Wednesday 27 March 2019

நான் சொல்வதெல்லாம் காதல்

நான் சொல்வதெல்லாம் காதல்
காதலைத் தவிர வேறொன்றுமில்லை...
இன்று காதலர் தினமாமே...
காதலுக்கென தனியே ஒரு தினம் வேண்டுமா என்ன ? என்பதுதான் எனது வினா .
காதல்...
இந்தப் பிரபஞ்சத்தை அனுதினமும் இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு மூன்றெழுத்து மாயாஜாலம் ...!
செவிகளில் விழுந்த உடன் விழிகளிலே வானவில்லைத் தெறிக்கவிடும் மகேந்திபுரி
வர்ணஜாலம் ...!
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
எனத் தான் இறை மேல் கொண்ட
பக்தியையும் கூட காதலாக்கிப்
பாமாலை சூட்டி மகிழ்ந்தார்
தேவாரம் தந்த மூவருள் ஒருவரான
ஞானப்பாலுண்ட ஞானசம்பந்தர்...
மாலவன் மேல் மையலுற்று
காதலித்தவன் கரம் பற்றிடக் கனாக் கண்டு
மார்கழியில் வைகறைத் துயில் நீங்கி
திருப்பாவை பாடி
தன் தளிர்க் கரங்களால் தொடுத்திட்ட மாலையை முதலில் தான் சூடி
பின் மாயோனுக்கும் சூட்டியதால்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியானாள்
மானுடப் பெண்பாவை ஆண்டாள் ...
காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...
என்று பகிரங்கமாகவே தன் பாட்டால் காதலிக்க அழைத்திட்டான்
முறுக்கு மீசையோடு தலையிலே முண்டாசும்
இதயத்தில் பெருங்காதலையும் சுமந்த
மகாகவி பாரதி...
அவனேதான் இன்னும் சற்று மேலே போய்
காதல் காதல் காதல்... காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.... என்றும் முழங்கி
முரசறைந்தான் அந்த முதுகவிஞன்...
காதல் என்பது என்ன?
என்ன மாதிரியான உணர்வு...?
...
...
காதல் என்பது அன்பு
காதல் என்பது பாசம்
காதல் என்பது பக்தி
காதல் என்பது பற்று
காதல் என்பது நேசம்
காதல் என்பது நட்பு
காதல் என்பது கருணை
காதல் என்பது கனவு
காதல் என்பது புனிதம்
காதல் என்பது அடிப்படை
காதல் என்பது உயிர்நேயம்
காதல் என்பது பெருங்கருணை
ஆனால் இன்றைய காலங்களில்
இளைய சமுதாயத்தினரும்
பதின்பருவத்தினரும் காதலைப் பற்றிய கருதுகோளாகக் கொண்டிருப்பது என்ன?
திரைப்படங்கள் அவர்கள் மனதிலே காதலை உருவகப்படுத்தியிருப்பது எவ்வாறு...?
காதல் என்பது ஒரு ஆண் பெண் மேல் கொள்ளும் அன்பு அல்லது
பெண் ஆண் மேல் கொள்ளும் அன்பு
என்பதாகத்தானே...
காமத்தின் மாற்றுவடிவமாகத்தானே...
இந்த காதலர் தினத்தை உலகத்தின் ஒரு சாரார் மிக ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும்
கொண்டாடிக் கொண்டிருக்க
இன்னொரு சாராரோ காதலர் தினத்தைக் கொண்டாடுவோரை
காமுகர் கூட்டமாகவே கருதி வசைபாடுவதும்
அவர்கள் மேல் வெறுப்பை
வாரி உமிழ்ந்து தூற்றித் திரிவதும்
கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்து
காதலையே கொச்சையாக்கி இகழ்வதுமாய்
களேபரம் செய்து கொண்டிருக்கிறார்களே...
ஏன் இப்படி...? அனேகமாக அவர்கள் சங்கிகளின் ராகமாக இருக்கலாம்...
இடையே இன்னொரு அதிகபட்ச வேடிக்கை என்னவென்றால் சில இளைஞர்கள் கிளம்பியிருக்கிறார்கள் ...
I Hate valentine's Day... என்றும்
நான் முரட்டு சிங்கிள் டா ...
என்றும் கூறி ப்ரொஃபைலில் வந்து
கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.
காதல் சின்னத்தையே உலக அதிசயமாகக்கொண்டுள்ள நம் பாரத பூமியில் ஏன் இப்படி ?
அதெல்லாம் தெரியாது
வார்டன்னா அடிப்போம் என்ற வடிவேலுவின் காமெடிக் கணக்காக LOVE னாலே
காதல் தான்... காதல்னாலே காமம்தான்
என்றானதற்கு மூலகாரணங்களே
நிச்சயமாகத் திரைப்படத் துறையினர் தான்
என்பதில் சந்தேகம் ஏதும் கிடையாது என்பதே உலகறிந்த உண்மைதானே...
ஆனால் 2000 வருடங்களுக்கு முன்னரே
காதல் என்பது ஆண் பெண் பாலினம் சார்ந்த அன்பு என்ற பார்வையைத் தாண்டி ஒரு உயிர் மேல் உயிர் கொள்வது என்று குறள் கொடுத்தானே வள்ளுவன்...
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
வகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்ற இருவரிகளில் தெறிக்கிறது (தெரிகிறது என்றும் படிக்கலாம்)
இந்த உலகில் வாழும் பல்லுயிர்க் கோளத்தின் மீதான நமது வள்ளுவனின் காதல்...
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடியதிலும்
பசித்தோரின் பிணி நீக்க ஏற்றி வைத்த அணையா விளக்கின் அனலிலும் வெளிப்படுகின்றது காதலின் மீதான வள்ளலாரின் மற்றொரு பரிமாணம்.
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடி, செல்லம்மா தன் செல்லங்களின் பசி தீர்க்கவென கடன் வாங்கி வைத்திருந்த நொய்யரிசியத்தனையையும் புள்ளினங்களுக்கு வாரி வாரி இறைத்திட்ட
பாரதியின் செயலில் தெரிகிறதே ஒரு பேரன்பு.. அதுவல்லவோ காதல்...
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல...
அதையும் தாண்டிப் புனிதமானது...
னிதமானது..
இதமானது....
ஆம்...
கம்பன் தன் இராமகாதையிலே தீட்டியிருப்பான் ஒரு காட்சியை .. -
சித்திரமாக ...
மிதிலா புர நகரத்து வீதியிலே
விஸ்வாமித்திர முனிவன் முன் நடக்க ...
தன் இளவல் இலட்சுமணன் பின் தொடர
முனிவனைத் தொடர்ந்து செல்கிறான்
வில்லேந்திய கரங்களுடன்
தசரத இராமன்...
அரண்மனையின் உப்பரிகையிலே உலா வந்து கொண்டிருந்த ஜனக புத்திரி சீதா தேவி
இளவரசன் இராமச்சந்திரனைப் பார்க்கின்றன.
ஏதேச்சையாக இராமனும் அவளைப் பார்க்கின்றான்.
இக்காட்சியை கம்பன் எவ்வாறு உரைக்கின்றான் தெரியுமா.?
அண்ணலும் நோக்கினான்;
அவளும் நோக்கினாள்.... என்று
கண்ணும் கண்ணும் கலந்ததால் உண்டான காதலை நயமுடன் நவின்றிருப்பார் அந்தக்
கவிச்சக்கரவர்த்தி .
அதையே தான் நவீன திரைப்படங்கள் இவ்வாறு பாடலாக்கியிருக்கின்றன...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்.... எனவும் ,
விழியில் விழி மோதி இதயக் கதவொன்று
திறந்ததே.... எனவும்
பாடலாக்கி மகிழ்ந்திருக்கின்றனர் நமது கவிஞர் பெருமக்கள் ...
காதலைச் சொல்ல நினைத்து...
சொல்ல முடியாமல் தவிக்கும் காதலர்கள் நிலையை கண்ணதாசன் பாடியுள்ள விதத்தைப் பாருங்களேன்...
சொல்லத்தான் நினைக்கிறேன்..
சொல்லத்தான் துடிக்கிறேன்...
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்... ஓஹோ...
ஆஹா.. ஆஹா...
கண்ணதாசன் கண்ணதாசன்தான்...
இந்தப் பாடலின் முதல் சரணத்திலே பட்டையைக் கிளப்பியிருப்பார் கவிஞர்.
காதல் என்பது மழையானால் ...
அவள் கண்கள்தானே கார்மேகம்...
இவ்வரிகளுக்கு மாற்று வரிகளை உங்களால் யோசிக்கத்தான் முடியுமா?
இப்பாடல் வரிகளின் நவீன வடிவம் எது தெரியுமா ?
சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்...
காதல் சுகமானது...
அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில்
வரும் அற்புதமான பாடல் வரிகள்தான் என்னைப் பொருத்தவரை காதலர்க்கான தேசிய கீதம் என்பேன்.
வரிகள் காதுகளில் நுழையும்போதே உள்ளத்தில் காதல் பூ பூக்கும்...
மனதில் மத்தாப்பூ பூக்கும்...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்து விடு...
அலைகள் உரசும் கரையினில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு...
...
...
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்...
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்...
அடா.. அடா... வைர வரிகள் அல்லவா
நம் வைரமுத்துவின் வரிகள்...
உயிர் உருகும் சத்தம் நிஜமாக கேட்கும்... உண்மையான காதலருக்கு..
காதல் என்பது தெய்வீகமானதோ...
மானுடர்க்குச் சொந்தமானதோ...
எனக்குத் தெரியாது...
காதல் என்பது ஓர் மயிலிறகு...
அது நம் உடலை மட்டுமல்ல...
நமது மனதையும் கூட
மென்மையாக வருடும் ....
எனவே
மானிடக் காதலர்க்கும்...
தெய்வீகக் காதலர்க்கும்..
உயிர் காதலர்க்கும்...
காதல் என்ற அன்பினை அடுத்தவர்க்கு அள்ளி அள்ளி வழங்கும் அத்தனை
அன்பர்களுக்கும் ...
என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
காதலைக் கொஞ்சம் காதலிப்போமா?

