Wednesday 27 March 2019

பிரபல ஓவியர் சேனாதிபதி அவர்கள் உடனான சந்திப்பு - பகுதி .1

பிரபல ஓவியர் சேனாதிபதி அவர்கள் உடனான சந்திப்பு - பகுதி .1
ஓவியர் சேனாதிபதி ...
தமிழக ஓவிய ஆளுமைகளுள் குறிப்பிடத் தக்கவர்.
ஓவியர்கள் ராய் செளத்ரி , பணிக்கர் , ஆதிமூலம் , சந்துரு , வீரசந்தானம் உள்ளிட்டோரை அறிந்திருந்தால்
நிச்சயம் இவரைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள்...
ஒரு வேளை இல்லையெனில்...
இதோ தெரிந்து கொள்வோம்...
சந்திப்போம்...
வாருங்கள்...
10.03.2019 , ஞாயிறு அன்று காலை 10.00 மணியளவில் பெசன்ட் நகர் , ஸ்பேசஸ் வளாகத்தில் இருந்து நானும், கோவை ஓவியர் மணிராஜ் மற்றும் ஓவிய மாணவர்
சிரஞ்சீவி என மூவரும் ஒரு OLA Cab book செய்து கொண்டு ஈஞ்சம்பாக்கம் சாலையில் உள்ள சோழ மண்டல ஓவியர்கள் கிராமத்திற்கு சென்று சேர்ந்தோம். இந்தியாவில் உள்ள சிறந்த கேலரிகளில் ஒன்று அங்கு உள்ளது.
இந்த சோழ மண்டல ஓவியர்கள் கிராமத்தைப் பற்றி எனது ஓவிய ஆசிரியர் பயிற்சி நேரத்தில்தான் முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். அதன் பின் பல முறை பல்வேறு ஓவியர்களின் வாயிலும் இச்சொல் வெளிவருவதைப் பார்த்திருக்கிறேன். பல புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். நேரில் சென்று பார்க்க பல நாட்களாக எண்ணம் உண்டு. தட்சணசித்ரா வுக்குக் கூட சில முறைகள் சென்றிருப்பினும் , ஏனோ இதுவரை இங்கு செல்லும் வாய்ப்பு இதுவரை கிட்டாமல் இருந்தது. இன்று ஒருவழியாக சிரஞ்சீவி மூலம் நிறைவேறியிருக்கிறது.
மிகப் பெரிய விஸ்தீரமான பரப்பில் ஆங்காங்கு நவீன சிற்ப வடிவங்கள் நம்மை வரவேற்க உள்ளே நுழைந்தோம். நுழைவுக்கட்டணமாக தலா ரூ 30 வாங்குகிறார்கள். அதையும் செலுத்துவதற்கு எங்களை சிரஞ்சீவி அனுமதிக்கவில்லை.
மிகப் பிரம்மாண்டமான மூன்று தளங்கள் கொண்ட கேலரி , ஹைசீலிங் செய்யப்பட்டு மிகப் பெரிய ஓவியங்கள் , சிறந்த ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் , உலோகச் சிற்ப வடிவங்கள் , கிரானைட் சிற்ப வடிவங்கள் என எல்லாமே பிரம்மாண்டமான வடிவத்தில் .மிகப் பெரிய கேலரிதான். நன்கு ஒளியூட்டப்பட்ட ஓவியங்கள். அத்தனையும் நவீன பாணி ஓவியங்களே.ஒரு சில ஓவியங்கள் தரைத்தளத்தையும் முதல் தளத்தையும் ஆக்கிரமித்தபடி மிகப்பெரிதாய். மூன்று நான்கு ஷெல்ப்புகளில் ஓவியம் தொடர்பான பல நூல்கள் அடுக்கப்பட்டிருந்தன. அவை ரெஃபரன்சுக்காக மட்டுமே. சில நூல்கள் மட்டும் விற்பனைக்கும் .
உள்ளே படம் எடுக்க அனுமதியில்லை. வெளியே நின்று ஒரு படம் எடுத்துக் கொண்டோம். உள்ளே நுழைவதற்கு முன்பே இந்த ஓவியகிராமத்தின் தற்போதைய தலைவர் பிரபல ஓவியர் திரு சேனாதிபதி ஐயா அவர்களை சந்திக்க அனுமதி வேண்டி .