Saturday, 16 December 2017

எங்க குறைய கேளுங்க

எங்க குறைய கேளுங்க

உழவன் இங்க இல்லையின்னா
சோத்துக் கெங்க போவீங்க
கழனி யெல்லாம் காஞ்சதுன்னா
நீங்க என்ன ஆவீங்க

பண்பாட்டை காக்க னுன்னு
மெரீனாவில் கூடி னீங்க
ஜல்லிக் கட்டு போட்டியில
மாட அவுத்து விட்டீங்க

தலை நகரு டில்லியில
போராட்டம் பண்ண வந்து
உடுப்பு அவுத்து நிக்கறோமே
என்ன பண்ணப் போறீங்க

மானம் போயி டுச்சே
வயலு வீரல் விழுந்துடுச்சே
உங்க கவனமெல்லாம் திருப்பனுன்னு
எங்க மானம் பறந்திடுச்சே

நாட்டோட முதுகெ லும்பு
விவசாய மென்றெல்லாம்
ஏட்டில்  மட்டும் எழுதி வெச்சு
என்ன பண்ண கூறுமய்யா

ஓட  ஓட  விரட்டிப் புட்டு
முது கெலும்ப ஒடச்சுப் புட்டு
எழுந்தெம்ம நிக்கச் சொன்னா
எப்படிய்யா நாங்க நிப்போம்

எம்பொண்டாட்டி புள்ளைங்க
பசியாற வேணுமுன்னா
ஒண்ணுமில்ல எங்க கிட்ட
எத்த கொண்டு எங்க விக்க

    கவிதை தொடரும்....






















Friday, 15 December 2017

ஆண்டிராய்டு காதல்

ஆண்டிராய்டு காதல்


பெண்ணே நீ மின்சாரம்
நான் ஆண்டிராய்டு மொபைல் போன்
என் மனமென்னும் பேட்டரியில்
உன் நினைவென்னும் சார்ஜ் இருப்பதால்தான்
என்னுள் உன் உயிர் என்னும் O .S
என்னுள் ஓயாமல் இயங்குகிறது
என் இன்பில்ட் மெம்மரியில்
உன் நினைவென்னும் M B அதிகரிக்க அதிகரிக்க
நான் ஹேங் ஆகி நிற்கின்றேன் ...
நீ என் அருகில் இல்லா  பொழுதுகளில்
என் முகமென்னும் டச் ஸ்கிரீனின்
பிரைட்னஸ் டவுன் ஆகிப் போகுதடி
உனதான காதல் என்னும் அப்ளிக்கேஷன்
என் நெஞ்சில் இன்ஸ்டால் ஆன நாள் முதலாய்
என் நினைவு,சிந்தனை ,சொல்,செயல் ,உழைப்பு
என அத்தனை அப்ளிகேஷன்களும்
அன் இன்ஸ்டால் ஆகிக்கொண்டிருக்கின்றன
என்று நான் உன்னை முதன்முதலாய் பார்த்தேனோ
அன்று என் விழிகள் என்னும் 1000 மெகா பிக்சல் காமிராவில்
படமாக்கப்பட்டாய் ;மெம்மரியில் சேவ் ஆனாய்
அப்போது முதலாய் டீ பால்டாய் இருந்த
என் முகம் என்னும் சுயம் தொலைத்தேன்
என் மனவாலில் வால்பிக்ச்சர் நீயாகிப் போனாய்
உன் பெயர் என் காதில் விழுந்த கணம் முதல்
என் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள பெயர்களெல்லாம்
உன் பெயராக அல்லவா மாறிவிட்டன
உன் விழியசைவின் மெசேஜ் வாங்கி வாங்கி
என் மெசேஜ் இன்பாக்ஸ் FULL  ஆகிப் போனதடி
நீ இல்லா என் வாழ்க்கை
சிம் இல்லா போன்  ஆகும்
என் மனமென்னும் ஸ்லாட்டில் 32 GB SD கார்டாய்
நீ என்னுடன் இணைந்துவிட்டால் போதும்
என் ஆயுள் எக்ஸ்பெண்டபிள் மெம்மரியாய்
நீண்டுகொண்டே போகும்
ஆகவே , வா என்னோடு
24 மணி நேரமும் என் மனதில் உன் நினைவால்
டாப் அப் செய்து டாப் அப் செய்து
FULL  டாக் டைமும் பேசிமுடித்து
அன்லிமிடெட்  GB களால் பிரௌசிங் செய்து
நான் ஸ்டாப்பாய் இன்பங்களை டவுன்லோட் செய்வோம்