நான் தீட்டிய ஓவியம் ...
கண்ணனும் ,ராதையும் 
அவர்களது விழிகள் வழியே
பெருகி வழிந்தோடும் காதலும்...
( mixed medium )

*அறுபடப்போகும் ஆடுகளுக்கான கடைசித் தீனி!*


 *அறுபடப்போகும் ஆடுகளுக்கான கடைசித் தீனி!*
*தேர்தல் நெருங்குகிறது; வெற்று கூச்சல்கள் விண்ணைத் தொடுகிறது. பழையத் தேர்தல் அறிக்கைகளின் தேதிகள் மாற்றப்பட்டு, அச்சு மாறாமல் வெளியிடப்படும். திமுக 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி' என்பதும், அதிமுக 'கச்சத்தீவை மீட்போம்' என்பதும், காங்கிரஸ் 'கல்விக் கடன் ரத்து' என்பதும் பாஜக 'இராமர் கோயில் கட்டுவோம்' என்பதும் பழைய பஞ்சாங்கம் தான் என்றாலும் புதிய அட்டைகளோடு வெளியிடப்படும்*.

*ஒரே மாதிரியான அறிக்கையை வார்த்தைகளில் சில மாற்றம் செய்து எல்லாக் கட்சிகளும் வெளியிடும். ஆனால் மக்களுக்கோ இறுதியில் மிஞ்சப்போவது ஏமாற்றம் மட்டுமே.😩😩😩😩😩😩😩இவர்கள் ஏமாறுவதுகூட சிக்கல் இல்லை, நாம் ஏமாந்துவிட்டோம் என்பதனை உணரும்🤮🤮🤮🤮🤮🤮அறிவுகூட இங்கு யாருக்குமே இல்லை என்பதுதான் பெரும் சோகம்.*
*தேர்தல் அறிக்கைகளில் இலவசப் பொருள்களைத் தருவோமென அறிவிப்பு தந்த காலம் மலையேறிப் போய்விட்டது.🍾🍾🍻💰💷💶💴 இப்பொழுது நிலத்திற்கு 6000..60000 ரூபாய் என்று npej ஏழைக் குடும்பத்திற்கு 2000 ...20000ரூபாய் என்று febqqbej
அறிவிப்பது என்பது மோசடியின் உச்சம். இவையெல்லாம் சமூக நலத் திட்டத்தில் வருமென வாய்கிழியப் பேச ஒரு பகுத்தறிவு பக்கோடா கூட்டம் இந்நேரம் கிளம்பி இருக்கும்.*
*இலவசங்கள் மக்களை மந்தைகளாக🐮🐷🐄🐄🦙🦙🐑🐐மாற்றுகிறது என்று நாம் சொன்னோம். அதற்கு திராவிட அறிவு ஜீவிகள், ஏழைகளும் பொருளாதாரச் சமநிலையை எட்டுவதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுவதாக கத்தினார்கள். இன்று பொருள்களுக்கு பதில் பணமே நேரடியாக வழங்குவதென அரசுகள் முடிவு செய்துவிட்டன.* 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
*பல கோடியில் ஒரு திட்டத்தை தீட்டி, அதில் கமிசன் பேரம் பேசி, தன்னோட டீலுக்கு யார் சம்மதிக்கின்றனரோ, அவர்களுக்கு டென்டர் வழங்கி, கமிசனைக் கணக்கச்சிதமாக வாங்கி, அந்தப் பணத்தையே வார்டு வார்டாக பிரித்துக் கொடுத்து, சட்டத்திட்டங்களுக்கு முரணாக வாக்கை விலைக் கொடுத்து வாங்கிய க.....தி, பு...... வி காலத்து அரசியல் இன்று இல்லை. நேரடியாக அரசு கருவூலத்தில் இருந்தே, சட்டத் திட்டங்களின் படியே, வாக்கிற்கு பணத்தைக் கொடுக்கும் பலே கில்லாடிகளான .எ _____மி,
தா===== மோ போன்றோர்களின் காலம் இது என்பது எப்பேற்பட்ட சமூகநல வளர்ச்சி (?) என்பதை அனைவரும் உணருங்கள்.*
*வாங்கியே பழகிய அடிமை மக்களுக்கு இந்த இலவசங்களுக்கு பின்னால் உள்ள அரசியல் ஒருபோதும் புரியப் போவதில்லை. பொருள்களை இலவசமாகக் கொடுத்தக் காலத்திலேயே, 'எனக்கு வேலை கொடு.. நானே உழைத்து எனக்கானப் பொருளை ஈட்டிக் கொள்கிறேன்'🤩🧐🧐🧐🧐🥶🥶🥶 என்று சொல்கின்ற துணிவு நம்மில் ஒருவருக்கும் வராமல் போனதன் விளைவாக, உயிர் ஆதாரமான குடிநீர் விற்பனைப் பொருளாய் மாறிப்போனது. இன்று பணத்தையே இலவசமாகத் தருகின்றனர் என்றால் அடுத்து மொத்த நாட்டையும் விற்பனைப் பண்டமாக மாற்றப் போகின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?*
*ஆனாலும், மக்களின் மனதில் உள்ளூர நப்பாசைகள் தட்டுப்படத் தொடங்கிவிட்டன. எப்பொழுது காசு வரும், முதல் வரிசையில் நின்று காசு வாங்கலாம் என்று காத்துக்கிடக்கின்றனர்.*
*ஒரு நாட்டின் உண்மையான மேம்பாடு என்பது அந்நாட்டின் மக்களும் அரசும் சுயசார்போடு வாழ்கின்றதா இல்லையா என்பதனைப் பொறுத்தே அமையும்.🤓🤓🤓🤓 இலவசங்கள் தருவதென்பது சுயசார்பு என்ற உணர்வையே அறுத்தெறியும் வேலை அன்றோ! இதனை இந்த நாட்டின் மக்களுக்கு யார் தான் கற்றுக் கொடுப்பது?* 🤔🤔🤔🤔🤔
*சுதந்திரத்தையே சுயராஜ்ஜியம் என்ற சொல்லாடலில் முழங்கிய ஒரு தேசத்தின் மொத்த மக்களும், கட்சிகள் அறிவிக்கும் பிச்சைகளில் சிறந்த பிச்சை எதுவென்று தேர்வு செய்து அவர்களுக்கு வாக்களித்து, அவர்கள் வழங்கும் பிச்சையை வரிசைக்கட்டி வாங்கிச் செல்வது அவமானம் அன்றோ!*
*முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பரமணியம்தான் சொன்னார், 'வெற்று வாக்குறுதிகளே சாதனைகளாக கொண்டாடுவது இந்திய ஜனநாயகத்திற்கு சாபக் கேடாய் மாறிப்போகும்' என்று. இதோ, இலட்சம் வங்கிக் கணக்கில் போடுவதாக வீராவசனம் பேசிய மோ____ அடுத்த தேர்தல்கால வெற்று அறிவிப்பு 6000 ரூபாய். 110 விதிகளின் நாயகி, வெற்று வாக்குறுதிகளின் தலைவி அம்மையார்
பு - வி ன் வாரிசு எ - மி அரசின் தேர்தல்கால சலுகை 2000 ரூபாய். இவர்கள் மக்களுக்கு போடப்போவதோ பட்டை நாமம் மட்டுமே.*
*இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு தோராயமாக 20 இலட்சம் கோடி. மத்திய மாநில அரசுகள் உலக வங்கியிடம் வாங்கியுள்ள கடன் 72 இலட்சம் கோடி. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இந்தியாவின் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது. நாடே அடமானத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும் இலவசங்களை இவர்கள் அள்ளி வீசுகிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம்தான் என்ன? சமூக மேம்பாடா? பொருளாதார சமநிலையா? மக்களின் மீது பற்றா? ஏழைகளின் மீது காதலா?*
*இல்லை... இல்லவே இல்லை...*
*நாளை காலை கசாப்புக் கடையில் வெட்டப்படும் ஆடாக இருந்தாலும், இன்று இரவு புல் போடுவது என்பது ஆட்டின் மீதான காதல் அல்ல... கடைசி தீனி... அவ்வளவுதான்...*
*வாக்காள பெருங்குடி ஆடுகளே...*
*பலி பீடத்தில் தலையைவைக்கும் முன் ஒரு முறை இலவசப் பிச்சைகளை வாங்கிவிட்டுச் செல்லுங்கள்...*
*வாக்கும் நாடும் விற்பனைக்கு வந்துவிட்டப்பின் இலவசங்கள் என்பவை மந்தைகளாய் மாறிய மனிதர்களுக்கு விருந்தாகத்தான் தெரியும்... ஆனால் அதுவே கடைசி தீனி என்பதை அந்த ஆடுகளால் உணரத்தான் முடியுமோ!*
- *பேராசிரியர்*