ரிசப்ஷனிஸ்ட் இடம் எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்து அனுமதி கேட்டிருந்தேன். அனுமதியும் கிடைத்தது. அனைத்து ஓவியங்களையும் பார்த்து இரசித்த பிறகு சேனாதிபதி ஐயாவைப் பார்க்கக் கிளம்பினோம். அங்கு பணிபுரியும் இளம்பெண் ஒருவர் எங்களை அவரது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். பசுமையான ,வண்ணமயமான மலர்கள் பூத்திருக்கும் மரங்களையும் , செடிகளையும் கொண்ட அழகான ஒரு தெரு அது. இன்னும் அது போல் பல தெருக்கள் அங்கு இருக்க வேண்டும். எல்லாமே ஓவியர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி, வெளியிலிருந்து அனுமதியின்றி யாரும் நுழைய முடியாது என நினைக்கிறேன். மனித நடமாட்டம் இன்றி வெயிலுடன் பெரும் அமைதியும் வியாபித்து இருந்தது வீதியினை .ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்தப் பெண் முன் கேட்டைத் திறந்து எங்களை அழைத்துச் சென்று வாசலில் காத்திருக்கக் சொல்லி அவர் மட்டும் உள்ளே சென்றார். அந்த வீட்டின் முன்பகுதியிலும் ஏகப்பட்ட மலர்ச்செடிகள் , மரங்கள். அதில் ஒரு பப்பாளி மரம் பல கிளைகள் விட்டு எல்லா கிளைகளிலும் காய்கள் காத்திருந்தன. அங்கிருந்த கதவுப்பகுதிகளில் ஓவியக் கண்காட்சிகள் குறித்த நோட்டீஸ்களும் வைக்கப்பட்டிருந்தன.அவற்றையெல்லாம் இரசித்தபடி நாங்கள் காத்திருந்தோம். மூன்று நிமிட இடைவெளிக்குள் வாசலில் மீண்டும் நிழலாடியது. அந்தப் பெண்தான்.ஐயா உங்களை வர சொன்னார் என்றார். நாங்கள் நுழைய எத்தனிக்கையில் வாசலில் ஓவியர் ஐயா வாருங்கள் என்று முகமன் கூறி வரவேற்று எங்களை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.
வீடு என்றா கூறினேன். தவறு. ஆர்ட் கேலரியல்லவா அது... எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். மூவரையும் நாற்காலிகளில் அமரச் சொல்லி எதிரே தனது இருக்கையில் அமர்ந்தார். எங்களைப்பற்றி
கேட்டு அறிந்து கொண்டார். என்னைப் பற்றியும், எனது ஓவிய ஆர்வம் குறித்தும் , ஸ்வாசிகா இயக்கம் குறித்தும் , 24 வருடங்களாக நாங்கள் அளித்து வரும் இலவச ஓவியப் பயிற்சி குறித்தும் , பண்ருட்டி ,திருவதிகைப் பெருமைகள் குறித்தும் கூறக் கூற அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். அவர் கும்பகோணம் போன்ற ஊர்களுக்கு வருகை தரும்போது அந்த வழியாக சென்றிருப்பதாகக் கூறினார். ஒரு முறை வடலூர் சத்திய ஞான சபைக்குக் கூட வந்திருந்தாலும் இதுவரை பண்ணுருட்டி வந்ததில்லை எனக் கூறினார். அவரை ஸ்வாசிகாவின் ஓவியப் பயிற்சியின் 25 ஆம் ஆண்டு நிகழ்வுக்கு அழைத்தேன். ஆனால் முதுமையின் காரணமாக வர இயலாது என சிரித்தபடி மறுத்தார்.
அந்த வீட்டின் ஒவ்வொரு அறைகளிலும் ஓவியங்களே வியாபித்திருக்கின்றன. அனைத்தும் நவீன ஓவியங்கள்தான்.
அவரைச் சுற்றிலும் ஓவியங்களே.
மேஜை மீதும் அங்கிருந்த டீபாயின் மீதும் ஓவியம் சார்ந்த நூல்களே. பிரித்துப் பார்க்க மனம் பரபரத்தாலும் , அடக்கிக் கொண்டேன். அவரது இருக்கையின் வலது புறம் அவர் பெற்ற விருதுகளும் , சிறப்புகளும் மேஜையை அலங்கரித்தபடி இருந்தன.
அந்த ஹாலின் மற்றுமொரு மூலையில் அவர் அமர்ந்து ஓவியம் தீட்டும் பகுதி. ஒரு பெரிய விஸ்தீரமான மேசையின் மேல் வண்ண உபகரணங்கள் ... அருகில் சாய்த்து வைக்கப்பட்ட ஈசல் .. நிறைய சட்டம் இடப்பட்ட ஓவியங்கள் ... அருகில் இருந்த மற்றொரு அறையிலும் ஓவியங்கள்... ஓவியங்கள்..
ஓவியங்கள்... அனைத்தையும் அவரது அனுமதியுடன் படம் எடுத்துக் கொண்டோம்.
தூரிகையின் பார்வை தொடரும்...

No comments:

Post a Comment