Wednesday, 16 May 2018

எங்கள் ஸ்வாசிகா இயக்கம் வருடந்தோறும் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை வயது பேதம் பாராது அங்கீகரித்து சிறப்பு செய்து வருகின்றது .அவ்வகையில் இந்த ஆண்டு இரண்டு சிறார்களுக்கும் ,வயதில் மூத்த கலைஞர்களுக்கும் விருது வழங்கிப் பெருமைப் படுத்தி அதில் தானும் பெருமை கண்டுள்ளது .

முதலில் செல்வன் . தியாக்ஷ்வா

சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் .
தந்தை சுரேஷ் குமார் .
தாயார் காயத்ரி. இவர் பண்ணுருட்டியை அடுத்த
புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் .
தியாக்ஷ்வாவுக்கு ஓவியக் கலைக்காக 
சித்திரக்கலை வளர் சுடர் விருது வழங்கப்பட்டுள்ளது.
செய்த சாதனைகள் இதுவரையிலும் 176க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளான்.
ஓவியக்கலையில் பல முறை உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளான் .

தின மலர் சிறுவர் மலரில் இவனைப் பற்றிய
கவர் ஸ்டோரி 2 பக்கத்திற்கு வெளியிட்டு கௌரவப் படுத்தியுள்ளது .
ஜெர்மனி ,லண்டன்,ஜப்பான் என உலகநாடுகளுக்கெல்லாம்
பறந்து பறந்து படங்கள் வரைந்து பாராட்டுகளும்
பரிசுகளும் பெற்று தொடர்ந்து தன்னை ஓவியக்  கலையில் சாதனை படைக்கத்  தூண்டும் பெற்றோர்க்கு பெருமை சேர்த்து வருகிறான் .

அவனுக்கு சித்திரக்கலை வளர் சுடர் என்னும் பெருமைமிகு விருதினை வழங்கி அவர் மேலும் பல சாதனைகளை இத்துறையில் புரிய வாழ்த்தி மகிழ்கிறோம் ... இச் சாதனையாளனை நீங்களும் வாழ்த்தலாம் ...

( சதா ஏதாவது கிறுக்கித் தள்ளும் குழந்தைகளின் தலையில் தட்டி படிப்பைப் பாரு ..மார்க்கு வாங்கு எனும் பெற்றோர்களே ...கவனம் தேவை ... அந்தக் கிறுக்கலின் பின்னே  தியாக்ஷ்வா போன்ற ஒரு இளம் சாதனையாளன் ஒளிந்துள்ளான் )

Thursday, 10 May 2018

23 ஆவது இலவச ஓவியப் பயிற்சி முகாம் நிறைவு விழா


       நாங்கள் நடத்திய இம்முகாமைப் பற்றி பதிவிடவேண்டுமெனில் தொலைகாட்சி நெடுந்தொடர் போலாகிவிடும் .விருதுபெற்ற சாதனையாளர்கள் குறித்த  விரிவான பதிவு இனி வரும் நாட்களில் ...

எனவே நிறைவு விழா குறித்த


ஸ்வாசிகாவின் கோடைக்கால இலவச ஓவியப்  பயிற்சி முகாம் நிறைவு விழா

           ஸ்வாசிகா இயக்கம் கடந்த 23 வருடங்களாக கோடைக்கு காலத்தின் பொது மே -1 முதல்  மே -10 வரை ஓவிய பயிற்சிமுகாமை நடத்திவருகிறது .ஸ்வாசிகா இயக்கம் பத்து நாட்கள் நடத்திய ஓவிய பயிற்சி முகாம் நிறைவு விழா 10-05-2018 அன்று பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது .நிகழ்வுக்கு  பள்ளியின் தலைமை ஆசிரியர் பூவராக மூர்த்தி அவர்கள் இப் பொன்னான விழாவுக்குத் தலைமை தாங்கி குத்துவிளக்கின் ஒரு முகத்தை ஒளியூட்ட ,திருமதி புவனேஸ்வரி முத்துக்குமரன் , திருமதி விஜய லட்சுமி  கவிதை கணேசன் ,திருமதி காயத்ரி சுரேஷ் குமார் ,திருமதி சங்கீதா ஆனந்தன் ஆகியோர் மற்ற முகங்களை ஒளியூட்டி   விழாவை மங்களகரமாக துவக்கி வைத்தனர். முகாமில் பங்கேற்று மாணவர்களுடன் மாணவராக ஓவிய பயிற்சி பெற்ற பகுதி நேர ஓவிய ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாட விழா இனிது துவங்கியது பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.
       
