Wednesday 10 December 2014

பாரதி

பாரதி ....
 பாரதத்தின் பெயரையே தன பெயரிலும் கூட சுமந்தவன் 
 பெயரில் மட்டுமா 
 நெஞ்சிலும் கூட அல்லவா ...
 தேடிச் சோறு நிதம் தின்று 
 என்ற பாடலுக்குத் தன்னையே உதாரணமாக்கி 
 வாழ்ந்து மறைந்தவன் பாரதி ...
 மறைந்தது அவன் உடல் மட்டும்தான் ...
 அவன் உணர்வுகள் இன்னும் உலகம் முழுக்க 
 வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன 
 கவிதைகள் வடிவில் ...
 பாட்டுக்கொரு புலவன் ,முண்டாசுக் கவிஞன்,....
 அவன் தனது முறுக்கு மீசையில் மட்டும் 
 தனது இந்த சமூகத்தின் அவலங்களுக்கு எதிரான 
 தன் கோபத்தை வைத்திருக்கவில்லை ...
 மாறாக தன்  கண்களிலும் கவிதைகளிலும்கூட வைத்திருக்கின்றான் ...
 அவன் உணர்வுப் பிழம்பு 
 கருத்துக் கனல் ...
 சிந்தனைப் புயல் ....
 செயல் சூறாவளி ...
அவன் ஒரு நல்ல கணவன் இல்லை ...
 நல்ல தகப்பனில்லை ...
 சராசரி மனிதனுமில்லை ....
 ஆனால் அப்படி இல்லாததனால்தான் 
 மிகுந்த  போற்றுதலுக்குரிய இந்தியனாக ...
 மிக நல்ல தமிழனாக 
 மிக உயர்ந்த  மனிதனாக ...வாழமுடிந்தது 
 நாம் ஒவ்வொருவரும் பாரதியைப் போல வாழாவிட்டாலும் அவனைபின்பற்றி வாழ முயலுவோமே ...!






Saturday 6 December 2014

யுவஸ்ரீ கலா பாரதி விருது

யுவஸ்ரீ கலா   பாரதி விருது 

                      எங்கள் பள்ளி மாணவர்களுள் கலை ,விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு யுவஸ்ரீ கலா பாரதி  என்ற பெருமை மிகு விருது 06-12-2014-சனிக்கிழமை  அன்று வழங்கப்பட்டது .மதுரை ,கோச்சடை என்னும் ஊரில் இயங்கி வரும் பாரதி யுவக் கேந்திரா என்ற தன்னார்வ அமைப்பு இதனை வழங்கியது .நெல்லை பாலு என்பவர் இதன் நிறுவனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
        காடாம்புலியூரில் நான் பணியாற்றியபோது கூட அங்கிருந்த மாணவர்கள் வினோத் ,சோழவேந்தன்,ஜெயபாலன்,ஜெயரட்சகன் உள்ளிட்டோருக்கு இவ்விருதுகளுக்கு விண்ணப்பித்து புதுவையில்  இவ்விருதுகளை பெற்று வந்தது குறிப்பிடத் தக்கது .பெரியவர்களாகியபின் சாதனைகள் புரிந்தால்தான் விருதுகள் பெற முடியும் என்ற நிலைமை மாற்றி சிறுவர் சிறுமியரும் அவர்களின் வயதுக்கேற்ற சாதனைகள் புரியும்போது அவற்றை அங்கீகரித்து அவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவப்படுத்துகின்ற நெல்லை பாலு அவர்களின் பெருந்தன்மை நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த  மாணவ மாணவியர்களுக்கு தன்னபிக்கையும் உற்சாகமும் பெருகி மேலும்  மேலும் சாதனைகள் புரிய உந்து சக்தியை வழங்கும் என்பதில் ஐயமில்லை .இதற்கும் முன்னரே என் அன்புக்குரிய மாணவன் சுந்தர் என்பவருக்கும் இந்த விருதை பெற வைத்தது மிக்க மகிழ்ச்சிக்குரியது .
              
           இந்த வருடம் எங்கள் பள்ளியின் மாணவர்கள் முரளி கிருஷ்ணன் (இசை)
சுரேந்திரன் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்),ராஜவிக்னேஷ் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்,வினாடி வினா),ராஜி (கட்டுரை),முகம்மது ஆஷிக் அலி (ஓவியம்),சரத்குமார் (அறிவியல் ஆய்வு) ஐயப்பன் (சிலம்பம், ஓவியம்),சபரிநாதன் (சிலம்பம்,),ஜெயவேல் (ஆளுநர் விருது பெற்ற சாரணர்),,திலீபன்(வினாடி வினா)ஆகிய மாணவர்கள் விருதுகளை பெற்றார்கள்! அந்த விருதுகளைப் பெற்ற மாணாவர்களின் முகங்களிலும், பெற்றோர்களின் முகங்களிலும் அப்படியொரு பெருமிதம் . அத்துடன் எனது தங்கை மகள் தரணீ ஸ்வரி ( ஓவியம் & இசை ) அவ்விருதைப்  பெற்றது எனக்குப் பெருமிதம் அளித்தது .
           விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .!
    











