Sunday, 23 December 2018

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...7

சென்னை புத்தகத் திருவிழா 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 7



வகுப்பறைக்கு வெளியே என்னும் இந்நூல்
பள்ளி இடைநிற்றல் மாணவர்களின் பின்புலங்களை நம் மனசாட்சியின் முன் வினாக்களாக்கி நம் இதயத்தை விடை தேடவைக்கச் செய்யும் முயற்சி .
நூலாசிரியர் பணிநிறைவு பெற்ற ஆசிரியரும் கூட .அதனால் தனது பணிக் காலங்களில் சந்தித்த இடைநிற்றல் மாணவர்களின் பின் புலங்களை ஏழு அத்தியாயங்களாக்கி சிறுகதைகளின் தொகுப்பாகவே தந்துள்ளார்.ஒவ்வொன்றையுமே குறும்படமாக்கலாம்.ஒவ்வொரு மாணவர் கதையுமே மனதை கனக்கச் செய்பவை .
சில கண்களை பனிக்க வைத்துவிடும் .
நல்ல நீரோட்டம் போன்ற எளிய நடை ;அருமையான சம்பவ விவரிப்பு .இந்தச் சம்பவத் தொகுப்பிலே இழையோடித் தெரியும் அவருடைய பணியின் மீதான அர்ப்பணிப்பு,மாணவர்கள் மீதான தனிப்பட்ட அக்கறை அவர் மீதான மதிப்பைக் கூடுதலாக்குகிறது.
மாணவர்களின் இடைநிற்றலுக்குக் காரணம் பள்ளிச்சூழலா ,குடும்பச்சூழலா ,அரசின் மதிப்பெண்களை மையப்படுத்திய கல்விக் கொள்கையா என நம் மனதுள் பட்டி மன்றமே நடக்க வைத்துவிடுகிறது இந்நூல்.
அலமேலு ,பரமசிவம்,வினோத்,இருசப்பன்,
தமிழரசன் ,வேலன்,திவ்யா ,ஐய்யப்பன்...
இவர்களெல்லாம் இந்நூலில் வாழ்ந்துவிட்டு பள்ளியில் இடைநின்றவர்கள்.ஆனால் நம் மனதில் குடியேறிவிடுகிறார்கள்.
இவர்கள் வேறு வேறு பெயரில் தமிழகத்தின் எல்லா அரசுப் பள்ளிகளிலும் நிச்சயம் இருப்பார்கள். ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் ஒரு ஆசிரியராக இருப்பின் உங்கள் பள்ளியிலும் இருக்கலாம்;
இடை நின்றிருக்கலாம் .அவர்களைத் தேடி மீண்டும் பள்ளியில் சேர்க்க வைக்கும் முயற்சியே இந்நூலாசிரியர் நம்மை நோக்கி எழுப்பிய வினாக்களுக்கான விடை.
கவுன்ட் பவுன் - 16 நாட்கள் .