உள்ளம் தொடும் ஒரு கவிதை

உள்ளம் தொடும் ஒரு கவிதை
ஒரு போர் மறவனின் தொனியாக...
யுத்தபூமியில் நான் ஒருவேளை 
மரிக்கக் கூடும்.
அப்பொழுது என் சடலத்தை
எனதில்லத்திற்கு அனுப்பி வையுங்கள்...
நான் இதுவரை வென்றெடுத்த பதக்கங்களை
என் நெஞ்சு சுமக்க என்சீருடையில் அணிவியுங்கள்...
என் தாய் மண்ணிற்கான என் கடமையைச் செய்தேன் என என்னை தன்மணி வயிற்றில் பத்து மாதம் சுமந்தெடுத்த
என் ப்ரிய அன்னையிடம் சொல்லுங்கள்...
என் தந்தையின் தலை எப்போதும் கர்வத்துடன் நிமிர்ந்தேயிருக்கட்டும்... என்னால் எப்பொழுதும் அவருக்குப் பெருமை மட்டுமே மிச்சம் என நவின்றிடுங்கள்...
என் சகோதரனை நன்கு படிக்கச் சொன்னதாகச் சொல்லுங்கள்...
எனது இருசக்கர வாகனம் இனி அவனது உடைமையென்றும் உரைத்திடுங்கள்...
ஆதவனின் அஸ்தமனத்துக்குப் பின்னர்
மீளாஉறக்கத்தில் ஓய்வெடுக்கச் சென்றதாக
எனது தங்கையிடம் தெரிவித்து அவளை கவலை கொள்ளாதிருக்கச் சொல்லுங்கள்...
அப்படியே என் அன்னை பூமியிடத்தும்
அழவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளுங்கள்..
ஏனெனில் நான் இறப்பதற்கென்றே
பிறப்பெடுத்திட்ட ஒரு போர்வீரன்.
எல்லையில் நின்று எந்நேரமும்
தாய் மண் காக்க
வீர மரணத்தை ஒரு பதக்கமாக அணிய
தன் நெஞ்சை நிமிர்த்திக் காத்திருக்கும்
ஓர் இந்திய வீரனின்
ஆழ் மனக்குரல் இங்கே கவிதையாக...

... வரும்... ஆனா வராது...!

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அரசை மட்டுமே நம்பியிராமல் பயிலும் மாணவர்களிடமும் குறைந்தபட்சக் கட்டணம் வசூலித்தால் என்ன?
வரும் பணத்தைக் கொண்டு
பெற்றோர் எதிர் பார்க்கும் எல்லா வசதிகளையும் நமக்கு நாமே என்பது போல் செய்து கொள்ள முன்வரலாமே?
கல்வி ஏன் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும்.?
அடுத்தது தனியார் பள்ளி என்ற ஆப்ஷனை ஏன் பொது மக்களுக்கு அளிக்க வேண்டும் ? அது இருப்பதால் தானே இந்த ஒப்பீட்டுச் சனியனெல்லாம் .அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எல்லாம் அரசுப் பள்ளிகளில் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டெல்லாம்...?
எனவே தனியார் கல்வி நிலையங்களுக்கு ஒரு மூடு விழா நடத்துவோம்...
அனைத்து கல்வி நிலையங்களையும் அரசே நடத்தட்டும். அங்கு படிக்கும் அனைவருக்கும் கட்டணம் வசூலிக்கட்டும்... பிறகு பாருங்கள் நடக்கும் மாற்றத்தை ...
பாவம்.. ஏழைகளும் , நடுத்தர மக்களும் பணத்திற்கு எங்கே போவார்கள் என்று ? அவர்களது நிதிநிலைமை சரியில்லையே என்ெறல்லாம் கம்பு சுத்தக் கூடாது...
பொங்கக் கூடாது...
இப்போது தனியார் பள்ளிகளிலே பணம் கட்டிப் படிப்பவர்களுக்கு எங்கிருந்து வருகிறது நிதியாதாரம்?
மின்சாரக் கட்டணம் கட்டுகிறோம் இல்லையா?
தண்ணீர் கட்டணம் கட்டுகிறோம் இல்லையா? கேபிள் டி.வி அல்லது டிஷ் கட்டணம் செலுத்துகிறோம் இல்லையா?
கேஸ் சிலிண்டர் வாங்க பணம் செலவு செய்கிறார்களா இல்லையா?
ஒவ்வொரு ஏழை வீட்டில் கூட ரீசார்ஜ் செய்கிறார்கள் இல்லையா?
டூவீலர் வைத்துக் கொண்டு எரிபொருள் நிரப்பக் கட்டணம்
செலுத்துகிறார்கள் இல்லையா?
