Wednesday, 21 February 2018

வாத்தியார்

                                        வாத்தியார் 

பள்ளிக் கூட  வாத்தியாரு போறாரு பாரு 
அவரு  கையில் ரெண்டு புத்தகத்தை வச்சிருக்காரு 
அம்மையப்பன் போல நமக்கு விளங்கிடுவாரு - அவரு 
நம்ம கைய புடிச்சு வாழும் வழி காட்டிடுவாரு 

விளங்காத  பாடம்   சொல்லித் தந்திடுவாரு 
வகுப்பறையில்   கதைகள்   சொல்லி  சிரிக்க வைப்பாரு 
தவறு செய்யும் போதில் நம்மை எச்சரிப்பாரு -இவரு 
தகப்பனாரு போல நம்ம அரவணைப்பாரு 

செல்லக்   குறும்பு செய்கையில் ரசிச்சிடுவாரு 
செயலில் வீரராக நம்மை உயர்த்திடுவாரு 
நமக்கு இருக்கும் கலைத் திறமையக்  கண்டறிவாரு -அதை 
வளர்த்து நாமும் உச்சம் தொட துணையிருப்பாரு 

வகுப்பறையின் தூய்மையினைப் பேணிடுவாரு 
குறித்த நேரம் வருகை தந்து காத்திருப்பாரு 
கையில் பிரம்பு வைத்திருந்தும் அடிக்க மாட்டாரு -தன் 
மாணவரின் கனவைக் கண்ணில் சுமந்திருப்பாரு !





Tuesday, 20 February 2018

ஐஸ் வண்டி

                                    ஐஸ் வண்டி

ஐசு வண்டி ஐசு வண்டி வருகுது பாரு

ஆரன் அடிச்சு ஐசு வண்டி வருகுது பாரு

பாலு ஐசு குச்சி ஐசு   இருக்குது பாரு

நம்ம நாக்கில் நாக்கில் எச்சி இப்போ ஊறுது பாரு

காசு கொடுத்து வாங்கித் தின்ன கையில  பாரு

வெயில் பட்டு ஐசு கொஞ்சம் உருகுது பாரு

கையில் வழியும் ஐஸ நாக்கு நக்குது பாரு

இதுக்கு ஈடான சுவை உண்டா உலகினில் கூறு .





தென்னை மரம்

தென்னை மரம்

ஓங்கி ஓங்கி உயர்ந்த மரம் ஒன்று இங்கே இருக்குது
நீல வானம் தொட்டுவிட தலையை விரித்து துடிக்குது

படிப் படியாய் வடுக்கள் கொண்டு சாய்ந்து தரையில் நிற்குது
குலை குலையாய் காய்கள் காய்த்து மட்டை   நடுவில் தொங்குது

தென்றல் காற்றில் விரித்த தலையை ஆட்டி ஆட்டி மகிழுது
குளிர்ந்த இள நீரை வழங்க காத்து தவமும் கிடக்குது

வேரில் உறிஞ்சும் நீரையெல்லாம் இனிப்பினிப்பாய்  மாத்துது
இவ்வளவு உயர்ந்திருந்தும் நிழலைத் தர மறுக்குது

கீற்றுகளில் ஓலை கொண்டு சலசலத்து அசையுது
புதிய பாளை விரித்து விரித்து பூக்கள் மழை பொழியுது

தரையில் நின்று மேலே பார்த்து இள நீரூக் கேங்கும் எங்களை
முயன்று முயன்று மேல்நோக்கி ஏறி வர அழைக்குது

உச்சி தொட்டு காய் பறித்து உண்ணச் சொல்லி பார்க்குது
ஊர்தோறும் மகிழ்ந்திடவே சாமரமாய் வீசுது 

முயற்சி செய்து உயரம் தொட்டால் உயரம் கூடும் வாழ்க்கையில்
என்றதொரு பாடம் நன்றாய் தென்னை  மரம்   நடத்துது



 

பள்ளிக் கூடம்

                                   பள்ளிக் கூடம்

பாடம் நாங்கள் கற்றிட
ஒன்று சேரும் இடமிது
ஆசிரியர் என்னும் ஓர்
பெற்றோர் வாழும் வீடிது

