Friday 28 September 2018

பண்ணுருட்டி அரசுப்பள்ளியில் உலக அமைதிதினவிழா & உலக ஓசோன் தினவிழா

சாரணர் இயக்கம் சார்பில் பண்ணுருட்டி அரசுப்பள்ளியில் உலக அமைதிதினவிழா 



அண்மையில்  பண்ருட்டி அரசுமேல்நிலைப் பள்ளியில்    செப்டம்பர் -16 ,உலக ஓசோன் தினம் மற்றும் செப்டம்பர் -21சர்வ தேச அமைதி தினம் ஆகியவற்றை முன்னிட்டுசாரண இயக்கம் சார்பில்  விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன .
உலக ஓசோன் தினம் & சர்வதேச அமைதி தினம் இரண்டும் ஒருசேர அனுஷ்டிக்கப்பட்டன .இவ்விழா நிகழ்வானது துணை தலைமை ஆசிரியர் திருமதி அமலி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது.சாரண ஆசிரியர்  திரு முத்துக்  அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக KNC மோகனசுந்தரம் அவர்கள் , குரு சுப்ரமணியன் அவர்கள் , , ஆசிரியர் J. பாலச்சந்தர் ,ஆசிரியர் J.ஜெயந்திரன்  ,ஆசிரியர் ஞானசேகரன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வைச்  சிறப்பித்தனர்.
அனைவருக்கும் சாரண வழக்கப்படி ஸ்கார்ப்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்கள் .
பின்னர் அமைதிக்கான செய்தி அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன .
ஓசோன் தினம் குறித்த தகவல்கள் திருமதி அமலி  அவர்களால் கூறப்பட்டன.
பின்னர் அனைத்து சாரணர்களுக்கும் , திரிசாரணர்களுக்கும் அமைதிச் செய்தி அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவாக அமைதிச் செய்தி அட்டைகளைக் கரங்களில் தாங்கிய சாரணர்கள்மற்றும் திரிசாரணர்கள் குழுவானது பள்ளி வளாகத்திலிருக்கும் அண்ணல் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு முன்னர் நின்று குழுப்படமும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
சாரண மாணவர் தலைவன் ஹரிநாத் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அப்பாலு பத்தர் .DHINAMANI THOZHIL MALAR ARTICLE.



இது நவராத்திரி நேரம் .
தமிழ் நாட்டில் அநேக இல்லங்களில் மட்டுமல்லாது எல்லா ஆலயங்களிலும் கூட கொலு வைப்பது வழக்கம் .வழக்கம் இல்லா இல்லா வீடுகளில்கூட பொடிசுகளின் நச்சரிப்பு தாளாமல் பெயருக்காவது கொலு வைப்பது நடைமுறை ஆகிவருகிறது .

கொலு என்றாலே பொம்மைகள்தானே நினைவுக்கு வருகின்றன ?

பண்ணுருட்டியிலிருந்து மடப்பட்டு வழியாக பயணப்பட நேர்ந்தால் அங்குச்செட்டிப்பாளையம்  சிற்றூரைத்  தாண்டி செல்லும் வழியில் சேமக்கோட்டை என்னும் ஊருக்கு முன்பாக இருமருங்கிலும் நிறைய பெரிதும் சிறிதுமான பொம்மைகள்,இறைவடிவங்களைக் காணலாம் .விநாயகர் சதுர்த்தி காலங்களில் இந்த ஊரிலிருந்து மெகா சைஸ் பிள்ளையார் சிலைகள் தமிழ் நாட்டின் பலப்பகுதிகளுக்கும் , ஏன் ...வெளிமாநிலங்களுக்கும் கூட அனுப்பிவைக்கப் படுகின்றன. இவர்கள் பரம்பரையாக இத்தொழிலை செய்துவருபவர்களே .

இப்படிப்பட்ட  பெருமை உடைய பண்ணுருட்டி ,மிகப் பெரிய வர்த்தக நகரமாக விளங்கும்  பண்ணுருட்டி  ஒரு காலத்தில் பொம்மைகள் செய்வதில் புகழ் பெற்று விளங்கியது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா ?

ஆம் ..உண்மைதான் .இன்னும்கூட பாரம்பரியமாக பொம்மைகள் செய்து தரும் ...வெளிநாடுகளுக்கும் கூட பண்ணுருட்டி பொம்மைகளை விற்பனை செய்து வரும் ஒரு குடும்பம் அப்பாலு  பத்தர் தெருவிலே வசித்துவருகின்றது . வசித்துவரும் 
திரு சி.சம்பந்தம் அவர்கள் தன் குடும்பத்தாருடன் இத் தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்.

இதோ அதுபற்றிய தகவல்கள் உங்களுக்காக .

தகப்பனார் பெயர் A .சின்னசாமி பத்தர்
தாயார் பத்மாவதி அம்மாள்
பிறந்ததேதி 20-05 -1939
பாட்டனார் அப்பாலு பத்தர் .
இவர் பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் . இப்பள்ளி போர்டு ஹை ஸ்கூல் என்று  வழங்கப் பட்டு வந்தது .

