Monday 29 January 2018

வந்தே மாதரம்...!

அனைவருக்கும் இனிய குடியரசு நாள் வாழ்த்துகள்...
வந்தே மாதரம்...!
தாய் மண்ணே வணக்கம்...!
எனக்கு நினைவு தெரிந்து இந்த குடியரசு நாள் விழாதான் நான் பங்கேற்காத நிகழ்வாக இருக்கும்.என் பள்ளி நாள் தொடங்கி ..படித்த பள்ளியிலோ ...நான் நடத்தி வந்த பள்ளியிலோ...தனிப்பயிற்சி மையத்திலோ ...நான் பணியாற்றி வருகின்ற பள்ளியிலோ .. ஒரு வருடம் தவறாது பங்கேற்று விடுவேன்..எனத சாரணச் சீருடையுடன் பள்ளி மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் 15 வருடங்களாக கொடியினை வழங்கி வருகிறேன்...ஏன் ...என் இல்லத்திலும்கூட தேசியக்கொடியினை காலை 6.30 மணிக்குள் ஏற்றி நான் வசிக்கும் தெருவில் உள்ளோருக்கு
கொடிகளும் இனிப்புகளும் வழங்கிவிடுவேன்...இம்முறையோ நகரும் தொடர் வண்டியில் நான்...எனது சட்டையில் கொடி கூட அணியாமல் நான்...அனேகமாக பகல் 12 மணியாகிவிடும் ...நான் வீடு சேர ...
எனது மனதிற்கினிய எப்போதும் சாரணர்களுடன் தேசிய விழாவைக் கொண்டாடி மகிழும் நான் ...
இன்று வெறுமையான மனதுடன்...
தொடர் வண்டியின் சாளரத்தின் வழி நகர்கின்ற
காட்சிகளை வெறித்தபடி...

Friday 26 January 2018

கிருஷ்ணன் சார் - எனது குருநாதர்

இதுவும் ஒரு நெடிய பதிவே ...

சற்றே பொறுமையாக படிக்க வேண்டும் தோழர்களே ...

இந்நிகழ்வு நடந்து சரியாக ஒரு மாதம் ஆகிறது ...

ஆனால் பனிச்( பணி  )சுமையின் காரணமாக இப்பதிவினை மிக

தாமதமாக இடுகின்றேன்

ஒரு சிறு கதை போல் தருவதற்கு முயற்சிக்கின்றேன்


கிருஷ்ணன் சார் - எனது குருநாதர்

18-01- 2018  எனது வாழ்வில் மறக்க முடியாத மற்றொரு நாள் .

நீண்ட வருடங்கள் கழித்து எனது கணித ஆசிரியரை சந்தித்த நாள் .

1980-81.மற்றும் 81 -82 ஆம் கல்வி ஆண்டுகளில் புதுப்பேட்டை அரசு மேல்

நிலைப் பள்ளியில் 9 மற்றும் பத்தாம் வகுப்பில் நான் பயிலும்பொழுது

எங்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கிலம் போதித்தவர் .

கிருஷ்ணன் ஆசிரியர் . கோட்டலாம் பாக்கம் அக்ராகிரக

தெருவில்வாழ்ந்தவர்.

வி ஆர் எஸ்  சார் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு ஒட்டு வீடு இருக்குமே...அந்த

வீட்டில்தான் அவர் வசித்துவந்தார் .

எங்களில்  சிலர் மட்டும் தனி வகுப்புக்காக அவர் வீட்டிற்கு சென்று

படித்து வந்தோம் .

வீட்டில் அவரும் அவரது மனைவியும் மட்டும் வசித்து வந்தனர் .

குழந்தைகள் இல்லை .

அவரது அண்ணன்  மகன் ஸ்ரீதர் என்பவர் எங்களைவிடவும் வயதில் மிக

இளையவர்.அடிக்கடி  இவரது வீட்டுக்கு வந்துவிடுவார்.

அவரைத்தான் மகனாக நினைத்து வளர்த்து வந்தார் .

மிகச் சிறப்பாக போதிப்பார் .

எனக்கு ஆங்கில இலக்கணத்தில்அடிப்படையை  மிக   நன்றாக

அமைத்துக் கொடுத்தவர் .

எங்களிடமெல்லாம்  மிக அன்பானவர் .

கிரிக்கெட் ஆர்வலர் .

வானொலியில் நேரடி வர்ணனை கேட்பதில் மிகப் பிரியம் உள்ளவர்.

ஸ்ரீதரும் அவரும் கிரிக்கெட் பற்றி அடிக்கடி பேசிக்கொள்வர் .

எனக்கு எப்போதுமே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இருந்தது இல்லை .

அவர் வீட்டுக்கு படிப்பதற்கு செல்கையில் கவனித்து ..இருக்கிறேன்.!

கணிதமாகட்டும் ...அல்லது ஆங்கிலமாகட்டும் ...!

சொல்லித் தந்து விளங்க வைப்பதில் வல்லவர் ...

புரியவில்லை என எத்தனைமுறை கேட்டாலும்  சலிக்காமல் சொல்லித்

தருவார்.

படிக்காமல் ,எழுதிக்காட்டாமல்  யாரும் அவரை ஏமாற்றி விட முடியாது .

கையின் கீழ் தசையை திருகிக்கொண்டே  மெல்லிய குரலில் ஒழுங்கா

எழ்ழுத்தறியா( எழுதறியா )...என்று  வினவுவார் ...

அந்த திருகலுக்கு பயந்தே நாங்களெல்லாம் அவரது பாடங்களை

கவனமாகவே முடித்துவிடுவோம் .

அவரது அந்த கண்டிப்பான அணுகுமுறைதான் எங்களையெல்லாம்

வாழவைத்துக் கொண்டிருக்கிறது .பள்ளிப் படிப்பை முடித்தபிறகு அவரை

சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .

பணி நிறைவுக்குப்   பின்னர் விழுப்புரத்திற்கு தனது அண்ணனுடன் வசிக்க

சென்றுவிட்டார் .

அதற்குப் பிறகு அந்த தெருவில் வசித்துவரும் மீனாட்சி அக்கா -எனது

தமக்கையுடன் படித்தவர் -எப்போதாவது அவர்   மூலமே செய்திகள் வரும் .

ஒருமுறை அவரது மனைவியார் மறைந்த செய்திகூட அப்படிதான்

கேள்விப்பட்டோம்.மிக வருத்தமாக இருந்தது .

பின்னர் கால ஓட்டத்தில் அடிக்கடி அவரைப் பற்றி நினைத்துக் கொள்வேன் .

