Saturday, 29 December 2018

திருநூலாற்றுப்படை - 17

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 17


இந்நூல் வினவு இணையதளம் ( vinavu.com )
மற்றும் புதிய கலாச்சாரம் இதழில் பல்வேறு வருடங்களில் இடம் பெற்ற கட்டுரைகளின்
தொகுப்பு .
முழுக்க முழுக்க அறிவியல் ஆய்வுகளையும் ,தேற்றங்களையும் ,
கண்டுபிடிப்புகளையும் முன்னிலைப்படுத்தி கடவுளையும் ,மதங்களையும் நோக்கி சவால் விடுக்கும் நூல்.
டார்வின் ,உயிரினங்களின் தோற்றம் ,இயற்கைத் தேர்வு - ஒரு அறிமுகம்
( இது மார்ட்டின் என்பவர் எழுதியது )
என்னும் முதல் கட்டுரை தொடங்கி
அறிவியலின் நெற்றியடி ! ##### மோசடி
( புதிய கலாச்சாரம் ஜனவரி,1997 )
கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்
( புதிய கலாச்சாரம் - அக்டோபர் , 2008 )
செயற்கை உயிர் : பழைய கடவுள் காலி !
புதிய கடவுள் யார் ?
(மருதையன்,புதிய கலாச்சாரம்,ஜூலை ,2010)
ஹிக்ஸ் போசான் துகள்! ஒரு வரலாற்று விளக்கம்!
( புதிய கலாச்சாரம் , ஆகஸ்ட் , 2012 )
கடவுளை நொறுக்கிய துகள்
( புதிய கலாச்சாரம் , ஆகஸ்ட் , 2012 )
வரலாற்றுப் பாதையில் E = mc2
( மார்ட்டின் ,ஏப்ரல் 11 , 2014 )
சந்திராயன் - அறிவியலா ? ஆபாசமா ?
( புதிய கலாச்சாரம் , மே - 2007 )
ஆகிய எட்டு கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ள இந்நூல் ஆன்மீகத்தை மறுக்கின்ற அதே வேளையில் நாத்திகம் பேசும் வழக்கமான நூலல்ல என்றும் நாத்திகத்தை அறிவியலோடு இணைக்கும் முயற்சி என்றும் தன்னிலை விளக்கம் கொடுக்கிறது .அறிவியல் ஆய்வுகள் குறித்த கட்டுரைகளை இவ்வளவு ஆர்வமூட்டும் வகையில் கொடுத்திருப்பது , மனக்கண் முன் ஏசு ,புத்தர் ,காளி ஆகிய கடவுளர் காட்சி தருவது ,சாமி வந்து ஆடுவது அனைத்தையும் ஹம்பக் என்று தக்க ஆதாரங்களோடு விளக்க முற்படுகிறது இந்நூல் ....
படியுங்கள் ...
குறிப்பாக ஆன்மீகம் பேசுபவர்கள் ...
அதிலும் குறிப்பாக ...நாத்திகம் பேசுபவர்கள்..
ஒரு புதிய உலகம் தெரியும் ..!

கவுன்ட் டவுன் - 5 நாட்கள் .

திருநூலாற்றுப்படை - 16

சென்னைப் புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 16



இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களுக்கு முன்னுரை தேவையில்லை. அதிலும் உலகின் மிக நீண்ட காப்பியமான மகாபாரதம் நம் வாழ்வோடும் ,இந்திய வாழ்வியலோடும் பிண்ணிப்பிணைந்த ஒரு காப்பியம் .பல்லாயிரக்கணக்கான கிளைக்கதைகள் கொண்டது .பல்வேறு எழுத்தாளர்களால் பல்வேறு காலகட்டங்களில்
பல்வேறு கோணங்களி்ல் பார்க்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்ற நூல் ...
தமிழிலும்
ராஜாஜின் வியாசர் விருந்து
சோ வின் மகாபாரதம் பேசுகிறது ...இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
குர்சரண் தாஸ் அவர்கள் THE DIFFICULTY IN BEING GOOD என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலின் தமிழாக்கமே இந்நூல்.
அதனை சாருகேசி அவர்கள்
#நல்லவராக_இருப்பதென்றால்_சும்மாவா ?
என்ற தலைப்பில் மிக எளிய நடையில் மொழிபெயர்த்திருக்கிறார்.
மகாபாரத கால வாழ்க்கையினை இன்றைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு அதில் தனக்கற்பட்ட அனுபவங்களையும் பிணைந்து தந்துள்ளார் ஆசிரியர்.
துரியோமனின் பொறாமை தொடங்கி
திரௌபதியின் தீரம்,
யுதிஷ்டிரனின் கடமை
அர்ஜூனனின் அவதி
தன்னலமற்ற பீஷ்மர்
கர்ணனின் கவலை
கிருஷ்ணரின் சூழ்ச்சி
அசுவத்தாமனின் பழிக்குப் பழி
யுதிஷ்டிரனின் மன வருத்தம்
மகாபாரதத்தின் தர்மம்
...
...
என பத்துத் தலைப்புகளின்கீழ் மகாபாரத காவியத்தின் முக்கிய பாத்திரங்களை நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
ஒவ்வொரு பாத்திரத் தலைப்பின்கீழ் அந்தப் பாத்திரங்களோடு தொடர்புடைய மிக முக்கியமான - இன்றைய வாழ்நாளுக்குப் பொருந்தும் ஒரு கூற்று ..
நிச்சயமாக இதுவரை மகாபாரதத்தை இப்படியோர் கோணத்தில் யாரும் அணுகியிருந்ததில்லை.எழுதியதுமில்லை ..
இன்னமும் சில தவிர்க்க இயலா மாந்தர்களை ஏன் விட்டுவைத்தார் என்பது புரியாத புதிர்.
ஒருவேளை இன்னொரு பாகம் வெளிவரப்போகிறதோ ....?
அல்லது இவரது பாணியைப் பின்பற்றி வேறு யாரேனும் எழுதட்டும் என வழிவிட்டாரோ ..?
தெரியவில்லை.....!
அவர்கள்....
விதுரர்...
குந்தி...
அபிமன்யு ...
நகுலன்...
சகாதேவன்...
திருதராஷ்டிரன்...
காந்தாரி...
துரோணர்...
சகுனி...
துருபதன்...
சிகன்டி...
உத்தரன்...
உத்தரை...
கடோத்கஜன் ....
துச்சாதனன் ....
இவர்களின் பாத்திரங்களும் தவிர்க்க இயலாதவையே...
சமகாலத்திலும் இவர்களை பிரதிபலிப்போரும் நமது வாழ்வின் அங்கங்களே ...
நம் வாழ்வுப்பாதையில் நம்மைக் கடந்து செல்வோரே ...
இந்நூலை வாசியுங்கள் ...
பின்னர் மேற்கூறியவர்களைப் பற்றியும் சற்றே ஆசிரியரின் பாணியில் ஒப்பிட்டு அசை போடத் துவங்கிவிடும் உமது எண்ணம்...
முத்துக்குமரன்  சுரேஷ்

