Monday 7 January 2019

ம.செ உடன் சந்திப்பு

ஓவியர் மணியம் செல்வன் அவர்களுடன் ஒரு சந்திப்பு

ஓவியர்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களையும் , மாருதி அவர்களையும் சந்திக்க எண்ணம் கொண்டோம்.
சென்னையில் நடைபெற உள்ள ஜெயக்குமார் அயனிக்கோடு என்னும் ஓவியரின் தனிநபர் ஓவியக் கண்காட்சி மற்றும் சாதனை நிகழ்வுக்கு ஒன்று கூடும் நாள் அன்று சந்திக்க முடிவு செய்தோம்.
அதன்படி நான் அன்று அதிகாலை எனது மாணவன் சுந்தர் உடன் கிண்டியில் இருந்து மந்தைவெளிக்குப் பயணமானேன். முன்னதாக மயிலாப்பூர் சென்று  கபாலீஸ்வரர் , கற்பகாம்பாளை தரிசித்து, பின்னர் முண்டகக் கண்ணி அம்மன் ஆலயம் சென்று வழிபட்டு மற்ற ஓவியர்களின் வரவிற்காக் காத்திருந்தேன்.
ஆனால், எதிர்பாராத விதமாக கோவை ஓவியர் மணி ராஜ் முத்து அவர்கள் ஓவியர் ஜெயக்குமார் அவர்களின் நிகழ்வுக்கு புகைப்படம் எடுக்க வேண்டிய கட்டாயம்.
திண்டுகல் ஓவியர் சிவாஜி கணேசன் அவர்களோ தனது நண்பர் ஒருவரது சந்திப்பினால் காலதாமதம் செய்ய , எங்களை ஒருங்கிணைத்த காஞ்சிபுரம் தியாகராஜன் அண்ணனோ எங்கள் மூவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு தர்ம சங்கடத்தில்.பத்து மணிக்குள் மசெ. வீட்டில் இருப்பதாகத் திட்டம். ஆனால், இப்போது மணியோ 10. ஐத் தாண்டிக் கொண்டு இருந்தது.
சுந்தருக்கோ என்னை அவர்கள் இடத்தில் சேர்த்து விட்டு உடனே புறப்படுவதாக உத்தேசம். இவர்களோ வரும் வழியாகத் தெரியவில்லை. எனவே காஞ்சிபுரம் தியாகராஜன் அண்ணனிடம் சொல்லிவிட்டு நான் மட்டும் ஓவியர்களை
பார்த்து விட்டு வருவதற்குக் கிளம்பினேன் .
ம.செ சாரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டு சுந்தரை என்னுடன் வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன் அவனும் வரச் சம்மதித்தான்.
மயிலாப்பூரில் இருந்து ஸ்கூட்டி மந்தைவெளி நோக்கிக் கிளம்பியது. ம.செ.அவர்களின் இல்லம் நோக்கி வண்டி முன்னோட என் நினைவுகளோ எனது பதினெட்டாம் வயதை நோக்கிப் பின்னோடின. அனேகமாக இப்போதைக்கு 33வருடங்களுக்கு முன்பாக .அதாவது நான் ஓவிய ஆசிரியர் பயிற்சிக்கு செல்வதற்கும் முன்பாக .

இப்போது ஒரு சிறிய ப்ளாஷ்பேக்

நான் முறைப்படி ஓவியம் கற்றுக் கொள்வதற்கு முன்பு பிரபல வார , மாத இதழ்களில் வெளிவரும் கதைகளுக்கு ஓவியம் வரைந்து இருப்பார்கள் இல்லையா ... வினு, வர்ணம் , செல்வம் , மாருதி , ம.செ. ராமு , ஜெ (ஜெயராஜ்) , கோபுலு , ஜமால் , சுப்பு ( ரமணி ) போன்ற ஓவியர்களின் ஓவியங்களையும் , காலண்டர்களில் வரையும் ராஜா,சில் பி ,கொண்டையா ராஜூ போன்றவர்களின் ஓவியங்களைப் பார்த்து பார்த்து வரைந்து நானே வண்ணங்கள் தீட்டிப்பழகி என்னை ஒரு ஓவியனாகச் செதுக்கிக் கொண்டிருந்த நேரம். என் சித்திரப் பயணத்தை வண்ணங்களால் வசப்படுத்திக் கொண்டிருந்த வசந்த காலங்கள்.அமுதசுரபி , கல்கி போன்ற இதழ்களின் தீபாவளி மலர்களில் அழகிய வண்ண ஓவியங்களை வெளியிட்டு இருப்பதோடு , அவற்றை வரைந்த ஓவியர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு இருப்பர். அவற்றைப் பார்த்து பார்த்து அந்த மகத்தான மனிதர்களை நேரில் சந்திக்க ஆவல் வளர்ந்து கொண்டே இருந்தது.