Wednesday 10 December 2014

பாரதி

பாரதி ....
 பாரதத்தின் பெயரையே தன பெயரிலும் கூட சுமந்தவன் 
 பெயரில் மட்டுமா 
 நெஞ்சிலும் கூட அல்லவா ...
 தேடிச் சோறு நிதம் தின்று 
 என்ற பாடலுக்குத் தன்னையே உதாரணமாக்கி 
 வாழ்ந்து மறைந்தவன் பாரதி ...
 மறைந்தது அவன் உடல் மட்டும்தான் ...
 அவன் உணர்வுகள் இன்னும் உலகம் முழுக்க 
 வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன 
 கவிதைகள் வடிவில் ...
 பாட்டுக்கொரு புலவன் ,முண்டாசுக் கவிஞன்,....
 அவன் தனது முறுக்கு மீசையில் மட்டும் 
 தனது இந்த சமூகத்தின் அவலங்களுக்கு எதிரான 
 தன் கோபத்தை வைத்திருக்கவில்லை ...
 மாறாக தன்  கண்களிலும் கவிதைகளிலும்கூட வைத்திருக்கின்றான் ...
 அவன் உணர்வுப் பிழம்பு 
 கருத்துக் கனல் ...
 சிந்தனைப் புயல் ....
 செயல் சூறாவளி ...
அவன் ஒரு நல்ல கணவன் இல்லை ...
 நல்ல தகப்பனில்லை ...
 சராசரி மனிதனுமில்லை ....
 ஆனால் அப்படி இல்லாததனால்தான் 
 மிகுந்த  போற்றுதலுக்குரிய இந்தியனாக ...
 மிக நல்ல தமிழனாக 
 மிக உயர்ந்த  மனிதனாக ...வாழமுடிந்தது 
 நாம் ஒவ்வொருவரும் பாரதியைப் போல வாழாவிட்டாலும் அவனைபின்பற்றி வாழ முயலுவோமே ...!






Saturday 6 December 2014

யுவஸ்ரீ கலா பாரதி விருது

யுவஸ்ரீ கலா   பாரதி விருது 

                      எங்கள் பள்ளி மாணவர்களுள் கலை ,விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு யுவஸ்ரீ கலா பாரதி  என்ற பெருமை மிகு விருது 06-12-2014-சனிக்கிழமை  அன்று வழங்கப்பட்டது .மதுரை ,கோச்சடை என்னும் ஊரில் இயங்கி வரும் பாரதி யுவக் கேந்திரா என்ற தன்னார்வ அமைப்பு இதனை வழங்கியது .நெல்லை பாலு என்பவர் இதன் நிறுவனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
        காடாம்புலியூரில் நான் பணியாற்றியபோது கூட அங்கிருந்த மாணவர்கள் வினோத் ,சோழவேந்தன்,ஜெயபாலன்,ஜெயரட்சகன் உள்ளிட்டோருக்கு இவ்விருதுகளுக்கு விண்ணப்பித்து புதுவையில்  இவ்விருதுகளை பெற்று வந்தது குறிப்பிடத் தக்கது .பெரியவர்களாகியபின் சாதனைகள் புரிந்தால்தான் விருதுகள் பெற முடியும் என்ற நிலைமை மாற்றி சிறுவர் சிறுமியரும் அவர்களின் வயதுக்கேற்ற சாதனைகள் புரியும்போது அவற்றை அங்கீகரித்து அவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவப்படுத்துகின்ற நெல்லை பாலு அவர்களின் பெருந்தன்மை நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த  மாணவ மாணவியர்களுக்கு தன்னபிக்கையும் உற்சாகமும் பெருகி மேலும்  மேலும் சாதனைகள் புரிய உந்து சக்தியை வழங்கும் என்பதில் ஐயமில்லை .இதற்கும் முன்னரே என் அன்புக்குரிய மாணவன் சுந்தர் என்பவருக்கும் இந்த விருதை பெற வைத்தது மிக்க மகிழ்ச்சிக்குரியது .
              