திருநூலாற்றுப்படை - 15

சென்னைப் புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 15



உரிமைக்குரல் என்ற தலைப்பைப் பார்த்துமே ஏதோ எம்ஜியார் நடித்த படம் நினைவுக்கு வருகிறதா ?
ஆனால் இது மலாலாவின் கதை
இந்த உரிமைக்குரல் பெண் கல்விக்கு ஆதரவாக ஒலித்த மலாலா யூசஃப் சாய் எனும் சிறுமியின் குரல்.
தலிபான்களுக்கு அஞ்சி பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொண்ட பெண்குழந்தைகளின் ஒட்டுமொத்த குரல்.
பேசியே ஆகவேண்டும் என நினைக்கும் ,ஆனால் பேசவே முடியாத வலிமையற்றவர்கள் பலரின் குரல்.
ஆம்.பாகிஸ்தான் நாட்டின் ,ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த ஒரு சிறுமி தன்மீது பாய்ந்த ஒரு சிறு உலோகத் குண்டால் ஒட்டுமொத்த உலகின் கவனம் பெற்ற கதை .5000 ஆண்டுகளாக தங்களை பஷ்டூன்களாக பெருமிதத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் பூர்வகுடிகளின் ஜோன் ஆப் ஆர்க் ஆக விளங்கிய மலாலாய் என்ற வீர மங்கையின் பெயரைக் கொண்ட நம் கதாநாயகியின் இக்கதை குங்குமம் தோழி இதழில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனம் கவர்ந்த கதை .
2014 ஆம் ஆண்டு இந்தியாவின் கைலாஷ் வித்தியார்த்தி அவர்களுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்ட ஒரு இளம் பெண்ணின் கதை .
ஏதோ ஒரு போராளியின் சராசரிக் கதையைப் போல ஒரு வரட்சியான நடையில் எழுதப்பட்டதல்ல இக்கதை .நீங்கள் நூலைத்திறந்து ,பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கின் பசுமைப்பாதைகளில் நுழைந்ததுமே மலாலாவின் மிங்காரோ என்னும் பெயருடைய கிராமத்துக்குள் சென்றுவிடுகிறீர்கள் .பின்னர் நிகழ்வதெல்லாம் ஒரு மாயாஜாலம்.மலாலாவின் தந்தை ' குஷால் பள்ளியின் ' நிர்வாகியும் தலைமையாசிரியருமான ஜியாவுதீனுடன் பழகுகிறீர்கள் .
மாணவர்களுடன் ,மாணவிகளும் சேர்ந்து பயிலும் அப் பள்ளிக்கு மலாலாவுடன் இணைந்தே பயணிக்கிறீர்கள்.
மலாலாவின் இரு தம்பிகளான குஷால் மற்றும் அடல் ஆகியோருடன் நாமும் மலாலாவுடன் சேர்ந்து விளையாடுகிறோம்.தாயார் டோர் பெகாய் இடம் மலாலாமலாலா தனது ஆசையைத் தயங்கித் தயங்கிக் கூறும்போது நாமும் திகைக்கிறோம்.ரேடியோ முல்லாவின் கரகரப்பான குரல் நமக்கும் கேட்கிறது .அங்கு நிலநடுக்கம் ஏற்படுகையில் நம் காலடியிலும் பூமி தட தடக்கிறது .தலிபான்களின் துப்பாக்கிச் சத்தம் நம்மையும் நடுங்கச் செய்கிறது .வெடிகுண்டுச் சத்தத்தில் அதிர்வது அந்த கிராமம் மட்டுமல்ல ..நம் உடலும் மனமும் கூடத்தான்.ஒரு கட்டத்தில் மலாலாவின் உடலைத் துளைத்த குண்டு நமது உடலில் பாய்ந்ததாகவே கருதுகிறோம்.
அவள் மனதில் தோன்றும் ஒரு கேள்வி ' என் பெட்டியைத் திறந்து நான் உடுத்தும் ஓர் ஆடை ஏன் இறைவனை உறுத்தவேண்டும்.?ஆடைகளுக்கு எதற்கு திசைகளின் முத்திரை ?வடக்கு மேற்கு என்றெல்லாம் ஒரு சல்வார் கமீசைப் பிரித்துவிட முடியுமா ' என்பது போன்ற அப்பாவித்தனமான அதே நேரம் புரட்சிகரமான வினாக்கள் நம்மையும் மலைக்க வைக்கின்றன.
புறாக்கள் பறக்கும் உலகமல்ல ;தோட்டாக்கள் பறக்கும் உலகமே உங்களை விசாலப்படுத்துகின்றது ...
இது கற்காலமல்ல ...ஆனால் அங்கேதான் நாம் திரும்பிக்கொண்டிருக்கிறோம் ...
அது சத்தியத்தின் குரல்..அதனால்தான் அத்தனை கம்பீரமாக ஒலிக்கிறது ....
பள்ளிக்கூடம் என்றால் குழந்தைகள் நத்தைபோல் ஊர்ந்து நகர்வார்கள்.
மாலை மணியடித்ததும் சிட்டாக்வீட்டிற்குப் பறப்பார்கள்.நாடு,கண்டம் ,மொழி, இனம், வயது வித்தியாசம் கடந்து உலகம் முழுதும் உள்ள குழந்தைகள் கடைப்பிடிக்கும் பொதுவிதி ...
என்பதான வாசகங்கள் நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன.
ஹாரி பாட்டருடன் மலாலாவை ஒப்பீடு செய்து துவங்கும் முதல் அத்தியாயம் தொடங்கி அடுத்து மலாலா என்ன செய்யப் போகிறார் என்று நாம் பார்க்கத்தான் போகிறோம் என்று நிறைவடையும் இறுதி அத்தியாயம் வரை மிக சுவாரஸ்யமாகச் செல்லும் இந்நூல் எடுத்து படிக்க ஆரம்பித்தால் முடித்துவிட்டு மூடிவைக்கும் நூல்களின் வரிசையில் இடம்பிடித்துவிடுகிறது.
எனது மனைவியிடமும் , தாயாரிடமும் வசவுச் சொற்களை வாரிக் கட்டிக்கொண்டு வாசித்து முடித்தபின்தான் ஒருவழியாக உணவருந்தவே அமர்ந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்....!
"நீங்கள் ஏன் எதுவுமே செய்வதில்லை என்று மற்றவர்களைப் பார்த்து மட்டுமே கேட்கும் சிலர் இங்கு இருக்கிறார்கள்.நாம் ஏன் மற்றவர்களுக்காகக் காத்திருக்கவேண்டும்.?
நான் ஏன் ஓர் அடி முன்னால் வைக்கக்கூடாது ?
மக்கள் அமைதியாக இருந்தால் எந்த மாற்றமும் நிகழாது "
_மலாலா .
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் 