         சக்தி ஐ டி  ஐ  தாளாளர் சந்திரசேகர் அவர்கள் ஓவியக் கண்காட்சியைத்  திறந்து வைத்தார் .மாணவர்கள் கண்காட்சிக்காக  வரைந்த ஓவியங்கள் ,போட்டியில் வென்றோரின் ஓவியங்கள் சாதனை ஓவியன் செல்வன்  தியாக்ஷ்வா வரைந்த 90 ஓவியங்கள், மாணவர்களின் கலைப் படைப்புகள் ஆகியவற்றோடு தியாக்ஷ்வாவின் பாராட்டுப் பட்டயங்கள் ,விருதுகள் ,பதக்கங்கள் சாதனை ஓவியங்கள் என அனைத்துமே காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தின,

       பண்ணுருட்டி சொக்கநாதன் அவர்கள் புகைப் படக் கண்காட்சியை திறந்து வைத்தார் .ஓவியர் முத்துக்குமரன் அவர்களின் கேமரா க்ளிக்கிய கவிதைகள் என்ற தலைப்பில் அவரது ஒளிப்படக் கருவிக்குள்   உறைந்த காலப் பதிவுகள் வண்ணப்படங்களாக  காட்சிப் படுத்தப்பட்டிருந்தன .அப்படம் குறித்த தகவல்கள் குரள்  வெண்பாவாய்  அவரால் இயற்றப்பட்டு அப்படங்களில் கீழேயே பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது .

         அதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை ரங்கப்பன் அவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் .திருவள்ளுவர் சிலைக்கு கவிதை கணேசன் அவர்களும் பாரதியார் சிலைக்கு ஜெய்சங்கர் அவர்களும்  மாலை அணிவிக்க சக்திவேல் அவர்களும் ஏனைய சான்றோரும் விவேகானந்தர் சிலைக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர் .கலைவாணி முருகன் அவர்கள் கவிதைகணேசனின் தொல் பொருள் கண்காட்சியைத் திறந்துவைத்தார் .பழங்கால நாணயங்கள் , தற்போது உபயோகத்தில் இல்லாத கால ஓட்டத்தில் நாம் மறந்து போன அல்லது  கண்களை விட்டு மறைந்துபோன பொருட்கள் பெரும்பாலானவை காட்சிப்படுத்தப் பட்டதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும் .மேலும் அவர் பெற்ற பாராட்டுப் பாத்திரங்களும் ,விருதுகளும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .

        விழாவில் முதல் நிகழ்வாக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன .

            விருதாளர்களை ஸ்வாசிகாவின் நிறுவனர் முத்துக் குமரன் அறிமுகம் செய்துவைத்தார் .

            சென்னை அசோக் நகரைச் சேர்ந்த தியாக்ஷ்வா என்னும் 7 வயது சிறுவனுக்கு 'சித்திரக்கலை வளர் சுடர் ' விருதும் .

            புதுச்சேரி வில்லியனூரை சார்ந்த திருக்காமேஸ்வரன் என்னும் 8 வயது சிறுவனுக்கு  ' சைவத் திருமுறை சேவா ரத்னா ' விருதும்,\

        பண்ணுருட்டியை சார்ந்த கவிதை கணேசன் அவர்களுக்கு ' தொல்பொருள் சேவா செம்மல் ' விருதும்  ,

         பண்ணுருட்டிய சார்ந்த பொம்மைக் கலைஞர் அப்பாளு சம்மந்தம் அவர்களுக்கு  ' வாழ்நாள் சாதனைக் கலைஞர் ' விருதும் வழங்கப்பட்டன .

           முன்னதாக ஸ்வாசிகா தலைவர் மதன் அனைவரையும் வரவேற்றார் .இணை செயலாளர் முருகானந்தம் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார் . இணை செயலாளர் விஜய் முகாம் அறிக்கை வாசித்தார் .

         கலைவாணி முருகன் ,ஜெய்சங்கர் ,ஆசிரியர்கள் மோகன் குமார் ,செந்தில் குமார் ,சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

        செயலர் ராஜேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார் .

        புதுச்சேரி,வேலூர்,காரைக்கால் போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஓவியக் கலைஞர்களும் கும்பகோணம் ஓவியக் கல்லூரி மற்றும் புதுவை பாரதியார் பல்கலைக் கூடம் இவற்றைச் சார்ந்த மாணவ மாணவியரும் சிறப்பாகப் பயிற்சி அளித்தனர் .