உனக்குள் உன்னதம்

                                                             உனக்குள் உன்னதம் 

உலகம் பல நேரங்களில் 
திறமைசாலிகளைத் திரும்பிப் பார்ப்பதில்லை 
வெற்றியாளர்களை மட்டுமே விரும்பிப் பார்க்கின்றது 
நிரம்பப் போற்றுகின்றது
சாதாரணன் செய்வது சாதனையேயானாலும் 
உலகின் கண்ணுக்கு அவை சாதாரணங்களே
ஒருசிலர் செய்யும் சாதாரணங்கள் கூட 
பெரும் சாதனைகளாகவே போற்றப்படுகின்றன
என்ன செய்யப்படுகின்றது என கவனிக்க 
உலகம் ஒருபொழுதும் தயாராயில்லை 
யாரால் செய்யப்படுகின்றது என்பதனையே 
உற்று நோக்குகிறது இவ்வுலகம் 
உலகம் உன்னை உற்றுப்பார்க்கிறதா
ஊர் உன்னைப் போற்றுகின்றதா 
உதறிவிடு அக்கவலைகளை 
உலகம் உன்னைப் பார்க்கிறதோ இல்லையோ 
உன்னுள் உள்ள உள்மனம் 
உன்னை உற்றுப் பார்க்கின்றது 
உன் செயல்களை உன் மனம் பாராட்டும் 
உன் மனம் பாராட்ட உற்சாகம் ஊற்றெடுக்கும் 
உற்சாகம்  ஊற்றெடுக்க 
உன்னதங்கள் பெருகிவிடும் 
உன்னதங்கள் வான் முட்ட 
ஊரெல்லாம் உனைப் பார்க்கும் 
உலகுனை ஒருநாளில் நிச்சயமாய்
உன்னை நன்றாய் உற்றுப்பார்க்கும் 

  

Wednesday, 13 December 2017

போதும் காதலை வாழ விடு

                                                போதும் காதலை  வாழ விடு


விடியுது விடியுது புதுயுகம் பிறக்குது
          சாதி  இருளுக்கு விடையைக் கொடு
அன்று தொடங்கி   இன்று வரைக்கும்
          காதலுக்கு அழிவில்லை கவலை விடு

சாதியின் பெயரால் காதலைப் பிரிக்கும்
         கயமை உறவை எரித்து விடு
காதலுக் கெதிராய் எவர்வந் தாலும்
         கதையை முடிப்போம் வாளை எடு

சாதி வெறியினால் ஆணவக் கொலைகள்
         புரிவோர் சிரங்களை அறுத்து எடு
காதலின் உணர்வுகள் கயவர்கள் அறியட்டும்
        அதுவரை  அவர்களைப் புடைத்து எடு

காளையின் உரிமை மீட்க்கக்  கிளம்பிய
        மெரீனாக் கடலே வந்து விடு
காதலைக்  காத்திட   வேண்டும் உடனே
         இளையோர் படையே ஒன்று படு

சாதிகள் ஆயிரம் ஆயினும் கூட
         செந்நீர் ஒன்றே அறிந்து விடு
ஏனைய சாதிகள் அழித்திவ் வுலகில்
         காதலர் சாதியை வாழ விடு

உலகே திரண்டு காதலை எதிர்த்தால்
         பிரபஞ்சம் முழுதும் பொசுக்கி விடு
காதலர் உயிரை எடுத்தது போதும்
         போதும் காதலை வாழ விடு.


இது   காதலர்களின்  தேசிய கீதம்








பாரதிக் கனவு

                                                                   பாரதிக் கனவு

ஏனைய  தொழில்கள்  எல்லாம்
             கிடக்கட்டும்   பக்க   மாக
ஏர்த்தொழில்   மட்டும்   இங்கே
             இருக்கட்டும்   முதன்மை   யாக

விளைநிலம்   எல்லாம்   இங்கே
            விண்முட்டும்   கான்கிரீட்   காடாய்
வீணாக்கி   விட்டதற்   காய்
             பரிகாரம்   தேடு   இன்றே