திருநூலாற்றுப்படை - 14


திருநூலாற்றுப்படை - 14

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூலறிமுகம் -14




ஓடோடிக் கடந்துவிடும் நமது வாழ்வின் வசந்தகாலமான பள்ளிப்பருவம்...
அது ஒரு கனாக்காலம்..
நாம் நினைந்து நினைந்து மகிழும்
மாணவப் பருவ நினைவலைகளி்ல் நம் மனதில் வந்து மோதுவது ,
நம் உணர்வில் கலந்திட்ட ....
பள்ளியில் நம்மோடு ஒன்றாய்ப் பயின்ற, பதின் பருவ நண்பர்கள் மட்டுமல்ல ..
தனது கற்றல் முறைகளால் ,தனது அன்பான
அரவணைப்பால்,அன்போடு தோளில் கரமிட்டுக் கூறும் ஆலோசனைகளால் ,சிரிக்க சிரிக்கக் கதைகள் கூறி வகுப்பறையை இனிய சூழலாக்கிய தருணங்களால் ,
கண்டிப்பாக அதே நேரத்தில் கருணையோடு நம்மை நடத்திய விதத்தால்,
நமது தனித்திறன்களைக் கண்டறிந்து அவற்றை பட்டதீட்டிய காரணத்தால் ,
பசி நேரங்களில் நம் கண் பார்த்தே
ஏம்பா ..சாப்பாடு கொண்டு வரலியா என வாஞ்சையோடு வினவி ஒரு பத்து ரூபாயை வலிந்து நம் கையில் திணித்து ஏதாவது வாங்கிச் சாப்பிடு எனக் கூறியோ அல்லது தான் கொணர்ந்த உணவில் பாதியை அன்புடன் நமக்கும் பகிர்ந்தளித்த தாயுள்ளத்தால் ...
தோல்வியில் முகம் வாடி கண்களில் நீர் கோர்த்து தனிமையில் வெறிக்க அமர்ந்திருக்கையில் அருகில் அமர்ந்து மெல்ல தலைதடவி , காரணம் கேட்டு சரி..சரி..கண்ணத் தொடைச்சுக்கோ .. அடுத்தமுறை பாத்துக்கலாம் என்று தைரியம்கூறும் ஒரு தந்தையைப் போன்ற கரிசனத்தாலோ ....இன்னும்..இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் நம் மனதில் நீங்கா இடம்பிடித்த நம் கனவுப் பருவ ஆசிரியர்களும்தானே ...!
அப்படி நமது ஒவ்வொருவருக்கும் ஒரு அல்லது சில கனவு ஆசிரியர்கள் இருப்பார்கள் ..நல்ல ஆசிரியர்களுக்கான ஒரு முன்னுதாரணமாக ...நல்லாசிரியர் விருதினைப் பெற்றிராவிட்டாலும்..
அதைப்பற்றிய எதிர்பார்ப்பே இல்லாமல்
தனது கல்விப் பணியை ஒரு தவமாகவே செய்து வாழ்ந்த அந்தப் பேரன்பர்களை நம்முள்ளிருந்து வெளிக்கொணர உதவும் நூல் இது .
இது ஒரு தொகுப்பு நூல் .
பிரபல எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை அசைபோட்டு ஒரு கனவு ஆசிரியர் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என தனது இதயத்தில் சிம்மாசனமிட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும்
தனது ஆசிரியர்களை உதாரண புருஷர்களாக முன்னிறுத்தும் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
அசோகமித்திரன்
பிரபஞ்சன்
பொன்னீலன்
தியடோர் பாஸ்கரன்
ஆர்.பாலகிருஷ்ணன்
ச.மாடசாமி
இரத்தின நடராஜன்
ச.தமிழ்ச்செல்வன்
பிரளயன்
பாமா
ஞாநி
ஆயிஷா நடராசன்
ஓவியர் டிராஸ்கி மருது
எஸ்.ராமகிருஷ்ணன்
த.வி.வெங்கடேஸ்வரன்
இறையன்பு
கீரனூர் ஜாகிர் ராஜா
பவா செல்லதுரை
ஆகிய பதினெட்டு பிரபலங்களின் அனுபவக் கனவுகளை பழக்கலவையாக்கியுள்ள
இந்நூலின் தொகுப்பாசிரியரான க.துளசிதாஸ் , அந்த அற்புதமான பழக்கலவையின் மேலாக தனது கனவெனும் இனிய தேனூற்றி நா ஊற வைப்பதோடு அதன் மேல் ஒரு செக்கச் சிவந்த செர்ரிப் பழத்தை மகுடமாக வைப்பது போல
இக்கட்டுரைத் தொகுப்பின் நிறைவாக
ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தினை
ஒரு மகுடம் போலும் சூட்டி ஒரு அதி ருசி பொருந்திய ப்ரூட் சாலடை அழகான கண்ணாடிக் கிண்ணத்தில் ஸ்பூன் போட்டுத் தந்திருப்பது போன்று இந்த நூலை நம் கரங்களில் எடுத்துத் தந்துள்ளார்.
இந்நூலை வாசிக்கும்போது நிச்சயமாக நமது மனக்கண் முன் நமது கனவு ஆசிரியர்களும் வந்து செல்வதை தவிர்க்கமுடியாது.
குறிப்பாக ஆபிரகாம் லிங்கன் அவர்களின் அந்தக் கடிதம் நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் வாசித்தேயாகவேண்டிய ஒன்றாகும்.
இக்கட்டுரையாளர்களின் படத்துடன் அவர்கள் பற்றிய குறிப்புகளையும் அளித்திருப்பது கூடுதல் சிறப்பு .
இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு புது வெளிச்சம் கிடைக்கும் என நூலாசிரியர் நம்பிக்கை தெரிவிக்கிறார் தனது முன்னுரையில்.
எனக்கும் கூட அந்த நம்பிக்கையுண்டு ..
வாசியுங்கள் ...
ஆசிரியர்கள் மட்டுமல்ல ...!
ஒவ்வொரு மனிதருமே...!
ஏனெனில் ஒவ்வொரு பெற்றோரும்
தம் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர் ...!
ஒவ்வொரு மனிதரும் நிச்சயம் ஒரு பெற்றோர்...!
எனவே அனைவரும் இந்நூலை வாசியுங்கள் !
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 8 நாட்கள்