அப்பாலு பத்தர்  ராமலிங்க அடிகளார் திரு உருவபொம்மையை  செய்து  தர  
அவரும் அதனை வாங்கி பொன்னான மேனியை மண்ணால் செய்தனையே  
எனக் கூறி கீழே போட்டுடைத்தார்  எனும் செய்தி 
வள்ளலார் வரலாற்றில் வருகின்றது .

அவர் வசித்து வந்த தெரு இப்போதும் அவர் பெயரினால் 
அப்பாலு பத்தர் தெரு என்றே வழங்கப்படுகிறது .
நான்கு தலைமுறைகளாக களிமண் மற்றும் காகிதக் கூழ் கொண்டு இவர்கள் செய்யும்  பொம்மைகள் உலகப்  புகழ் புகழ்பெற்றவை 
என்பது பண்ணுருட்டியில் வாழும் பலருக்கும் தெரியாது .

ஆம் பண்ணுருட்டி பலாப் பழத்துக்கு ,முந்திரிக்கு மட்டும்தான் 
புகழ்பெற்றது என  அனைவரும் நினைத்திருப்போம் .
அனால் இது காகிதக் கூழ் பொம்மைகளுக்கு கூடப் பெயர்பெற்றதுதான் .
பின்னர் வந்த பலா ,முந்திரி இவை பொம்மையின் புகழை 
பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றே கூறவேண்டும் .
இவரது குடும்பம் செய்து தரும் கலை நயம் மிக்க ,அழகான ,பலவர்ணங்கள் கொண்ட பொம்மைகளுக்கு பொம்மைகளுக்கு ஏக கிராக்கி. குறிப்பாக பிரௌன் நிற அல்சேஷன் நாய் பொம்மைகள் ,
செட்டியார் பொம்மைகள் ,தவழும் பாலகிருஷ்ணன் ,
உண்ணாமுலையம்மன் சமேத திருவண்ணாமலையார் ,
அலர்மேலு மங்கை சமேத வெங்கடேசப்பெருமாள் உள்ளிட்ட பொம்மைகள் 
உலகப் பிரசித்தி .
கடோதகஜன் செட் ,கும்பகர்ணன் செட்,  ,
தசாவதார செட் ,சரஸ்வதி ,
 மாட்டித் தொங்கவிடும் கணபதி ,ஆலிலைக் கண்ணன் 
போன்றவையும் புகழ்பெற்றவையே .

இவற்றுள் காகிதக் கூழ் கொண்டு செய்யப்பட்ட 
மீனாட்சிக் கல்யாணம் பொம்மை உயர்திரு சம்பந்தம் அய்யாவுக்கு 
1992-93 ஆம் வருடத்தில் பூம்புகார் ஸ்டேட் அவார்டு பெற்றுத் தந்தது .

தமிழ் நாட்டில் பாரம்பரியமாக கொலு வைத்துக் கொண்டிருக்கும் 
அத்துனைபேர் இல்லங்களிலும் 
இவர்கள் செய்து அளித்த பொம்மைகள் கட்டாயம் இருக்கும் .
இன்னமும் இவர்களுக்கு பல ஆர்டர் வந்தாலும்கூட 
நபர்களின் பற்றாக குறையால் இவர்கள் 
சிலவற்றை மட்டுமே செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே இவர்களை  பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் 
தேசிய அளவில் நடைபெறும் கலாஉத்சவ் என்ற போட்டிக்காக 
தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் பற்றிய தேடலில் 
எனது பள்ளி மாணவர்களுடனான எனது கலைப் பயணத்திற்கான ,
காகிதக் கூழ் பொம்மைகள் பற்றிய 
ஒரு ஆவணப் படத்திற்காக இவர் வீட்டிற்குச் சென்றபோதுதான் 
நானும் இவரைப் பற்றியும் 
இவர் செய்துவரும் பொம்மைகளின் சிறப்பு பற்றியும் 
நன்கு தெரிந்துகொண்டேன்.

இவருக்கு S . பிரகாஷ்,S .மகேஷ் பாபு ,
S .லட்சுமிநாராயணன்  மகன்களும் உள்ளனர் .
புகழ் பெற்ற பத்திரிகை ஓவியர் மணியம் செல்வன் இவரது உறவினர் .
இவரது மூன்றாம் தலைமுறை இப்போது 
கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறது .
இவருக்குப் பிறகும் இக்கலை அழியாது பண்ணுருட்டிக்கு புகழ் சேர்க்க 
இக்கலையை அடுத்துவரும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு  
ஆர்வம் கொண்ட மாணவச் செல்வங்களுக்கு 
கற்றுத்தந்து அழிந்து கொண்டிருக்கும் 
இக்கலையை புதுப்பித்து உயிர்ப்போடு 
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் 
என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை

இவரது கலைத் திறமையைப் பாராட்டி  , 
பண்ணுருட்டிக்கு புகழ் சேர்த்துவரும் 
இவரது பொம்மைகளின் அழகை பாராட்டி
இவருக்கு பண்ணுருட்டி ,புதுப்பேட்டையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நமது ஸ்வாசிகா இயக்கம் திரு .சம்பந்தம் அவர்களுக்கு 
வாழ்நாள் சாதனைக் கலைஞர் என்ற பெருமை மிகு 
விருதினை அளித்துப் பாராட்டியது 
அவர்   தனது துறையில் மேலும் பல சாதனைகள் படைக்கவும்
நலமாக வாழ நல்லஆரோக்கியத்தையும் வழங்க இறைவனை வேண்டுகிறோம் .