           இந்த வருடம் எங்கள் பள்ளியின் மாணவர்கள் முரளி கிருஷ்ணன் (இசை)
சுரேந்திரன் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்),ராஜவிக்னேஷ் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்,வினாடி வினா),ராஜி (கட்டுரை),முகம்மது ஆஷிக் அலி (ஓவியம்),சரத்குமார் (அறிவியல் ஆய்வு) ஐயப்பன் (சிலம்பம், ஓவியம்),சபரிநாதன் (சிலம்பம்,),ஜெயவேல் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்),,திலீபன்(வினாடி வினா)ஆகிய மாணவர்கள் விருதுகளை பெற்றார்கள்! அந்த விருதுகளைப் பெற்ற மாணாவர்களின் முகங்களிலும், பெற்றோர்களின் முகங்களிலும் அப்படியொரு பெருமிதம் . அத்துடன் எனது தங்கை மகள் தரணீ ஸ்வரி ( ஓவியம் & இசை ) அவ்விருதைப்  பெற்றது எனக்குப் பெருமிதம் அளித்தது .
           விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .!
    











Thursday 4 December 2014

மனப்பண்புகள்

        சமீபத்தில் முக நூலில் ஆசிரியர் நாட்குறிப்பு என்ற 
           சக ஆசிரிய நண்பர் ,மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்தில் மனப்பண்புகளை வளர்க்கத்தவறுகிறோமோ?
என்று அங்கலாய்த்து இருந்தார் ....மனப்பன்புகளா ...? அப்படியென்றால் என்ன ? அது எங்கே கிடைக்கும் ...? கிலோ என்ன விலை ? என்று கேட்கும் நிலைக்கு ஏகப்பட்ட மாணவர்களும் அநேகமாக எல்லா பெற்றோர்களும் கேட்கும் நிலைக்குத் தள்ளப் பாட்டிருக்கிரார்கள் ...!
          மனப்பண்புகள் யாருக்கு வேண்டும்....?போய் குப்பையில் கொட்டுங்கள்...!பெற்றோருக்குத் தேவை ...வண்டி வண்டியாய்  மார்க்கு ...நல்ல காலேஜூல சீட்டு ...முடிஞ்சா வெளி நாட்டுல வேலை ...லட்ச லட்சமா பணம்... அதக் காரணம் காட்டி தன மகனுக்கு நல்ல பணம் காய்ச்சி மரமான பொண்ணு ....அவங்க வீட்டுல உறிஞ்சு எடுக்கற காரு ...பணம் ...தான் அனுபவிக்காத வசதிகளை தன் மகன் மூலமா அனுபவிசிடனும்னு துரத்துகின்ற வெறி....இன்னிக்கு படிச்ச ..படிக்காத ...அத்தனை பெற்றோர்களின் ...ஏன் ...ஆசிரியர்களாகிய நாம் உட்பட ...எல்லோருடைய எண்ணமே அப்படித்தானே இருக்கு ...! 
              முதலில்  தனியார் பள்ளிகள் மட்டுமே தேர்ச்சி விழுக்காட்டை முன்னிலைப் படுத்தி ஓடிக்கொண்டிருந்தன ...ஆனால் இப்போது அரசுப்பள்ளிகளே தேர்ச்சி சதவிகிதத்தை நோக்கி முடுக்கி விடப்பட்டுள்ளன...!இதற்கு மூல காரணம் அனைத்து உயரதிகாரிகள் ....அவர்கள் என்ன செய்வார்கள் ...? அவர்களது அதிகாரிகளுக்கு பதில் சொல்லி ஆகவேண்டுமே ...!எனவே அவர்களுக்கே தேவை ... மாணவர்களின் ஒழுக்கமோ ... கட்டுப் பாடான பள்ளிச் சூழலோ அல்ல ....!குறைந்த பட்சம் 90 % கு குறையாத தேர்ச்சி ...!எனவே அதிகாரிகள் ஒரு பக்கம் ...அடங்காப் பிடரி மாணவர்கள் ஒரு பக்கம் ...இடையில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவது பரிதாபத்துக்கு உரிய ஆசிரியர்களே ...!