Sunday 23 April 2017

மிருகங்களைக் காப்போம்



           புதுவையில்  உள்ள ஓவியக் கலைஞர்களில் குறிப்பிடத்  தக்கவர் நண்பர் கந்தப்பன் அவர்கள். அவரது செல்லக் குமாரன் செல்வன் யோகேஸ்வரனின் தனிநபர் ஓவியக் கண்காட்சிக்கு அஞ்சல் மூலம் அழைப்பு வந்தது .
           நேற்று ஆரோவில் மாத்ரி  மந்திர் செல்லவும் முன் அனுமதி பெற்றிருந்ததுடன் ஓவிய நண்பர் திரு சுகுமாரன் அவர்களும் திருச்சிற்றம்பலம் பல்மேரா மைதானத்தில் செயல்பட்டுவரும் பல்மேரா ஆர்ட் கேலரியில் நடைபெறும் ஓவியர் சக்திகுருநாதன் என்பவரின் கண்காட்சியையும் காண அழைப்பு விடுத்திருந்தார் ..ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிடும் உத்தேசத்தில் ஓவிய மாணவர்கள் நால்வர் புடைசூழ கிளம்பினேன் புதுவைக்கு .
           முதலில் ஆரோவில். பின்னர் அங்கிருந்து நேராய் பல்மேரா ஆர்ட் கேலரி விஜயம் ...அதன்பின்னர் அருகில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேய பெருமான் அருள்பெற்று நிறைவாக புதுவை மிஷன் தெருவில் இயங்கிவரும் வண்ண அருவி ஆர்ட் கேலரிக்கு சென்றோம்....வளரும் ஓவியக் கலைஞன் செல்வன் யோகேஸ்வரன் கந்தப்பன் அமைத்திருந்த ஓவியக் கண்காட்சியைக் காண.
        ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கே உரிய அமைதியான அப்பாவித்தனமான முகம்.பார்த்தவுடன் வசீகரிக்கும் கண்கள் ..தூரிகை பிடித்திருந்த .கையில்  தற்போது டென்னிஸ் பேட் .தந்தையை அணைத்தவாறு நின்றிருந்தான்.அவன் வரைந்திருந்த அனைத்து ஓவியங்களும் ஸ்டெட்லர் காணப்படும் பென்சில் கொண்டு வரைந்தவை ,,கந்தப்பனின் மரபணு ஆயிற்றே ...கேட்கவா வேண்டும்...?எல்லா ஓவியங்களும் அருமை...ஆறாம் வகுப்பிலிருந்து எஜாம் வகுப்பு மாணவன் வரைந்தது என்றால் நம்ப முடியாத அளவுக்கு விரல் வித்தையை காகிதங்களில் காண்பித்திருந்தான்,
            தனது மைந்தனின் ஓவியக்  கலை வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கும்  நண்பரைக் கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும் .அழைப்பிதழில் அவன் பங்கேற்ற போட்டிகள் ..கண்காட்சிகள் ...விருதுகள் குறித்து ஆவணப்படுத்தி வெளியிட்டு இருந்தது சிறப்பாகவும் அவற்றின் எண்ணிக்கை  சற்றே மலைப்பாகவும் இருந்தது ....!வெல்டன் பையா ...!சிறுவன் யோகேஷ்வரனின் பெயரிலேயே யோகம் இருக்கிறதே ...அவன் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்தி விடைபெற்றோம்.கூடுதலாக எங்களுக்கு நிறைய ஓவியக் கலைஞர்களின் அறிமுகமும் கிடைத்தது கூடுதல் சிறப்பு...
            உடன் அழைத்துச் சென்றிருந்த மாணவர்கள் எல்லோருக்குமே புதுவை ஓவியக் கண்காட்சி அனுபவங்கள் புதியவை ..அதுவும் தங்களை விட வயதில் இளைய சிறுவனின் ஓவியக்  கண்காட்சி நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

ஆரோவில் காட்சி

         நேற்று (23-04-2017 -அன்று  ) காலை ஆரோவில் மாத்ரி மந்திர் சென்றிருந்தோம்.காலை 9 மணிக்கு எனக்கு யுனிவர்சல் குளோப் தரிசிக்க அனுமதி கிடைத்திருந்ததால் ,முதலில் நான் மட்டும் சென்று வந்தேன் பின்னர் உடன்வந்த மாணவர்கள் வியூ பாயிண்ட் சென்று பார்வையிட்டார்கள் .