கலைகளில் சாதனை படைக்க  முதுமை ஒரு   தடையல்ல  
என்பதை நிரூபித்து வரும் சம்பந்தம் அய்யாவை 
நீங்களும் வாழ்த்தலாமே !

Tuesday 25 September 2018

இசைப் புராணம் ...

இசைப் புராணம் ...
எச்சரிக்கை : இதை முழுவதும் படிக்காமல் லைக் மட்டும் போட்டுவிட்டுக் கடந்து செல்பவர்களுக்கு அன்னியன் படத்தில் வரும் கருட புராண தண்டனைகள் போல கடுமையாக இல்லாவிட்டாலும் ...அட்லீஸ்ட் உணவு உண்ணும்போது புறையேறி கண்ணில் நீர்முட்டிக்கொள்வது ...
தூங்கும்பொழுது படு பயங்கரக் கனவுகள் வந்து பாயை நனைத்துக்கொள்வது போல சிறு சிறு தண்டனகள் கிடைக்கக்கூடும்...ஜாக்கிறதை ....!
முழுசா படிங்க....... ம க் க ளே .....!
(பாகம் -1)
ஆடியோ கேசட் ...
ஆடியோ கேசட் பிளேயர் @ டேப் ரெகார்டர் ..
வாக்மேன்...
.இப்போதைய புதிய தலைமுறை கேள்விப்படாத பெயர்கள் அல்லது பார்த்திராத சாதனங்கள் ...!
எண்பதுகளில் துளிர்க்கத் தொடங்கி வேர்விட்டு தொண்ணூறுகளில் அடர்ந்து வனமாய்ப் பரவி இரண்டாயிரம் ...ஏன்...இரண்டாயிரத்துப் பத்து வரையிலும்கூட இசைப்பிரியர்கள் இதயங்களிலும், இல்லங்களிலும்
கோலோச்சி இசையைப் பரவ விட்டு
வளர்த்தவை இவையே ...!
கிராம போன்களின் இடத்தை , இசைத்தட்டுகளின் இடத்தை பிடித்த இவை ஏறக்குறைய நாற்பதாண்டுகள்குறிப்பாகை புரிந்து இசைக்கலைஞர்களுக்கு ஒரு வளமான வாழ்வையும் இசை ரசிகர்களுக்கு இதமான இசையையும் பொழுதுபோக்கையும் வழங்கியவை .
TDK, Meltrock ,T.Series, Sony போன்ற கேசட் கம்பெனிகளும்,
Echo, Sony , T-Series, Inrecko , HMV போன்ற recording கம்பெனிகளும் இசைப்பிரியர்களை ( வெறியர்களை) மையமாகக் குறிவைத்து பெரிய வர்த்தகச் சந்தையை ஏற்படுத்தி வியாபாரத்தில் சக்கைப்போடு போட்டு பக்காவாய் கல்லா கட்டின.
முதன்முதலில் நான் கேசட் மூலம் இசை கேட்டது எனது பெரியப்பா வீட்டில் ...
அவர்கள் வீட்டில் புதிய பேனாசோனிக் டபுள் டெக் கொண்ட ஈக்வலைசர்களுடன் கூடிய பெரிய சைஸ் டேப் ரெக்கார்டரில்தான் ...!
தாவணிக் கனவுகள் வந்த நேரம் ...!
ஹலோ..ஹலோ ...நான் சொன்னது
பாக்கிய ராஜ், சிவாஜி கணேசன் ,
ராதிகா,இளவரசி நடித்து வெளிவந்த திரைப்படத்தை ....!
சரி...சரி....எனக்குள்ளும்கூட தாவணிக் கனவுகள் வந்த நேரம் அதுதான் ....!
அந்த படத்தின் ஆடியோ கேசட்தான் நான் முதன் முதலில் பார்த்த கேசட்....
மிக வியப்போடு பார்த்த அந்தப் பொருள் பின்னர்வந்த காலங்களில் எனது வீட்டில் உள்ள எனது அலுவலக அறையில் இரண்டு ஷெல்ப்கள் முழுக்க இடம் பிடித்து ஒரு ஆடியோ லைப்ரரியாக பரிணாம வளர்ச்சி பெறும் என கனவில் மட்டுமல்ல ...நினைவிலும் நினைக்கவில்லை ...!
ஒருநாயகன்...உதயமாகிறான்....என்ற பாடல் என் செவிகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும் .
அந்த செட்டில் பாடல் கேட்டு கேட்டு இசைப் பைத்தியமானேன் என்றே கூறவேண்டும்.
பின்னர் எங்கள் வீட்டில் ஒரு குடும்ப நண்பர் வீட்டில் இருந்து செகன்ட் ஹேண்டாக ஒரு பிலிப்ஸ் செட் ஒன்றை வாங்கினோம்.நல்ல அடர் சிகப்பு நிற டூ இன் ஒன் ...அதும்கூட ஈக்வலைசர் வைத்ததுதான் ...!அதோடு பத்து பதினைந்து கேசட்டுகளைக்கூட இலவசமாகவே(?!) கொடுத்தார்கள் .பிறகு நானும் புதியதாக கேசட்கள் வாங்கத் தொடங்கினேன் .
ஒரு நான்கைந்து ஆண்டுகள் என் குடும்பத்தாருக்கு இசைவிருந்து அளித்த அந்த சாதனம் திரென்று மக்கர் செய்யத் துவங்க சில பல முறை ரிப்பேர் செய்து பார்த்து சரிவராமல் போகவே அதை வந்த விலைக்கு விற்றுவிட்டு புதியதாக ஒரு செட்டை அசெம்பில்டு ..டூ வே ஈக்வலைசர் வைத்து இரண்டு ஊஃபர் ,ட்விட்டர் வைத்த ஸ்பீக்கர் பாக்ஸ்கள் வாங்கினேன் .
அப்பொழுது முதல் அவையே எனக்கு இசைமழை பொழிந்த எனும் வானமாகிப் போயின.பாடல் ஒலி கேட்டால் நான் என் வீட்டில் இருப்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு என் வீடு இசையால் நிறைந்திருக்கும் .