மாணவர்களை கண்டிக்கக் கூடாது ...தண்டிக்கக் கூடாது ...மனம் நோகும்படி பேசக் கூடாது ...ஆனால் அன்பாய் பேசித் திருத்தவேண்டும் ....அன்பாய் பேச ஆசிரியர்கள் தயார் ...கேட்டு உடனே திருந்தக் கூடிய சூழலிலா இன்றைய மாணவர் சமுதாயம் இருக்கிறது ..?இது எப்படி இருக்கிறது என்றால் ....அடுப்பு பற்ற வைக்கக் கூடாது ...பாத்திரம் வைக்கக் கூடாது ...ஆனால் சோறு மட்டும் தயாராகிவிடவேண்டும்....அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் ...முடியுமா...?அது போலத்தான்...!இந்த லட்சணத்தில் ஒரு உயரதிகாரி...ஆசிரியர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்," உங்களிடம் கொடுத்திருப்பது ஓட்டை சட்டி ...அது எங்களுக்கும் தெரியும் ...ஆனால் எங்களுக்கு கொழுக்கட்டை வெந்தாக வேண்டும்: "எப்படி இருக்கிறது கதை ...அதிகாரிகளின் வாயில் விழுந்து எழுந்திரிக்காமல் ...தன்  பணியை பாதுகாத்துக் கொள்வதே பெரும் தலைவலியாய்  இருக்கிற நேரத்தில்  ...நீதி போதனை வகுப்பாவது மண்ணாவது .... !
              அப்புறம் மாணவர்களுடன் நட்பாகப் பழகும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்களே ...அவர்கள் பிற ஆசிரியர்களுக்கு ...துரோகியாம் ...மாணவர்களுக்கு அதிக இடம் கொடுத்து மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் இருக்கும் பயத்தை (!?)நீக்கிவிடுகிறார்களாம் ...அது தெரியுமா உங்களுக்கு ...!
    நல்ல பழக்கங்களை ...வாழ்வியல் திறன்களை கற்பிக்கும் சாரண , நாட்டு நலப் பணி  இயக்கங்களில் உள்ள மாணவர்களையே கூட மதிப்பெண்களைக் காரணம் காட்டி அவர்களை மனதளவில் நசுக்கத் துடிக்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட ஆசிரியர்கள் முதலில் சிந்திக்க வேண்டும் ...!ஓவியம்,இசை ,நடனம், நாடகம் போன்ற தனித் திறன்களை,குழு மனப்பான்மையை வளர்க்கும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ...அதற்காகப் பாராட்டாவிட்டாலும்...நீ இதற்குத்தான் லாயக்கு ...படிப்பில் ஒன்னையும் காணோம் ...இதுல பெருசா கிழிச்சிட்டியா ...? போயி படிப்பப் பாரு ...இதெல்லாம் உனக்கு சோறு போடாது ...என்று மற்ற மாணவர்களிடையே நையாண்டி செய்யும் ஆசிரியர்கள்தன இன்றைய பள்ளிச் சூழலில் அதிகம் ...!
          இதே போல் சூழ்நிலை தொடர்ந்தால் ஆசிரியை ஒருவர் மாணவனால் கத்தியால் குத்தி பலி ... !கணினி ஆசிரியை  கன்னத்தில் மாணவர் அறைந்து காது கேட்கவில்லை ...போன்ற செய்திகள் ...சக மாணவனை குத்திக் கொன்ற மாணவன் போன்ற செய்திகள் என்றோ ஒரு நாள் வருவது போய் அன்றாட செய்திகளாய் மாறும் நிலை அருகில் இல்லை ...என்ன செய்யப் போகிறோம் நாம் ...? வெறும் சாட்சியாய் ...கையாலாகாத  தனமாய் நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர ...!