அவரை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிட எண்ணிக்கொண்டு

இருந்தேன் .

அப்போதுதான் புதுப்பேட்டை அரசுப்  பள்ளியை  முன்னாள் மாணவர்கள்

புனரமைத்து  விழா செய்யும் ஏற்பாடுகள் நடந்தன.

திசைக்கு ஒருவராக சென்று தமக்கு பாடம் போதித்த ஆசான்களைத் தேடி

அழைப்பிதழை அளித்து விழாவுக்கு அழைத்தனர் .

விழாவில் எங்களது அனைத்து ஆசிரியர்களையும் சந்திக்கப் போகும்

ஆர்வத்தில் இருந்தேன்.

சென்னையில் வசிக்கும் சசிக்குமார் என்ற எனது ஓவிய மாணவர் - எங்கள்

பள்ளியின் முன்னாள் மாணவர் -சென்னையில் வசிப்போருக்கு அழைப்பிதழ்

கொடுக்கும் பணியை ஏற்றிருந்தார் .

அவர் மூலம் கிருஷ்ணன் சாருக்கு உடல் நலமில்லை எனவும், அவரால்

விழாவுக்கு வருகை தர இயலாது  என்று அறிந்த பொழுது சற்றே ஏமாற்றமாக

இருந்தது .

இருப்பினும் அவரது முகவரியை சசியிடம் கேட்டு பெற்றுக்கொண்டேன்.

குரோம்பேட்டை,அஸ்தினாபுரத்தில் அவர் வசித்து வந்ததாகக் கூறி

விலாசத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார்.

அந்தப் பகுதியில்தான் எனது பெரியம்மாவின் பெண் சித்ரா - எனக்கு

தங்கை- என்பவரும்வசித்து வருகிறார்.

எனது தங்கை மகளின் திருமணம் 19-01 -2018 அன்று நடைபெற இருந்ததால் ,

18 -01-2018 அன்று காலையே எங்கள் ஊரில் இருந்து கிளம்பி பகல் 1-30

மணிக்கே அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண

மண்டபத்தை அடைந்தோம்.பேருந்தில் ஏறுவதற்கு முன்பே என்

மனைவியிடம் கூறிவிட்டேன். மத்திய உணவுக்குப் பிறகு கிருஷ்ணன் சாரை

சென்று பார்த்து விட்டு வரவேண்டும் என்பதனை. எனவே மத்திய உணவு

அருந்தியதும்   அங்கிருந்த எனது  அண்ணன்  முருகன்  (எனது

பெரியம்மாவின் மகன் -இவர் என்னை விட 3 வயது மூத்தவர் ...இவரும்

கிருஷ்ணன் சாரிடம் படித்தவர்தான் .தான் இரு மாதங்களுக்கு

முன்னதாகவே சாரை சந்தித்ததாகவும் அவரது வீடு தனக்குத் தெரியும்

என்றும் தானே   அழைத்து செல்வதாகவும் கூறினார் . முன்னதாக 

கிருஷ்ணன் சாரின்    தொடர்பு  எண்ணில் தொடர்பு கொண்டு எங்களை

அறிமுகப் படுத்திக்கொண்டு

நாங்கள் மாலை அவரைப் பார்க்க வரும்  செய்தியை தெரியப் படுத்தினோம்

மூன்றரை மணியளவில் கிளம்பினோம் .முருகன் அண்ணா முன் செல்ல

நான்  எனது மனைவி எனது அத்தை மகன் கார்த்தி ஆகியோர்

முருகன் அண்ணாவை பின் தொடர்ந்தோம்.

 மரியாதை நிமித்தம் சாருக்கு வழங்குவதற்காக கொஞ்சம் பழங்களும்

ஒரு தேங்காய்ப் பூ துவாலையும்  போகும் வழியிலேயே 

வாங்கிக்கொண்டேன்

முதலில் ஒரு தெருவுக்கு அழைத்துச் சென்றார் .ஒரு வீட்டில் கேட்டை

திறந்தபடி நுழைந்தார் . நாங்களும் பின்தொடர்ந்து சென்றோம் ..

இந்த வீடுதானா  என்று வினவியபடி அவரைப் பார்த்தேன் .

ஆம் என்பதுபோல் அவர் தலையசைக்கவும்..கேட் திறக்கும் சத்தம் கேட்டு

மாடியிலிருந்து ஒரு பெண் எட்டிப் பார்த்தார் .நடுத்தர வயதிருக்கும் ...

யாரை சார் பார்க்கணும் என்றார் .

என் அண்ணனோ சற்றே குழப்பான முகத்துடன் கிருஷ்ணன் சார் வீடு....

என்று இழுத்தார் .

அதற்கு அப்பெண் ஆமாம் சார் ...இந்த வீட்லதான் இருந்தாங்க .

ஆனா இப்ப இல்ல ..வேற வீடு மாறிட்டாங்க .நான் அவங்க அண்ணனோட

மகள்தான் ...என்றார் சிரித்தபடி ...

முருகன் அண்ணனும்  சிரித்தபடி நான் ஏற்கெனவே இந்த வீட்டுக்கு

வந்திருக்கிறேன் ..அதான் கொஞ்சம் குழப்பம் ஆயிடுச்சி என்றார் .

அந்த பெண் கிருஷ்ணன் சார் தற்போது குடியிருக்கும் வீட்டின் முகவரியைக்

கூற .நங்கள் நன்றி சொல்லிக் கிளம்பினோம் ....!

மீண்டும் வந்தவழியே திரும்பி சென்றோம் .அவர்கள் கூறிய மணிமேகலை

தெருவில் உள்ள முதல் அபார்ட்மெண்டில் முதல் வீட்டை அடைந்தோம்.

கதவின் அருகில் நின்று குரல் கொடுத்தேன் ...

சார் ... சார் ...

கதவு திறந்து வயதான பெண்மணி ஒருவர் எங்களை சற்றே

குழப்பத்துடன் வரவேற்றார் ..

கிருஷ்ணன் சார் வீடுதானே இது ? நான் வினவ ,

அவர் சட்டென்று .புரிந்துகொண்டு சிரித்தார் ...

வாங்கோ ...நீங்கதானே போன்  பண்ணேள் ...வாங்கோ ...உள்ளே வாங்கோ ...

சார் இருக்கார் . வாங்கோ ..என்று அழைத்தபடி எங்களை அன்புடன்

வரவேற்றார் .அவர் சாரின் அண்ணியாக இருக்கவேண்டும் .

நாங்கள் சற்றே தயங்கியபடி உள்ளே சென்றோம் .உள்ளே மிக வயதான

பெரியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் .கண்களில் தேடலோடு

எங்களை பார்த்து சிரித்தார் .வாவென்பதுபோல் தலையசைத்தார் .