காலை 4.30 மணிக்கு பள்ளியெழும்போது விழித்துக்கொண்டு மெல்லிய கர்னாடக இசை அல்லது பக்திப் பாடல்களைக் கசியவிடும் ...பின்னர் புதிதாக வந்த திரைப் பாடல்களை ஒலிக்கத் துவங்கி அன்று இரவில் பழைய 60 கள் மற்றும் 70 களின் பாடல்களை தாலாட்டாய் பாடி தானாகவே ஆட்டோ ஸ்டாப் மோடுக்குப் போய் தானும் உறங்கிவிடும் அந்த டேப் ரெகார்டர்.
புதிதாய் பூத்தவை .பாகங்கள்... நெஞ்சில் நின்றவை..பாகங்கள் , நிலாப்பாடல்கள், தென்றல் பாடல்கள், மழைப்பாடல்கள் என வெவ்வேறு தலைப்பில் நானே ஆல்பம் தயாரித்து பாடல்கள் தேர்வு செய்து ,பண்ணுருட்டியில் அப்பொழுது பிரபலமாய் இருந்த ஸ்ருதி மியூசிக் சென்டரில் கொடுத்து ஷார்ப் அதிகமாக வைத்து ரெக்கார்ட் செய்துகொள்வேன் .
கர்னாடக இசை கேசட்டுகளை பேருந்து நிலையக் கடையில் வாங்கிக்கொள்வேன் .
அல்லது சென்னை ,விழுப்புரம் ,புதுவை செல்லும்போது வாங்கிக்கொள்வேன் .
குறிப்பாக பாம்பே ஜெயஸ்ரீ ,உன்னிகிருஷ்ணன், ஜேசுதாஸ், நித்யஸ்ரீ மகா தேவன் ,சுதா இரகுநாதன் உள்ளிட்டோரின் கலெக்‌ஷன்ஸ் நிறைய வாங்கிக்கொள்வேன்....இதற்காக வீட்டிலும் வாங்கிக் கட்டிக்கொள்வது வேறு விஷயம் .
வீட்டில் இருந்தால் கேசட் பிளேயர் ...வெளியில் பயணங்களின்போது வாக்மேன் என் பாக்கெட்டையும் இயர் போன் என் காதுகளையும் அடைத்துக்கொள்ளும்.
இப்படியெல்லாம் என்னுடன் இரண்டறக் கலந்திருந்த டேப் ரெக்கார்டரை என்னிடம் இருந்து பிரித்த புதியதாய் வந்த இசைப்பிசாசுகள் இரண்டு ....!
இசைக்கும்....
இசை புராணம் - 2
இசை புராணம் _1 டைப் செய்து முகநூலில் பகிர்ந்த பிறகுதான் நினைவுக்கு வந்தது அன்றைய தினம் இப்பிரபஞ்சத்து இசையரசியின் ....அதாங்க நம்ம எம் . எஸ் சுப்புலட்சுமியம்மா ....அவர்களோட பிறந்தநாள் என்பது .அதற்கேற்றாற்போல் Asiriyar Kural மற்றும் சில நண்பர்கள் அவரைப் பற்றிய பதிவை வெளியிட்டவண்ணம் இருந்தனர்.
என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்...
எனது எண்ணத்திலுதித்த இசையோடு கலந்த எனது இசையனுபவ அலைகள் என்னும் இசை புராணத்தை இசையரசி அம்மா அவர்களது ஜென்ம தினத்தன்றே வெளியிடுவதும் சாலப் பொருத்தம்தானே ...!
இப்போது விஷயத்திற்கு வருவோம் ...!
ஆடியோ கேசட்டுகள்,டேப் ரெகார்டர்கள் ,ரேடியோவுடன் கூடிய கேசட் பிளேயர்கள் ( டூ இன் ஒன் ) என இந்த இசைப் பிசாசுகள் பட்டையைக் கிளப்பிக்கொண்டு சும்மா மைக்கேல் ஜாக்சன் கணக்காய் பூமியை ஆட்டுவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அது உள்ளே நுழைந்தது...!
அது எது?
சி.டி எனப்படும் Compact Disc ...!
பிரபலப் படத் தயாரிப்பாளர் ஜி.வி. என்று செல்லமாக திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்படும் ஜி.வெங்கடேஸ்வரன் அவர்கள்...அவர் வேறு யாருமில்லை...இசையமைப்பாளர & நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் தந்தையார்தான். ஜப்பானுக்கு விஜயம் செய்து ஒரு உள்ளங்கை அளவுக்கு பளபளக்கும் வட்ட வடிவக் குட்டிச் சாத்தானைக் கையில் பிடித்துக்கொண்டு சிரித்தபடி விகடனோ அல்லது குமுதமோ அல்லது இன்னபிற சினிமா சஞ்சிகைகளிலோ போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.அதில் ஏகப்பட்ட பாடல்களை மிகத்துல்லியமாக பதிவு செய்யலாம் என்றும் இசையுலகை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று பெரும் புரட்சி ஏற்படுத்தும் என்றும் பேட்டி வேறு கொடுத்திருந்தார் .இது தொண்ணூறுகளின் துவக்கத்தில் என நினைவு .ஆக சி.டி எனும் அந்த குட்டிச்சாத்தானை இந்தியத் திரையிசை உலகில் அறிமுகப்படுத்தி கேசட் & டேப்ரெகார்டர் சாம்ராஜ்யத்தை அசைத்து ஆட்டம் காண வைத்து பின்னர் ஒரேயடியாய் ஓட்டம் பிடிக்க வைத்ததற்கு ஆதி காரணமே நம்ம ஜி.வி பிரகாஷோட அப்பாதான் .அவர் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்துகொண்டதை மறந்துவிடமுடியாது.
அப்போது உள் நுழைந்த அந்த சி.டி தட்டுகள் வந்த நேரம் போட்டியை சமாளிக்க டூ இன் ஒன்கள் எல்லாம் திடீரென த்ரீ இன் ஒன்களாயின ,சி டி பிளேயர் மெக்கானிசத்தையும் சேர்த்துக்கொண்டு ...
இசைக்கும் ...

