Sunday 14 January 2018

பள்ளிக்கு ஓர் பள்ளியெழுச்சி

பள்ளிக்கு ஓர் பள்ளியெழுச்சி

இது என் தாய்க்கு நான் பாடும் தாலாட்டு
என்தாய்க்கு என்றா கூறினேன் ...?
இல்லை ...இல்லை...நம் தாய்க்கு
தாலாட்டு என்றா கூறினேன் ...?
இல்லை இல்லை ...
நான் என்ன இவளை உறங்க வைக்கவா போகிறேன் ?
அல்லவே ...
உற்சாகப் படுத்தத்தானே போகிறேன் ...!
அப்படியானால்  இவளை துயிலெழுப்ப
நான் பாடும் சுப்ரபாதம் ...
திருப்பள்ளியெழுச்சி ...
பாரதியும்  பாடினான் அன்று
பாரதமாதாவுக்கு ஒரு பள்ளியெழுச்சி
இன்று இந்த மாணவ நண்பனும் பாடுகிறேன்
என் பள்ளிக்கும் ஒரு பள்ளியெழுச்சி
இதற்கு காரணம் என் மாணவ சகோதர்களின்
பள்ளிக்காய் திரண்ட சீர்மிகு எழுச்சி !

பள்ளிக் கூடம்
இரண்டு வார்த்தைகளில் ஒரு கவிதை
ஏழு எழுத்துக்களில் எனக்கு வாய்த்த ஒரு அம்மா
எனக்கு மட்டுமா?
இதை இங்கே கூட்டமாய் குழுமி இருக்கிறோமே
நம் அனைவருக்கும் கூட
இவள்தானே தாயுமானவள் ...!
இன்னுமேன்உ றக்கம் ...துயிலெழு !

நம்மை ஈன்ற அன்னை கூட
நம்மை சுமந்ததென்னவோ பத்து மாதங்கள்தான்
ஆனால் எம் தாயே...!
ஏழு ஆண்டுகள் அல்லவா எங்களை சுமந்திருந்தாய்
உன் வகுப்பறை என்னும் கருவறையில்
அன்று மாணவனாய்க் கருக்கொண்டோம்
எங்கள் ஆசான்கள் ஊட்டிய அமுதக்  கல்விப்  பாலைப்
பருகிய காரணத்தால் அல்லவா இன்று
ஆசிரியனாய்
மருத்துவனாய்
பொறியாளனாய்
காவல்துறை அலுவலனாய்
வழக்கறிஞனாய்
விஞ்ஞானியாய்
கலைஞனாய்
கவிஞனாய்
இன்னும் இன்னும்
பல்கலை வித்தகனாய் உருக்கொண்டோம்...!
அத்தனைக்கும் மேலாய்
நல்ல மனிதனாய் இருக்கின்றோம்...!
எமையெல்லாம் ஆசிர்வதிக்க எண்ணமில்லையா../
விரைந்து துயிலெழு 1

அன்று தொடங்கி இன்று வரையிலும்
மாணவச் சமுதாயமாகிய எங்களையெல்லாம்
ஆசான்கள் என்னும் சிற்பிகள் கொண்டு
அனுபவம் என்னும் உளியினால்
செதுக்கிச் சிலையாக்கும் சீர்மிகு பணிக்குக்
களம்  அமைத்துக் கொடுக்கும்
சிற்பக்  கூடம் அல்லவா நீ!
சீக்கிரம் துயிலெழு !

நூற்றாண்டுகளின் நுழைவாயிலை நோக்கி
பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் உனக்கு
ஆண்டுகள் பல கடந்தமையால்
மூப்பு வந்தது போலும்...!
உன் மக்கள் அல்லவா நாங்கள்?
உன் குன்றிய உடல் கண்டு மனம் நொந்தோம்
உன் மூப்பை  நீக்கிட நாங்கள் மனம் கொண்டோம்
எங்களின்  ஒரு சிலரின் பகீரதப் பிரயத்தனம் காரணமாய்
மீண்டும் நீ இளமை கொண்டாய்
புத்துணர்வு பெற்று இன்று
புத்தொளிர் பள்ளியானாய்
பெருமிதத்துடன் பூரித்து நிற்கிறாய்!
போதும் உறக்கம் ...! உடனே துயிலெழு !

எம் தாயே ...!
குடியிருந்த கோயில் காண நாங்கள்
குவிந்துள்ளோம் ஒன்றாய் இன்று...!
பல தலைமுறைகள் உன்னால்தான் இன்று
நாங்கள் அனைவரும் உன்னில் இன்று ...!
வாழ்விற்கான பாதையை காட்டிய வள்ளலே ...!
வாழ்வாங்கு நாங்கள் வாழும் செய்திகள் பகிர
எங்கள் கால்கள் உனக்கான பாதை நோக்கப் பயணப்பட்டன
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயாய்
நீ திகழும் கோலம் காண கூடியுள்ளோம் இங்கு.
நின் பாதமலர் தொழுகின்றோம்
எம் பள்ளியே துயிலெழு !

இதோ நாங்களெல்லாம்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி மூழ்கி
மலரும் நினைவுகளை
முத்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம்!
நெகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்து
பதின்பருவ நினைவுகளை
அசை போட்டு மகிழ்கின்றோம் !
அறிவுக் கண் திறந்த  ஆசான்களையெல்லாம்
ஒருங்கே கண்டு கண்கள்  பனித்திருக்கின்றோம் !
ஒளிவிளக்கே துயிலெழு!


உன்னால் நாங்கள் பெருமை அடைந்தோம்...!
இன்று உன்னையும் நாங்கள் பெருமைப் படுத்துகின்றோம்!
இப்பள்ளியில் படிப்பதனால்  பெருமையடைகின்றோம்...!
இப்பள்ளியும் எங்களால் பெருமையடைச் செய்வோம்
என்ற உறுதிமொழி ஏற்றோம் அன்று !
அவ்வுறுதிமொழியினை நிறைவேற்றி
அனைவரும் உன்முன்னே இன்று !
அன்பே துயிலெழு!

புத்துயிர்  பெற்ற  எம் புத்தொளிர் பள்ளியே...!
எம் வாரிசுகளின் வருங்காலத்தையும்
உன்வசமே ஒப்படைக்கின்றோம்
எங்களை போன்றே
அவர்களையும் செதுக்கியெடு!
செம்மைப் படுத்திச் சீர்தூக்கு !
உன்னால் சிறப்புற
உன்னால் மேம்பட
உன்னால் உயர்வடைய
இதோ எம் மாணவர் சமுத்திரம்
உன்முன் தவம் கிடக்கின்றது !
உறக்கம்போதும் அம்மா உடனே துயிலெழு !

எமக்கு அறிவைப் புகட்டிய ஆசான்களுக்கும்
எம் பிள்ளைப் பருவக் குறும்புகளுக்கு
இடம் கொடுத்த உனக்கும்
என் நெகிழ்ச்சிமிகு சமர்ப்பணங்கள் !
என்போன்றே ஆயிரமாயிரம்பேர்
சமர்ப்பணங்கள் ஏற்றிட
எம்தாய் நீ துயிலெழு!

நினைவலைகளில் நீந்திய களிப்புடன் .....!
வாய்ப்புக்கு நன்றி பகிர்ந்து
வழிவிடுகின்றேன் வரும் காலத்திற்கு...!
வசந்தங்கள் காத்திருக்கின்றன ...!
வாருங்கள் என் சொந்தங்களே!

























No comments:

Post a Comment