Tuesday, 25 December 2018

திருநூலாற்றுப்படை -13

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -13



இசையால் வசமாக இதயம் எது ...?
இறைவனே இசை வடிவம் எனும்போது ...!
இந்த இருவரிகளுமே இசையையும் மனிதர்தம் இதயத்தையும் இருவேறாகப் பிரிக்கமுடியாது என்பதைத்தான் இயம்புகின்றன்.
காற்று ,நீர்,உணவு , போன்றே இசையும் உலகெங்கும் உள்ள மக்களால் நாடு, இன,மத,மொழி பேதமின்றி நுகரப்படுகின்றது எனலாம்.எந்த ஒரு கலையையும் தனக்குப் பிடிக்கவில்லை என ஒருவன் ஒதுக்கினாலும் அவனால் இசையை மட்டும் பிடிக்கவில்லை என நிச்சயம் ஒதுக்கிவிட இயலாது .ஏனெனில் அவன் வாழ்வே இசையால் பாடல்களால் பின்னிப் பிணைந்தவையன்றோ .பிறப்பிலே தொடங்கும் தாலாட்டும்,திருமணத்திலே இசைக்கும் மங்கள இசையும் இறப்பிலே ஒலிக்கும் சேகண்டியும் ஓலமிடும் சங்கும் வைக்கும் ஒப்பாரியும் என இசையில் தொடங்கி இசையில் நிறையும் வாழ்வல்லவா அது ...?
தங்களுக்குள் ஆயிரம் கருத்து பேதங்களைக் கொண்டுள்ள மதங்கள் தமக்குள் ஒரு ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
இறைவனுக்கு இசையால் தொடுத்த
பாமாலையால் நடத்தும் வழிபாடுதான் அது .
எனக்குமேகூட இசையின்மேலுள்ள காதல் ,வெறி ,பைத்தியம் இவற்றையெல்லாம் எனது #இசைப்_புராணம் என்னும் தொடர்பதிவில் குறிப்பிட்டுஇருந்தேன்.எழுந்தவுடன் என்னுடன் இசையும் விழித்துவிடும், குளியலின்போதும்,
கடவுளை வழிபடும்போதும்,
உணவருந்தும்போதும்
என்வீட்டு டேப்ரெகார்டரோ அல்லது பண்பலையோ இணைத்துக்கொண்டுதான் இருக்கும் .ஏதாவது நூல்களை வாசிக்கும்போதும்கூட மெல்லிய ஒலியில் (பாடல்களற்ற,வார்த்தைகளற்ற ) வெறும் கருவி இசைமட்டும் ஒலித்துக் கொண்டிருக்கும்.இரவில்
உறங்கும்வேளையில்கூட இதே கேட்டு உறங்குவதையே என் கண்கள் இன்றளவும் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளன.நான் உறங்கியபின்னரே எனது டேப்ரெகார்டர் ஆட்டோஸ்டாப்பாகி உறங்கச்செல்வது வழக்கம்.இதோ இதை நான் டைப்பும்போதும்கூட திருவெம்பாவை ஒலிப்பேழை பின்னனியில் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றது.
நிற்க ....
நாம் நூலிற்குள் நுழைவோம் ...
கர்னாடக இசை ,சாஸ்திரீயஇசை ,
ஹிந்துஸ்தானி இசை ,
மேற்கத்திய இசை ,நாட்டுப்புற இசை ,என பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு நூற்றாண்டு காலமாக திரையிசைதான் மக்களை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது .அதுவும் இளைஞர்கள் ,நடுத்தர வயதினர் என்று தன் காதுகளில் ஹெட்போனை செறுகிக்கொண்டு சாலையில் நடப்போரையும் ,இருசக்கர வாகனங்களில் விரைவோரையும் ,பேருந்துகளிலும் ரயில் வண்டிகளிலும் உடன் பயணிப்போரையும் பார்த்தாலே நமக்கு விளங்கிவிடும் திரையிசை நமது மக்களை பாடாய் படுத்துகிறது ; பேயாய் பிடித்து ஆட்டுகிறது என்று.திரைப்படப் பாடல்கள் இன்றைய தலைமுறையைச் சீரழிக்கின்றன என்று பரவலான ஒரு சமூகக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.இந்த நூலில் இதை அழகாக ,ஆணித்தரமாக மறுதளிக்கிறார்.
தீ , மின்சாரம் உள்ளிட்டவை போல அனைத்திலுமே நன்மையும் உண்டு தீமையும் உண்டு ..நாம் அவற்றை பயனாக்கிக்கொள்ளாமலா இருக்கிறோம் .தீயன விலக்கி நன்மையைப் பெறுவதில்லையா ....குடிப்பதற்கே அருகதையற்ற கடல்நீரிலிருந்துதானே உணவுக்கு சுவைகூட்டும் ,உடலுக்கு நலம் சேர்க்கும் உப்பைப் பெறுகிறோம் என வினவி, அன்னம் பாலொடு கலந்திட்ட நீர்க் கலவையிலிருந்து நீரை விடுத்து பாலை மட்டும் பருகுவாற்போன்று நாமும் திரைப்படங்களில் இருந்தும் ,