இசை புராணம் - 3
நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் இசையொலி கேட்டுக்கொண்டே இருக்கும் என்று கூறினேன் அல்லவா...
அதிகாலை நேரம் என்றால் தெய்வீக ராகங்கள் அல்லது கர்னாடக இசை ,பஜன் போன்றவைகளும் ,பின்னர் பகல் நேரங்களில் புதிதாக வந்த திரையிசைப் பாடல்களும் மறுபடி மாலை விளக்கு வைக்கும் நேரமாயின் மீண்டும் இறைகானமும் ,உறங்கும் நேரமாயின் இளையராஜாவில் ஆரம்பித்து 1960 களில்,70 களில் என வெளியான மெலடி பாடல்களைக் கேட்டு கண்ணுறங்குவது என் வழக்கமாகிப்போனது .
ஒருவேளை பயணப்படும் காலங்களில் நான் கையோடு கொண்டுசெல்லும் ஒன்றிரண்டு புத்தகங்களோடு கூட வாக்மேன் & ஹெட்போன் கட்டாயம் துணைவந்துவிடும்.
பேருந்தில் ஏறி அமர்ந்து பயணச்சீட்டு வாங்கியதும் முதல் பணியே ஹெட்போன் கொண்டு செவிகளை இசை வெள்ளத்தால் நிரப்பி நரம்புகளோடே பாயவிடுவதுதான்.
என் இசைக்காதல்தான் என்னை தன் கேள்விஞானத்தால் என்னை மாணவர்களுக்கு பாடல் பயிற்சியாளனாய் மாற்றியது .
எந்த ஒரு கவிதையையும் குறிப்பிட்ட ராகத்திலோ அல்லது திரையிசைப்பாடலிலோ பொருத்திப்பார்க்க வைத்தது .
திரைப்பட பாடல் மெட்டுகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்ற வைத்தது ...
அவ்வளவு ஏன் நானே சொந்தமாக மெட்டமைத்து எழுதிய பாடல்களும் பல என் இசைக் குறிப்பேடுகளில் உள்ளன.
வில்லுப்பாட்டு பாடல்களை எழுதி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து பள்ளி கலைக்கழகப் போட்டிகளில் பங்கேற்று மாவட்ட அளவிலான பரிசுகள் பெற வைக்கமுடிந்தது.
சுந்தரரின் வாழ்க்கை வரலாறை இறை பாடல்களின் மெட்டில் எழுதி அதனை ஒருமணி நேர வில்லுப்பாட்டு நிகழ்வாக எங்கள் ஊர் சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் மேடையில் நடத்தமுடிந்தது.
அனைத்திற்கும் மேலாக
இசையேதான் என்பேச்சு
இசையேதான் என்மூச்சு
இசையேதான் என்னுணவு எப்போதும்
ஒப்பாரி சங்கொலியும் வேண்டாமே நானிறந்தால்
அப்போதும் ஏழிசையே ஓது
என்று கவிதையாகவும் என் விருப்ப உயிலை எழுத வைத்தது .
என் அம்மா சொல்வார்கள் ...நீ வாங்கிய புத்தகங்கள், கேசட்டுகள் ,சீடிக்கள், செடிகள் இவற்றுக்கான செலவைப் பார்த்தால் ஒரு வீடே கட்டியிருப்பாய் என்று ...
நான் சிரித்தபடி கடந்துவிடுவேன்.
ஆம் அவ்வளவு கேசட்டுகளும் , சீ.டிக்களும் ,
டீ வீ டிகளும் எனது இல்லத்தின் நூலகத்திற்கு இணையாய் ஆடியோ வீடியோ நூலகமாகவே உள்ளது இன்னமும் .
பெரிய இசைத்தட்டுகளை ,கிராம போன்களை ஆடியோ கேசட்டுகள் துரத்திவிட
ஆடியோகேசட்டுகளை சீ டி கள் காலி செய்ய
சீடி களை டீ வீ டி கள் விழுங்க,
டீ வீ டி களை மெம்மரிகார்டுகள் ஏப்பம் விட
இப்போது லட்சக்கணக்கான பாடல்களைக் கொண்ட மைக்ரோச் சிப்புகள் சந்தி சிரிக்கின்றன.
