Sunday, 23 July 2017

ஆட்சியரின் பாராட்டு

        










     
 கடந்த மே மாத இறுதியில் புதுவை அரசின் அழைப்பை ஏற்று காரைக்காலில் நடை பெற்ற ஓவிய பயிற்சி முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு ஓவிய  பயிற்சி அளித்திருந்தேன்.
     
      பள்ளி முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியை திருமதி சித்ரா அவர்கள் நிகழ்வை அருமையாக ஒருங்கிணைத்திருந்தார்கள் .மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு கிரிவாசன் அவர்கள் எங்களுக்கு அருகிலிருந்த அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்திருந்தார்.
        அப்போது நான் மாணவர்களுக்கு சிறப்பான முறையிலும் ஆர்வமூட்டும் வகையிலும் ஓவிய பயிற்சி அளித்தமையை,கண்காட்சி அமைத்தமையைப் பாராட்டி காரைக்கால் ஆட்சியர் எனக்கு அனுப்பிய பாராட்டு மடல்.இதனை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.
          ஏதோ பயிற்சி அளித்தார்கள்...நாம் அதற்கான ஊக்கத்தொகை & பயணப்படி வழங்கினோம் என்றில்லாமல் ..தனது பல அலுவல்களுக்கு இடையேயும் எங்கள் பயிற்சியை நினைவில்கொண்டு சற்று தாமதமாக அனுப்பினாலும் கூட மறவாமல் பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்து என்னை பெருமைப் படுத்திய காரைக்கால் ஆட்சித் தலைவர்
           உயர்திரு ,   P .பார்த்திபன் I A S    அவர்களுக்கு
  
என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திருமதி சித்ரா அவர்களுக்கும் திரு.கிரிவாசன் அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடைமைப் பட்டுள்ளேன். இது போன்ற தருணங்களே எங்களை தொடர்ந்து சேவைக் களத்தில்  செயலாற்ற  வைக்கின்றன .

Monday, 10 July 2017

கோடைக்கால பல் திறன் பயிற்சி - புதுவை

          கடந்த மே மாதம் புதுவை டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் ஆராய்ச்சி மையம் நிகழ்த்திய கோடைக்கால பல் திறன் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஓவியத்தின் பல்வேறு நுணுக்கங்களை கற்றுத் தந்தேன் .

         பயிற்சியானது அதன் இயக்குனர் உயர்திரு துவாரக்நாத் அவர்களின் சீரிய மேற்பார்வையிலும் ,நண்பர்  சதீஷ்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பாலும் மற்ற பணியாளர்களின் உதவியாலும் சிறந்து மிளிர்ந்தது .மாணவர்கள் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் நிறைவு நாள் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டாமல் போனது.

          இருப்பினும் அதற்கான பாராட்டுச் சான்றிதழை எனக்கு தூதஞ்சல் ( கூரியர் சர்வீஸ்....தமிழாக்கம் சரியா...?) மூலம் அனுப்பியிருந்தார்கள் .சான்றிதழை அனுப்ப ஒரு மாத





இடைவெளி ஏற்பட்டபோதும் (நிச்சயமாக அலுவல் காரணமாகவும் பணிச் சுமை காரணமாகவும் இக் காலதாமதம் நிகழ்ந்திருக்கலாம்...ஏனென்றால் இதுமட்டுமே அவர்களுக்கான பணியில்லையே) மறவாமல் அனுப்பிவைத்த நண்பர் சதீஷ் மற்றும் குழுவினரின்  கடமை உணர்வுக்கும் அன்புக்கும் தலை வணங்குகிறேன்.

            இயக்குனர் துவாரகநாத் அவர்களுக்கும்,நண்பர் சதீஷ் அவர்களுக்கும் இவ்வாய்ப்புக்கு காரணமாய் அமைந்த கவிதை கணேசன் அய்யாவுக்கு நன்றிகள் பல ...!

Saturday, 13 May 2017

அன்னையர் தினம்

அன்னையர் தினமாம்...!
..............?
அன்னையர்க்கென்று தனியாக ஒரு தினமா?
நாம் பிறந்த வினாடி முதற்கொண்டு 
நாம் இப்புவியில் ஜீவிக்கின்ற எல்லா நாளுமே 
அன்னையர் தினமன்றோ....!
ஒவ்வொரு குழந்தையும் 
தனது தாய் மொழியில் பேசுகின்ற 
முதல் கவிதை 'அம்மா '
தினங்களையும் 
கொண்டாட்டங்களையும் 
வாழ்த்துக்களையும் கடந்தவள்அம்மா ..
அவளுக்காக ஒரு நாளை ஒதுக்குவதை விடுங்கள் ..
அவளை...நமக்கு  உயிர் கொடுத்தவளை 
நம் உயிர்  உள்ளவரையும் கொண்டாடுவோம்....!