நான் சட்டென்று அடையாளம் அவரை அடையாளம் கண்டேன் ...

கிருஷ்ணன் சார்தான் அவர் ...வயது கூடியிருந்தாலும் கூட நாங்கள் பார்த்துப்

பழகிய எங்கள் கிருஷ்ணன் சாரின் முகம் அப்படியேதான் இருந்தது .

சற்றே வயதான தோற்றமாக இருந்தாலும் முதுமையின் காரணத்தாலும் தன

மனைவியை இழந்ததன்  காரணத்தாலும் சுகவீனத்தின் காரணத்தாலும்

சற்றே அயற்சியாக இருந்தார் .

நான் பேசத் துவங்கினேன் .

அவருக்கு காது கொஞ்சம் கேக்காது செத்தே உரக்க பேசுங்கோ என்றார்

சாரின்  அண்ணியார் .

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன் ...

சார் ..நான் முத்துக் குமரன் 1980 --82  ல் தங்களது மாணவன் ...ஆங்கிலம்

.கணிதம் இரண்டும் தங்களிடம்தான் படித்தேன் ....குறிப்பாக  ஆங்கில

இலக்கணத்தின் அடிப்படையை தெளிவாக கற்றது தங்களிடம்தான்

என்றேன் ..புரிந்துகொண்ட படி தலையசைத்தார் .சற்றே கண்களை

மூடிக்கொண்டார் ...சிந்திப்பது போல் இருந்தது ...பழைய நினைவுகளை

மீட்டெடுக்கிறார் போலும்.தீடீரெனக் கண்களைத் திறந்தவர் .. ராமநாதன்

தறி வாத்தியார் எப்படியிருக்கார் ...அப்பாதான அவர் ...?

இல்லை சார் ...அவர் எனது பெரியப்பா .எனது அப்பாவின் பெயர் அப்பர்சாமி .

அவரும் ஆசிரியர்தான் ..ஆனா ரெண்டுபேருமே தவறிட்டாங்க சார் என்றேன் .
பிறகு எனது அக்காவின் பெயரை சொன்னேன் ,சுமதி என் அக்காதான் சார் .

உங்களிடம்  படித்தவர்தான் .என்று கூறி வீரராகவனின் அக்காவான சுமதி

அதாவது மற்றுமொரு   சுமதி அக்கா அருந்ததி அக்கா

ஆகியோரை நினைவு படுத்தினேன் .

பின்னர் எனது சக மாணவர்களான முத்துக்குமார் ,வீர ராகவன் ,வரதராஜலு

தினகரன் ஆகியோர்  குறித்து  என்னிடம் வினவினார் .

நடந்து முடிந்த புத்தொளிர் பள்ளி விழா குறித்தும்கேட்டுத்

தெரிந்துகொண்டார் .

இடையே அண்ணியார் எங்களுக்கு பருகுவதற்காக சூடாக பால் கொண்டு

வந்து நீட்ட  புன்னகைத்தபடி நன்றி கூறி ஆளுக்கொரு குவளை

எடுத்துக்கொண்டோம் .

ம்ம். சாப்பிடுங்க என்றார்  கிருஷ்ணன் சார் ,

பாலை பருகினோம் மிதமான சூட்டோடும் திகட்டாத இனிப்போடும்

சுவையாக இருந்தது ..

பின்னர் அவரிடம் என் செல்போனில் இருந்த பள்ளி விழா போட்டோக்களை

காண்பித்தேன் .அதில் இருந்த சீனிவாசன் சார் ,வத்சலா மேடம் .சாமிநாதன்

சார் (தமிழ் அய்யா ) டாக்டர் ராமானுஜம் அய்யா ,பழனி சார் ( ஆங்கிலம்)

மாரியப்பன் சார் (உடற்கல்வி இயக்குனர்) ஆகியோர்களைக் காண்பித்தேன் .

.மிக மகிழ்ச்சியடைந்தார் ...

என்னால்தான் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது என்றுகூறினார்

வருத்தம் தோய்ந்த குரலில் ...

சற்று நேரம் மெளனமாக இருந்தார் .. பின்னர் மீண்டும் கேட்டார் . புலவர்

ராமநாதன் ,உமாபதி அய்யா இவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்

என்றார் ஆர்வத்துடன் .அவர்கள் காலமான செய்தியையைக் கூறியதும்

மீண்டும் மௌனமானார் .

சூழ்நிலையின் இறுக்கத்தை குறைப்பதற்காக நான் ஸ்ரீதர் குறித்தும்

கிரிக்கெட் கமென்டரி கேட்டு மகிழும் நினைவுகள் குறித்தும் பேசத்

துவங்கினேன்.அந்த நேரம் அறையின் உள்ளிருந்து கிருஷ்ணன் சாரின்

அண்ணன்  வந்து எங்களை வரவேற்றார் .நாங்கள் மீண்டும்  அவரிடம்

எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம் .

பின்னர் நான் வாங்கி வந்த வெண்ணிறப் பூத்துவாலையை அவருக்குப்

போர்த்து  பழங்களை நானும் என் மனைவியும் அவரிடம் கொடுத்தோம் .

பின்னர் பாதங்கள் பணிந்து ஆசி பெற்றோம் .மேலும் அவரது அண்ணன்

அண்ணி பாதங்களையும் பணிந்து ஆசி பெற்றோம்.

வந்து சென்றதன் நினைவுகளை  செல்போனில் காட்சிகளாகப்

பதிந்துகொண்டோம் .காட்சிகளை செல் போனில் பதிய கிருஷ்ணன் சாரின்

அண்ணனுடைய பேரன் எங்களுக்கு உதவினான் .

(முதல் வீட்டில் எங்களுக்கு விலாசம் சொன்னாரே ...அவருடைய மகன் )

பின்னர் அவர்கள் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினோம் சுமார் 35

வருடங்களுக்கு முன்னர் எங்களுக்கு கல்வி புகட்டிய ஆசானை சந்தித்து

பேசியது மிக்க மகிழ்வாகவும் மன நிறைவாகவும் இருந்தது ...இன்னும்

சில நாட்களில் மீண்டும் ஒருமுறை அவரை சந்திக்க வேண்டும் .

என் மனவண்ணங்கள் நூலை, மகாபாரதம் நூலை  அவருக்கு

அளித்து ஆசிபெறவேண்டும் ...என எண்ணியபடி

 என் மனைவியுடனும் அண்ணனுடனும் பேருந்து நிலையம்

நோக்கி நடக்கத் துவங்கினேன் .....