திரையிசைகளிலிருந்தும் தீயன விலக்கி நன்மை தரும் , நம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் ,மனதிற்கு அமைதியும் ,உரமும் சேர்க்கும் நல்லிசையை ,நற்கருத்துக்களை
எடுத்துக்கொள்ள வழிகாட்டுகிறார் நூலாசிரியரின் தனது முன்னுரையில்.
இருபது தலைப்புகளில் ஆராய்ந்து ஒப்பு நோக்கி சுவைபடக் கட்டுரைகளாக்கி அருமையான விருந்து படைத்துள்ளார் நம் இரசனைக்கு .
திரையிசைப் பாடல்களை - பல்வேறு காலகட்டங்களில் ,பல்வேறு பாடலாசிரியர்களும் ,கவிஞர்களும் தந்திட்ட அரிய கருத்தாழம் மிக்க பாடல்களை நன்கு இரசித்து உள்வாங்கி ,ஆராய்ந்து இக்கட்டுரைகளை படைத்துள்ளார்.
திரையிசைகளில் காணப்படும் அல்லது பாடுபொருளாக் கொண்டு பாடப்படும்
பாடல்கள் உரைக்கின்றவற்றை அற்புதமாக வரிசைப்படுத்தியுள்ளார் .
சிறையில் பெற்ற ஞானம் தொடங்கி
திரையிசையில் உழைப்பாளர் பெருமை ,
மகளிர் நிலை ,
கம்பராமாயணம் ,
பறவைகளும் விலங்குகளும்,
எண்கள்,
நன்னெறிகள்,
நிலவு
தாலாட்டு
தாய்மை
தூது
இலக்கியங்கள்
கண்கள்
பணம்
சிரிப்பு
கதைப் பாடல்கள்
வாழ்த்துதல்
சகோதரபாசம்
கடவுள்
உவமை ஆகியவற்றை ஆராய்ந்து ,ஒப்பிட்டு
தகுந்த பாடல்களோடு ஒரு மாலையாகவே கலைநயத்துடன் கோர்த்துள்ளார்.
பெரும்பாலான பாடல்களனைத்தும் அடிக்கடி நாம் கேட்டு ரசித்த பிரபலப் பாடல்களே .
உதாரணத்திற்கு திரையிசையில் தூது என்ற தலைப்பில் ,திரைப்படங்களில்
இடம்பெற்ற கடிதத் தூது ,தென்றல் தூது ,நிலவுத் தூது உள்ளிட்ட பல தூதுப்பாடல்களை சுட்டிக்காட்டுகிறார் ..
அனைத்துமே நாம் கேட்டு இரசித்த பாடல்கள்தான்.
அன்புள்ள மான்விழியே ...
(குழந்தையும் தெய்வமும்)
நான் அனுப்புவது கடிதம் அல்ல ...
(பேசும் தெய்வம்)
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..
(பாவை விளக்கு)
பொன்னெழில் பூத்தது புதுவானில்...
(கலங்கரை விளக்கம்)
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா..
(உயர்ந்த மனிதன்)
வெண்முகிலே கொஞ்சம் நில்லு ...
(விக்கிரமாதித்தன்)
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ..
(கலங்கரை விளக்கம்)
அந்த சிவகாமி மகனிடம் தூது சொல்லடி...
(பட்டணத்தில் பூதம்)
தூது சொல்ல ஒரு தோழி இல்லயென ...
(பச்சை விளக்கு)
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை ....
(அச்சமில்லை அச்சமில்லை )
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ...
(பெரியவீட்டுப் பண்ணைக்காரன்)
என்று பட்டியலிடப்பட்ட பாடல்களில் நான் எதிர்பார்த்த சில பாடல்களை காணவில்லை
தூது சொல்வதாரடி ....
(தேவர்மகன்)
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு ....
( ஈரமான ரோஜாவே )
ஓ ..தென்றலே ..ஒரு பாட்டு பாடு ..
( சந்தனக் காற்று )
இது உதாரணத்திற்குத்தான் ...எனில் நூலில் இடம்பெற்றுள்ள தலைப்பிற்கான பாடல் வரிசைகளை நீங்களே ஊகம் செய்துகொள்ளலாம் .
எனது முன்னிளமைக் காலங்களில் நிலாப் பாடல்கள் வரிசையில் நான் தெரிவு செய்து, ஒலிப்பேழைகளில் பண்ணுருட்டி ஸ்ருதி மியூசிக் நடராஜனிடம் பதிவுசெய்து வாங்கிய பாடல்கள் அனேகமாக நாற்பதுக்கும் மேலிருக்கும்.இரண்டு நைன்ட்டி கேசட்டுகளில் பதிவு செய்து தந்தார்.மேலும் தென்றல் எனும் தலைப்பில் இருபது பாடல்களை பதிவு செய்து வந்ததெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றது .
இந்நூலை நீங்கள் வாசித்ததும் திரைப்படப் பாடல்களின் மீதான உங்கள் பார்வையும் இரசனையும் நிச்சயம் வேறொரு தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்வது நிச்சயம் ...!
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 9 நாட்கள் .