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...6

சென்னைப் புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 6



ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் யோகா கலையின் ஒட்டுமொத்த தென்னிந்திய அடையாளமாக அறியப்படுபவர்.தென்கயிலாய அடிவாரத்தை உலகறியச் செய்தவர்.எத்தனையோ கோடிக்கணக்கான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களின் மானசீக குருவாக , உள்மனத் தேடலின் வழிகாட்டியாகத் திகழ்பவர்.
அதேநேரம் இறை ஞானத்தோடு விஞ்ஞானம் ,நவீன நாகரீகம் ,வித்தியாசமான ஆடைக் குறியீடுகள் ,குளிர் கண்ணாடி ,
புல்லட் பயணம் ,
குழு விளையாட்டுக்கள் ,
கோடிக்கணக்கில் மரக்கன்றுகள் நடுதல் ,
சிவராத்திரி மகோற்சவக் கொண்டாட்டம் ,
கிராமப் புத்துணர்வு இயக்கம் ,
ஹைடெக் இமயமலை ,கைலாய யாத்திரை என்பது போன்ற செயல்பாடுகளால் இலட்சக்கணக்கான இளைஞர்களையும் ஈர்த்து தனது நிறுவனத்தையும் ஏன் தன்னையுமே கார்ப்பரேட் என்ற இடையாளத்துக்குள் கொண்டுவந்தவர்.
உலகப் புகழ்பெற்ற ஆதியோகி என்ற பிரம்மாண்டத்தை நிறுவி சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கண்டனத்திற்கு உள்ளானவர் .
இவரது எழுத்துக்களை வாசிப்பவர்கள் தனது ஆழ்மனம் எழுப்பும் வினாக்களுக்கு விடையறிந்துவிடுவார்கள்.இந்நூலும் அத்தகைய வரிசையைச் சேர்ந்ததே .
ஆசையே அழிவிற்குக் காரணம் என்ற துறவி புத்த மகானின் கருத்தை அப்படியே மறுதளித்து ' அத்தனைக்கும் ஆசைப்படு '
என்ற புதியதொரு உற்சாக சொற்றொடரை உருவாக்கி அனைவரின் உள்ளங்களையும் திரும்பிப் பார்க்க வைத்த அவரது புதிய யுக்தி ,சிந்தனை இந்நூலிலும் விரவிக்கிடக்கின்றது .
நீங்கள் யாராக இருந்தாலும் ,எந்த வயதினராக இருந்தாலும் ,
உங்களுக்கு எது வேண்டும் ? என்று வினவி அந்த விஷயத்தில் தெளிவு பெற உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குகிறார்
சத்குரு.
வெவ்வேறு தருணங்களில் ,வெவ்வேறு தலைப்புகளில் சத்குரு ஆற்றிய உரைகள் ,நேர்காணல்களின் எழுத்து வடிவத் தொகுப்பே இந்நூல்.
உங்கள் மனம் விரும்பும் ,தேடும் பல செய்திகள் ,வழிகாட்டல்கள் உள்ளே உங்களுக்காகக் கொட்டிக் கிடக்கின்றன.
கவுன்ட் டவுன் - 17 நாட்கள்

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...5

சென்னை புத்தகத் திருவிழா-2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -5



சு.தியடோர் பாஸ்கரன் தாராபுரத்தில் பிறந்தவர்.சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை வரலாறு பயின்றவர்.
பயண ஆர்வலர்.கலை, வரலாறு பற்றிய பல கட்டுரைகளை தமிழிலும் ,ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். நிறைய திரைப்படம் சார்ந்த நூல்களை, சூழலியல் சார்ந்த நூல்களை தந்துள்ளார்.
கல் மேல் நடந்த காலம் என்னும் இந்நூலின் தலைப்பும் ,முகப்பு அட்டைப் படமும் இதன் கடின அட்டைபோடப்பட்ட பைன்டிங் தரமுமே நம்மை நூலை வாங்கத்தூண்டுவதாக உள்ளன.
இது பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பிரபல மாத ஏடுகளில் வெளிவந்த இவரது கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஆகும்.
வரலாற்று ஆர்வலர்களுக்கும் தொல்பொருள் ஆர்வலர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் இந்நூல்.
படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் நடை.
புத்தகத்தின் வெளித்தோற்றம் போலவே உள்ளுக்குள்ளும் தரமான ,கருத்தாழம் மிக்க ,வாசித்து இன்புறத்தக்க பல கட்டுரைகளையும் கொண்டுள்ளது.அதனுடன் கூட கண்டு இன்புறும் வகையிலான பல படங்களையும் ,குகைகளில் ,கோவில்களில் கண்ட அக்கால ஓவியங்களின் கோட்டுருவங்களையும் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு .
கருப்பு வெள்ளையாய் இருப்பினும்கூட மிக தெளிவான நிழற்படங்களைக் கொண்டுள்ளது.
இந்நூலை வாசிக்கையிலேயே ஆசிரியரது பயண அனுபவம் நம் கண்ணுள் விரிகிறது.
இந்நூலைப் படித்ததுமே சமணர் படுகைகள் காணப்படும் இடங்களை , பழங்கால தொன்மையான மலைக் குகைகள் காணப்படும் இடங்களையும் ,சோழர், பல்லவர் கால கற்றளிகளையும் காண மனம் பரபரக்கும்;அது சார்ந்ததொரு பயணம் மேற்கொள்ள கால்கள் துடிதுடிக்கும் .
இது மிகைப்படுத்தல் அல்ல .முற்றிலும் உண்மை.
இதோ அருகில் அரையாண்டு விடுமுறை அதற்கான வாய்ப்பை அளிக்க உள்ளது .
கவுன்ட் டவுன் - 18 நாட்கள்