ஆம் ...


இராமனுக்கு ஒரு வசிட்டரும் ,கண்ணனுக்கு சாந்தீபனியும் ,

அர்ஜுனனுக்கு ஒரு துரோணரும் ,கர்ணனுக்கு ஒரு பரசுராமரும் போல

எல்லா மாந்தருக்கும்  ஒரு சிறந்த தலையாய குரு

இப்புவியில் அவதரிக்கத்தான் செய்கிறார் ...!


குரு பிரம்மா

குரு விஷ்ணு

குரு தேவோ மஹேஸ்வரஹ ...

குரு சாட்சாத் பர பிரம்மா

தஸ்மை ஸ்ரீ    குரவே   நமஹ !





































Saturday 20 January 2018

வாட்ஸ் ஆப்பில் ஆனந்தன் குட்டைய்யன் என்பவரின் பகிர்வு


20-01-2018 அன்று வாட்ஸ் ஆப்பில் ஆனந்தன் குட்டைய்யன் என்பவரின் பகிர்வு  

எண்  =9840181202


ஆண்டாளை அசைத்தால் - ஆரியம் அசையும்


--------------------------------------------
தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களாலும், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் மற்றும் திராவிட இயக்கத்தவர்களாலும் விமர்சனங்கள், விவாதங்களாலும், தத்துவார்த விளக்கங்களாலும், பல்வேறு போராட்டங்களாலும் இந்துமத கடவுள்களை அம்பலப்படுத்தி கிழித்தெறிந்த போது நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு சும்மாயிருந்த பார்ப்பனர்களையும்,
மடிசார்மாமிகளையும்
வீதிக்கு வரவழைத்த மர்மம்தான் என்ன?
தோழர்களே!அலசுவோமா?
குறிப்பாக தமிழ் மண்ணில் நீண்ட நெடுங்காலமாகவே பார்ப்பனர்களுக்குள் உள்ள இரு பெரும் பிரிவுகளான
வைணவ பார்ப்பனர்களுக்கும்,
சைவ பார்ப்பனர்களுக்கும் யார் ஆச்சார ஆளுமை நிறைந்தோர் என சச்சரவு நிலவுதாக தவறான கருத்துக்களை உருவாக்கி வருகின்றனர்.
தசாவதாரம் எனும் திரைப்படத்தில் கமல்ஹாசன் எனும் பார்ப்பனரும் இதையே காட்டி நம்மை முட்டாளாக்க முனைந்திருப்பார்.
மாறாக
இருபெரும் பார்ப்பனப் பிரிவுகளுக்குள்ளான போட்டி உண்டு!
அஃது என்னவெனில் 97 விழுக்காடு சூத்திர மக்களை அடிமைகளாகவும், ஆளுமை செலுத்தவும் தகுதியுள்ள வலிமை மிக்க சக்தியாக யார் வருவது என்பதே சைவ,வைணவ பார்ப்பனர்களுக்குள் உள்ள உண்மையான போட்டியாகும்.!
இப்போட்டியில் சைவர்களைவிடவும் வைணவ பார்ப்பனர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.!
தமிழர்களிடம் பக்தியின் குறியீடாக திருப்பாவையையும், வைணவர்களின் ஒன்றுபட்ட வலிமையை குறிக்கும் விதமாக "ஆண்டாளையும்" முன்னெடுத்து வெற்றியும் கண்டனர்.
இவர்களின் வளர்ச்சி பல்வேறு காலகட்டத்தில் சூத்திர மக்கள் யாரும் அறியா வண்ணம் மெல்ல, மெல்ல வளர்ச்சி அடைந்தது.
1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தபோது அன்றைக்கு அதிகார ஆளுமையில் கோலோச்சிய வைணவ பார்ப்பனர்களின் சதியால் தமிழக அரசின் முகப்பு அடையாளமாக திருவில்லிபுத்தூர் கோயில் (ஆண்டாள் திருத்தலம்)தான் சின்னமாக அமைத்துக் கொண்டு உலக அளவில் தங்களின் ஆளுமையை இன்றுவரை பறைசாற்றி தமிழகமே ஆண்டாளின் அதாவது வைணவ பார்ப்பனர்களின் குறியீடாக மாற்ற பல நூற்றாண்டுகால சதி நடத்தே வந்துள்ளது.
மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013இல் தொடுத்த பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை நினைவுபடுத்துகிறோம்
தமிழ் இலக்கியங்களையும், மக்களையும், பண்பாட்டையும் இழிவுபடுத்துகிற ஆண்டாளின் ஆலயத்தை தமிழக அரசின் அரசுசின்னத்திலிருந்து தூக்கியெறிந்து அய்யன் திருவள்ளுவரை தமிழ்மண்ணின்
தமிழக அரசின்
அரசு சின்னமாக குறியீடாக்குவோம்.
வாய்மையே வெல்லும் என்கிற போதனைகள் வேண்டாம்
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனும் முழக்கத்தை தமிழக சின்னத்தில் பொருத்துவோம்!
புத்த சமண மதங்களை எதிர்ப்பதில் அழிப்பதில் மட்டுமல்ல; சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணாபத்யம் போன்ற 6 மதப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதிலும் படுகொலை செய்து கொள்வதிலும் கூட மூர்க்கமாகவே இருந்தனர். (’இந்து’ என்றொரு மதமே அன்று இருந்ததில்லை) வருணாசிரம தருமம் தான் இந்து மதம் என்று பின்னர் அழைக்கப்பட்டது.
ஆனால் வழிபாட்டு முறைகளின் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் பல்வேறு மதங்கள் இந்தியாவில் நிலவின. ஆனால் இன்றோ வர்ணாசிரம, மனுநீதி அடிப்படையிலான ஆட்சியின் கீழ் உழைக்கும் மக்களை சூத்திர அடிமைகளாய் உருவாக்கிட இந்துத்வா எனும் ஓர் குடையின் கீழ் சைவர்களையும் இணைத்து தங்களின் ஆளுமையை ஆண்டாளின் மூலம் நிறுவ முயன்ற இராமானுஜரின் வாரிசுகளுக்கு தமிழகமும், பெரியாரியலும் இடியாய் இறங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்..
ஆம், தடித்துப்போன தோல்களாய் உனக்கு அடிமைச் சேவகம் செய்த எங்களை தட்டியெழுப்பியவன் தந்தை பெரியார்.
கழுமரத்தின் கூர்மையில் எம் பாட்டனின்,பூட்டனின் தசைகள் கிழிந்த வலியை எமக்கு உணரவைத்தவர் அய்யா சுப.வீ.
எம் முன்னோர் சுமந்த ஆரிய இழிவுகளை கழிவுகளாய் ஆரியத்தின் தலைமேல் வைத்து தத்துவ கழுவேற்றுவோம்!
இந்நிலையில் ஆண்டாளின் மீதான விமர்சனங்களின் ஊடே’ சத்தியமூர்த்தி அய்யரின் வாரிசுதாரர்களான தினமணி வைத்தியநாதய்யர்களின் அனுக்ரகத்தில் பெருமை தேடவும், சைவ பார்ப்பனர்களை உயர்த்திப் பிடிக்க தினமனி நடத்திய ஆரிய ஊடலில் தானாய் சென்று பலியான ஆடுதான் வைரமுத்து.
ஆண்டாள் குறித்த திராவிட இயக்கங்களின் விமர்சனங்களும், விவாதங்களும், ஆபாச மூடத்தனங்களை அம்பலப்படுத்திய நிலையையும் கண்டு அதிர்ந்து போன வைணவமும், பார்ப்பனீயமும் தங்களின் பல நூற்றாண்டுகால சதி நீர்த்துப் போய்விடுகிறதே எனத் துடிக்கிறது.
ஆம் தோழர்களே!
ஆபாச குப்பைகளை திருமறையாய், வேதமாய், பாசுரமாய் பாடச் சொன்ன ஆழ்வார்களின் கேவலங்களை இன்று அம்பலத்தில் ஏற்றுவோம்!
தேவாரத்தில் திருஞானசம்பந்தன் "மயிர் பறிக்கும் கோப்பாளிகள்
சமணக் குண்டிகள்
அமண பௌத்தப் பிண்டிப் பீதரம்
சமணப் பெண்டிரைக் கற்பழிக்கத் திருவுளமே' என்றதுவும்,
பெரிய புராணத்தில் சேக்கிழாரோ..
" பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சி குழிவாய் அதனில் குறியை நட்டு" எனக் கூத்தடிப்பதும்,
அதே புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனாரோ..
தாசி சங்கிலி நாச்சியாரைக் கண்டபோது பெண்ணுறுப்பில் காமப்பெருக்கால் நீர் ஒழுகுவதாக கூறுவதும் "மணிசிளர் காஞ்சி வனப்புடை அல்குல் ஒழுகு நீர்த்துறை"என அருவறுப்பாய் குழைவதும்,
"பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் கொங்கை கிளர்ந்து
குமைத்து குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்ய
என் அகத்து இளங் கொங்கை
விரும்பித்தம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்க்கு
என்புரிவுடமை செய்யுமினோ " என காமக்கதை பேசி சமூக ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் திருப்பாவை ஆண்டாளையும் தமிழ் மண்ணிலிருந்து தூக்கியெறிவோம்!
இன்று ஆண்டாளை புறக்கணிக்கும் தமிழகம், நாளை ஆண்டாளின் கோவிலை தமிழக அரசின் சின்னமாய் ஏற்பதையும் இழிவாக எண்ணி தூக்கி எறியும்.
மார்கழி குளிரின் நெருப்பில் திருப்பாவையும், திருவெம்பாவையும் சாம்பலாகும்.
பார்ப்பன தாஸ்யபாஸூர கூத்துக்கள் அடியோடு நாசமாகும்!
சூடிக் கொடுத்தாள் என பெருமைகூறி
கூடி கெடுக்கும் பார்ப்பனீயம் இனி தானாய் கெடும்!
உண்மையில்
அப்படிப்பட்ட மார்கழி புரட்சி வந்தே தீரும்.
ஆண்டாள் தமிழர்க்கு வேண்டாள்;
இப்போது புரிகிறதா?
ஆண்டாளை அசைத்தால் ஆரியம் அசையும்!
(நன்றி)
- மு.தமிழ் மறவன்.
🔴