திருநூலாற்றுப்படை -12

புத்தகத் திருவிழா -2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் -12



நூலாசிரியர் தொ.ப என சுருக்கமாக அழைக்கப்படுபவர்.தமிழகத்தின்
முன்னனி ஆய்வாளர்களில் ஒருவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது பாளையங்கோட்டையில் வசித்துவருகிறார்.டிசம்பர் 2009ல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்நூல் ஆகஸ்டு 2017 ல் பதின்மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளதெனில் ஆய்வு வட்டத்திற்கு வெளியிலும் இந்த நூல் பெற்றுள்ள வரவேற்பை அறியலாம்.
சித்தன்னவாசல் குகை ஓவியங்களுள் ஒன்றைத் தன் மேலட்டையில் கொண்டிலங்கும் இந்நூல் , உள்ளேயும் ஆங்காங்கு சில கோட்டோவியங்களையும் கொண்டுள்ளது.
உள்ளே மொத்தம் ஏழு கட்டுரைகள்.
தமிழ் ,வீடும் வாழ்வும் ,
தைப்பூசம் ,பல்லாங்குழி,
தமிழக பௌத்த எச்சங்கள்,
பேச்சு வழக்கும் இலக்கண வழக்கம் ,
கறுப்பு என்பவை அவை .
ஒவ்வொரு தலைப்பின்கீழும் நாம் சற்றும் எதிர்பாரா துணைத் தலைப்பின்கீழ் நம்மோடு பல தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
உதாரணத்திற்கு முதல் அத்தியாயமான தமிழ் என்ற தலைப்பில் நாம் சற்றும் எதிர்பாராத, உணவைத் தொடுகிறார்.பருகும் தண்ணீர்,தமிழர் உணவு,உணர்வும் உப்பும்,உணவும் நம்பிக்கையும் எண்ணெய்,,பிச்சை ,தெங்கும் தேங்காயும்,உரலும் உலக்கையும்,சிறு தெய்வங்களின் உணவு என்ற துணைத் தலைப்புகளின்கீழ் பண்டைக்காலம் முதல் தமிழர்களிடையே உணவோடும் உணர்வொடும் , வாழ்வியல் முறையோடும் நெறியோடும் இரண்டறக் கலந்துவிட்ட பண்பாட்டு விழுமியங்களை நம் கண் முன் காட்சிப்படுத்துகிறது இவரது நடை.
உணவிற்கு வழங்கப்படும் பெயர்களின் காரணங்கள்,சங்க இலக்கியங்களில் கிடைக்கும் உணவுக் குறிப்புகள்,பழந்தமிழர் உணவுவழக்கம் ,மகப்பேற்றுத் தீட்டு , எங்கள் வீட்டில் இன்றளவும் அனுசரிக்கப்படும் செவ்வாய்ப் பிள்ளையார் வழிபாடு என்அழைக்கப்படும் ஔவையார் நோன்பு - இதில் படையலிடப்படும் உணவு வகைகள் ஆண்களின் கண்களில் படக்கூடாது என்ற காலம்காலமான நம்பிக்கைகள் என அனைத்தயும் தொட்டுச் செல்கிறார்.
அதேபோல் வீடும் வாழ்வும் என்ற தலைப்பின்கீழ் வீடு ,தோட்டம், தமிழர்தம் உடை ,நெசவு,உறவுப் பெயர்கள், பெயர்வைக்கும் முறைகள்,பெயர்க் காரணங்கள்,உறவு முறைகள், தாலியும் மஞ்சளும் ,சங்கும் சாமியும் ஆகிய தலைப்புகளை எடுத்துக்கொண்டு நாம் அறிந்திடாத பல தகவல்களை சங்க காலம்தொட்டு நிலவிவரும் நமது பண்பாடு ,கலாச்சார விழுமியங்களை -
ஆடைகள், அணிகலன்கள் , தாலியணிவது ,மஞ்ள்பூசிக்குளிப்பது,
ஆடைகள் நெய்வது,பாய் நெசவு , சங்கணிகள் ,சங்கின் வகைகளும் பயன்பாடும் என இன்றளவும் தொட்டுத் தொடரும் அத்தனை வழக்கங்களின் ஆணிவேர் வரை சென்று அவற்றின் ஆதியினை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்துகிறார்.