கடல்மணல்    வெளிகள்   எல்லாம்
            நெற்காடாய்   செய்வோம்    நாமே
கடலெல்லாம்   கழனி   ஆக்கும்
             தொழில்நுட்பம்    தேடு    வோமே

வான்நோக்கும்   மொட்டை   மாடி
             முழுத்திலும்    விதைகள்   தூவி
காய்கறி   கீரை   கனிகள்
              விளைவிக்கும்  செயலாற்   றிடுவோம்

செயற்கைக்கோள்   கொண்டு   நாட்டை
              படமாக     எடுத்திட்     டாலும்
பசுமைநன்     நீலம்      தவிர
              நிறமேதும்   தெரிய   வேண்டாம்

வயிற்றுக்குச்   சோறிட   வேண்டும்
              இங்குவாழும்   மனிதருக்    கெல்லாம்
என்றபா    ரதியின்     கனவை
               நிறைவேற்    றுவோம்நாம்    வாரீர் !

கனவுக்கோர் பஞ்சமில்லை

                                                   கனவுக்கோர் பஞ்சமில்லை 

மனப்பேழை காணுகின்ற கனவை எல்லாம் 
             கண போழ்தில் நனவாக்கத் துடிக்கின்றீரே
வனப்புமிகு மங்கையரைச் சேர போகும் 
             காளையெனப் பொறுமை மிக இழக்கின்றீரே 

ஏடெடுத்துப் படிக்காமல் தேர்வில் வென்று 
            மாநிலத்தில் முத்லிடத்தைப் பிடிக்கும் கனவு 
வேர்வைசிந்தி உழைக்காமல் செல்வம் சேர்த்து 
           ஓரிரவில் பில்கேட்சாய் மாறும் கனவு

மணமுடிக்கும் மங்கையவள் தந்தை வந்து 
          மணக்கொடையாய் விமானத்தை நல்கும் கனவு 
செல்லும் நெடுவழியெங்கும் ரசிகர் கூட்டம் 
          ஆர்ப்பரித்துக் கையசைக்கும் நடிகர் கனவு 

பணம் வழங்கும் எந்திரத்தின் தேவையின்றி 
           கட்டுக் கட்டாய்  பணம்புழங்கும் தங்கக் கனவு 
மருமகளைத் தன்மகளாய்த் தாங்கி நிற்கும் 
           மாமியார்கள் நிறைந்திருக்கும் மங்கலாக கனவு 

மங்கையர்தம் கணவர்களை மதித்துப் போற்றும் 
           உலகுக்கு வந்ததுபோல் உன்னதக் கனவு 
மங்கையரை ஓருயிராய் உணர்ந்து எண்ணி 
           காளையர்கள் காத்துநிற்கும் கண்ணியக் கனவு 

ஆட்சியரும் அமைச்சர்களும் தங்கள் பிள்ளை    
           கல்விபெற அரசுப்பள்ளி அணுகும் கனவு  
கடவுச் சீட்டில்லாமல்  பயணம் செய்து  
            கண்டம்விட்டுக்  கண்டம்தாவும் அபத்தக் கனவு

விருட்டென்று விண்தாவி  விண்மீன் கூட்டம் 
           தன்னோடு உரையாடும் விந்தைக் கனவு  
ஆழ்கடலின் தரைதொட்டு முத்தெ டுத்து 
           திமிங்கலத்தின் தலைவருடும் நேசக் கனவு   

வான்பொய்க்கா மழைபெய்து வளங்கள் பெருகி 
           உணவுக்கோர் பஞ்சம்வரா உண்ணத்தக்க கனவு 
முதல்மகனும் காவல் இன்றிக்  குடிமகனோடு
            சமமாகப் பயணிக்கும் சமத்துவக் கனவு 

பாரதமே தூய்மையாகத் துலங்கி நின்று 
            ஆரோக்கிய முதன்மைபெறும் அற்புதக் கனவு 
 அமெரிக்கா முதலான அத்துணை நாடும் 
             இந்தியாவின் நட்புக்கோரும் இன்புறு கனவு 

 கனவுகளே வாராத உறக்கம்  கொண்டு 
             காலையிலே கண்விழிக்கும் கற்பனைக் கனவு 
யார்க்கும் நேர்மையாக நடக்கின்ற நெஞ்சமில்லை 
              நீர்காணுகின்ற கனவுக்கோர் பஞ்சம் இல்லை  

Sunday, 10 December 2017