Monday, 1 May 2017

கோடைக் கால இலவச ஓவிய பயிற்சி முகாம்

        ஸ்வாசிகா இயக்கத்தின் 22 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மே -1 அன்று பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 நாட்களுக்கு கோடைக் கால இலவச ஓவிய பயிற்சி முகாம் துவங்கியது. நிறுவனர் திரு ,முத்துக் குமரன் அனைவரையும் வரவேற்றார்.
        திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திரு சேரன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கி முகாமைத் துவங்கினார்,முதல் நாளின் துவக்கத்திலேயே 160 மாணவர்கள் முகாமில் சேர்ந்துள்ளனர்.பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்தே காத்திருந்தனர் .முகாமில் ஓவிய ஆசிரியர் முத்துக் குமரன் , வேலுத்தம்பி மற்றும் சென்னை கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் விமல் ,சதிஷ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.மேலும் புதுவையை சார்ந்த ஓவியர்கள்  பலரும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
     மேலும் ,ஸ்வாசிகாவின் 22 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 22 மீட்டர் நீளமுள்ள ஒரே துணியில் 22 ஓவியர்களைக் கொண்டு 22 மணி நேரத்தில் 22 கருத்துருக்களில் 22 ஓவியங்களைத் தீட்டும் நிகழ்வு வரும் 05-05-2017 அன்று துவங்க உள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர் திரு டீ .ராஜேந்திரன் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்குகிறார்.பண்ணுருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சத்யா பன்னீர் செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சாதனை நிகழ்வைத் துவக்குகிறார். பண்ணுருட்டியின் முதுபெரும் ஓவியக்  கலைஞர் திரு ,பி .ஹரிகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு ஓவியங்களைத் தூரிகையால் துவக்குகிறார்.பண்ணுருட்டிப் பகுதியைச் சார்ந்த 22 ஓவியக்  கலைஞர்கள்  கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை அளிக்கின்றனர்.
        ஸ்வாசிகாவின் நிறுவனரும் பண்ருட்டி அரசுப்  பள்ளியின் ஓவிய ஆசிரியருமான முத்துக் குமரன் அவர்கள் தமது உறுப்பினர்களுடன் இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.

Sunday, 23 April 2017

மிருகங்களைக் காப்போம்



           புதுவையில்  உள்ள ஓவியக் கலைஞர்களில் குறிப்பிடத்  தக்கவர் நண்பர் கந்தப்பன் அவர்கள். அவரது செல்லக் குமாரன் செல்வன் யோகேஸ்வரனின் தனிநபர் ஓவியக் கண்காட்சிக்கு அஞ்சல் மூலம் அழைப்பு வந்தது .
           நேற்று ஆரோவில் மாத்ரி  மந்திர் செல்லவும் முன் அனுமதி பெற்றிருந்ததுடன் ஓவிய நண்பர் திரு சுகுமாரன் அவர்களும் திருச்சிற்றம்பலம் பல்மேரா மைதானத்தில் செயல்பட்டுவரும் பல்மேரா ஆர்ட் கேலரியில் நடைபெறும் ஓவியர் சக்திகுருநாதன் என்பவரின் கண்காட்சியையும் காண அழைப்பு விடுத்திருந்தார் ..ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிடும் உத்தேசத்தில் ஓவிய மாணவர்கள் நால்வர் புடைசூழ கிளம்பினேன் புதுவைக்கு .
           முதலில் ஆரோவில். பின்னர் அங்கிருந்து நேராய் பல்மேரா ஆர்ட் கேலரி விஜயம் ...அதன்பின்னர் அருகில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேய பெருமான் அருள்பெற்று நிறைவாக புதுவை மிஷன் தெருவில் இயங்கிவரும் வண்ண அருவி ஆர்ட் கேலரிக்கு சென்றோம்....வளரும் ஓவியக் கலைஞன் செல்வன் யோகேஸ்வரன் கந்தப்பன் அமைத்திருந்த ஓவியக் கண்காட்சியைக் காண.
        ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கே உரிய அமைதியான அப்பாவித்தனமான முகம்.பார்த்தவுடன் வசீகரிக்கும் கண்கள் ..தூரிகை பிடித்திருந்த .கையில்  தற்போது டென்னிஸ் பேட் .தந்தையை அணைத்தவாறு நின்றிருந்தான்.அவன் வரைந்திருந்த அனைத்து ஓவியங்களும் ஸ்டெட்லர் காணப்படும் பென்சில் கொண்டு வரைந்தவை ,,கந்தப்பனின் மரபணு ஆயிற்றே ...கேட்கவா வேண்டும்...?எல்லா ஓவியங்களும் அருமை...ஆறாம் வகுப்பிலிருந்து எஜாம் வகுப்பு மாணவன் வரைந்தது என்றால் நம்ப முடியாத அளவுக்கு விரல் வித்தையை காகிதங்களில் காண்பித்திருந்தான்,
            தனது மைந்தனின் ஓவியக்  கலை வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கும்  நண்பரைக் கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும் .அழைப்பிதழில் அவன் பங்கேற்ற போட்டிகள் ..கண்காட்சிகள் ...விருதுகள் குறித்து ஆவணப்படுத்தி வெளியிட்டு இருந்தது சிறப்பாகவும் அவற்றின் எண்ணிக்கை  சற்றே மலைப்பாகவும் இருந்தது ....!வெல்டன் பையா ...!சிறுவன் யோகேஷ்வரனின் பெயரிலேயே யோகம் இருக்கிறதே ...அவன் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்தி விடைபெற்றோம்.கூடுதலாக எங்களுக்கு நிறைய ஓவியக் கலைஞர்களின் அறிமுகமும் கிடைத்தது கூடுதல் சிறப்பு...
            உடன் அழைத்துச் சென்றிருந்த மாணவர்கள் எல்லோருக்குமே புதுவை ஓவியக் கண்காட்சி அனுபவங்கள் புதியவை ..அதுவும் தங்களை விட வயதில் இளைய சிறுவனின் ஓவியக்  கண்காட்சி நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