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...4

சென்னை புத்தகத் திருவிழா -2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம்-4
கவிஞர் ,திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பற்றிய அறிமுகம் நான் செய்வது இங்கு சற்றே அதிகப் பிரசங்கித்தனமாகிவிடும்.
எனவே நேரடியாக நூலைப் பற்றி ..
செல்போன் வருகைக்கு முன்னர் நம் உயிரொடு உயிராக ,ஆத்மார்த்தமாகக்
கலந்திருந்த மிக நெருக்கமான உறவுகள் எல்லாம் ,இந்த செல்போன் என்னும் மாய அரக்கனின் வருகைக்குப்பின் மிக அன்னியப்பட்டு வெகுதூரம் போய்விட்டன என்பது நாம் அனைவருமே அறிந்திருக்கின்ற அனுபவ உண்மைகளுள் ஒன்று .
அம்மா ,அப்பா தொடங்கி அக்கா ,தங்கை என வளர்ந்து ,சித்தப்பா ,அத்தை எனத் தொடர்ந்து ,ஆயா ,தாத்தா என உயிர்த்து மனைவி ,மகன் என நிறையும் நம் ஒவ்வொருவரின் வாழ்வியலோடும் பிரிக்க இயலா வகையில் பின்னிப் பிணைந்துவிட்ட அத்தனை இரத்த உறவுகளின் நினைவுகளை நம் மனதின் பக்கங்களை மயிலிறகால் வருடித்திறக்கும் ஒரு சிலிர்ப்பான , ஆகச்சிறந்த ஒரு பதிவுதான் இந்த நூல்.
விகடனில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை உணர்வுக் கடலில் மூழ்கடித்து கண்ணீர்த்துளிகளை விழியோரம் முத்தெடுக்க வைத்த முத்துக்குமாரின்
முத்தான இந்த பதிவு ஒரு தொகுப்பு நூலாய் பிறப்பெடுத்தது அக்டோபர் 2011ல்.
ஆனால் எனது கரங்களில் தவழும் இந்நூல் நவம்பர் 2017 ல் 12 ஆவது பதிப்பாக வெளியிடப்பட்டதாகும் .இடைப்பட்ட ஐந்து வருடங்களில் 10 பதிப்புகளைக் கண்டுவிட்தென்றால் இந்நூலுக்கு வாசக நெஞ்சங்கள் அளித்திருக்கும் வரவேற்பைப் பற்றி நான் கூறவேண்டுமா என்ன ?
குடும்பக் கட்டுப்பாடு ,நாமிருவர் நமக்கிருவர்,நாமிருவர் நமக்கொருவர் ,நாமிருவர் நமக்கேன் மற்றொருவர் என்று உறவுகளை அறுகச் செய்துகொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உலகத்திலேயே பரிதாபமான ஜீவன்கள் உண்டென்றால் அது அத்தை , மாமா,பெரியம்மா ,பெரியப்பா , சித்தப்பா, சித்தி போன்ற தாயோடும் ,தந்தையோடும் ஒட்டிப்பிறந்த அற்புத உறவுகளே இன்றிப் பிறக்கப் போகும் அடுத்த தலைமுறையினர்தான்.
அவர்களுக்கான ஒரு மியூசியத்தின் புத்தக வடிவமே இந்த நூல் என்பேன் நான்.
மற்றபடி வேறென்ன சொல்ல .?
முக்கியமாக இன்னொன்று .
இந்நூலின் கடைசி அத்தியாயமான ,
முத்துக்குமார் தன் மகன் ஆதவனுக்கு எழுதிய கடித நடையிலான ' மகன் ' என்னும் அத்தியாயத்தை பள்ளிக் கல்வித்துறை ஒன்பதாம் வகுப்பின் தமிழ் பாடநூலில் ஒரு பாடமாக்கி முத்துக்குமாரின் தமிழ் நடையை இத்தலைமுறையின் மாணவச் செல்வங்களும் அறியும்படி செய்துள்ளது .
இதன் மூலம் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு ஒரு கௌரவத்தை வழங்கி தனக்குமேகூட பெருமையைத் தேடிக்கொண்டது ...!
முத்தாய்ப்பாக சேரனின் ' ஆட்டோகிராப் ' நம் ஒவ்வொருவரின் காதலுக்கானது திரைவடிவம் என்றால்...
முத்துக்குமாரின் ' அணிலாடும் முன்றில் '
நம் ஒவ்வொரு உறவுகளுக்கான புத்தக வடிவம்...!
நூலை வாங்கி வாசித்துக் கண்மூடுங்கள்
உங்கள் மனத்தின் முன்றிலில் அணிலாடும் என்பதும் நிச்சயம்..