Sunday 14 January 2018

ஞாநி ....!

ஞாநி ....!
ஞாநி  சங்கரன் எனும் பெயர் கொண்ட இவர்
தான் பிறந்த அதே ஜனவரி  மாதத்திலே இவ்வுலகைத் துறந்தும்  இருக்கிறார்
தனது 64 ஆம் அகவையில் ...!
ஓ பக்கங்கள் துவங்கி அறிந்தும் அறியாமலும் என நீண்டு செல்லும் இவரது படைப்புகள் ஒவ்வொரு வாசகனுக்கும் வழுக்குப் பாறை நிலத்தில் ஊன்றுகோல் போல் என்றும் திகழ்வன .
எந்த ஒரு விஷயத்தையம்  நாம் பார்க்கும் பார்வை வேறு
அவர் பார்த்த பார்வை வேறு
நாம் அணுகும்  கோணம் வேறு
அவர் அணுகுகிய கோணம் வேறு
யார் பற்றியும் பயப்படாமல்
எதற்கும் தயங்காமல் தான் நினைத்த கருத்துக்களை
வெளிப்படையாகவும் தயக்கமின்றியும் கூறி
கொட்டு ,ஷொட்டு ,பூச்செண்டுகளை
தவறாமல் வழங்கிய சமூக விமரிசகன் .
குமுதத்தில் தொடங்கிய இவரது ஓ பக்கங்கள் கட்டுரைத் தொடர்
சில காரணங்களால் தடம் மாறி விகடனுக்கு இடம் பெயர்ந்தது
கால முரண் அல்லது காலத்தின் கோலம் ...!
படைப்பாளி ,கல்வியாளர் ,எழுத்தாளர் ,இயக்குனர் ,
பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர் .
தேர்தல் முறையிலே  49-ஓ கொண்டுவந்ததன்
பெரும்பங்கு இவரையே சாரும் .இவரது மறைவு எம் போன்ற வாசகர்களுக்கும் ,எழுத்துத் துறைக்கும் பேரிழப்பு !
அவரின் விரிந்து பரந்த கனவுகள் நிறைவேறும் வரையிலும்
நாம் செலுத்தும் இதுபோன்ற அஞ்சலிகள்
மணமில்லா வெறும் காகிதப் பூக்கள் கொண்டு செலுத்துபவை மட்டுமே !
வெல்லட்டும் அவர் சிந்தனைகள் !
ஆழ்ந்த இரங்கல்கள் !




பள்ளி வாசல் வரை மீண்டும் ஒரு பயணம்


எல்லோருக்கும் போகி என்பது
பழையன கழிந்து புதியன புகுவது
ஆனால் இன்று குழுமியுள்ள எங்களுக்கோ
புதியன மறந்துபோய்
பழையன புகுந்து மகிழ்வது என்றானது !