ஆரோவில் காட்சி

         நேற்று (23-04-2017 -அன்று  ) காலை ஆரோவில் மாத்ரி மந்திர் சென்றிருந்தோம்.காலை 9 மணிக்கு எனக்கு யுனிவர்சல் குளோப் தரிசிக்க அனுமதி கிடைத்திருந்ததால் ,முதலில் நான் மட்டும் சென்று வந்தேன் பின்னர் உடன்வந்த மாணவர்கள் வியூ பாயிண்ட் சென்று பார்வையிட்டார்கள் .

         எப்போதும் நான் என்னுடன் வரைவதற்கான உபகரணங்களை கொண்டு செல்வது வழக்கம் .செம்மண் பூமியில் பசுமைச் சூழலில் நீல வானப் பின்னணியில் சூரிய ஒளியில் தக தாகத்துக்கு கொண்டிருந்த அந்த தங்க நிற கோளம் என் விரல்களைப் பர பரக்க வைத்தது.பிறகென்ன ...கிடைத்த நிழலில் ஒரு கருங்கல் பலகையில் எடுத்துச் சென்ற காகிதத்தை விரித்தேன்.சுதா -68 என்று ஒரு வண்ணக் கட்டி ரகம் --அதைக் கையில் எடுத்தேன் .என் விரல்கள் காகித மேடையில் நர்த்தனமாடத் தொடங்கின .சரியாக 10 நிமிடத்திற்குள் காட்சி தயாரானது ...உடன் மாணவன் லட்சாராமனும் ஒருபுறம் பென்சில் கொண்டு கருப்பு வெள்ளையில் வரைந்துகொண்டு இருந்தான் ... !

          நல்ல வேளை உடன் வந்த பார்வையாளர்கள் யாரும் சூழ்ந்துகொண்டு சங்கடப் படுத்தாமல் தொலைவில் நின்று ரசித்தது  மகிழ்வைத் தந்தது ...!படம் வரைந்தது மனதிற்கு நிறைவைத் தந்தது .நிறைவுற்ற படம் உங்கள் பார்வைக்கு.







Friday, 21 April 2017

  சமீபத்தில் புதுவை ஆரோவில் மோஹனம் நடத்திய கிராமக் கலை விழாவில் பங்கு பெரும் வாய்ப்பும் ,மோஹனம் பள்ளியில் தங்கும் இனிய அனுபவமும் கிட்டியது. ஞாயிறு காலை இளம் வெயிலில் அந்த குடிலும் அதன் பின்னணியிலும், முன்புறமாகவும் இருந்த மூங்கில் புதர்களும் மனதை கொள்ளைகொண்டன .விரல்கள் காட்சிப் படுத்த துடித்தன.கையில் வண்ணங்கள் ஏதும் இல்லை உடன் கொண்டு சென்ற நியூஸ் பிரிண்ட் பேப்பர் மற்றும் சுதா 68 ரக கரிக்கோல் தவிர ...அவற்றைப் பயன்படுத்தி விரைந்து வரைந்து முடித்தேன்.உடன் ஓவிய மாணவன் லட்சாராமன் ....!