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...3


#சென்னை புத்தகத் திருவிழா -2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -3
வகுப்பறைகளில் பாடம் நடத்தி பாடப்பகுதி முடித்தல், வீட்டுப்பாடம் கொடுத்தல்,தேர்வுகள் வைத்தல் என்பதைத் தாண்டி , மாணவர்களை நூலகப் பயன்பாட்டை நுகரச் செய்தல்...
நல்ல நூல்களை வாசிக்கச் செய்தல்...அவை குறித்து வகுப்பறையில் உரையாடலை அரட்டையாய் நிகழ்த்தி மாணவர்கள் அனைவரையும் அவர்களறியமலேயே பங்கேற்கச் செய்யல் பற்றிக் கூறும் நூல் .
யானை ,பறவைகள், எறும்பு,கழுகு ஆகியவை பற்றிய பல தெரிந்த செய்திகளையும் ,
இதுவரை கேட்டறியா புதிய தகவல்களையும்
மாணவர் உரையாடல் வழியாகத் தருகிறார் ஆசிரியரும் நூலாசிரியருமான திரு.வே.சங்கர் அவர்கள்.
பொதுவாகவே 'ம்..பேசாத ...வாய மூடு ..'
என்று சொல்லி மாணவர்களின் வகுப்பறை உரையாடலுக்குப் பூட்டு போடும்
ஆசிரியர்கள் இந்த நூலை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் .ஒருவேளை அவர்கள் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் .
வாழ்த்துகள் வே. சங்கர் !
sankarhirithik@gmail.com
9842580424
கவுன்ட் டவுன் -20 நாட்கள் ...

சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...2

#சென்னைபுத்தகத்திருவிழா -2019
சிறப்புப் பகிர்வு .
நூல் அறிமுகம்-2



கலகலவகுப்பறை சிவா முகநூல் மூலம் ஆசிரியர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.பதிவுகள் எல்லாமே மாணவர் நலன் ,கல்வி வளர்ச்சி ,
பள்ளிச் சூழலை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வதானதாகவே இருக்கும்.ஒரு ஓவியரும் கூட.மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறைகளையும் பரீட்சார்த்தமான முயற்சியாக அவ்வப்போது நடத்தி வருகிறார்.
கற்பித்தல் நிகழ்வானது வகுப்பறையில் மட்டுமல்லாது வெளிச்சூழல்களிலும் நிகழவேண்டிய ஒன்று என்னும் கருத்தைக் கொண்டவர்.இக்கருத்தை
வலியுறுத்துவதற்காகவே
' கலகலவகுப்பறை ' என்னும் அமைப்பையும் நிறுவி நடத்திவருகின்றார்.
உண்மையில் பார்க்கப் போனால் வகுப்பறைச்சூழலில் கற்றுக்கொள்வதைவிட வெளிச் சூழலில்தான் ஒரு மாணவன் அதிகம் கற்றுக்கொள்கிறான் என்பதே நிதர்சனம் கூட.இதை என் அனுபவத்திலும் நான் நன்கு உணர்ந்துள்ளேன்.
திரைப்படம் ஒரு அற்புதமான கருவி.அதனை எங்ஙனம் கற்பித்தலுக்கு உத்வேகம் ஊட்டும் கருவியாகப் பயன்படுத்தலாம் என்பதனை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் சிவா.ஆசிரியர்கள் கண்டு சிலாகிக்கவும் ,
தமது வாழ்விலும் நடைமுறைப்படுத்துவதற்கு
ஏதுவான வகையிலும் ,தம் பணியில் தொய்வு ஏற்படும்போதோ ,சிறிது மனச் சோர்வு ஏற்படும் காலத்தோ அவைகளை நீக்கிக்கொண்டு தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொள்ள
உத்வேகம் ஊட்டிக்கொள்ள
பார்க்கவேண்டிய திரைப்படங்கள் சிலவற்றை இந்நூலில் முன்மொழிந்துள்ளார்.
உலகத் திரைப்படங்களுள் சில ..பெரும்பான்மையான ஆசிரியர்களால் ,
கல்வியாளர்களால் சிலாகித்துப் பார்க்கப்பட்ட பலமொழித் திரைப் படங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
2015 ல்பிரெஞ்சுப்படமும் எனத் (சீருடை )என்ற மராத்தி மொழிப் படத்துடன் துவங்கும் முதல் அத்தியாயத்தைத் தொடர்ந்து மன்சூர் லாசர் என்னும் கனடியன் பிரெஞ்சுப்படம் எனத் தொடர்கிறது .
Shikshanachya Acha Gho
(Marathi)
The Teacher's Diary (Thai)
72 Miles -Ek Pravas (Marathi)
The Ran Clark Story (English)
Gridiron Gang (English)
Mr.Holland's Opus (English )
என பார்த்து பார்த்து தந்திருக்கிறார்.
ஒரு ஆசிரியராக நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் ,ஏன் அதைவிடவும் அதிகமாகவே இந்தப் படங்களிலும் விரவிக் காணப்படுகின்றன.
இன்றைய சமூகத்தின் சிறந்த மனிதர்களை உருவாக்க விரும்பும் ஒரு ஆசிரியர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது பரவலான கருத்து .அதையே தனது முன்னுரையிலும் முன்மொழிந்திருக்கும் சிவாவின் கருத்தை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் வழிமொழிவர் என்பதில் ஐயமில்லை .
ஒரு ஆசிரியர் தன்னைப் புதிப்பித்துக்கொண்டேயிருக்க பல வழிகள் உள்ளன.அவற்றுள் முதல் வழி நல்ல நல்ல நூல்களை - அதுவும் குறிப்பாக கல்வி ,ஆசிரியர், மாணவர்,பள்ளிச்சூழல்களை பேசுபொருள்களாகக் கொண்டுள்ள நூல்களைத் தேடி வாசித்தல்தான்...!
அடுத்ததாக கல்விசார்ந்த உரையாடல்களை கதைக்களன்களாகக் கொண்ட காட்சிகளை படமாக்கிக் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக்கும் திரைப்படங்களும் ,
குறும்படங்களும்தான் எனபதனையே கலகலவகுப்பறை சிவா இந்நூல் மூலம் ஆற்றுப்படுத்துகிறார்.
இதில் இந்தி மொழியில் வெளியான தாரே ஜாமீன் பர் என்ற பிரபலப் படத்தைக் குறிப்பிடாதது ஒரு குறைதான்.இவற்றைப் பார்க்கும்போது இது போன்ற படங்களுக்கு தமிழில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் நன்கு புரிகிறது .
பசங்க ,
பசங்க -2 ,
அப்பா ,
சாட்டை,
அம்மா கணக்கு ,
குற்றம் கடிதல்
போன்ற படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
வசூல் ரீதியாக வெற்றியடைவதை கருத்தில் கொள்ளாமல் தமிழ் திரையுலகம் எடுத்தால் வருங்காலம் வளப்படும்.பார்ப்போம்.
அடுத்ததாக கல்வித்துறைக்கும் ஒரு ஆலோசனை. இந்த நூலில் குறிப்படப்பட்டுள்ள அல்லது இதுபோன்ற படங்களை , குறும்படங்களை தேடிப்பிடித்து அவற்றை ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்களில் திரையிட முயற்சிப்பதன் மூலம் இதுபோன்ற படங்களை பெரும்பான்மையான ஆசிரியர்களை சென்றடையச்செய்யலாம்.நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும்.முக்கியமாக பயிற்சி நடக்கும்போதே சமோசா ,தேனீர் அருந்தச் செல்ல எத்தனிக்கும் ஒரு சில ஆசிரியர்களையும் பயிற்சியிலேயே அமர வைத்துவிடும்.யோசிக்க்குமா கல்வித்துறை ?
மற்றபடி கல்வி சார்ந்த இது போன்ற நூல்களை சிவா அவர்கள் நிறைய படைக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் சிவா ...!
கவுன்ட் டவுன் ....
இன்னும் 21 நாட்கள்...