மற்றொரு அத்தியாயமான தைப்பூசம் என்ற தலைப்பில் ஏதோ வடலூரையும் ,வள்ளலார் பெருமானையும் ,தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களைக் கூறப் போகிறார் என உள் புகுந்தால் நமக்குக் கிடைப்பவை வேறு .பொங்கல் பண்டிகை முறைகள், தீபாவளியின் வரவு ,விநாயகர் வழிபாட்டு முறைகள், துலுக்க நாச்சியார்,மதங்கள், சாதிகள்,தமிழகத்தின் தொல்குடிகளான பறையர்,மத்தியானப் பறையர்,பண்டாரம் -இவர்களின் வாழ்வியல் ,பார்ப்பனர்களுக்கு முந்தைய பழைய குருமார்கள்,இசுலாமியப் பாணர்கள் என நமக்கு வெவ்வேறு செய்திகளை மாலையாக்கி அணிவிக்கிறார்.
பல்லாங்குழி என்னும் தலைப்பில் அந்த விளையாட்டை விளையாடும் முறை மட்டுமன்றி அதன் தாத்பர்யம் ,அடிக்கூறுகள் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறார்.மேலும் ,ஆடு புலியாட்டம் , தாயக் கட்டைகள் , சூதாட்டம்,எனப்போய் இன்றைய கலத்தில் நடைபெறும் சூதாட்டத்திற்கும் விளையாட்டுக்கும் உள்ள தொடர்பினை நையாண்டியோடு இடித்துரைக்கிறார்.மேலும் மகப்பேறற்றோர் தவிட்டுக்கு தத்தெடுத்துக்கொள்ளும் முறை ,எடுத்து வளர்க்கும் முறைகள் பற்றியும் பேசுகிறார்.துடுப்புக்குழிப் போடுதல் எனும் தலைப்பு மகப்பேற்றின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. இழவு வீட்டில் நடக்கும் ஒரு சம்பிரதாயமோ நம்மை திகைக்க வைக்கிறது .செம்பில் மூன்று முறை மலர்களிட்டு இறந்தவனின் மனைவி மூன்றுமாதக் கருவினை வயிற்றில் சுமந்திருப்பதை ஊருக்கு அறிவிக்கும் மூதாட்டியின் செயல்கள் அங்கு கூடியுள்ளோரை மட்டுமன்றி நம்மையும் அனுதாபப்பட வைக்கிறது. என்ன ஒரு பண்பாட்டு அசைவு !அத்துடன் கல்லறையைப் பற்றிய செய்திகளையும் தரத்தவறவில்லை ஆசிரியர்.
பௌத்தம், சமணம், நிர்வாணம்,சைவ மரபுக்கு மீண்டும் திரும்பிய திருநாவுக்கரசர், சித்தர்கள்,சித்தர் பாடல்கள் என பல சமயம் சார்ந்த தகவல்களை தந்துசெல்கிறார்.
நிறைவாக நிறத்தைக் கையிலெடுக்கிறார்.அதுவும் கறுப்பு நிறம்.அழகியல் சார்ந்து அந்நிறம் நம்மில் ஏற்படுத்திவைத்திருக்கும் தாக்கம் .சமூக முரண்கள் மனிதத் தோலின் நிறத்தைக் கொண்டு வெளிப்படுகின்ற வழக்கத்தை ஆராய்கிறது இக்கட்டுரை .கருப்பு நிறம், சிவப்பு நிறம் கொண்ட கடவுளர்கள் தொடங்கி சாதீய அடிப்படையிலான நிறங்களை அவர் அலசும் அலசலில் ஆண்டாண்டு காலங்களாக ஏறியுள்ள நம் மனதின் சாயமே நீங்கிவுடுகின்றது எனில் அது மிகையன்று.
இந்நூலின் முகப்புரையில் குறிபிடப்பட்டிருப்பது போன்று தொ.ப அவர்களிடமிருந்து தெறிக்கும் கருத்துகளும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்து பெற்ற பட்டறிவும் உண்மையிலேயே ஒரு வாசகரை மலைக்க வைப்பது நிச்சயம். நான் இன்னமும் அந்த மலைப்பிலிருந்து மீளவில்லை .
முத்துக்குமரன் சுரேஷ்
கவுன்ட் டவுன் - 11 நாட்கள் .

