Wednesday 27 March 2019

நான் சொல்வதெல்லாம் காதல்

நான் சொல்வதெல்லாம் காதல்
காதலைத் தவிர வேறொன்றுமில்லை...
இன்று காதலர் தினமாமே...
காதலுக்கென தனியே ஒரு தினம் வேண்டுமா என்ன ? என்பதுதான் எனது வினா .
காதல்...
இந்தப் பிரபஞ்சத்தை அனுதினமும் இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு மூன்றெழுத்து மாயாஜாலம் ...!
செவிகளில் விழுந்த உடன் விழிகளிலே வானவில்லைத் தெறிக்கவிடும் மகேந்திபுரி
வர்ணஜாலம் ...!
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
எனத் தான் இறை மேல் கொண்ட
பக்தியையும் கூட காதலாக்கிப்
பாமாலை சூட்டி மகிழ்ந்தார்
தேவாரம் தந்த மூவருள் ஒருவரான
ஞானப்பாலுண்ட ஞானசம்பந்தர்...
மாலவன் மேல் மையலுற்று
காதலித்தவன் கரம் பற்றிடக் கனாக் கண்டு
மார்கழியில் வைகறைத் துயில் நீங்கி
திருப்பாவை பாடி
தன் தளிர்க் கரங்களால் தொடுத்திட்ட மாலையை முதலில் தான் சூடி
பின் மாயோனுக்கும் சூட்டியதால்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியானாள்
மானுடப் பெண்பாவை ஆண்டாள் ...
காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...
என்று பகிரங்கமாகவே தன் பாட்டால் காதலிக்க அழைத்திட்டான்
முறுக்கு மீசையோடு தலையிலே முண்டாசும்
இதயத்தில் பெருங்காதலையும் சுமந்த
மகாகவி பாரதி...
அவனேதான் இன்னும் சற்று மேலே போய்
காதல் காதல் காதல்... காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.... என்றும் முழங்கி
முரசறைந்தான் அந்த முதுகவிஞன்...
காதல் என்பது என்ன?
என்ன மாதிரியான உணர்வு...?
...
...
காதல் என்பது அன்பு
காதல் என்பது பாசம்
காதல் என்பது பக்தி
காதல் என்பது பற்று
காதல் என்பது நேசம்
காதல் என்பது நட்பு
காதல் என்பது கருணை
காதல் என்பது கனவு
காதல் என்பது புனிதம்
காதல் என்பது அடிப்படை
காதல் என்பது உயிர்நேயம்
காதல் என்பது பெருங்கருணை
ஆனால் இன்றைய காலங்களில்
இளைய சமுதாயத்தினரும்
பதின்பருவத்தினரும் காதலைப் பற்றிய கருதுகோளாகக் கொண்டிருப்பது என்ன?
திரைப்படங்கள் அவர்கள் மனதிலே காதலை உருவகப்படுத்தியிருப்பது எவ்வாறு...?
காதல் என்பது ஒரு ஆண் பெண் மேல் கொள்ளும் அன்பு அல்லது
பெண் ஆண் மேல் கொள்ளும் அன்பு
என்பதாகத்தானே...
காமத்தின் மாற்றுவடிவமாகத்தானே...
இந்த காதலர் தினத்தை உலகத்தின் ஒரு சாரார் மிக ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும்
கொண்டாடிக் கொண்டிருக்க
இன்னொரு சாராரோ காதலர் தினத்தைக் கொண்டாடுவோரை
காமுகர் கூட்டமாகவே கருதி வசைபாடுவதும்
அவர்கள் மேல் வெறுப்பை
வாரி உமிழ்ந்து தூற்றித் திரிவதும்
கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்து
காதலையே கொச்சையாக்கி இகழ்வதுமாய்
களேபரம் செய்து கொண்டிருக்கிறார்களே...
ஏன் இப்படி...? அனேகமாக அவர்கள் சங்கிகளின் ராகமாக இருக்கலாம்...
இடையே இன்னொரு அதிகபட்ச வேடிக்கை என்னவென்றால் சில இளைஞர்கள் கிளம்பியிருக்கிறார்கள் ...
I Hate valentine's Day... என்றும்
நான் முரட்டு சிங்கிள் டா ...
என்றும் கூறி ப்ரொஃபைலில் வந்து
கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.
காதல் சின்னத்தையே உலக அதிசயமாகக்கொண்டுள்ள நம் பாரத பூமியில் ஏன் இப்படி ?
அதெல்லாம் தெரியாது
வார்டன்னா அடிப்போம் என்ற வடிவேலுவின் காமெடிக் கணக்காக LOVE னாலே
காதல் தான்... காதல்னாலே காமம்தான்
என்றானதற்கு மூலகாரணங்களே
நிச்சயமாகத் திரைப்படத் துறையினர் தான்
என்பதில் சந்தேகம் ஏதும் கிடையாது என்பதே உலகறிந்த உண்மைதானே...
ஆனால் 2000 வருடங்களுக்கு முன்னரே
காதல் என்பது ஆண் பெண் பாலினம் சார்ந்த அன்பு என்ற பார்வையைத் தாண்டி ஒரு உயிர் மேல் உயிர் கொள்வது என்று குறள் கொடுத்தானே வள்ளுவன்...
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
வகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்ற இருவரிகளில் தெறிக்கிறது (தெரிகிறது என்றும் படிக்கலாம்)