ஒரு புது படம் ரிலீஸ் ஆச்சுன்னா தலைவனுக்கு
கட் அவுட் வச்சு பேனர் வச்சு பால் அபிஷேகம் பண்றது யாரு தெரியுமா.? மேல்தட்டு வர்க்த்தினர் அல்லது நடுத்தர வர்க்கத்தினர் கூட இல்லை. அடித்தட்டு வர்க்க இளைஞர் மற்றும் மாணவ சமுதாயத்தினர்தான்.முதல் நாள் முதல் ஷோ என்று குறைந்தது 150 ல் இருந்து அதிகம் 750 வரை செலவு செய்ய பணம் எங்கிருந்து வருகிறது.?
ஊருக்கு மூன்று கடை இருந்தும் அத்தனையிலும் முண்டியடித்து சரக்கு வாங்க ஒரு கும்பல் தினமும் அலைமோதுகிறதே... அதற்கு ஏது அவர்களுக்கு நிதி?
இதற்கு எல்லாம் செலவழிக்க முடிகிறதல்லவா
ஒரு சாமான்யனால்?
ஒரு ஏழையால் ?
அப்படியானால் அவன் தன் மகனுடைய அல்லது மகளுடைய அடிப்படைத் தேவையான கல்விக்கு ஏன் குறைந்த பட்சக் கட்டணத்தை செலுத்தக் கூடாது?
கல்வி இலவசமாக இருப்பதால் தான் அதன் அருமையாருக்கும் தெரியவில்லை. முதலில் தனியார் கல்வி நிறுவனங்களை அரசு இழுத்து மூடட்டும். அத்தனை கல்வி நிறுவனங்களுமே அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரட்டும்.. படிக்கும் அத்தனை கோடி மக்களிடமும் நாம் கே வா சே ஒரு சிறு தொகையை வருடம் ஒரு முறையோ அல்லது மாதாமாதமோ தயவு தாட்சணியம் பார்க்காது TNEB காரன் fuse புடுங்குவது போல் Fees Collect பண்ணட்டும். வருகிற தொகை நினைத்து பார்க்க முடியாத அளவு மலைப்பூட்டும் .அதனை துளி கூட ஊழல் செய்யாது அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளுக்கும் , கல்வி வளர்ச்சிக்கும் மட்டுமே செலவு செய்யட்டும்... எந்த அரசுக்காவது , அல்லது எந்த கட்சிக்காவது துணிவு வருமா?
நிச்சயம் செய்ய மாட்டார்கள்..
அதை விட்டு விட்டு அரசு ஊழியர் பிள்ளையாம்... ஆசிரியர்கள் பிள்ளையாம்... அவர்களுக்கு மட்டும் அரசுப் பள்ளிக் கல்வியாம்....யோசனை சொல்கிறார்கள் அதிபுத்திசாலிகள்...
எனது திட்டபடி செய்யட்டும்..
ஆளுனர் , முதல்வர் , துணை முதல்வர் , அமைச்சர் பெருமக்கள் , நீதியரசர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் , MLA ,MC வீட்டுப் பிள்ளைகள் , சீமான்கள் வீட்டுப் பிள்ளைகள் , சூர்யா , அஜீத் , விஜய் வீட்டுப் பிள்ளைகள் , அம்பானி ,அதானி வீட்டுப் பிள்ளைகள்.. சரவணா ஸ்டோர் வீட்டுப் பிள்ளைகள்... C K ரங்கநாதன் , ஆச்சி மசலா வீட்டுப் பிள்ளைகள் .....
அப்புறம் இந்த பத்திரிகையாளர் வீட்டுப் பிள்ளைகள் , பதிப்பகத்தார் வீட்டுப் பிள்ளைகள்..
....
....
உங்கள் வீட்டுப் பிள்ளைகள்...
எங்கள் வீட்டுப் பிள்ளைகள்... சகல தொழிலாளிகள் வீட்டுப்
பிள்ளைகள் எல்லாம் ...
...எல்லாம் .....
அரசுப் பள்ளிகளில் மட்டுமே ஒன்றாகப் படிக்கும்
நன்றாகப் படிக்கும் காலம் வரும்...
....வருமா?
... வரும்... ஆனா வராது...!
பி.கு. நமது நாட்டின் எந்த V I P யும் தன் மகனை அல்லது மகளை நம் நாட்டைத் தவிர பிற அன்னிய நாடுகளில் கல்வி பயில வைக்கக் கூடாது என்ற சட்டம் இயற்ற வேண்டும். மனித உரிமை , கல்வி உரிமை , அந்தந்த பெற்றோரின் தனிப்பட்ட உரிமை என்றெல்லாம் பொங்கக் கூடாது.
சட்டத்தின் முன் ...
இறையாண்மையின்படி...
அனைவரும் சமம்
அல்லவா?