திருநூலாற்றுப்படை -11

திருநூலாற்றுப்படை

சென்னை புத்தகத் திருவிழா - 2019
சிறப்புப் பதிவு
நூல் அறிமுகம் - 11



பொதுவாகவே பயணங்கள் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை .பயணம் அறிவை விசாலமாக்கும் என்பது முதுமொழி .பயணங்கள் மேல் எனக்கு மற்றவர்களை விட ஓர் அலாதி ஈர்ப்பு உண்டு .என் வாழ்நாளில் பெரும் பாகத்தை பயணங்களுடன்தான் கழிக்கிறேன்.எனது பணியும் கூட நிறைய பயணங்களை எனக்காக சாத்தியமாக்கித் தருகின்றது .
எனது நூலகத்தில்கூட பயணம் சார்ந்த கட்டுரை நூல்களுக்கு தனியாக ஓர் இடமும் உண்டு.பயணக் கட்டுரைகள் எப்போதும் என்னை ஈர்த்து வருபவை.
நான் சிறு வயதில் படித்து மிகவும் ரசித்த சிந்துபாத் கதைகள் கூட அவனது கடல் பயணம் சார்ந்தவைதானே ..!
நெ.து.சு, கல்கி, பரணீதரன் தொடங்கி சமீபத்திய சமீபகாலங்களில் எழுதிவரும் டாக்டர்.சுதா சேஷையன் வரை பலரது பயணக்கட்டுரைகள் இன்னமும் வாசகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகின்றன.
பயணம் ஒரு வித போதை .
எஸ்.ரா வின் ' தேசாந்திரி ' எனக்குள் ஒரு மயக்க உணர்வையே உண்டாக்கியிருக்கிறது.
நாம் நம் சிறு வயதில் வரலாறு புத்தகங்களில் வாசித்த கொலம்பஸ்,மார்க்கோபோலோ ,
வாஸ்கோடகாமா,யுவான் சுவாங் இவர்களெல்லாம் யாத்ரீகர்களே .
இந்த நூலும் இவர்களைப் பற்றிய ,இவர்களைப் போன்ற பயண ஆர்வல்களைப் பற்றிய ,
இவர்களின் கடற்பயண அனுபவங்கள் பற்றிய தொகுப்பே .
விகடன் குழும நூல்களுள் ஒன்றான சுட்டி விகடனில் தொடராக வந்த கட்டுரைகள் அழகுறத் தொகுக்கப்பட்டுள்ள பொக்கிஷம்தான் இந்நூல்.இதில் குறிப்பிடப்பட்டுள்ள பயணங்கள் ஒவ்வொன்றும் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தவை.
பயணங்கள் எதையெல்லாம் சாதித்தன என்பதையெல்லாம் பாதை எனும் தனது முன்னுரையில் பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.
உண்மையில் புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்படக் காரணமே கணற்பயணங்கள்தானே!
எனக்கும்கூட வாழ்வில் ஒருமுறை கடலில் ,கப்பலில் பயணிக்க ஆசை உண்டு .இதற்குமுன் ஒரு இயந்திரப்படகேறி குமரிக்கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கும் ,திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வந்திருக்கிறேன்.அது சில மணி நேரப் பயணமே ! மற்றொருமுறை பிச்சாவரத்திற்கு அருகில் உள்ள எம்ஜியார் திட்டு என்னும் இடத்திற்கும் சென்றுள்ளேன்.இதெல்லாம் ஒரு கடற் பயணமா என்று சிரிப்பது எனக்குத் தெரிகிறது. எனக்குமே கூட அதை எண்ணினால் சிரிப்பு வருகிறதுதான்.
ஆனால் எனது எண்ணம் வேறு .கப்பலில் ஏறி ஒரு நெடும்பயணம் செல்லவேண்டும்.ஏதேனும் ஒரு அண்டை நாட்டுக்கு .சிங்கப்பூர் ,மலேசியா போன்று . அல்லது குறைந்தபட்சம் நமது நாட்டிற்குட்பட்ட அந்தமான் ,நிக்கோபார் தீவுகளுக்கேனும் பயணம் செய்ய பேராவல்தான்.
கப்பலும் தயார். கடலும் தயார்.என்று இந்நூலின் நிறைவில் என் எரியும் ஆவலில் நெய்யூற்றுகிறார் மருதன்.ஒவ்வொரு அத்தியாயமும் ஆர்வம் தூண்டுகின்றன.
இடையிடையே பயணிகளின் படங்கள்வேறு.நிச்சயம் இந்நூல் உங்களைக் கவரும்.
பயணங்கள் முடிவதில்லை...!
ஆம் ,பயணங்கள் ஒருபொழுதும் முடிவதில்லைதான்.
கவுன்ட் டவுன் - 12 நாட்கள்.