இந்த உலகில் வாழும் பல்லுயிர்க் கோளத்தின் மீதான நமது வள்ளுவனின் காதல்...
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடியதிலும்
பசித்தோரின் பிணி நீக்க ஏற்றி வைத்த அணையா விளக்கின் அனலிலும் வெளிப்படுகின்றது காதலின் மீதான வள்ளலாரின் மற்றொரு பரிமாணம்.
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடி, செல்லம்மா தன் செல்லங்களின் பசி தீர்க்கவென கடன் வாங்கி வைத்திருந்த நொய்யரிசியத்தனையையும் புள்ளினங்களுக்கு வாரி வாரி இறைத்திட்ட
பாரதியின் செயலில் தெரிகிறதே ஒரு பேரன்பு.. அதுவல்லவோ காதல்...
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல...
அதையும் தாண்டிப் புனிதமானது...
னிதமானது..
இதமானது....
ஆம்...
கம்பன் தன் இராமகாதையிலே தீட்டியிருப்பான் ஒரு காட்சியை .. -
சித்திரமாக ...
மிதிலா புர நகரத்து வீதியிலே
விஸ்வாமித்திர முனிவன் முன் நடக்க ...
தன் இளவல் இலட்சுமணன் பின் தொடர
முனிவனைத் தொடர்ந்து செல்கிறான்
வில்லேந்திய கரங்களுடன்
தசரத இராமன்...
அரண்மனையின் உப்பரிகையிலே உலா வந்து கொண்டிருந்த ஜனக புத்திரி சீதா தேவி
இளவரசன் இராமச்சந்திரனைப் பார்க்கின்றன.
ஏதேச்சையாக இராமனும் அவளைப் பார்க்கின்றான்.
இக்காட்சியை கம்பன் எவ்வாறு உரைக்கின்றான் தெரியுமா.?
அண்ணலும் நோக்கினான்;
அவளும் நோக்கினாள்.... என்று
கண்ணும் கண்ணும் கலந்ததால் உண்டான காதலை நயமுடன் நவின்றிருப்பார் அந்தக்
கவிச்சக்கரவர்த்தி .
அதையே தான் நவீன திரைப்படங்கள் இவ்வாறு பாடலாக்கியிருக்கின்றன...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்.... எனவும் ,
விழியில் விழி மோதி இதயக் கதவொன்று
திறந்ததே.... எனவும்
பாடலாக்கி மகிழ்ந்திருக்கின்றனர் நமது கவிஞர் பெருமக்கள் ...
காதலைச் சொல்ல நினைத்து...
சொல்ல முடியாமல் தவிக்கும் காதலர்கள் நிலையை கண்ணதாசன் பாடியுள்ள விதத்தைப் பாருங்களேன்...
சொல்லத்தான் நினைக்கிறேன்..
சொல்லத்தான் துடிக்கிறேன்...
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்... ஓஹோ...
ஆஹா.. ஆஹா...
கண்ணதாசன் கண்ணதாசன்தான்...
இந்தப் பாடலின் முதல் சரணத்திலே பட்டையைக் கிளப்பியிருப்பார் கவிஞர்.
காதல் என்பது மழையானால் ...
அவள் கண்கள்தானே கார்மேகம்...
இவ்வரிகளுக்கு மாற்று வரிகளை உங்களால் யோசிக்கத்தான் முடியுமா?
இப்பாடல் வரிகளின் நவீன வடிவம் எது தெரியுமா ?
சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்...
காதல் சுகமானது...
அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில்
வரும் அற்புதமான பாடல் வரிகள்தான் என்னைப் பொருத்தவரை காதலர்க்கான தேசிய கீதம் என்பேன்.
வரிகள் காதுகளில் நுழையும்போதே உள்ளத்தில் காதல் பூ பூக்கும்...
மனதில் மத்தாப்பூ பூக்கும்...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்து விடு...
அலைகள் உரசும் கரையினில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு...
...
...
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்...
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்...
அடா.. அடா... வைர வரிகள் அல்லவா
நம் வைரமுத்துவின் வரிகள்...
உயிர் உருகும் சத்தம் நிஜமாக கேட்கும்... உண்மையான காதலருக்கு..
காதல் என்பது தெய்வீகமானதோ...
மானுடர்க்குச் சொந்தமானதோ...
எனக்குத் தெரியாது...
காதல் என்பது ஓர் மயிலிறகு...
அது நம் உடலை மட்டுமல்ல...
நமது மனதையும் கூட
மென்மையாக வருடும் ....
எனவே
மானிடக் காதலர்க்கும்...
தெய்வீகக் காதலர்க்கும்..
உயிர் காதலர்க்கும்...
காதல் என்ற அன்பினை அடுத்தவர்க்கு அள்ளி அள்ளி வழங்கும் அத்தனை
அன்பர்களுக்கும் ...
என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
காதலைக் கொஞ்சம் காதலிப்போமா?

நான் தீட்டிய ஓவியம் ...
கண்ணனும் ,ராதையும் 
அவர்களது விழிகள் வழியே
பெருகி வழிந்தோடும் காதலும்...
( mixed medium )

No comments:

Post a Comment