         எப்போதும் நான் என்னுடன் வரைவதற்கான உபகரணங்களை கொண்டு செல்வது வழக்கம் .செம்மண் பூமியில் பசுமைச் சூழலில் நீல வானப் பின்னணியில் சூரிய ஒளியில் தக தாகத்துக்கு கொண்டிருந்த அந்த தங்க நிற கோளம் என் விரல்களைப் பர பரக்க வைத்தது.பிறகென்ன ...கிடைத்த நிழலில் ஒரு கருங்கல் பலகையில் எடுத்துச் சென்ற காகிதத்தை விரித்தேன்.சுதா -68 என்று ஒரு வண்ணக் கட்டி ரகம் --அதைக் கையில் எடுத்தேன் .என் விரல்கள் காகித மேடையில் நர்த்தனமாடத் தொடங்கின .சரியாக 10 நிமிடத்திற்குள் காட்சி தயாரானது ...உடன் மாணவன் லட்சாராமனும் ஒருபுறம் பென்சில் கொண்டு கருப்பு வெள்ளையில் வரைந்துகொண்டு இருந்தான் ... !

          நல்ல வேளை உடன் வந்த பார்வையாளர்கள் யாரும் சூழ்ந்துகொண்டு சங்கடப் படுத்தாமல் தொலைவில் நின்று ரசித்தது  மகிழ்வைத் தந்தது ...!படம் வரைந்தது மனதிற்கு நிறைவைத் தந்தது .நிறைவுற்ற படம் உங்கள் பார்வைக்கு.







Friday 21 April 2017

  சமீபத்தில் புதுவை ஆரோவில் மோஹனம் நடத்திய கிராமக் கலை விழாவில் பங்கு பெரும் வாய்ப்பும் ,மோஹனம் பள்ளியில் தங்கும் இனிய அனுபவமும் கிட்டியது. ஞாயிறு காலை இளம் வெயிலில் அந்த குடிலும் அதன் பின்னணியிலும், முன்புறமாகவும் இருந்த மூங்கில் புதர்களும் மனதை கொள்ளைகொண்டன .விரல்கள் காட்சிப் படுத்த துடித்தன.கையில் வண்ணங்கள் ஏதும் இல்லை உடன் கொண்டு சென்ற நியூஸ் பிரிண்ட் பேப்பர் மற்றும் சுதா 68 ரக கரிக்கோல் தவிர ...அவற்றைப் பயன்படுத்தி விரைந்து வரைந்து முடித்தேன்.உடன் ஓவிய மாணவன் லட்சாராமன் ....!

Tuesday 18 April 2017

கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் -2017

 முகநூல் நண்பர்களுக்கு வணக்கம் ..!

             எங்கள் இயக்கம் கடந்த இருபத்து ஒரு ஆண்டுகளாக கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது.
           இவ்வருடமும்  ஓவிய பயிற்சி முகாமை வரும் மே மாதம் முதல் தேதி முதல் பத்தாம் தேதி வரையிலும் நடத்த உள்ளோம் .
           எங்களிடம் பயிற்சிபெற்று தற்போது கவின்கலைக்  கல்லூரிகளில் ஓவியம் பயின்று பல்வேறு இடங்களில் பணியாற்றுகின்ற முன்னாள் மாணவர்களும் ,தற்போது ஓவியக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களும் ,புதுவையைச் சேர்ந்த பிரபல ஓவியர்களும் எங்களோடு இணைந்து மாணவர்களுக்கு ஓவியப்  பயிற்சியை அளிக்க உள்ளார்கள்.
           மேலும் எங்கள் ஸ்வாசிகா இயக்கம் தனது 22 ஆவது வயதில் அடி எடுத்து வைப்பதினை குறிக்கும் வகையில் பயிற்சி முகாம் வளாகத்தில் 22 மீட்டர் நீளமுள்ள ஒரே துணியில் 22 ஓவியர்களைக் கொண்டு 22 மணி நேரத்தில் 22 ஓவியங்களை பண்ணுருட்டியில் முதன் முறையாக சாதனை முயற்சியாகவும் நிகழ்த்த உள்ளோம் .சாதனை நிகழ்வு அரங்கேறும் வேளையில் இச் செய்தியைக் காணும்  அனைவரும் திரளாக வருகைதந்து எங்களை ஊக்கப் படுத்துமாறும் வேண்டுகின்றோம் .நன்றி !
          மேலும் பயிற்சி முகாமின் நிறைவு நாள் அன்று பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற  மாணவர்களின் படைப்புகள்  கண்காட்சியும் ,எனது ஓவியங்கள் மற்றும் சக ஓவியர்களின் கண்காட்சியும், புகைப் படக் கண்காட்சியும் ,பண்ணுருட்டி கவிதை கணேசன் அய்யா அவர்களின் அரிய ,தொல் பொருட்கள்,நாணயங்கள் 250 வகையான நெல் வகைகளின் கண்காட்சியும் இடம்பெறுகின்றன.
         எனவே அனைவரும் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறும் இச் செய்தி அனைவரையும் சென்று அடையும் வகையில் இதனை தங்கள் பக்கங்களில் பகிருமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் -2017