பிரபல ஓவியர் சேனாதிபதி அவர்கள் உடனான சந்திப்பு - பகுதி .2


ஓவியர் சேனாதிபதி ...
தமிழக ஓவிய ஆளுமைகளுள் குறிப்பிடத் தக்கவர்.
ஓவியர்கள் ராய் செளத்ரி , பணிக்கர் , ஆதிமூலம் , சந்துரு , வீரசந்தானம் உள்ளிட்டோரை அறிந்திருந்தால்
நிச்சயம் இவரைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள்...
ஒரு வேளை இல்லையெனில்...
இதோ தெரிந்து கொள்வோம்...
சந்திப்போம்...
வாருங்கள்.
.
சேனாதிபதி ஐயா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிறந்தது 1939 ஆம் வருடம்.
தனது ஓவியப் படிப்பை சென்னை அரசுக் கவின் கலைக் கல்லூரியில் 1966ல் முடித்தவர். கே.சி.எஸ் பணிக்கர் , சந்தான ராஜ் ஆகியோரே இவரது குருமார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரம் வரைவதற்கென்று செலவிடுகிறார். 90 வயதென்றால் நம்ப முடியா அளவிற்கு சுறுசுறுப்பும் ஆளுமையும் கொண்டு விளங்குகிறார். அதனை நேரிலேயே கண்டு உணர்ந்தேன்.
பொதுவாகவே கலைஞர்கள் தமக்கென ஒரு பாணியை வைத்திருப்பர்.சேனாதிபதி ஐயாவின் ஓவியங்கள் கூட தனித்தன்மை வாய்ந்தவைதான். தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டுள்ளார்..
கைமுறைக் காகிதத்தை (Hand Made Paper) நீரில் நனைத்து ஈரம் காயும் முன்னரே அதில் வரைவது , கருப்பு வர்ணம் கொண்டு வரைந்த பின்னர் அதன் மேல் வர்ணங்கள் சேர்ப்பது .. இவரது ஓவியங்கள் பிரகாசமான வண்ணங்களால் இலங்குகின்றன.
இவாது ஓவியங்களைப் பொறுத்தவரை முக்கோணங்களும் ,கரங்களும் முழுதும் வியாபித்திருப்பதாகவே எண்ணுகிறேன். அதே போல் இவரது ஓவியங்கள் அனைத்துமே மனித நடத்தைகளை பிரதிபலிப்பதான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன.
ஓவியங்கள் தவிர மெட்டல் வொர்க்கும் இவரது சிறப்புப் படைப்புகள் . துவக்கத்தில் உலோகச் சிற்பங்களை செய்திருந்தாலும் இப்போது செய்வதில்லை.மெட்டல் ஒர்க் , கேன்வாஸ் , காகிதம் என எதுவாக இருப்பினும் அவை அனைத்தினும் இவரது பாணி மட்டும் மாறுவதில்லை.
லண்டன் , பிரான்சு ,ஹாலந்து , பெல்ஜியம் , மேற்கு ஜெர்மனி , சீனா , மலேசியா , சிங்கப்பூர் , ஐக்கிய அமெரிக்க நாடுகள் , ஸ்ரீலங்கா , துபாய் . ,அபுதாபி என இவர் ஓவியக்கலைக்காக பயணப்பட்ட நாடுகளின் பட்டியல் நீளுகிறது.
1978 தொடங்கி 2019 வரை 17 முறை தனி நபர் ஓவியக் கண்காட்சியை (one Man Shoய)
நடத்தியுள்ளார்
1982 முதல் 2013 வரை 21 சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் பங்குபெற்றுள்ளார்.
1995 முதல் 2012 வரை அனைத்திந்திய ஓவிய முகாம்களிலும் , தமிழக அளவிலான முகாம்களிலும் , மண்டல அளவிலான முகாம்களிலும் என 7 முறை பங்கேற்றுள்ளார்.
1965ல் இருந்து சென்னை பிராகரஸ்ஸிவ் பெயின்டர்ஸ் அசோசியேஷனின் உறுப்பினர்
1989ல் இருந்து சென்னை லலித்கலா அகாடமியின் உறுப்பினர்.
1984 முதல் 1988 வரை மத்திய லலித் கலா அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர்.
1986. ல் இருந்து சோழ மண்டல ஓவியர்கள் கிராமத்தின் தலைவர் .
1987 , 1988 ,1995 ஆகிய வருடங்களில் சென்னை லலித் கலா அகாடமியின் நடுவர் குழு உறுப்பினர் (member of Jury)
என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர் .
1981. ல் சென்னை லலித் கலா அகாடமி வழங்கிய விருது .
1984 , 86 ல் புது தில்லியின் , மத்திய அரசு கலாச்சாரத்துறை வழங்கிய
சீனியர் ஃபெல்லோஷிப் விருது .
2008ல் தமிழக அரசு வழங்கியுள்ள கலைச் செம்மல் விருது ஆகிய விருதுகள் இவரை அடைந்தமையால் பெருமை பெற்றுள்ளன.
1976 முதல் 2014 வரையிலான காலகட்டங்களில் நாடெங்கும் நடைபெற்ற 60க்கும் மேற்பட்ட தெரிவு செய்யப்பட்ட கண்காட்சிகளில்
(Selected Exhibitiors )பங்கேற்றுள்ளார்.
1965 முதல் 2018 வரை 12 முறை குழுக்கண்காட்சிகளில் ( Group Show ) பங்கேற்றுள்ளார்.
இவரது பல ஓவியங்கள் சர்வதேச அளவிலும்
இந்திய அளவிலும் பல அரசு நிறுவனங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் ,தனியார் நிறுவனங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன என்பது தமிழகம் பெருமைப்படத்தக்க ஒன்று.
இவர் மட்டுமல்ல இவரது மகனும் , மகளும் கூட எஞ்சினியரிங் கல்வித் தகுதியைப் பெற்றிருப்பினும் கூட , தற்போது முழு நேர ஓவியர்களாகவே மாறிவிட்டனர் , தமது தந்தையின் பாதையைப் பின்பற்றி.. தனது ஓவியங்களைக் காட்டிய பின்பு வரவேற்பறையை ஒட்டியுள்ள ஒரு சிறு அறையில் வைக்கப்பட்டிருந்த பல ஓவியங்களைக் காட்டி இது என் மகன் வரைந்தது. இது என் மகள் வரைந்தது. என ஆர்வத்துடனும் , பெருமிதத்துடனும் காண்பித்ததில் தெரிந்தது .. தனது வாரிசுகளும் கூட தன் பாதையில் தொடர்வதான கலையார்வமும் கலை கர்வமும்..
அவரது மகன் மகள் இருவரது ஓவியங்கள் கூட மிக நேர்த்தியாய்.. தனி பாணியாய்.. வெகு சிறப்பாய்...
அவற்றுள் சில பேக் செய்யப்பட்டிருந்தன ..
ஒன்று ஏதோ கண்காட்சிக்குச் சென்று வந்திருக்க வேண்டும் அல்லது கண்காட்சிக்கு தயாராகிக் கொண்டு இருக்க வேண்டும் என மனதுள் நினைத்துக் கொண்டேன்.
தன் வாழ்நாள் முழுக்க முழுக்க ஓவியங்களோடு மட்டுமே பயணப் பட்டுக் கொண்டு இருக்கின்ற சேனாதிபதி ஐயா போன்றோர் வாழும் காலத்தில் வாழ்கின்ற பெருமையொன்றைத் தவிர நமக்கு வேறு என்ன வேண்டும்.
வளரும் ஓவியர்கள் ஒரு முறை சோழ மண்டல ஓவியகிராமம் சென்று ஓவியங்களைக் காண்பதோடு மட்டும் அல்லாமல் ஓவிய மேதை சேனாதிபதி ஐயாவையும் ஒரு முறை நேரில் சந்தித்து உரையாடி வருவது அவர்களது வாழ்நாள் முழுமைக்குமான ஓவிய ஆர்வத்திற்கான சார்ஜ் ஏற்றிக் கொள்வதற்கு ஈடாகும். அப்படி ஒரு உத்வேகம் பிறக்கும் நமக்கு. எனக்கும் பிறந்தது.
எனது சந்திப்பின் நினைவாக நான் இயற்றிய மகாபாரதம் (கவிதை நூல்) புத்தகத்தை அவருக்கு அன்புப் பரிசாக அளிக்க அவரும் பதிலுக்கு தனது படைப்புகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தார். இதைவிட வேறென்ன வேண்டும்.
வாசல் வரை வந்து எங்களுக்கு புன்முறுவலோடு விடையளித்து மகிழ்கிறார். நானும் விடை பெற்று இறங்கி கேட் தாண்டி வீதியில் சென்று மீண்டும் அவரைப் பார்க்க எண்ணி திரும்பிப் பார்க்கிறேன். அவர் தனது வீட்டின் உள்ளே ஒவியமே மனித உருக்கொண்டு செல்வதைப் போலச் செல்கிறார் ... மீண்டும் தன் தூரிகைப் பணியினைத் தொடர...
தூரிகையின் பார்வை தொடரும்...

