Sunday 14 January 2018

பள்ளி வாசல் வரை மீண்டும் ஒரு பயணம்


எல்லோருக்கும் போகி என்பது
பழையன கழிந்து புதியன புகுவது
ஆனால் இன்று குழுமியுள்ள எங்களுக்கோ
புதியன மறந்துபோய்
பழையன புகுந்து மகிழ்வது என்றானது !

ஆம் !

போகியன்று நடைபெற்ற புத்தொளிர் பள்ளி துவக்கவிழாவில்
பங்கேற்ற ஒவ்வொருவரும் தனது  நிகழ்காலம் தொலைத்து
கடந்தகால நினைவுகளை மீட்டெடுத்து
மலரும் நினைவுகளில் மூழ்கித்திளைத்து
கண்கள் பனித்திருந்தனர்.
அந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகள் பகிர்வதே இப்பதிவின் நோக்கம் !

13-01-2018 ஒரு புனித நாள் .
நாங்கள் கல்வியும் கலைகளும்  பயின்ற
புதுப்பேட்டை அரசுமேல் நிலைப் பள்ளி
என்னும் ஆலயத்தின் புணருத்தாரன மகாபிஷேக நாள்
எங்களுக்கு ஆசிரியர்கள் என்ற தேவ ஆசீர்வாதம்
கிடைக்கப் பெறச் செய்த தேவாலயத்தின்
மீள் உயிர்த்தெழு திருவிழா !
உலக வாழ்க்கைக்கான கல்விக்காய்
ஆசான்கள் என்ற பேரருளாளர்களிடம் தொழுகை நடத்திய
எங்கள் பள்ளிவாசலின் சந்தன உரூஸ் பண்டிகை !

தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகள் ஒன்றிரண்டு தவிர
ஏனைய பள்ளிகளின் நிலை ...?
அநேகமாக அவை குத்துயிரும் குலை உயிருமாய்த்தான் இருக்கின்றன என்னும் நெஞ்சில் அறையும் உண்மையின் நிதர்சனத்தை
யாரும் மறுக்கப் போவதில்லை ...!
அப்படிப்பட்ட அநேகப் பள்ளிகளில் ஒன்றுதான் எம் பள்ளியும் .!
குடியிருந்த கோவிலாம் தாய் சீக்கோடு போராடுவதை
எந்த தனயந்தான் பார்த்துக்கொண்டு சகித்திருப்பான் ?
பள்ளியும் நாம் குடியிருந்த கோவில்தானே !

எம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர்
தற்போது பெரிய பெரிய பதவிகளிலும்
பல்வேறு உயர்ந்த பணிகளிலும் பணியாற்றி
பாரெங்கும் பவனி வருகிறார்கள்!
தாங்கள் பெற்ற இச்சிறப்புக்கு காரணமான பள்ளியின்
நிலை மாற்றிட ...சீர்தூக்கிட ...
இன்று பயிலும்
நம் வருங்கால  இந்தியாவின் எதிர்காலங்கள்
இடையூறின்றி கல்விபயில
சரியான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித்  தர  எண்ணம்கொண்டு
தினகரன் என்ற சாமிநாதன் மற்றும் I P S அலுவலர் லோகநாதன்
என்ற இரு நாதர்களும் இதற்கான இறைத்  தூதர்களானார்கள் !
வாட்சப் என்று அழைக்கப்படும் கட்செவி   அஞ்சலில்
புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி என்ற குழுவைத்  துவக்கினார்கள்
இயன்றபோதெல்லாம் தேடித்தேடி நண்பர்களை இணைத்தார்கள் .
சிலர் செய்தி தெரிந்து விரும்பி விரும்பி நாடி இணைந்தார்கள்
அவ்வப்போது ஒன்றுகூடி ஆவண செய்ய ஆலோசித்தார்கள் !
திட்டங்கள் தீட்டினார்கள் ...மற்றோர்க்கும் பகிர்ந்தார்கள்
தன்கொடையும் நன்கொடையுமாய் சேர்ந்த பணத்தால்  பிறந்தது
புத்தொளிர் பள்ளி சொல்லவொணா துன்பங்களுக்குப் பிறகு
துன்பம் என்று கூறினாலும் கூட
கவியரசர் கண்ணதாசனின் மொழியில்கூறினால்
அதுவொரு துன்பமான இன்பம் அவர்களுக்கு !
ஒரு பிள்ளையை ஈன்றெடுக்க
ஒரு தாய் படும் வேதனைக்கு சற்றேனும் குறைவில்லாதது
இப்பணியின்  சுகமான சுமைகள் !
ராகவன் ,மணிவண்ணன் ,சசி , கோபி,
விஜயகுமார் ,லக்ஷ்மி நாராயணன்
செந்தில் ,பாஸ்கர்,அருண் கார்த்திக் ,
பாபு,கோபால்,பாலா ,ரமேஷ் ,
உமா  சங்கர் ,நாராயணன் , விவேக் ,சுரேஷ்
என இப்பணிக்காக உடனிருந்து பாடுபட்ட
நண்பர்களின் பட்டியல் இன்னும் இன்னும் மிக நீளமானது ...
பட்டியலில் இடம் பெறாதோரின் மறைமுக ஒத்துழைப்பும்
மறுக்கவோ ,மறைக்கவோ ,மறக்கவோ முடியாதது .

