பரிமாணங்களை பெற வேண்டும்.மாணவர்தம் திறமை மிளிர வேண்டும்....கலாச்சார பரிமாற்றம் கொண்ட பாரதம் பாரில் ஒளிர வேண்டும்.
போட்டிகளை வென்றெடுத்த மாவட்டங்கள் நடனம் 1 திருச்சி