Thursday 4 December 2014

மனப்பண்புகள்

        சமீபத்தில் முக நூலில் ஆசிரியர் நாட்குறிப்பு என்ற 
           சக ஆசிரிய நண்பர் ,மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்தில் மனப்பண்புகளை வளர்க்கத்தவறுகிறோமோ?
என்று அங்கலாய்த்து இருந்தார் ....மனப்பன்புகளா ...? அப்படியென்றால் என்ன ? அது எங்கே கிடைக்கும் ...? கிலோ என்ன விலை ? என்று கேட்கும் நிலைக்கு ஏகப்பட்ட மாணவர்களும் அநேகமாக எல்லா பெற்றோர்களும் கேட்கும் நிலைக்குத் தள்ளப் பாட்டிருக்கிரார்கள் ...!
          மனப்பண்புகள் யாருக்கு வேண்டும்....?போய் குப்பையில் கொட்டுங்கள்...!பெற்றோருக்குத் தேவை ...வண்டி வண்டியாய்  மார்க்கு ...நல்ல காலேஜூல சீட்டு ...முடிஞ்சா வெளி நாட்டுல வேலை ...லட்ச லட்சமா பணம்... அதக் காரணம் காட்டி தன மகனுக்கு நல்ல பணம் காய்ச்சி மரமான பொண்ணு ....அவங்க வீட்டுல உறிஞ்சு எடுக்கற காரு ...பணம் ...தான் அனுபவிக்காத வசதிகளை தன் மகன் மூலமா அனுபவிசிடனும்னு துரத்துகின்ற வெறி....இன்னிக்கு படிச்ச ..படிக்காத ...அத்தனை பெற்றோர்களின் ...ஏன் ...ஆசிரியர்களாகிய நாம் உட்பட ...எல்லோருடைய எண்ணமே அப்படித்தானே இருக்கு ...! 
              முதலில்  தனியார் பள்ளிகள் மட்டுமே தேர்ச்சி விழுக்காட்டை முன்னிலைப் படுத்தி ஓடிக்கொண்டிருந்தன ...ஆனால் இப்போது அரசுப்பள்ளிகளே தேர்ச்சி சதவிகிதத்தை நோக்கி முடுக்கி விடப்பட்டுள்ளன...!இதற்கு மூல காரணம் அனைத்து உயரதிகாரிகள் ....அவர்கள் என்ன செய்வார்கள் ...? அவர்களது அதிகாரிகளுக்கு பதில் சொல்லி ஆகவேண்டுமே ...!எனவே அவர்களுக்கே தேவை ... மாணவர்களின் ஒழுக்கமோ ... கட்டுப் பாடான பள்ளிச் சூழலோ அல்ல ....!குறைந்த பட்சம் 90 % கு குறையாத தேர்ச்சி ...!எனவே அதிகாரிகள் ஒரு பக்கம் ...அடங்காப் பிடரி மாணவர்கள் ஒரு பக்கம் ...இடையில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவது பரிதாபத்துக்கு உரிய ஆசிரியர்களே ...!மாணவர்களை கண்டிக்கக் கூடாது ...தண்டிக்கக் கூடாது ...மனம் நோகும்படி பேசக் கூடாது ...ஆனால் அன்பாய் பேசித் திருத்தவேண்டும் ....அன்பாய் பேச ஆசிரியர்கள் தயார் ...கேட்டு உடனே திருந்தக் கூடிய சூழலிலா இன்றைய மாணவர் சமுதாயம் இருக்கிறது ..?இது எப்படி இருக்கிறது என்றால் ....அடுப்பு பற்ற வைக்கக் கூடாது ...பாத்திரம் வைக்கக் கூடாது ...ஆனால் சோறு மட்டும் தயாராகிவிடவேண்டும்....அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் ...முடியுமா...?அது போலத்தான்...!இந்த லட்சணத்தில் ஒரு உயரதிகாரி...ஆசிரியர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்," உங்களிடம் கொடுத்திருப்பது ஓட்டை சட்டி ...அது எங்களுக்கும் தெரியும் ...ஆனால் எங்களுக்கு கொழுக்கட்டை வெந்தாக வேண்டும்: "எப்படி இருக்கிறது கதை ...அதிகாரிகளின் வாயில் விழுந்து எழுந்திரிக்காமல் ...தன்  பணியை பாதுகாத்துக் கொள்வதே பெரும் தலைவலியாய்  இருக்கிற நேரத்தில்  ...நீதி போதனை வகுப்பாவது மண்ணாவது .... !
              அப்புறம் மாணவர்களுடன் நட்பாகப் பழகும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்களே ...அவர்கள் பிற ஆசிரியர்களுக்கு ...துரோகியாம் ...மாணவர்களுக்கு அதிக இடம் கொடுத்து மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் இருக்கும் பயத்தை (!?)நீக்கிவிடுகிறார்களாம் ...அது தெரியுமா உங்களுக்கு ...!
    நல்ல பழக்கங்களை ...வாழ்வியல் திறன்களை கற்பிக்கும் சாரண , நாட்டு நலப் பணி  இயக்கங்களில் உள்ள மாணவர்களையே கூட மதிப்பெண்களைக் காரணம் காட்டி அவர்களை மனதளவில் நசுக்கத் துடிக்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட ஆசிரியர்கள் முதலில் சிந்திக்க வேண்டும் ...!ஓவியம்,இசை ,நடனம், நாடகம் போன்ற தனித் திறன்களை,குழு மனப்பான்மையை வளர்க்கும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ...அதற்காகப் பாராட்டாவிட்டாலும்...நீ இதற்குத்தான் லாயக்கு ...படிப்பில் ஒன்னையும் காணோம் ...இதுல பெருசா கிழிச்சிட்டியா ...? போயி படிப்பப் பாரு ...இதெல்லாம் உனக்கு சோறு போடாது ...என்று மற்ற மாணவர்களிடையே நையாண்டி செய்யும் ஆசிரியர்கள்தன இன்றைய பள்ளிச் சூழலில் அதிகம் ...!
          இதே போல் சூழ்நிலை தொடர்ந்தால் ