Friday 9 October 2015

கலை விழா போட்டிகள்

            அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கடலூர் கல்வி மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகள் நடைபெற்றன .இம்மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் நடக்கவிருந்த இப்போட்டிகள் முன்னதாகவே 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்றன .அதற்கான சுற்றறிக்கை 7 ஆம் தேதி மதியம் தலைமையாசிரியரால் வழங்கப்பட்டு ...நன்கு கவனிக்கவும் 7 ஆம் தேதிப் போட்டிக்காக 7 ஆம் தேதி சுற்றறிக்கை ...காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் தேர்வுத் தாட்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கிக் கொண்டிருந்த சக ஆசிரியர்களின் பொருமல்களுக்கிடையே -முனு முனுப்புகளுக்கிடையே மாணவர்களை இனம் கண்டு 2 மணி  நேரத்திற்குள் அரை குறையாக பயிற்சி அளித்து பெற்றோர்களிடம் தொலைபேசி மூலம் அனுமதி வாங்கி -ஒரு வழியாக 8 ஆம் தேதியன்று  கடலூர் மஞ்சக்குப்பம் அனைவருக்கும் கல்வி இயக்க வளாகத்தில் போட்டிகளில் கலந்துகொண்டனர்.அங்கு சென்று போட்டிகள் ஒருங்கிணைப்பாளரிடம் விசாரித்ததில் மேலிடத்திலிருந்து போட்டிகளை விரைந்து முடிக்கச் சொல்லி உத்தரவு என்றார் ,உண்மைதான் மேலிடது உத்தரவுகளை அடுத்தடுத்த தளங்களில் பின் பற்றுவதில் ஏதும் சிக்கலில்லை .கல்வி இயக்குனர்கள் சொன்னால் முதன்மைக் கல்வி அதிகாரிகளும் ,முதன்மைக் கல்வி அதிகாரி சொன்னால் மாவட்டக் கல்வி அதிகாரிகளும் அவர்கள் இருவரும் சொன்னால் உடனே தலைமை ஆசிரியர்களும் ...தலைமை ஆசிரியர் சொன்னால் அனைத்து ஆசிரியர்கள் கேட்டு உடனே அதன்படி செயல்படுவதும் ...எல்லாம் இந்த மட்டம் வரை சரியாக போய்க்கொண்டுதான் இருக்கிறது .இதற்குப் பின்தான் சிக்கலே ...ஆசிரியர்கள் சொன்னால் மாணவர்கள் கேட்கிறார்களா?அதற்கான சூழல் இப்போது இருக்கிறதா? போட்டியில் கலந்துகொள்வதற்கான 20 மாணவர்களை அடுத்த நாள் காலை ஆயத்தப் படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது எப்படியோ ...கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த போட்டிகளில் எங்கள் பள்ளியும் கலந்துகொண்டுவிட்டது .வெற்றி தோல்வி பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள முடியவில்லை .தகுந்த பயிற்சியே இல்லாமல் ...ஒத்திகை இல்லாமல் வெற்றியை எதிர்பார்க்க என்ன அருகதை இருக்கிறது .அநேகமாக வந்திருந்த எல்லா பள்ளிகளுக்கும் இதே நிலைமைதான் . போட்டிகள் எல்லாமே கடமைக்கு நடைபெறுவதாக தோன்றுகிறது .உண்மையான அர்பணிப்பு உணர்வில்லாமல் கடமைக்கு செய்கின்ற எதுவுமே வீண்தான் .மத்திய அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை மூலம் நடத்தும் இப்போட்டிகள் முதலில் கல்வி மாவட்ட அளவிலும் ,பின்னர் மாவட்ட அளவிலும் அதனைத் தொடர்ந்து மாநில அளவிலும் நிறைவாக தேசிய அளவிலும் நடைபெற உள்ளன .கலைவிழாவின் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 12 ஆம் தேதியன்று கடலூரில் நடைபெற உள்ளன  .அவையாவது நல்லபடியாக நடக்கட்டும் .அதிருக்கட்டும் ...நான் அழைக்கும்போது மாணவர்கள் ஆர்வத்தோடு வரவேண்டுமே ...என் மீது ஒரு பிடிப்பு வேண்டுமே ... முடிந்த பின்னர் அவர்கள் அனைவரையும் கடலூர் தேவனாம்பட்டினக் கடற்கரைக்கு ...சில்வர் பீச் .அழைத்துச் சென்று கடற்கரையில் மகிழ்ச்சியாக அவர்களை விளையாடவிட்டு அவர்கள் மகிழ்வதைப் பார்த்து நானும் மகிழ்ந்து அவர்களுடன் மகிழ்ச்சியில் பங்கேற்று
பின்னர் அவர்களை பத்திரமாக பண்ணுருட்டிக்கு அழைத்து வந்தபிறகுதான் மனம் நிம்மதியாயிற்று .