Wednesday 27 March 2019

பிரபல ஓவியர் சேனாதிபதி அவர்கள் உடனான சந்திப்பு - பகுதி .2


ஓவியர் சேனாதிபதி ...
தமிழக ஓவிய ஆளுமைகளுள் குறிப்பிடத் தக்கவர்.
ஓவியர்கள் ராய் செளத்ரி , பணிக்கர் , ஆதிமூலம் , சந்துரு , வீரசந்தானம் உள்ளிட்டோரை அறிந்திருந்தால்
நிச்சயம் இவரைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள்...
ஒரு வேளை இல்லையெனில்...
இதோ தெரிந்து கொள்வோம்...
சந்திப்போம்...
வாருங்கள்.
.
சேனாதிபதி ஐயா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிறந்தது 1939 ஆம் வருடம்.
தனது ஓவியப் படிப்பை சென்னை அரசுக் கவின் கலைக் கல்லூரியில் 1966ல் முடித்தவர். கே.சி.எஸ் பணிக்கர் , சந்தான ராஜ் ஆகியோரே இவரது குருமார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரம் வரைவதற்கென்று செலவிடுகிறார். 90 வயதென்றால் நம்ப முடியா அளவிற்கு சுறுசுறுப்பும் ஆளுமையும் கொண்டு விளங்குகிறார். அதனை நேரிலேயே கண்டு உணர்ந்தேன்.
பொதுவாகவே கலைஞர்கள் தமக்கென ஒரு பாணியை வைத்திருப்பர்.சேனாதிபதி ஐயாவின் ஓவியங்கள் கூட தனித்தன்மை வாய்ந்தவைதான். தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டுள்ளார்..
கைமுறைக் காகிதத்தை (Hand Made Paper) நீரில் நனைத்து ஈரம் காயும் முன்னரே அதில் வரைவது , கருப்பு வர்ணம் கொண்டு வரைந்த பின்னர் அதன் மேல் வர்ணங்கள் சேர்ப்பது .. இவரது ஓவியங்கள் பிரகாசமான வண்ணங்களால் இலங்குகின்றன.
இவாது ஓவியங்களைப் பொறுத்தவரை முக்கோணங்களும் ,கரங்களும் முழுதும் வியாபித்திருப்பதாகவே எண்ணுகிறேன். அதே போல் இவரது ஓவியங்கள் அனைத்துமே மனித நடத்தைகளை பிரதிபலிப்பதான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன.
ஓவியங்கள் தவிர மெட்டல் வொர்க்கும் இவரது சிறப்புப் படைப்புகள் . துவக்கத்தில் உலோகச் சிற்பங்களை செய்திருந்தாலும் இப்போது செய்வதில்லை.மெட்டல் ஒர்க் , கேன்வாஸ் , காகிதம் என எதுவாக இருப்பினும் அவை அனைத்தினும் இவரது பாணி மட்டும் மாறுவதில்லை.
லண்டன் , பிரான்சு ,ஹாலந்து , பெல்ஜியம் , மேற்கு ஜெர்மனி , சீனா , மலேசியா , சிங்கப்பூர் , ஐக்கிய அமெரிக்க நாடுகள் , ஸ்ரீலங்கா , துபாய் . ,அபுதாபி என இவர் ஓவியக்கலைக்காக பயணப்பட்ட நாடுகளின் பட்டியல் நீளுகிறது.
1978 தொடங்கி 2019 வரை 17 முறை தனி நபர் ஓவியக் கண்காட்சியை (one Man Shoய)
நடத்தியுள்ளார்
1982 முதல் 2013 வரை 21 சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் பங்குபெற்றுள்ளார்.
1995 முதல் 2012 வரை அனைத்திந்திய ஓவிய முகாம்களிலும் , தமிழக அளவிலான முகாம்களிலும் , மண்டல அளவிலான முகாம்களிலும் என 7 முறை பங்கேற்றுள்ளார்.
1965ல் இருந்து சென்னை பிராகரஸ்ஸிவ் பெயின்டர்ஸ் அசோசியேஷனின் உறுப்பினர்
1989ல் இருந்து சென்னை லலித்கலா அகாடமியின் உறுப்பினர்.
1984 முதல் 1988 வரை மத்திய லலித் கலா அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர்.
1986. ல் இருந்து சோழ மண்டல ஓவியர்கள் கிராமத்தின் தலைவர் .
1987 , 1988 ,1995 ஆகிய வருடங்களில் சென்னை லலித் கலா அகாடமியின் நடுவர் குழு உறுப்பினர் (member of Jury)