எல்லோரின் கைகோர்ப்பினாலும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறைஅலுவலர்கள்  ,காவல்துறை அலுவலர்களின்
ஒத்துழைப்பாலும் பள்ளி மெருகேறியது
பல கட்டமாக பணிகள் நடைபெற்றன ...நிறைவு பெற்றன .!
குடிநீர்த்தொட்டி தொடங்கி கழிப்பறை வரையிலும்
விழாமேடை தொடங்கி ஸ்மார்ட் க்ளாஸ் வரையிலும்
புதியதொரு நூலகம் தொடங்கி அகலப்படுத்தப்பட்ட பள்ளி வாசல் வரை
இருக்கைகள் சீரமைப்பு தொடங்கி மழைநீர் தேங்காதிருக்க
மண் அடித்து தரைஉயர்த்துவது வரையிலும் ...
என புனரமைப்புப் பணிகள் நீண்டு பள்ளி முழுமைக்கும்
வண்ணம்பூசுவது வரை நீண்டு நின்றன ...!
அனைத்தையும் குறைவின்றி முடித்தார்கள் !
பெற்ற பிள்ளைகளின் பெருமுயற்சியால் ,பேரன்பினால்
இன்று இதோ புத்துயிர் பெற்று பூரித்திருக்கிறாள்
எங்கள் பள்ளியெனும் நற்றாய் !

இத்துணை யாரும் முயற்சிக்குப் பெருவிழா எடுக்க வேண்டாமா ?
தஞ்சை சரக காவல்துறை ஐ பி எஸ் அதிகாரியும்
நம் பள்ளியின் முன்னாள் மாணவருமான
திரு லோகநாதன் அவர்களின் சீரிய தலைமையிலும் ,
கடலூர் ஆட்சியர் திரு பிரசாந்த் மு வடனரே அவர்களின்
முனைப்பான  முன்னிலையிலும்  ,
கடலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர்
திரு விஜயகுமார் அவர்கள் சிறப்பு சேர்க்கவும்,
மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் அவர்களும்
பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர்
திரு காமராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்கவும்
தீர்மானிக்கப் பட்டு அழைப்பிதழ் அச்சானது ...1
தமக்கு கல்வி போதித்த ...தற்போது ஒய்வு பெற்று
நிறைவாக வாழ்ந்துவரும் அனைத்து ஆசான்களையும்
திசைக்கு கொ ருவராய் தேடித் தேடி அழைப்பு வழங்கினார்கள் !
தமக்கு முன்னும் பின்னுமாய் பயின்ற
அனேக சகோதரர்களையும் ஒருங்கிணைத்தார்கள்1