பத்தாதற்கு இன்னும் ஒரு படி மேலே போய் தியாகராஜ பாகவதர், பி.யூ .சின்னப்பா காலப் பாடல்கள் முதல் 2020 க்குப் பிறகு வெளியாகவுள்ள பாடல்கள் வரை ,இணைய வெளிகளில் கொட்டிக் கிடக்கின்றன. யார் வேண்டுமாயினும் எப்போது வேண்டுமாயினும் ஆன்லைனில் கேட்டுக்கொள்ளலாம் அல்லது இலவசமாய் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் ; பின்னர் கேட்டு மகிழலாம் .
அது சரி ...நான் வாங்கி சேகரிப்பில் வைத்துள்ள ஆடியோ கேசட்டுகளை என்ன செய்வது ?
M.S சுப்புலக்ஷ்மி அம்மாவின் சுப்ரபாதம்,விஷ்ணு சகஸ்ரணாமம்,பஜகோவிந்தம் ...
சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம்,அபிராமி அந்தாதி,
ஆதித்யஹிருதயம் உள்ளிட்ட இறையிசைப் பாடல் தொகுப்புகள்...
ஏகப்பட்ட கர்னாடிக் மியூசிகல் கலெக்‌ஷன்ஸ்
கே ஜே ஜேசுதாஸ், உன்னிகிருஷ்ணன் ,பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ரகுநாதன் இன்னும் பல இசைமேதைகளின் ஆல்பங்கள்,
இளையராஜாவின் How to name it
Nothing but wind ,ரமணமாலை போன்ற இசைத் தொகுப்புகள் .
எண்ணற்ற பழைய , புதிய ,புத்தம் புதிய படப்பாடல்கள் & ரீமிக்ஸ் ஆல்பங்கள்,
பல வளரும் கலைஞர்களின் மெல்லிசை ஆல்பங்கள்,
பிரபல பழைய & புதிய பாடகர்களின் பாடல் தொகுப்புகள் ,
மதன் அவர்களின் வந்தார்கள் வென்றார்கள், கி.மு- கி.பி உள்ளிட்ட ஆடியோ புக்ஸ்
A R ரஹ்மானின் வந்தேமாதரம்,பாரதியார் பாடல்கள் உள்ளிட்ட தேசபக்திப் பாடல்கள்
இன்னும் மழலையர் பாடல்கள்...
இன்ஸ்ட்ரூமென்டல்ஸ் என அழைக்கப்படும் வாத்திய இசைத் தொகுப்புக்கள்...
என எண்ணற்ற கேசட்டுகள்....
எனது சேகரிப்பில் ...
இவற்றுள் பல சீ டீ களில் & MP3 வடிவங்களில் கிடைத்தாலும்கூட
சில பாடல்கள் கரணம் போட்டாலுமே கிடைக்காத கலெக்‌ஷன்ஸ் என்னிடம் ...
ஆனால் அவற்றை பாடவைக்கத் தேவையான ஆடியோ சிஸ்டம் இப்போது இல்லையே ...!
என்னிடமுள்ள ஆடியோ அசெம்பில்டு மியூசிக் சிஸ்டத்தை என்ன செய்வது ?
இந்த இடத்தில் எனது அசெம்பில்டு செட் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும் .
புதுப்பேட்டையில் வசித்துவரும் டி வி மெக்கானிக் ரவி எனது அருமை நண்பர் . அவர் செய்து அளித்ததுதான் அந்த செட் 10 பாண்ட் ஈஃக்வலைசருடன் கருப்பு நிற கேப்னட்டில் பக்காவாக காட்சிதரும் டெக் டைப் மியூசிக்கல் சிஸ்டம் அது . பார்வைக்கு மட்டும் பக்கா அல்ல ..சவுண்டிலும் பக்காதான் ..பேஸ், ட்ரெபிள் என சவுண்டுவிட்டு பட்டையைக் கிளப்புவதிலும் பக்காதான் . கர்னாடிக் மியூசிக் , மெலடி என அடக்கி வாசித்தாலும் மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் ஆல்பத்தை போட்டு அலறவைத்தால் சவுண்டு சும்மா பட்டையைக் கிளப்பி ஆடாதவரைக் கூட ஆடவைத்துவிடும் ...போடாதவரைக்கூட தாளம் போடவைத்துவிடும் .
ஆடியோ சிஸ்டம் ரிப்பேராகிப்போய் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கவில்லை .