பிரபல ஓவியர் சேனாதிபதி அவர்கள் உடனான சந்திப்பு - பகுதி .1

பிரபல ஓவியர் சேனாதிபதி அவர்கள் உடனான சந்திப்பு - பகுதி .1
ஓவியர் சேனாதிபதி ...
தமிழக ஓவிய ஆளுமைகளுள் குறிப்பிடத் தக்கவர்.
ஓவியர்கள் ராய் செளத்ரி , பணிக்கர் , ஆதிமூலம் , சந்துரு , வீரசந்தானம் உள்ளிட்டோரை அறிந்திருந்தால்
நிச்சயம் இவரைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள்...
ஒரு வேளை இல்லையெனில்...
இதோ தெரிந்து கொள்வோம்...
சந்திப்போம்...
வாருங்கள்...
10.03.2019 , ஞாயிறு அன்று காலை 10.00 மணியளவில் பெசன்ட் நகர் , ஸ்பேசஸ் வளாகத்தில் இருந்து நானும், கோவை ஓவியர் மணிராஜ் மற்றும் ஓவிய மாணவர்
சிரஞ்சீவி என மூவரும் ஒரு OLA Cab book செய்து கொண்டு ஈஞ்சம்பாக்கம் சாலையில் உள்ள சோழ மண்டல ஓவியர்கள் கிராமத்திற்கு சென்று சேர்ந்தோம். இந்தியாவில் உள்ள சிறந்த கேலரிகளில் ஒன்று அங்கு உள்ளது.
இந்த சோழ மண்டல ஓவியர்கள் கிராமத்தைப் பற்றி எனது ஓவிய ஆசிரியர் பயிற்சி நேரத்தில்தான் முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். அதன் பின் பல முறை பல்வேறு ஓவியர்களின் வாயிலும் இச்சொல் வெளிவருவதைப் பார்த்திருக்கிறேன். பல புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். நேரில் சென்று பார்க்க பல நாட்களாக எண்ணம் உண்டு. தட்சணசித்ரா வுக்குக் கூட சில முறைகள் சென்றிருப்பினும் , ஏனோ இதுவரை இங்கு செல்லும் வாய்ப்பு இதுவரை கிட்டாமல் இருந்தது. இன்று ஒருவழியாக சிரஞ்சீவி மூலம் நிறைவேறியிருக்கிறது.
மிகப் பெரிய விஸ்தீரமான பரப்பில் ஆங்காங்கு நவீன சிற்ப வடிவங்கள் நம்மை வரவேற்க உள்ளே நுழைந்தோம். நுழைவுக்கட்டணமாக தலா ரூ 30 வாங்குகிறார்கள். அதையும் செலுத்துவதற்கு எங்களை சிரஞ்சீவி அனுமதிக்கவில்லை.
மிகப் பிரம்மாண்டமான மூன்று தளங்கள் கொண்ட கேலரி , ஹைசீலிங் செய்யப்பட்டு மிகப் பெரிய ஓவியங்கள் , சிறந்த ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் , உலோகச் சிற்ப வடிவங்கள் , கிரானைட் சிற்ப வடிவங்கள் என எல்லாமே பிரம்மாண்டமான வடிவத்தில் .மிகப் பெரிய கேலரிதான். நன்கு ஒளியூட்டப்பட்ட ஓவியங்கள். அத்தனையும் நவீன பாணி ஓவியங்களே.ஒரு சில ஓவியங்கள் தரைத்தளத்தையும் முதல் தளத்தையும் ஆக்கிரமித்தபடி மிகப்பெரிதாய். மூன்று நான்கு ஷெல்ப்புகளில் ஓவியம் தொடர்பான பல நூல்கள் அடுக்கப்பட்டிருந்தன. அவை ரெஃபரன்சுக்காக மட்டுமே. சில நூல்கள் மட்டும் விற்பனைக்கும் .
உள்ளே படம் எடுக்க அனுமதியில்லை. வெளியே நின்று ஒரு படம் எடுத்துக் கொண்டோம். உள்ளே நுழைவதற்கு முன்பே இந்த ஓவியகிராமத்தின் தற்போதைய தலைவர் பிரபல ஓவியர் திரு சேனாதிபதி ஐயா அவர்களை சந்திக்க அனுமதி வேண்டி .ரிசப்ஷனிஸ்ட் இடம் எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்து அனுமதி கேட்டிருந்தேன். அனுமதியும் கிடைத்தது. அனைத்து ஓவியங்களையும் பார்த்து இரசித்த பிறகு சேனாதிபதி ஐயாவைப் பார்க்கக் கிளம்பினோம். அங்கு பணிபுரியும் இளம்பெண் ஒருவர் எங்களை அவரது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். பசுமையான ,வண்ணமயமான மலர்கள் பூத்திருக்கும் மரங்களையும் , செடிகளையும் கொண்ட அழகான ஒரு தெரு அது. இன்னும் அது போல் பல தெருக்கள் அங்கு இருக்க வேண்டும். எல்லாமே ஓவியர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி, வெளியிலிருந்து அனுமதியின்றி யாரும் நுழைய முடியாது என நினைக்கிறேன். மனித நடமாட்டம் இன்றி வெயிலுடன் பெரும் அமைதியும் வியாபித்து இருந்தது வீதியினை .ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்தப் பெண் முன் கேட்டைத் திறந்து எங்களை அழைத்துச் சென்று வாசலில் காத்திருக்கக் சொல்லி அவர் மட்டும் உள்ளே சென்றார். அந்த வீட்டின் முன்பகுதியிலும் ஏகப்பட்ட மலர்ச்செடிகள் , மரங்கள். அதில் ஒரு பப்பாளி மரம் பல கிளைகள் விட்டு எல்லா கிளைகளிலும் காய்கள் காத்திருந்தன. அங்கிருந்த கதவுப்பகுதிகளில் ஓவியக் கண்காட்சிகள் குறித்த நோட்டீஸ்களும் வைக்கப்பட்டிருந்தன.அவற்றையெல்லாம் இரசித்தபடி நாங்கள் காத்திருந்தோம். மூன்று நிமிட இடைவெளிக்குள் வாசலில் மீண்டும் நிழலாடியது. அந்தப் பெண்தான்.ஐயா உங்களை வர சொன்னார் என்றார். நாங்கள் நுழைய எத்தனிக்கையில் வாசலில் ஓவியர் ஐயா வாருங்கள் என்று முகமன் கூறி வரவேற்று எங்களை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.
வீடு என்றா கூறினேன். தவறு. ஆர்ட் கேலரியல்லவா அது... எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். மூவரையும் நாற்காலிகளில் அமரச் சொல்லி எதிரே தனது இருக்கையில் அமர்ந்தார். எங்களைப்பற்றி
கேட்டு அறிந்து கொண்டார். என்னைப் பற்றியும், எனது ஓவிய ஆர்வம் குறித்தும் , ஸ்வாசிகா இயக்கம் குறித்தும் , 24 வருடங்களாக நாங்கள் அளித்து வரும் இலவச ஓவியப் பயிற்சி குறித்தும் , பண்ருட்டி ,திருவதிகைப் பெருமைகள் குறித்தும் கூறக் கூற அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். அவர் கும்பகோணம் போன்ற ஊர்களுக்கு வருகை தரும்போது அந்த வழியாக சென்றிருப்பதாகக் கூறினார். ஒரு முறை வடலூர் சத்திய ஞான சபைக்குக் கூட வந்திருந்தாலும் இதுவரை பண்ணுருட்டி வந்ததில்லை எனக் கூறினார். அவரை ஸ்வாசிகாவின் ஓவியப் பயிற்சியின் 25 ஆம் ஆண்டு நிகழ்வுக்கு அழைத்தேன். ஆனால் முதுமையின் காரணமாக வர இயலாது என சிரித்தபடி மறுத்தார்.
அந்த வீட்டின் ஒவ்வொரு அறைகளிலும் ஓவியங்களே வியாபித்திருக்கின்றன. அனைத்தும் நவீன ஓவியங்கள்தான்.
அவரைச் சுற்றிலும் ஓவியங்களே.
மேஜை மீதும் அங்கிருந்த டீபாயின் மீதும் ஓவியம் சார்ந்த நூல்களே. பிரித்துப் பார்க்க மனம் பரபரத்தாலும் , அடக்கிக் கொண்டேன். அவரது இருக்கையின் வலது புறம் அவர் பெற்ற விருதுகளும் , சிறப்புகளும் மேஜையை அலங்கரித்தபடி இருந்தன.
அந்த ஹாலின் மற்றுமொரு மூலையில் அவர் அமர்ந்து ஓவியம் தீட்டும் பகுதி. ஒரு பெரிய விஸ்தீரமான மேசையின் மேல் வண்ண உபகரணங்கள் ... அருகில் சாய்த்து வைக்கப்பட்ட ஈசல் .. நிறைய சட்டம் இடப்பட்ட ஓவியங்கள் ... அருகில் இருந்த மற்றொரு அறையிலும் ஓவியங்கள்... ஓவியங்கள்..
ஓவியங்கள்... அனைத்தையும் அவரது அனுமதியுடன் படம் எடுத்துக் கொண்டோம்.
தூரிகையின் பார்வை தொடரும்...