சென்னை புத்தகத் திருவிழா -2019 நூலறிமுகம்...1


சென்னை புத்தகத் திருவிழா -2019

சிறப்புப்பதிவு...1




நாளொரு நூலறிமுகம்...1
கடலூர் புத்தகத்திருவிழாக்கடலில் நான் ஆழ்ந்தெடுத்த முத்துக்குவியலாம் புத்தகப் புதையல்களுள் சிலவற்றையும் கடந்தவருட சென்னப் புத்தகத் திருவிழாவில் கண்டெடுத்த எனது சேகரிப்பில் உள்ள சொத்துகளில் சிலவற்றையும் பற்றிக் கூறப்போகிறேன் .குறிப்பாக நான் மீண்டும் மீண்டும் வாசித்துச் சிலாகித்தவற்றை புத்தகப் பித்தர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆற்றுப்படுத்தும் நிகழ்வு இது ....!
அடிப்படையில் நான் ஒரு ஆசிரியராக இருப்பதால் அனேகமான நூல்கள் கல்வி சார்ந்தும் ,சிறார் நூல்களாகவும் இருக்கக்கூடும்.
இதில் முதல் நூல்
#சூப்பர்சுட்டீஸ்
#ஆயிஷாநடராசன் அவர்களின் படைப்பு .
#பாரதிப்புத்தகாலயம் வெளியீடு
#BOOKSFORCHILDREN வரிசை
₹50.
கடலூர் மாவட்டத்துப் பெருமைகளுள் ஒருவரான ஆயிஷா நடராசன் அவர்கள் தனது நவீன விக்கிரமாதித்தியன் கதைகள் என்ற நூலுக்காக 2014 ஆண்டிற்கான
பால சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்;சிறந்த கல்வியாளர்.
அனேகமாக அவரது பல எழுத்துக்களை நான் எனது நூலகத்துள் வைத்துள்ளேன்...
அவற்றுள் ஆயிஷா, நாகா போன்ற கதைகளைத் தொடர்ந்து எனது உள்ளத்தைத் தொட்ட ஒரு நூல் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும் .
ஆயிஷா - ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்குமான நேசங்கலந்த உறவைப் பேசுவது.
நாகா - கடலூரில் நடக்கும் ஒரு சாரண முகாமில் பங்கேற்ற நாகா என்னும் சாரணச் சிறுவனின் வீரதீர சாகசங்களை துடிப்போடு விவரிக்கும் நாவல்.காட்சிகளை கண்முன் விரியவைக்கும் கடித நடை .
சூப்பர் சுட்டீஸ்.
தம் உயிரை துச்சமென மதித்து சாகசச் செயல்கள் மூலம் வரலாற்றில் இடம் பிடித்த சிறுவர் சிறுமியர் கதை .
வீரதீர விருது பெற்று யானைமீதேறி அமர்ந்து தேசியவிழாக்களில் ஒட்டு மொத்த தேச மக்களின் வீர வணக்கத்தைப் பெற்ற
ரியல் ஹீரோ,ஹீரோயின்களின் கதை .
பாரத தேசத்தின் அனைத்து மாநில வீரக் குழந்தைகளின் உத்வேகமூட்டும் கதை .
ஹரீஷ் சந்திரா எனும் சாரண மாணவன்,
சாரு சர்மா எனும் சிறுமி தொடங்கி இப்பி பாசர் எனும் வீரமங்கை ஈறாக மொத்தம்
18 வீரர்களின் கதைகளின் தொகுப்புதான் இந்நூல்.
தமிழகத்தின் பெருமை கூறும் கந்தக் குமார் என்னும் சிறுவனின் கதையும் இதில் அடக்கம் .
ஒவ்வொரு கதையும் அதிகப் பட்சம் இரண்டரை அல்லது மூன்று பக்கங்கள் ..
படத்துடன் சேர்த்து .
ஆயிஷா நடரசனுக்கே உரித்தான கடித நடை .
அனைத்துமே வாசிப்போர்க்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துபவை .குறிப்பாக ஒவ்வொரு மாணவர்க்கும் ....!
சில கதைகளை வாசிக்கும்போது உள்ளுக்குள் ஒரு பெருமிதம் படர்கிறது ;
கண்களில் நீர் கோர்க்கிறது ; ஆழ்மனதிலிருந்தும் ,அடி வயிற்றிலிருந்தும் ஒரு கேவல் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நமது பள்ளிகளிலும் கூட ,நமது வீட்டிலும் கூட இப்படிப்பட்ட சாகச நாயகர்கள் கண்டிப்பாக இருக்கக்கூடும்.
வீரத்திற்கு ஒரு மிகச் சரியாக ஒரு முன்னுரை எழுதி வாசிப்பவர்களை கைகுலுக்கி உற்சாகப்படுத்தி கதைகளுக்குள் வாசகர்களை வரவேற்கும் ஆயிஷா நடராசன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...!
இளைய தலைமுறையின் சார்பாக;
இனி வரும் காலங்களில் வீரதீர சாகச விருதுகளை பெறுவோர் சார்பாக ...!
பல சாகசங்கள் செய்தும் உலகறியும் வாய்ப்பில்லாது ஊருக்குள் வாழ்ந்துவரும்
விருது பெறாத சிறார் சார்பாக ...!
நிச்சயம் வாங்கிப் படியுங்கள் ...!
Count Down Starts ...