புதிய நண்பர் பலருடன்
உறவும் இங்கே பிறக்குது
ஒழுக்கம் தன்னை வளர்த்திட
உதவுகின்ற இடம் இது

உற்சா கத்தை தருகின்ற
உயர்ந்த தொரு தளமிது
அறி வியலைக் கற்றிட
ஆய்வுக் கூடம் உள்ளது

விளையாடி நாங்கள் மகிழ்ந்திட
மைதா னமும் இருக்குது
கதைகள் படித்து மகிழ்ந்திட
நூ லகமும் கொண்டது

கூடிக் கல்வி கற்றிட
வகுப் பாறைகள் உள்ளது
எங்கள் குறும்புத் தனங்களை
பார்த்து மகிழும் இடமிது

பள்ளிப் பருவம் முடிந்திட
கண் ணீருடன் பிரிவது
மீண்டும் ஒன்று சேர்ந்திட
ஏக்கம் மிகவும் தருவது

இரவு தூங்க மட்டுமே
எங்கள் வீடு உள்ளது
பகலில் பறந்து மகிழ்ந்திட
எங்கள் பள்ளிக்கூடு உள்ளது



 



யானை

               யானை 

யானை யம்மா யானை 
உருவம் பருத்த யானை 
தூண்கள் போலக் கால்கள்
நான்கு கொண்ட யானை 

முறத்தைப் போலக்  காது 
கொண்டு வீசும் யானை 
வெள்ளைக் கொம்பு போல 
தந்தம் கொண்ட யானை 

கோலி குண்டு போல 
கண்கள் கொண்ட யானை 
அசையும் பாம்பைப் போன்ற 
துதிக்கை கொண்ட யானை 

பிள்ளை யார்க்குத் தலையை 
இரவல் தந்த யானை 
மகிழ்ச்சி கொண்டால் தலையை 
உயர்த்திப் பிளிறும் யானை 

பெரிய கோயில் தனிலே 
குடி இருக்கும் யானை 
குழந்தை களை  ஏற்றி 
குதூ களிக்கும்  யானை 





Monday, 19 February 2018

மக்கள் தலைவர்


மக்கள்   தலைவர் 





மக்கள் மனதில் நிற்கின்ற
மாபெரும் தலைவர் நீர்தானே
மாணவர் பசியைத் தீர்த்திடுமோர்
மாபெரும் திட்டம் தந்தவரே

திரைப் படங்களிலே நடித்தவர்
தீராப் புகழைப் பெற்றவரே
மக்கள் திலகம் என்றேதான்
பட்டப் பெயரைக் கொண்டவரே

இலவச சீருடை தந்தவரே
ஈகை குணங்கள் நிறைந்தவரே
தமிழக மக்களின் துயர்நீக்க
தங்கத்  திட்டங்கள் தந்தவரே

ரோஜா நிறத்தைக் கொண்டவரே
குழந்தையைப் போல சிரிப்பவரே
எளிமை குணங்கள் நிறைந்தவரே
தாய்மை உள்ளம் கொண்டவரே

எம்ஜியார் என்றே அன்போடு
எம்மக்கள் உம்மை அழைக்கின்றார்
தமிழகம் உள்ள வரையிலுமே
உம்புகழ் என்றும் வாழ்ந்திடுமே .







Saturday, 17 February 2018

இனியது தமிழே

 இனியது தமிழே

 இனியது இனியது  நம் தமிழே


தொன்மை வாய்ந்தது நம்தமிழே 

செம்மை மொழியது நம்தமிழே

 நம் தாய் மொழியாம் அது நம் தமிழே



பேச இனியது நம்தமிழே

பாடவும் இனியது நம்தமிழே

கற்கவும் இனியது நம்தமிழே

படித்திட இனியது நம் தமிழே



மொழிகளுள்  சிறந்தது  நம் தமிழே

இணையத்துள் உலவுது நம் தமிழே

மேன்மை மிக்கது நம் தமிழே

மேதினி முழுவதும் நம் தமிழே



இலக்கணம் சிறப்பது நம் தமிழே

இலக்கியம் வளர்ப்பது நம் தமிழே

உணர்வினில் கலந்தது  நம் தமிழே

உயிரினும் சிறந்தது நம்தமிழே