ஆளுநர் விருது பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு விழா

                ஆளுநர் விருது பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு விழா


       26 -03-2019 , செவ்வாய்க்கிழமை அன்று பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆளுநர் விருது பெற்ற சாரணர்களுக்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் பாராட்டு விழா நடைபெற்றது .பண்ணுருட்டி  மேல்நிலைப் பள்ளியில் காந்திஜி  சாரணர் படை சிறப்பாக செயல்பட்டு
வருகிறது .இப்பள்ளியின் சாரணர்கள் நான்குபேர் இக்கல்வியாண்டின் துவக்கத்தில் சென்னை ராஜபவனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களது கரங்களால் ராஜ்யபுரஸ்கார் விருதை 14-06-2018 அன்று பெற்று வந்தனர் .அதற்கான பாராட்டு விழாவை பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு பூவராகமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார் .அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவரும் சக்தி ஐ டீ ஐ தாளாளருமான  உயர்திரு R .சந்திரசேகர் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கினார் .பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொருளர் உயர்திரு சக்திவேல் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார் .பண்னருட்டியின் பிரமுகரும் கல்வி வள்ளலுமான K N C .P . மோகனகிருஷ்ணன் அவர்கள் காந்தி அண்ணல் சிலைக்கு மாலை அணிவித்து தொடர்ந்து சாரணர் செலயல்பாடுகள் பற்றிய விளக்க புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார் .பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத்தலைவரும் ஜோதி கலர் லேப் உரிமையாளருமான உயர்திரு கோ .காமராஜ் அவர்கள் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார் .அரசு மகளிர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொருளர் உயர்திரு .C .வானவில் ராஜேந்திரன் அவர்கள் விவேகானந்தர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.பள்ளியின் N S S அலுவலர்
உயர்திரு S .மோகன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் .கடலூர் மாவட்டத்தின் சாரணச்  செயலர் உயர்திரு ஜே .செல்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு சாரண இயக்கத்தின் புதிய பெயர் பலகையை திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார் .தொடர்ந்து சாரணர்களுக்கு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் சால்வை போர்த்தி மெடல் அணிவித்து சான்றிதழ்களையும் பாராட்டுக் கேடயங்களையும் வழங்கி கௌரவித்தனர் உடன் அந்த மாணவர்களின் பெற்றோரும் மேடைக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் தனி நபர் ஓவியக் கண்காட்சி மற்றும் ஒளிப் படக்கண்காட்சி அமைத்திருந்த சாதனை மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன .பின்னர் விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் ,சாரணியர் பிரிவு மாவட்ட அமைப்பு ஆணையர் திருமதி உஷாராணி அவர்கள் ,ஒய்வு பெற்ற  N C C அலுவலர் உயர்திரு ஜே. பாலச்சந்தர் அவர்கள்.துணை தலைமை ஆசிரியர்கள் திருமதி அமலி ,திருமதி ஹேமலதா அவர்கள்,பள்ளியின் ஆசிரியர் சங்க செயலர் உயர்திரு .லட்சுமி காந்தன் ,  பள்ளியின் முதுகலை தாவரவியல் ஆசிரியர் உயர்திரு எபனேசர் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர் உயர்திரு .மரிய ஆண்டனி அவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர் .பட்டதாரி ஆசிரியர் திருமதி பிரேமலதா மற்றும் N C C அலுவலர் .கவிஞர் ராஜா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர் .சாரண ஆசிரியரும் கடலூர் மாவட்டத்தின் சாரணர் பிரிவு அமைப்பு ஆணையருமான உயர்திரு A .முத்துக்குமரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார் .பட்டதாரி ஆசிரியர் உயர்திரு ரத்தினப்பிரகாஷ் அவர்களும் சாரணப் படைத்தலைவன் செல்வன் ஹரிநாத்தும் இணைந்து மேடை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார் .விழா ஏற்பாடுகளை இப்பள்ளியின் சாரண ஆசிரியர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் .கடலூர் மாவட்டத்திலேயே சாரண அமைப்பு மிகவும் சிறப்பாகவும் உயிர்ப்புடனும் செயல்படும் பண்ணுருட்டி அரசுப்பள்ளியை விழாவிற்கு வந்திருந்த மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் .பாராட்டினர்.