இதோ இன்றுதான் விழா நாள் ...!
பொங்கலுக்காக ஊருக்கு வரும் அனைவரும்
ஒன்றுகூடும்  பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி
இப்பொன்னாளாம் போகி நான்னாளை தேர்வு செய்து
திரளாக ஒன்றுகூடி விழா எடுக்கின்றனர் தாம் குடியிருந்த கோயிலுக்கு !
காலை முதலே தன்னோடு கல்வி பயின்ற சக தோழர்களைக் காணவும்
தங்களுக்கு கல்விச் செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல்களைக் காணவும் கூடிநின்ற அந்நாளைய மாணவர் கூட்டம் முதல்
தாம் பள்ளியின் புத்தொளிர் திருநாள்விழா
தாம் பயிலும்  காலத்தில் நடப்பதற்கான பேறு  பெற்ற  பூரிப்புடன்  கூடியிருந்த இந்நாளைய மாணவர் கூட்டம் வரை
தாம் பணிபுரிந்த பள்ளியின் இந்நாள் சூழலையும்
தம் மாணாக்கர்கள் எய்தியுள்ள உயர்வு கண்டு பூரிக்கவும்
வருகைபுரிந்துள்ள அந்நாள் ஆசிரியர்கள் முதல்
இப்போது பணிபுரியும் இந்நாள் ஆசிரியர்கள் வரை
என பள்ளி வளாகமே மகிழ்ச்சியலைகளால்
நிரம்பி வழிந்தது ...!






பள்ளி வாசலின் முன்புறம் அந்நாள் மாணவர்கள் சிலரும்
இந்நாள் ஆசிரியர்கள் சிலரும் இணைந்து
விழாவுக்கு வரும் விருந்தினர்களுக்கு
முகமன் கூறி பன்னீர் தூவியும் சந்தனம் அளித்தும்
வரவேற்றவண்ணம் இருந்தனர் .






கடந்த ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் கூட்டம்  ஒரு புறம்
கல்லூரியின் இறுதியாண்டு பயிலும் மாணவர் கூட்டம் ஒருபுறம் ...
பணியில் சேர்ந்து  தமது வாழ்க்கையை
செம்மைப் படுத்திக்கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம் ஒருபுறம்
என கூடி கும்மாளமடித்துக்கொண்டும்
சுய படம்( செல்பி ) குழுப்படம் (குரூபி) என
செல்போன் கொண்டு க்ளிக்கியபடி இருந்த காட்சிகள்
ஒருபுறம் தென்பட்டன .








மறுபுறமோ மிக வயதானவர்களும் ,
நடுத்தர வயதானவர்களும் தம்மோடு பயின்ற
தம் வகுப்புத் தோழர்களை
விழிகளால் கூட்டத்திடையே தேடுவதும்
அவரைக் கண்ணுற்ற கணத்தில்
வியப்பும் பரவசமும் கலந்த மின்னல் கண்களில் வெட்ட ,
கரங்கள் கோர்த்து நெகிழ்ந்து நலம் விசாரித்த காட்சிகள்
ஆங்காங்கே கண்ணில் தென்பட்டன

 .

இன்னொருபுறம் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்று
வெவ்வேறு பகுதிகளில் வசித்துவரும் ஆசிரியர்கள்
தங்களோடு பணியாற்றி பிரிந்து சென்ற
சக ஆசிரிய சொந்தங்களை
நீண்ட வருடங்கள் கழித்து சந்திக்கும் மகிழ்ச்சி
தமது முகத்தில் வெடிக்க
பரவசத்துடன் பேசிமகிழ்ந்ததையும் காண முடிந்தது .

வேறொருபுறம் தம்மிடம் பயின்ற மாணாக்கர்களின் உயர்வு கண்டு அவர்களை ஏற்றிவிட்ட ஏணிகள்
பெருமிதத்துடன் பூரித்தபடி
அவர்களோடு மனம் விட்டுப் பேசி சிலாகித்து
மகிழ்ந்த நிகழ்வுகளும் அரங்கேறிக்கொண்டிருந்தன .
தமது அன்றைய ஆசான்களோடு
தம் குடும்பத்தாருடன் இணைந்து
அந்த நெகிழ்வு நொடிகளை
தமது கை பேசிகளில் காட்சிகளாகப்
பதிவு செய்த வண்ணம் இருந்தனர் சிலர் .

சரியாக 10.30 மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வருகைதர
தலைமை ஆசிரியரும் விழாக் குழுவினரும் அவரை வரவேற்றனர் .
பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்
அணிவகுத்து கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர் .




பள்ளியின் முன்னாள் மாணவரும்
கலைச் சோலை இசை நாட்டிய பள்ளியின் குருவுமான
திரு  சுரேஷ் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார் .



முதல் நிகழ்வாக குத்துவிளக்கேற்றும் மங்கள நிகழ்வு ...!
ஆட்சியர் ,காவல் துறை துணை துறைத் தலைவர் ,
காவல் கண்காணிப்பாளர்,மாவட்டக் கல்வி அலுவலர் ,
தலைமை ஆசிரியர் ஆகிய ஐவரும்
குத்து விளக்கின் ஐந்து முகங்களுக்கும் ஒளியூட்டினார்கள் .

அடுத்து ஸ்மார்ட் கிளாஸ் ,புதிய  நூலகம்,
புதிய குடிநீர் தொட்டி, புதுப்பிக்கப் பட்ட ஆய்வகங்கள்
இவை அனைத்தும் விருந்தினர்களால் முறையாக துவக்கப்பட்டு
பள்ளிக்கு அர்பணிக்கப் பட்டன .






அதனைத்தொடர்ந்து குழுவின் ஒருங்கிணைப்பாளர்
திரு தினகரன் சாமிநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி
இந்நிகழ்வு டத்தொடங்கிய விதம் ,ஒருங்கிணைத்த அனுபவங்கள் ,
பட்ட சிரமங்கள் , தோள்கொடுத்த தோழர்கள் என
அனைத்தையும் சுருக்கமாகக் கூறினார் .




அதன் நீட்சியாக நடன ஆசிரியர் சுரேஷ் நிகழ்த்திய
ஒரு வரவேற்பு நடனம் ..பரத நாட்டியம்...
திருக்குறள் இசையோடு ஒலிக்க
ஜதிகளுக்கு ஏற்ப சிறப்பான அபிநயங்களோடு
முகபாவனைகளோடு மிளிர்ந்தது நடனம்.



அதனைத் தொடர்ந்து  சிறப்பு விருந்தினர்கள்
மேடைக்கு அழைக்கப்பட்டார்கள் .
இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற
ஆசிரியர்களுக்கு  பொன்னாடை போர்த்தி மலர்க்கொத்து  வழங்கி
நினைவுப் பரிசாக நான்கு நூல்களும் வழங்கினார்கள்.



நேரமின்மை  காரணமாக  ஆசிரியர்கள் சிலர் மட்டுமே
தங்கள்  அனுபவங்களை பகிர முடிந்தது .

தலைமையுரை நிகழ்த்திய திரு லோகநாதன் அவர்கள்
தாம் இப்பள்ளியின் மரத்தடியில் அமர்ந்து பயின்ற
பசுமையான நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.






வடமாநிலத்தைச் சேர்ந்த நமது ஆட்சியரோ
முற்றிலும் அழகுத்  தமிழில் பேசி
அனைவரையும் வியப்புக்குள்   ஆழ்த்தினார்.
தனது பலமானபணிச் சுமைக்கு இடையிலும்
மிகப் பொறுமையோடு ஒவ்வொரு நிகழ்வையும்
அவர் மலர்ந்த முகத்தோடு ரசித்தது
நம் மாணவர்களின் இந்த கடும் உழைப்புக்கும் , உணர்வுகளுக்கும்
அவர் தந்த  மரியாதையை வெளிப்படுத்துவதாகவே உணர்ந்தேன்.
அதை அவரது வார்த்தைகளும் வெளிப்படுத்தின .
நான் விரைந்து செல்ல வேண்டும் என்பதற்க்காக
உங்கள் நிகழ்வின் நீளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று
உரைத்தது முற்றிலும் அவருடைய பெருந்தன்மை .