ஆம் !

போகியன்று நடைபெற்ற புத்தொளிர் பள்ளி துவக்கவிழாவில்
பங்கேற்ற ஒவ்வொருவரும் தனது  நிகழ்காலம் தொலைத்து
கடந்தகால நினைவுகளை மீட்டெடுத்து
மலரும் நினைவுகளில் மூழ்கித்திளைத்து
கண்கள் பனித்திருந்தனர்.
அந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகள் பகிர்வதே இப்பதிவின் நோக்கம் !

13-01-2018 ஒரு புனித நாள் .
நாங்கள் கல்வியும் கலைகளும்  பயின்ற
புதுப்பேட்டை அரசுமேல் நிலைப் பள்ளி
என்னும் ஆலயத்தின் புணருத்தாரன மகாபிஷேக நாள்
எங்களுக்கு ஆசிரியர்கள் என்ற தேவ ஆசீர்வாதம்
கிடைக்கப் பெறச் செய்த தேவாலயத்தின்
மீள் உயிர்த்தெழு திருவிழா !
உலக வாழ்க்கைக்கான கல்விக்காய்
ஆசான்கள் என்ற பேரருளாளர்களிடம் தொழுகை நடத்திய
எங்கள் பள்ளிவாசலின் சந்தன உரூஸ் பண்டிகை !

தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகள் ஒன்றிரண்டு தவிர
ஏனைய பள்ளிகளின் நிலை ...?
அநேகமாக அவை குத்துயிரும் குலை உயிருமாய்த்தான் இருக்கின்றன என்னும் நெஞ்சில் அறையும் உண்மையின் நிதர்சனத்தை
யாரும் மறுக்கப் போவதில்லை ...!
அப்படிப்பட்ட அநேகப் பள்ளிகளில் ஒன்றுதான் எம் பள்ளியும் .!
குடியிருந்த கோவிலாம் தாய் சீக்கோடு போராடுவதை
எந்த தனயந்தான் பார்த்துக்கொண்டு சகித்திருப்பான் ?
பள்ளியும் நாம் குடியிருந்த கோவில்தானே !

எம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர்
தற்போது பெரிய பெரிய பதவிகளிலும்
பல்வேறு உயர்ந்த பணிகளிலும் பணியாற்றி
பாரெங்கும் பவனி வருகிறார்கள்!
தாங்கள் பெற்ற இச்சிறப்புக்கு காரணமான பள்ளியின்
நிலை மாற்றிட ...சீர்தூக்கிட ...
இன்று பயிலும்
நம் வருங்கால  இந்தியாவின் எதிர்காலங்கள்
இடையூறின்றி கல்விபயில
சரியான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித்  தர  எண்ணம்கொண்டு
தினகரன் என்ற சாமிநாதன் மற்றும் I P S அலுவலர் லோகநாதன்
என்ற இரு நாதர்களும் இதற்கான இறைத்  தூதர்களானார்கள் !
வாட்சப் என்று அழைக்கப்படும் கட்செவி   அஞ்சலில்
புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி என்ற குழுவைத்  துவக்கினார்கள்
இயன்றபோதெல்லாம் தேடித்தேடி நண்பர்களை இணைத்தார்கள் .
சிலர் செய்தி தெரிந்து விரும்பி விரும்பி நாடி இணைந்தார்கள்
அவ்வப்போது ஒன்றுகூடி ஆவண செய்ய ஆலோசித்தார்கள் !
திட்டங்கள் தீட்டினார்கள் ...மற்றோர்க்கும் பகிர்ந்தார்கள்
தன்கொடையும் நன்கொடையுமாய் சேர்ந்த பணத்தால்  பிறந்தது
புத்தொளிர் பள்ளி சொல்லவொணா துன்பங்களுக்குப் பிறகு
துன்பம் என்று கூறினாலும் கூட
கவியரசர் கண்ணதாசனின் மொழியில்கூறினால்
அதுவொரு துன்பமான இன்பம் அவர்களுக்கு !
ஒரு பிள்ளையை ஈன்றெடுக்க
ஒரு தாய் படும் வேதனைக்கு சற்றேனும் குறைவில்லாதது
இப்பணியின்  சுகமான சுமைகள் !
ராகவன் ,மணிவண்ணன் ,சசி , கோபி,
விஜயகுமார் ,லக்ஷ்மி நாராயணன்
செந்தில் ,பாஸ்கர்,அருண் கார்த்திக் ,
பாபு,கோபால்,பாலா ,ரமேஷ் ,
உமா  சங்கர் ,நாராயணன் , விவேக் ,சுரேஷ்
என இப்பணிக்காக உடனிருந்து பாடுபட்ட
நண்பர்களின் பட்டியல் இன்னும் இன்னும் மிக நீளமானது ...
பட்டியலில் இடம் பெறாதோரின் மறைமுக ஒத்துழைப்பும்
மறுக்கவோ ,மறைக்கவோ ,மறக்கவோ முடியாதது .

எல்லோரின் கைகோர்ப்பினாலும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறைஅலுவலர்கள்  ,காவல்துறை அலுவலர்களின்
ஒத்துழைப்பாலும் பள்ளி மெருகேறியது
பல கட்டமாக பணிகள் நடைபெற்றன ...நிறைவு பெற்றன .!
குடிநீர்த்தொட்டி தொடங்கி கழிப்பறை வரையிலும்
விழாமேடை தொடங்கி ஸ்மார்ட் க்ளாஸ் வரையிலும்
புதியதொரு நூலகம் தொடங்கி அகலப்படுத்தப்பட்ட பள்ளி வாசல் வரை
இருக்கைகள் சீரமைப்பு தொடங்கி மழைநீர் தேங்காதிருக்க
மண் அடித்து தரைஉயர்த்துவது வரையிலும் ...
என புனரமைப்புப் பணிகள் நீண்டு பள்ளி முழுமைக்கும்
வண்ணம்பூசுவது வரை நீண்டு நின்றன ...!
அனைத்தையும் குறைவின்றி முடித்தார்கள் !
பெற்ற பிள்ளைகளின் பெருமுயற்சியால் ,பேரன்பினால்
இன்று இதோ புத்துயிர் பெற்று பூரித்திருக்கிறாள்
எங்கள் பள்ளியெனும் நற்றாய் !