ஹெட் இல்லை ... பிஞ்ச் ரோலர் இல்லை ...,வீல் இல்லை ... மெக்கானிசம் இல்லை ...கடல்லையே இல்லையாம் கணக்காக மெக்கானிக்குகள் கைவிரிக்க அசெம்பில்டு மியூசிக் சிஸ்டத்தை ஏறக்கட்டினேன் .
அப்படியே கேட்பாரற்றுக் கிடந்த அனைத்து கேசட்டுகளையும் அட்டைப் பெட்டிகளில் போட்டு பரணில் ஏற்றிவைத்துவிட்டேன் .
பின்னர்...
பின்னர் என்ன ...?
சீ டீ க்களில் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன்
எல்லோரைப் போலவே ...!
பிறகு ஐபேடில் கேட்க ஆரம்பித்தேன்
எல்லோரைப் போலவே ...!
பிறகு செல்போனில் , பென்டிரைவில் MP3 வடிவில் கேட்டுக்கொண்டிருக்கிறேன் எல்லோரைப் போலவே ...!
ஆனால் பரணிலுள்ள ஆடியோ கேசட்டுகள் தங்களை கீழிறக்கச் சொல்லி கனவில்கூட விடாமல் துரத்திக்கொண்டேயிருந்தன
என்ன செய்வது ...?
தேடினேன் ...
மெக்கானிக்குகளைத் தேடி ஓடுனேன் ...
ஒன்றும் வேலைக்காகவில்லை ..!
பரணில் கிடைக்கும் கேசட்டுகளை ஓடவைக்க என்னதான் வழி .....?
பெரிய பெரிய எலக்ரிக் & எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளில் விசாரித்தேன் ....
அவர்கள் என்னை வேற்றுக்கிரகவாசியைப் பார்ப்பது போன்ற தோரணையில் (!?) ஏற இறங்கப் பார்த்தபடி உதட்டைப் பிதுக்கியபடி இல்லையென்று அனுப்பிவைத்தார்கள் ...
நான் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல் கடை கடையாக ஏறி ,இறங்கியும் சலித்துப் போகவில்லை.
பின்னர் திடீரென ஒருநாள் இணையத்தில் தேடினேன் ....!
ஆடியோ கேசட் பிளேயர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ப்ளிக்கார்ட்டிலும், அமேசானிலுமாய் கண்ணடித்தன . அருகில் போய் விசாரித்தாலோ அவுட் ஆஃப் ஸ்டாக் என்று பல்லிளித்து வெறுப்பேற்றின.
இப்படியே நாட்கள் நடக்க ,மாதங்கள் கடக்க ,வருடங்கள் உருள ...
எனது கேசட் இசையார்வமோ நமது மோடியாட்சியின் பெட்ரோல் & டீசல் விலைக் கணக்காய் ஏகத்துக்கும் எகிறியபடி இருந்தது.
திடீரென ஒருநாள் அது நடந்தது ...
வழக்கம் போல் என் திறன்பேசியில் நான் உலா வந்துகொண்டிருந்தபோது
ப்ளிக்கார்ட்டில் சோனி ஆடியோ கேசட் பிளேயர் ஒன்று ...ஒன்றேயொன்று ...என்னைப் பார்த்து தன்னை வாங்கச் சொன்னது .
கண்டேன் சீதையை என அனுமன் மகிழ்ந்ததுபோல மகிழ்ந்தேன் .
இது நடந்தது செப்டம்பர் 9
உடனே ஆர்டர் செய்தேன் ...
கேஷ் ஆன் டெலிவரி...!
ஆர்டர் அக்செப்டட் என குறுஞ்செய்தி வந்தது.
யுவர் புராடக்ட் பேக்டு ....மெசேஜ் வந்தது...
செப்டம்பர் 11 அன்று ...
யுவர் புராடக்ட் ஷிப்டு ...மெஸேஜ் வந்தது...
செப்டம்பர் 13 அன்று ..
எனது பிறந்தநாள் செயதியாக ...!
கடைசியாக வந்தேவிட்டது ..
அது வந்தேவிட்டது ...!
ஆம் செப்டம்பர் 15 அன்று ...
எனது பிறந்தநாள் பரிசாக என்கையில் கொண்டுவந்துகொடுத்த கொரியர் பாய் என் கண்களுக்கு ராம பக்த அனுமனாகவே தெரிந்தான்..
பணத்தைக் கொடுத்தேன்; கையெழுத்திட்டேன் ;பார்சலை வாங்கினேன்.
