Tuesday 14 January 2014

ஜல்லிக்கட்டு -வீர விளையாட்டு

             ஜல்லிக்கட்டு -வீர விளையாட்டு 
          
          தமிழர்களின் பார்வையில் இது ஒரு வீர விளையாட்டு .ஏறு தழுவுதல் என்ற பெயரில் பண்டைக் காலத்தில் இருந்தே புகழ் பெற்றிருந்த இவ்விளையாட்டு இன்றும் அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்னும் பரவலாக விளையாடப் படுகிறது (?!).மாடுபிடி சண்டை என்று கிராம மக்களிடையே பிரபலமான இவ் விளையாட்டு ஆண்களின் ஆண்மையை -வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக கருதப்பட்டுவருகிறது .அந்தக் காலத்தில் வென்றவர்களுக்கு தாம் பெற்ற பெண்களை பரிசாக (மனைவியாகத்தான் )அளித்த மன்னர்களும் ,ஜமீன்தார்களும் இருந்திருக்கிறார்கள் .இன்றோ தங்க காசுகள், பண முடிப்பு என்று பரிசுத் தொகை சுருங்கிவிட்டாலும் நம்மவர்களுக்கு  அதன்மீது இருந்த ஆர்வம் குறையவில்லை.கிரிகெட் மோகத்தில் நம் ஆட்கள் மூழ்கிக் கிடந்தாலும் பொங்கல் நேரத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு ஜுரம் பிடித்துகொண்டுவிடுகிறது.
        
           தமிழர்களால் வீரவிளையாட்டாக பார்க்கப்பட்டாலும்கூட  சமூக ஆர்வலர்களால் ..மிருக வதையாக  ...உயிரோடு விளையாடும் விளையாட்டாக ..பார்க்கப்படுகின்றது.காளைகளுக்கு கொம்பு சீவி ,போதையூட்டி ...வெறியூட்டி வெற்றியொன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் காளைகளுக்கு சொந்தக்காரர்கள் ஒருபுறம் ...ஆக்ரோஷமாக சீறிப் பாயும் காளைகளை அடக்க ஆவேசமாகத் தாவும் காளையர் ஒருபுறம் ...இவைகளைக் கண்டு ஆர்ப்பரிக்கும் பார்வையாளர் கூட்டம் ஒருபுறம் ...நடுவே மாடுகளின்  மாட்டி குடல் சரிந்து குற்றுயிரும் குலை உயிருமாய் தூக்கி எறியப்படும் வீரர்களைக் காணும்போதும் ...ஏன் ...கேள்விப்ப்படும்போதேகூட நெஞ்சம் பதறுவது என்னவோ ....நிஜம்தான் ! 

             மனித உயிர்களும் காளைகளின் உயிர்களும்  நேரத்தில் சித்திரவதைக்குள்ளாகும் இந்த விபரீத வீர விளையாட்டு தேவைதானா ...என்று ஒருபுறம் ஒரு சாரார் கேள்வி எழுப்ப ...எதில்தான்  ஆபத்து இல்லை...என்று வெட்டியாய் நமது மனதை சமாதனப் படுத்தி நியாயம் கற்பிக்கவும் ஒரு கும்பல் தயாராக இருக்கிறது ...!ம் ...ம்...  சரி சரி ...நாம ஏதாவது சொன்னா கேக்கவா போறாங்க ... அவன் அவன் பாடு அவங்களுக்கு !