இத்துணை யாரும் முயற்சிக்குப் பெருவிழா எடுக்க வேண்டாமா ?
தஞ்சை சரக காவல்துறை ஐ பி எஸ் அதிகாரியும்
நம் பள்ளியின் முன்னாள் மாணவருமான
திரு லோகநாதன் அவர்களின் சீரிய தலைமையிலும் ,
கடலூர் ஆட்சியர் திரு பிரசாந்த் மு வடனரே அவர்களின்
முனைப்பான  முன்னிலையிலும்  ,
கடலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர்
திரு விஜயகுமார் அவர்கள் சிறப்பு சேர்க்கவும்,
மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் அவர்களும்
பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர்
திரு காமராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்கவும்
தீர்மானிக்கப் பட்டு அழைப்பிதழ் அச்சானது ...1
தமக்கு கல்வி போதித்த ...தற்போது ஒய்வு பெற்று
நிறைவாக வாழ்ந்துவரும் அனைத்து ஆசான்களையும்
திசைக்கு கொ ருவராய் தேடித் தேடி அழைப்பு வழங்கினார்கள் !
தமக்கு முன்னும் பின்னுமாய் பயின்ற
அனேக சகோதரர்களையும் ஒருங்கிணைத்தார்கள்1





இதோ இன்றுதான் விழா நாள் ...!
பொங்கலுக்காக ஊருக்கு வரும் அனைவரும்
ஒன்றுகூடும்  பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி
இப்பொன்னாளாம் போகி நான்னாளை தேர்வு செய்து
திரளாக ஒன்றுகூடி விழா எடுக்கின்றனர் தாம் குடியிருந்த கோயிலுக்கு !
காலை முதலே தன்னோடு கல்வி பயின்ற சக தோழர்களைக் காணவும்
தங்களுக்கு கல்விச் செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல்களைக் காணவும் கூடிநின்ற அந்நாளைய மாணவர் கூட்டம் முதல்
தாம் பள்ளியின் புத்தொளிர் திருநாள்விழா
தாம் பயிலும்  காலத்தில் நடப்பதற்கான பேறு  பெற்ற  பூரிப்புடன்  கூடியிருந்த இந்நாளைய மாணவர் கூட்டம் வரை
தாம் பணிபுரிந்த பள்ளியின் இந்நாள் சூழலையும்
தம் மாணாக்கர்கள் எய்தியுள்ள உயர்வு கண்டு பூரிக்கவும்
வருகைபுரிந்துள்ள அந்நாள் ஆசிரியர்கள் முதல்
இப்போது பணிபுரியும் இந்நாள் ஆசிரியர்கள் வரை
என பள்ளி வளாகமே மகிழ்ச்சியலைகளால்
நிரம்பி வழிந்தது ...!






பள்ளி வாசலின் முன்புறம் அந்நாள் மாணவர்கள் சிலரும்
இந்நாள் ஆசிரியர்கள் சிலரும் இணைந்து
விழாவுக்கு வரும் விருந்தினர்களுக்கு
முகமன் கூறி பன்னீர் தூவியும் சந்தனம் அளித்தும்
வரவேற்றவண்ணம் இருந்தனர் .






கடந்த ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் கூட்டம்  ஒரு புறம்
கல்லூரியின் இறுதியாண்டு பயிலும் மாணவர் கூட்டம் ஒருபுறம் ...
பணியில் சேர்ந்து  தமது வாழ்க்கையை
செம்மைப் படுத்திக்கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம் ஒருபுறம்
என கூடி கும்மாளமடித்துக்கொண்டும்
சுய படம்( செல்பி ) குழுப்படம் (குரூபி) என
செல்போன் கொண்டு க்ளிக்கியபடி இருந்த காட்சிகள்
ஒருபுறம் தென்பட்டன .








மறுபுறமோ மிக வயதானவர்களும் ,
நடுத்தர வயதானவர்களும் தம்மோடு பயின்ற
தம் வகுப்புத் தோழர்களை
விழிகளால் கூட்டத்திடையே தேடுவதும்
அவரைக் கண்ணுற்ற கணத்தில்
வியப்பும் பரவசமும் கலந்த மின்னல் கண்களில் வெட்ட ,
கரங்கள் கோர்த்து நெகிழ்ந்து நலம் விசாரித்த காட்சிகள்
ஆங்காங்கே கண்ணில் தென்பட்டன

 .

இன்னொருபுறம் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்று
வெவ்வேறு பகுதிகளில் வசித்துவரும் ஆசிரியர்கள்
தங்களோடு பணியாற்றி பிரிந்து சென்ற
சக ஆசிரிய சொந்தங்களை
நீண்ட வருடங்கள் கழித்து சந்திக்கும் மகிழ்ச்சி
தமது முகத்தில் வெடிக்க
பரவசத்துடன் பேசிமகிழ்ந்ததையும் காண முடிந்தது .

வேறொருபுறம் தம்மிடம் பயின்ற மாணாக்கர்களின் உயர்வு கண்டு அவர்களை ஏற்றிவிட்ட ஏணிகள்
பெருமிதத்துடன் பூரித்தபடி
அவர்களோடு மனம் விட்டுப் பேசி சிலாகித்து
மகிழ்ந்த நிகழ்வுகளும் அரங்கேறிக்கொண்டிருந்தன .
தமது அன்றைய ஆசான்களோடு
தம் குடும்பத்தாருடன் இணைந்து
அந்த நெகிழ்வு நொடிகளை
தமது கை பேசிகளில் காட்சிகளாகப்
பதிவு செய்த வண்ணம் இருந்தனர் சிலர் .

சரியாக 10.30 மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வருகைதர
தலைமை ஆசிரியரும் விழாக் குழுவினரும் அவரை வரவேற்றனர் .
பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்
அணிவகுத்து கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர் .




பள்ளியின் முன்னாள் மாணவரும்
கலைச் சோலை இசை நாட்டிய பள்ளியின் குருவுமான
திரு  சுரேஷ் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார் .



முதல் நிகழ்வாக குத்துவிளக்கேற்றும் மங்கள நிகழ்வு ...!
ஆட்சியர் ,காவல் துறை துணை துறைத் தலைவர் ,
காவல் கண்காணிப்பாளர்,மாவட்டக் கல்வி அலுவலர் ,
தலைமை ஆசிரியர் ஆகிய ஐவரும்
குத்து விளக்கின் ஐந்து முகங்களுக்கும் ஒளியூட்டினார்கள் .

அடுத்து ஸ்மார்ட் கிளாஸ் ,புதிய  நூலகம்,
புதிய குடிநீர் தொட்டி, புதுப்பிக்கப் பட்ட ஆய்வகங்கள்
இவை அனைத்தும் விருந்தினர்களால் முறையாக துவக்கப்பட்டு
பள்ளிக்கு அர்பணிக்கப் பட்டன .