அனுமன் அளித்த சீதையின் சூடாமணியை இராமபிரான் வாங்கிய காதல் உணர்வோடு கண்களில் நீர்மல்காது அந்தப் பார்சலை ஆகப்பெரிய காதலுடன் ...இசைக்காதலுடன் வாங்கினேன் ...!
பிரித்தேன் .வெண்ணிற தெர்மாக்கோல் பெட்டியில் என் கருப்பழகி சோனிக்குட்டி அழகாய் என்னைப் பார்த்து சிரிக்க ...
நான் வாஞ்சையோடு அவள் தலையை வருடினேன் ...
என் அம்மா எனக்களித்த சகஸ்ரணாம அர்ச்சனையை காதில் வாங்கியபடி ...
ஆனால் என் மனைவி என்ன நினைத்தாரோ தெரியவில்லை ...
என்தாயார் எனக்குச் செய்த அர்ச்சனையை சிரித்தபடி ரசித்துக்கொண்டே தன் பங்குக்கும் ஏதும் வழங்காமல் நான் பார்சலைப் பிரித்ததையும் டேப் ரெகார்டரை வெளியே எடுத்ததையும் வேடிக்கை பார்த்தபடி என் அருகே அமைதியாய்...
இப்போது நான் அந்த டேப் ரெக்கார்டரை இயக்கும் ஆர்வத்திலிருந்தேன் ...!
இந்த சோனி டேப்ரெகார்டர் எனக்கு வந்து சேர்ந்துவிடும் என்று முதல் நாளே குறுஞ்செய்தி வந்திருந்ததால் பரணிலிருந்த அட்டைப் பெட்டிகளை இறக்கி அவற்றிலிருந்த கேசட்டுகளை வெளியே எடுத்து நன்கு துடைத்து வைத்திருந்தேன் .
அவற்றில் இருந்து நான் அடிக்கடி கேட்டு இரசிக்கும் சில கேசட்டுகளை எடுத்து வைத்திருந்தேன்.
அதிலும் குறிப்பாக இளையராஜாவின்
' கீதாஞ்சலி ' இசை ஆல்பத்தை எடுத்து கேசட் பிளேயரில் போட்டு Play பொத்தானை
பரபரப்புடன் அழுத்த ....
அடடா.....
இதோ என் டேப் ரெகார்டர் பாட ஆரம்பித்துவிட்டது ...
' கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம் ..
செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம் ... '
இளையராஜாவின் காந்தக் குரல் இசையாக வழிந்து செவிகளில் தேனெனப் பாய்ந்தது..
இதை ...இதை... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் .
எல்லோரும் தொழில்நுட்ப வளர்ச்சி என்னும் காலக் காட்டாற்றில் அதன் போக்கில் நீந்தும் வேளையில் நானோ எதிர்நீச்சல் போட்டு எதிர்திசைப் பயணம் மேற்கொண்டு பழமையின் சுகத்தில் மூழ்கிக்கிடக்கின்றேன் ...
இப்போதெல்லாம்...
எனது அதிகாலை நேரங்கள் ஆடியோ கேசட்டுகளால் பூபாளம் இசைக்கப்பட்டு வரவேற்கப் படுகின்றன தினமும் ...
இரவு நேரம் விடிவிளக்கொளியில்....
எனது படுக்கையறை ஜென்சியின் தேன் குரலால் நிறைகின்றது ...
உறக்கம் கண்களை வருட...
டேப்ரெகார்டரிலிருந்து கீத ஒலி செவிகளில் நுழைந்து மூளையின் உறக்க செல்களை தழுவுகின்றது ...
' தெய்வீக ராகம்...திகட்டாத பாடல்....கேட்டாலும் போதும் ...இள நெஞ்சங்கள் வாழும் ...'
மெல்ல இமைகள் விழிகளைத் தழுவி நான்
சொப்பனலோகத்தில் மெல்ல நுழைந்து
இசையோடு கலக்கிறேன் ...
' நம்தன நம்தன நம்தன ...
நம்தன நம்தன தாளம் வரும் ....'
இதோ ...இத்துடன் என் இசைபுராணம் நிறைவுபெறுகின்றது...
இசையலைகள் ஓய்வதில்லை ....
உம்மனதைத் தாலாட்டும் இசை உங்கள் செவிகளில் விழுகிறதா ...
'காற்றினிலே வரும் கீதம் ....
காற்றினிலே வரும் கீதம் .....'