        முகாமில் பங்கேற்ற  மாணவர்களுக்கு அளிக்கப்பட பின்னூட்டப் படிவத்தில் பெரும்பாலான மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு ...விஷயம்....இம்முகாமை 10 நாட்கள் மட்டுமே நடத்துவது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் ( இந்த பத்து நாள் முகாமை நடத்துவதற்குள் நாக்குத் தள்ளுகிறதே ...யப்பா ...)அடுத்த முகாம் எப்போது வரும் என்று காத்திருப்பதாகவும் ...பலர் ஐந்து ,நான்கு ,மூன்று வருடங்களாக தொடர்ந்து இம்முகாமில் பங்கேற்றுப் பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள் ...மிக்க மகிழ்ச்சி ....!

இம்முகாமில் பயிற்சி பெற்று இப்போது  கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவக்  கண்மணிகளும் இளந்தலைமுறை ...வருங்கால ஓவியர்களுக்கு பயிற்சி அளித்தது கூடுதல் சிறப்பு .

        போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு விலை உயர்ந்த வண்ணம் தீட்டும் உபகரணங்களும் , கேடயங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன .முகாமில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்
கலந்துகொண்டு ஓவியக்கலையின் பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டனர் . இவர்களுள் பண்ணுருட்டி பகுதியைச் சார்ந்த மாணவர்கள்  மட்டுமல்லாது கோடை விடுமுறையைக் கழிக்க தம் உறவினர் வீட்டுக்கு வருகை தந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மாணவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்  தக்கது.

       






Monday, 30 April 2018

என் அம்மா

          மே - 1 , உழைப்பாளர் .தினம்.. எங்கள் தாயார் திருமதி சுந்தரவல்லி அப்பர்சாமி அவர்களின் பிறந்த நாள் இன்று .அம்மா என்ற உறவே எல்லோருக்குமே ரொம்ப ஸ்பெஷல்தானே ...
         எல்லா அம்மாக்களையும்  போல்தான் ...என் அம்மாவும் ..நான் செய்யும் சேவைகள் தொடர்பாக எதுவுமே அவர்களுக்கு பிடிக்காது ..ஸ்வாசிகா சமூகப் பணிகள் ,விழாக்கள்,ஓவியம் சிற்பக்க கலை தேடல்கள் சார்ந்த என் பயணங்கள்,சாரணர் சேவைகள் ,மாணவர்களுடனான சுற்றுலாக்கள் ,எனது நூல் சேகரிப்பு , கவிதை நூல் வெளியீடு ...என்று அனைத்துக்குமே அவர்கள் சற்றே எதிர்ப்புதான் ...
          இப்படியே வெளியில அலைஞ்சு ஏன் உடம்ப கெடுத்துக்கற ... புத்தகம் ,செடி அப்படின்னு இப்படி காசை வீணாக்கறியே என்று சதா ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார் .
          ஆனால் என் செயல்கள் அவர்களுக்கு உள்ளூர பெருமைதான் ...எனக்குத் தெரியாமல் ,அனைவரிடமும் இவை குறித்து பெருமையாகப் பேசுவாராம் ...என் கவிதைகளை படித்து என்னிடம் சிலாகித்துப் பேசுவார் ...
          அதுதான் அம்மா ...என் அம்மா ....

          ஆரோக்கியமாக வாழ வாழ்த்துங்கள் முக நூல் சொந்தங்களே !