அதனைத்தொடர்ந்து குழுவின் ஒருங்கிணைப்பாளர்
திரு தினகரன் சாமிநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி
இந்நிகழ்வு டத்தொடங்கிய விதம் ,ஒருங்கிணைத்த அனுபவங்கள் ,
பட்ட சிரமங்கள் , தோள்கொடுத்த தோழர்கள் என
அனைத்தையும் சுருக்கமாகக் கூறினார் .




அதன் நீட்சியாக நடன ஆசிரியர் சுரேஷ் நிகழ்த்திய
ஒரு வரவேற்பு நடனம் ..பரத நாட்டியம்...
திருக்குறள் இசையோடு ஒலிக்க
ஜதிகளுக்கு ஏற்ப சிறப்பான அபிநயங்களோடு
முகபாவனைகளோடு மிளிர்ந்தது நடனம்.



அதனைத் தொடர்ந்து  சிறப்பு விருந்தினர்கள்
மேடைக்கு அழைக்கப்பட்டார்கள் .
இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற
ஆசிரியர்களுக்கு  பொன்னாடை போர்த்தி மலர்க்கொத்து  வழங்கி
நினைவுப் பரிசாக நான்கு நூல்களும் வழங்கினார்கள்.



நேரமின்மை  காரணமாக  ஆசிரியர்கள் சிலர் மட்டுமே
தங்கள்  அனுபவங்களை பகிர முடிந்தது .

தலைமையுரை நிகழ்த்திய திரு லோகநாதன் அவர்கள்
தாம் இப்பள்ளியின் மரத்தடியில் அமர்ந்து பயின்ற
பசுமையான நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.






வடமாநிலத்தைச் சேர்ந்த நமது ஆட்சியரோ
முற்றிலும் அழகுத்  தமிழில் பேசி
அனைவரையும் வியப்புக்குள்   ஆழ்த்தினார்.
தனது பலமானபணிச் சுமைக்கு இடையிலும்
மிகப் பொறுமையோடு ஒவ்வொரு நிகழ்வையும்
அவர் மலர்ந்த முகத்தோடு ரசித்தது
நம் மாணவர்களின் இந்த கடும் உழைப்புக்கும் , உணர்வுகளுக்கும்
அவர் தந்த  மரியாதையை வெளிப்படுத்துவதாகவே உணர்ந்தேன்.
அதை அவரது வார்த்தைகளும் வெளிப்படுத்தின .
நான் விரைந்து செல்ல வேண்டும் என்பதற்க்காக
உங்கள் நிகழ்வின் நீளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று
உரைத்தது முற்றிலும் அவருடைய பெருந்தன்மை .



மாவட்டக் கல்வி அலுவலர் திரு இராஜேந்திரன் அவர்கள்
பேசும்போது ..மாணவர்களை நோக்கி
நீங்கள் திரைப்படங்களில் மட்டுமே கண்ட நிகழ்வுகளை
உங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
நிஜமாக உங்கள் பள்ளியில்
உங்கள் கண்முன்னே  காட்டியிருக்கிறார்கள்.
இதனையே முன்னுதாரணமாகக் கொண்டு
நீங்களும் வாழ்வில் முன்னேறிய பிறகு
உங்கள் பள்ளியை மறக்காமல்
அதன் முன்னேற்றத்திற்கு உங்கள் பங்களிப்பை
அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .









பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின்
பொருளாளர் பேசுகையில்
மாவட்ட ஆட்சியர் முழுக்க  முழுக்க  அழகுத்  தமிழில்
பேசியதை சிலாகித்துப் பாராட்டியதோடு அல்லாமல்
இந்நிகழ்வு வருகை தந்த அனைவருக்குமே
ஒரு புது இரத்தம் பாய்ச்சியதாகவும்
அனைவருக்குமே தம் பள்ளிக்கு ஏதேனும் செய்தாக வேண்டும்
என்ற எண்ணத்தை தூண்டி ஓர் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார் .

முன்னாள் மாணவர் திரு ராஜா அனைவருக்கும் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது .



பின்னர் அனைவரும் அதாவது அங்கு வருகை புரிந்த இப்பள்ளியின்  முன்னாள்  ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள்,
சிறப்பு விருந்தினர்கள் ,முன்னாள் மாணவர்கள்
சேர்ந்து ஒரு குழுப்படம் எடுத்துக்கொண்டார்கள் .
பின்னர் அக்குழுப்படம் லேமினேட் செய்யப்பட்டு
அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது .

இந்நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த
இந்நாளைய பள்ளி மாணவர்கள் ,
முன்னாள் மாணவர்கள் ,பொதுமக்கள் ,
சிறப்பு விருந்தினர்கள்என அனைவருக்கும்
சிறப்பான அறுசுவை உணவு மத்திய விருந்தாக அளிக்கப்பட்டது .

இந்த பரபரப்பான உலகில் ...
தனது எதிர்காலத்தைத் தேடி நிகழகாலத்தைக் கூட
சரிவர நுகராமல் ஓடும் அதிவேக ஓட்டத்தில்
எங்களையெல்லாம் மீண்டும் கடந்தகாலத்திற்கே அழைத்துச் சென்று எங்களது பள்ளிக்கூடப் பெற்றோர்களையும்
பதின்பருவ நணபர்களையும் சந்தித்து அளவளாவ
வாய்ப்பளித்த இந்நிகழ்வு ...இந்நாள்...எங்கள் ஒவ்வொருவரின்
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்....
வாழ்நாட்கள்   என்னும் காகிதங்களிடையே
இணைக்கப்பட்ட ஒரு போர்காகிதமாகவே திகழும் என்பதில் ஐயமில்லை .
இவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த
தினகரன் சாமிநாதன்  &  ராகவன் மற்றும்
சார்ந்த நண்பர்களுக்கும் ...
கட்செவி அஞ்சல் புதுப்பேட்டை அரசுமேல்நிலைப் பள்ளி
குழு நண்பர்களுக்கும் நன்றி ...நன்றி...நன்றி....!

விடை கொடு எம் தாயே ...1.
பள்ளி என்ற எங்கள் இரண்டாம் இல்லமே ...!
வாழ்வளித்த வள்ளலே ...!
மனச் சோர்வு ஏற்படும் காலங்களில்
உன் மடியில் தலைவைத்து கடந்த கால கனவு வாழ்க்கையில் மூழ்கி
புத்துணர்வு பெற்று மகிழ்வெனும் முத்தெடுக்க
மீண்டும் வருவேன் ...
விழிகள் பணிக்க விடைபெறுகிறேன் ....!
போய் வருகிறேன்...!