மாவட்டக் கல்வி அலுவலர் திரு இராஜேந்திரன் அவர்கள்
பேசும்போது ..மாணவர்களை நோக்கி
நீங்கள் திரைப்படங்களில் மட்டுமே கண்ட நிகழ்வுகளை
உங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
நிஜமாக உங்கள் பள்ளியில்
உங்கள் கண்முன்னே  காட்டியிருக்கிறார்கள்.
இதனையே முன்னுதாரணமாகக் கொண்டு
நீங்களும் வாழ்வில் முன்னேறிய பிறகு
உங்கள் பள்ளியை மறக்காமல்
அதன் முன்னேற்றத்திற்கு உங்கள் பங்களிப்பை
அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .









பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின்
பொருளாளர் பேசுகையில்
மாவட்ட ஆட்சியர் முழுக்க  முழுக்க  அழகுத்  தமிழில்
பேசியதை சிலாகித்துப் பாராட்டியதோடு அல்லாமல்
இந்நிகழ்வு வருகை தந்த அனைவருக்குமே
ஒரு புது இரத்தம் பாய்ச்சியதாகவும்
அனைவருக்குமே தம் பள்ளிக்கு ஏதேனும் செய்தாக வேண்டும்
என்ற எண்ணத்தை தூண்டி ஓர் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார் .

முன்னாள் மாணவர் திரு ராஜா அனைவருக்கும் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது .



பின்னர் அனைவரும் அதாவது அங்கு வருகை புரிந்த இப்பள்ளியின்  முன்னாள்  ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள்,
சிறப்பு விருந்தினர்கள் ,முன்னாள் மாணவர்கள்
சேர்ந்து ஒரு குழுப்படம் எடுத்துக்கொண்டார்கள் .
பின்னர் அக்குழுப்படம் லேமினேட் செய்யப்பட்டு
அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது .

இந்நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த
இந்நாளைய பள்ளி மாணவர்கள் ,
முன்னாள் மாணவர்கள் ,பொதுமக்கள் ,
சிறப்பு விருந்தினர்கள்என அனைவருக்கும்
சிறப்பான அறுசுவை உணவு மத்திய விருந்தாக அளிக்கப்பட்டது .

இந்த பரபரப்பான உலகில் ...
தனது எதிர்காலத்தைத் தேடி நிகழகாலத்தைக் கூட
சரிவர நுகராமல் ஓடும் அதிவேக ஓட்டத்தில்
எங்களையெல்லாம் மீண்டும் கடந்தகாலத்திற்கே அழைத்துச் சென்று எங்களது பள்ளிக்கூடப் பெற்றோர்களையும்
பதின்பருவ நணபர்களையும் சந்தித்து அளவளாவ
வாய்ப்பளித்த இந்நிகழ்வு ...இந்நாள்...எங்கள் ஒவ்வொருவரின்
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்....
வாழ்நாட்கள்   என்னும் காகிதங்களிடையே
இணைக்கப்பட்ட ஒரு போர்காகிதமாகவே திகழும் என்பதில் ஐயமில்லை .
இவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த
தினகரன் சாமிநாதன்  &  ராகவன் மற்றும்
சார்ந்த நண்பர்களுக்கும் ...
கட்செவி அஞ்சல் புதுப்பேட்டை அரசுமேல்நிலைப் பள்ளி
குழு நண்பர்களுக்கும் நன்றி ...நன்றி...நன்றி....!

விடை கொடு எம் தாயே ...1.
பள்ளி என்ற எங்கள் இரண்டாம் இல்லமே ...!
வாழ்வளித்த வள்ளலே ...!
மனச் சோர்வு ஏற்படும் காலங்களில்
உன் மடியில் தலைவைத்து கடந்த கால கனவு வாழ்க்கையில் மூழ்கி
புத்துணர்வு பெற்று மகிழ்வெனும் முத்தெடுக்க
மீண்டும் வருவேன் ...
விழிகள் பணிக்க விடைபெறுகிறேன் ....!
போய் வருகிறேன்...!



































No comments:

Post a Comment