Wednesday, 18 April 2018

அப்பாளு .C .சம்பந்தம்

அப்பாளு .C .சம்பந்தம்
தகப்பனார் பெயர் A .சின்னசாமி பத்தர்
தாயார் பத்மாவதி அம்மாள்
பிறந்ததேதி 20-05 -1939
பாட்டனார் அப்பாலு பத்தர் .
இவர் பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் . இப்பள்ளி போர்டு ஹை ஸ்கூல் என்று  வழங்கப் பட்டு வந்தது .
அப்பாலு பத்தர்  ராமலிங்க அடிகளார் திரு உருவபொம்மையை  செய்து  தர  அவரும் அதனை வாங்கி பொன்னான மேனியை மண்ணால் செய்தனையே  எனக் கூறி கீழே போட்டுடைத்தார்  எனும் செய்தி வள்ளலார் வரலாற்றில் வருகின்றது .
அவர் வசித்து வந்த தெரு இப்போதும் அவர் பெயரினால் அப்பாலு பத்தர் தெரு என்றே வழங்கப்படுகிறது .
நான்கு தலைமுறைகளாக களிமண் மற்றும் காகிதக் கூழ் கொண்டு இவர்கள் செய்யும்  பொம்மைகள் உலகப்  புகழ் புகழ்பெற்றவை என்பது பண்ணுருட்டியில் வாழும் பலருக்கும் தெரியாது .
ஆம் பண்ணுருட்டி பலாப் பழத்துக்கு ,முந்திரிக்கு மட்டும்தான் புகழ்பெற்றது என  அனைவரும் நினைத்திருப்போம் .அனால் இது காகிதக் கூழ் பொம்மைகளுக்கு கூடப் பெயர்பெற்றதுதான் .
பின்னர் வந்த பலா ,முந்திரி இவை பொம்மையின் புகழை பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றே கூறவேண்டும் .
பிரௌன் நிற அல்சேஷன் நாய் பொம்மைகள் ,செட்டியார் பொம்மைகள் உலகப் பிரசித்தி .
கடோதகஜன் செட் ,கும்பகர்ணன் செட்,  ,தசாவதார செட் ,சரஸ்வதி போன்றவையும் புகழ்பெற்றவையே .
இவற்றுள் காகிதக் கூழ் கொண்டு செய்யப்பட்ட மீனாட்சிக் கல்யாணம் பொம்மை உயர்திரு சம்பந்தம் அய்யாவுக்கு 1992-93 ஆம் வருடத்தில் பூம்புகார் ஸ்டேட் அவார்டு பெற்றுத் தந்தது .
தமிழ் நாட்டில் பாரம்பரியமாக கொலு வைத்துக் கொண்டிருக்கும் அத்துனைபேர் இல்லங்களிலும் இவர்கள் செய்து அளித்த பொம்மைகள் கட்டாயம் இருக்கும் .இன்னமும் இவர்களுக்கு பல ஆர்டர் வந்தாலும்கூட நபர்களின் பற்றாக குறையால் இவர்கள் சிலவற்றை மட்டுமே செய்து வருகிறார்கள்.காகிதக் கூழ் பொம்மைகள் பற்றிய ஒரு ஆவணப் படத்திற்காக இவர் வீட்டிற்குச் சென்றபோதுதான் நானும் இவரைப் பற்றியும் இவர் செய்துவரும் பொம்மைகளின் சிறப்பு பற்றியும் நன்கு தெரிந்துகொண்டேன்.

இவருக்கு S . பிரகாஷ்,S .மகேஷ் பாபு ,S .லட்சுமிநாராயணன்  மகன்களும் உள்ளனர் .
புகழ் பெற்ற பத்திரிகை ஓவியர் மணியம் செல்வன் இவரது உறவினர் .
இவரது மூன்றாம் தலைமுறை இப்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறது .
இவருக்குப் பிறகும் இக்கலை அழியாது பண்ணுருட்டிக்கு புகழ் சேர்க்க இக்கலையை அடுத்துவரும் எதிர்காலத் தலைமுறைகளாக ஆர்வம் கொண்ட மாணவச் செல்வங்களுக்கு கற்றுத்தந்து அழிந்து கொண்டிருக்கும் இக்கலையை புதுப்பித்து உயிர்ப்போடு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை

இவரது கலைத் திறமையைப் பாராட்டி  , பண்ணுருட்டிக்கு புகழ் சேர்த்துவரும் இவரது பொம்மைகளின் அழகை பாராட்டி
இவருக்கு நமது ஸ்வாசிகா இயக்கம் காகிதக் கூழ் கலைச்   செம்மல் என்ற பெருமை மிகு விருதினை அளித்துப் பாராட்டுகிறது .

நன்றி அண்ணா










Monday, 16 April 2018

நிருபர் அவர்கள் ,

ஐயா,
     
       வணக்கம்
       எங்கள் ஸ்வாசிகா இயக்கம் கடந்த 22 ஆண்டுகளாக கோடைக்காலத்தில் ஓவிய ஆர்வம் கொண்ட மாணவர்கள் பலன் பெறும்வண்ணம் இலவச ஓவிய பயிற்சி முகாமையும் ,ஓவியப் போட்டி ,ஓவியக் கண்காட்சி ,பிரபல ஓவியர்கள் உடனான சந்திப்பு ஆகியவற்றையும் நிகழ்த்திவருகிறது . இம்முகாம் மூலம் பல மாணவர்கள் கவின்கலைக் கல்லூரிகளில் சேர்ந்து ஓவியக் கலை வித்தகர்கள் ஆகி ஓவியம் சார்ந்த பல்வேறு உயர்   பணிகளில் சேர்ந்துள்ளார்கள்.
        இவ்வருடம் எங்கள் இயக்கம் 23 ஆவது ஆண்டு  கோடைக்கால இலவச ஓவியப்  பயிற்சி முகாமை மே -1  முதல் மே-10 வரை   பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்துகிறது .ஆர்வம் கொண்ட  மாணவ மாணவியர் மே மாதம் -1 ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு பள்ளி வளாகம் வருகைதந்து தங்கள் பெயரை பதிவு  செய்து அன்றே பயிற்சியில் இணைந்திடலாம் .அது பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தையும் இத்துடன்   இணைத்துள்ளோம் .இச் செய்தியினை தங்கள்  நாளிதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

அன்புடன் ,
முத்துக் குமரன் ,
நிறுவனர் ,
ஸ்வாசிகா ,
புதுப்பேட்டை,பண்ணுருட்டி













 ?