Monday 17 April 2017

மோஹனம் கிராமியக் கலை விழா

மோஹனம் கிராமியக் கலை விழா 

     15-04 -2017 ,சனி மற்றும் 16-04-2017 ஆகிய தேதிகளில்  ஆரோவில் மாதிரி கிராமத்தில் மோஹனம் கலை பண்பாட்டு அமைப்பு ,புதுவை சுற்றுலாத் துறை மற்றும்  கலை புதுவை பண்பாட்டு இயக்கம் இணைந்து நடத்திய கிராமக் கலை விழாவில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது .
        கவிதை கணேசன் அய்யாவுடன் நானும் சென்றிருந்தேன்.புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு ஷாஜஹான் அவர்கள் கலைவிழாவை தொடங்கி ,கண்காட்சியையும் திறந்து வைத்தார். சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் அக்கா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற கவிதாயினி திருமதி மீனாட்சி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர் .
        என் அன்பு பரிசாக அனைவருக்கும் நான் இயற்றி வெளியிட்ட மனவண்ணங்கள் நூலை பரிசளித்தேன்.உடன் வளர்ந்து வரும் ஓவியக்  கலைஞன்  லட்சாராமன் மற்றும் 4 சாரண மாணவர்களும் பங்கேற்றனர்.
          கவிதை கணேசன் ஐயா பாரம்பரிய நெல் வகைகள் 250 & பாரம்பரிய பொருட்கள் மற்றும்    அரிய பொருட்கள் கண்காட்சியினை அமைத்து இருந்தார் .
            நான்   ஓவியக்  கண்காட்சியினை அமைத்து இருந்ததோடு வருகை புரிந்த அப்பகுதி கிராம மாணவர்களுக்கு ஓவியம் வரையவும் வண்ணம் தீட்டவும் பயிற்சி அளித்தேன்.
           களிமண்  சிற்பம் (சுடுமண் )செய்தல்,கலைப் பொருட்கள் கண்காட்சி ,கைவினைப் பொருட்கள் கண்காட்சி ,பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சி ,பாரம்பரிய பானங்கள் உள்ளிட்ட அரங்குகள் இடம் பெற்றிருந்தன .மேலும் புதுவை பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் மற்றும் புதுவைப் பகுதி ஓவியர்கள் வருகை தந்து இருநாட்களும் ஓவியங்கள் வரைந்தனர் .
         மோகனம் குழுவின்  ஒருங்கிணைப்பாளர்திரு பாலு ,திரு. முருகன் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் .வெளி நாடு சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்து ஆர்வத்தோடு பார்வையிட்டனர் .
         நாள் முழுதும் மாணவர்களின் பரதநாட்டியம்,நாட்டுப் புறக் கலை நடனங்கள்,நாடகங்கள் என ஒருபுறம் அசத்த இரவு நேரத்தில் புகழ்பெற்ற வீணை ,புல்லாங்குழல் ,வயலின் இசைக் கலைஞர்களின் பாரம்பரிய ,கர்னாடக மெல்லிசை விருந்தும் நடைபெற்றன.பள்ளி மாணவர்களுக்கும் ,கிராமப் பெண்களுக்கும் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி பரிசளித்து மகிழ்வித்தனர் விழாக் குழுவினர்.
             பருப்பு அடை ,நவதானிய உருண்டை ,சுழியன் ,குழிப்  பணியாரம்,கேழ்வரகுப் புட்டு, சிகப்பரிசி புட்டு,பல்வகை தானிய சுண்டல்கள் உள்ளிட்ட கிராமங்களில் மட்டும் கிடைக்கும் உணவு வகைகள் கண்காட்சி அரங்கில் கிடைக்கும் போது விட்டுவைக்கலாமா ..அனைத்து வகைகளையும் ஒரு கை ...மன்னிக்கவும் ..ஒரு வாய் பார்த்தேன் .
              பொதுவாக ஒரு அரங்கினுள் நடைபெறும் விழாக்களை விட இதுபோன்ற கிராமச் சூழலில் ,மரங்கள் அடர்ந்த திறந்த வெளியில் காற்றோட்டமான இடத்தில் , ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலைவிழா மனத்தைக் கொள்ளை கொண்டது நிஜம்.
             














மோஹனம் ....வளர்க உமது அறக்கட்டளை ....! செழிக்கட்டும் தமிழர் கலாச்சாரமும் பண்பாடும்....!