என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர் .
1981. ல் சென்னை லலித் கலா அகாடமி வழங்கிய விருது .
1984 , 86 ல் புது தில்லியின் , மத்திய அரசு கலாச்சாரத்துறை வழங்கிய
சீனியர் ஃபெல்லோஷிப் விருது .
2008ல் தமிழக அரசு வழங்கியுள்ள கலைச் செம்மல் விருது ஆகிய விருதுகள் இவரை அடைந்தமையால் பெருமை பெற்றுள்ளன.
1976 முதல் 2014 வரையிலான காலகட்டங்களில் நாடெங்கும் நடைபெற்ற 60க்கும் மேற்பட்ட தெரிவு செய்யப்பட்ட கண்காட்சிகளில்
(Selected Exhibitiors )பங்கேற்றுள்ளார்.
1965 முதல் 2018 வரை 12 முறை குழுக்கண்காட்சிகளில் ( Group Show ) பங்கேற்றுள்ளார்.
இவரது பல ஓவியங்கள் சர்வதேச அளவிலும்
இந்திய அளவிலும் பல அரசு நிறுவனங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் ,தனியார் நிறுவனங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன என்பது தமிழகம் பெருமைப்படத்தக்க ஒன்று.
இவர் மட்டுமல்ல இவரது மகனும் , மகளும் கூட எஞ்சினியரிங் கல்வித் தகுதியைப் பெற்றிருப்பினும் கூட , தற்போது முழு நேர ஓவியர்களாகவே மாறிவிட்டனர் , தமது தந்தையின் பாதையைப் பின்பற்றி.. தனது ஓவியங்களைக் காட்டிய பின்பு வரவேற்பறையை ஒட்டியுள்ள ஒரு சிறு அறையில் வைக்கப்பட்டிருந்த பல ஓவியங்களைக் காட்டி இது என் மகன் வரைந்தது. இது என் மகள் வரைந்தது. என ஆர்வத்துடனும் , பெருமிதத்துடனும் காண்பித்ததில் தெரிந்தது .. தனது வாரிசுகளும் கூட தன் பாதையில் தொடர்வதான கலையார்வமும் கலை கர்வமும்..
அவரது மகன் மகள் இருவரது ஓவியங்கள் கூட மிக நேர்த்தியாய்.. தனி பாணியாய்.. வெகு சிறப்பாய்...
அவற்றுள் சில பேக் செய்யப்பட்டிருந்தன ..
ஒன்று ஏதோ கண்காட்சிக்குச் சென்று வந்திருக்க வேண்டும் அல்லது கண்காட்சிக்கு தயாராகிக் கொண்டு இருக்க வேண்டும் என மனதுள் நினைத்துக் கொண்டேன்.
தன் வாழ்நாள் முழுக்க முழுக்க ஓவியங்களோடு மட்டுமே பயணப் பட்டுக் கொண்டு இருக்கின்ற சேனாதிபதி ஐயா போன்றோர் வாழும் காலத்தில் வாழ்கின்ற பெருமையொன்றைத் தவிர நமக்கு வேறு என்ன வேண்டும்.
வளரும் ஓவியர்கள் ஒரு முறை சோழ மண்டல ஓவியகிராமம் சென்று ஓவியங்களைக் காண்பதோடு மட்டும் அல்லாமல் ஓவிய மேதை சேனாதிபதி ஐயாவையும் ஒரு முறை நேரில் சந்தித்து உரையாடி வருவது அவர்களது வாழ்நாள் முழுமைக்குமான ஓவிய ஆர்வத்திற்கான சார்ஜ் ஏற்றிக் கொள்வதற்கு ஈடாகும். அப்படி ஒரு உத்வேகம் பிறக்கும் நமக்கு. எனக்கும் பிறந்தது.
எனது சந்திப்பின் நினைவாக நான் இயற்றிய மகாபாரதம் (கவிதை நூல்) புத்தகத்தை அவருக்கு அன்புப் பரிசாக அளிக்க அவரும் பதிலுக்கு தனது படைப்புகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தார். இதைவிட வேறென்ன வேண்டும்.
வாசல் வரை வந்து எங்களுக்கு புன்முறுவலோடு விடையளித்து மகிழ்கிறார். நானும் விடை பெற்று இறங்கி கேட் தாண்டி வீதியில் சென்று மீண்டும் அவரைப் பார்க்க எண்ணி திரும்பிப் பார்க்கிறேன். அவர் தனது வீட்டின் உள்ளே ஒவியமே மனித உருக்கொண்டு செல்வதைப் போலச் செல்கிறார் ... மீண்டும் தன் தூரிகைப் பணியினைத் தொடர...
தூரிகையின் பார்வை தொடரும்...

No comments:

Post a Comment