Thursday, 12 April 2018

உயிரும் உணர்வும் தமிழே

உயிரும் உணர்வும் தமிழே

பேசும் மொழிகளிலே உயர்தனிச் செம்மொழி தமிழே
நேசம் வைத்திடுவோம் எங்கள் தாய்மொழி தமிழே
தமிழ் தமிழ் என்னும் போதினிலே ..
அமிழ்தம் பாயுது காதினிலே ...
நாம் அலாதி இன்பம் காண்பது
தமிழ்மொழி பேசும் வேளையிலே ..! (பேசும்)

கல் தோன்றும்  முன்னே  மண் தோன்றும் முன்னே
முன் தோன்றி வளர் மொழி தமிழே .!
காலத்தை வென்றும் தேசத்தை வென்றும்
வாசம்தான் வீசும் மொழி தமிழே !

நம் ஊனோடும்  உயிரோடும்  உணர்வோடும் கலந்து
ஒன்றாக நிற்கும் மொழி தமிழே !
வானோங்கி வளரும் தமிழர்தம் புகழை
மென்மேலும் வளர்ப்பது தமிழே !

தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் எங்கள் மூச்சு
தமிழ் அன்னைதான் எங்கள் வாழ்வே ...!

தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
என நாளும் பாடி
தமிழுக்காய்ப் போகும் எங்கள் உயிரே ...!  (பேசும்)

இது கவிதை ...பாடல் ...கவிதை பாடல் ...இசையோடு பாடவும் நன்று !

கவிஞர் - அ .முத்துக் குமரன்


Muthu Kumaran .A
Drawing Master ,GHSS,PANRUTI,
13,2ND CROSS STREET, PATTU SAMY NAGAR ,
KOTTALAAMPAAKKAM,
PUTHUPET (PO)
607108
PANRUTI TK
CUDDALORE DT 

9842618876
8608097188













ஸ்வசிகாவின் ஓவியப் பயிற்சிமுகாம் -2018

ஸ்வசிகாவின் ஓவியப் பயிற்சிமுகாம் 23 ஆம்  ஆண்டாக நடைபெற இருக்கிறது . 
மே 1 ஸ்வாசிகாவின் பிறந்தாநாளை முன்னிட்டு நாங்கள் 22 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தும் ஓவியப் பயிற்சி முகாம்.
23 ஆம் ஆண்டில்...மே 1 முதல் மே 10 வரை ....
கோடையிலே கோலாகலக் கொண்டாட்டம் ....
ராஜா ரவிவர்மாவின் திரு உருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்படும் .
ஸ்வாசிகாவின் 23 ஆவது பிறந்தநாளை உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்படும் .. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்படும் .
அனைவருக்கும் குறிப்பேடுகள்,பேனா,பென்சில் வழங்கப்படும் .
வயது வாரியாக மாணவர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வண்ணம் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன,
ஓவிய அடிப்படைகளுடன் சித்திரப் பயிற்சி இனிதே துவங்கும்

தொடர்ந்து 10 நாட்களும் நானும் இன்னும் பலநல்ல உள்ளம் கொண்ட சிறந்த ஓவியக் கலைஞர்களும் இணைந்து பயிற்சிகள் வழங்குகின்றோம்.
இம்முகாமில் பங்கேற்று தம் திறமையை பட்டை தீட்டி இன்று ஓவியக் கலையில் சிறந்துவிளங்கும் எங்கள் மாணவர்களும் எம்மோடு இணைந்து பயிற்சி அளிக்கிறார்கள்.
நிறைவு நாள் அன்று போட்டிகளும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய சித்திரக் கண்காட்சியும் நடைபெறுகின்றன .
மேலும் பயிற்சி அளித்த கலைஞர்களின் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
அனைத்துக்கும் மேலாக நான்கு சாதனையாளர்களுக்கு பெருமைமிகு விருது வழங்கும் விழா நிகழ்வும் நடைபெற உள்ளது .
அனைவரும் வருகைதந்து  முகாமை ,விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் & சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள் ...!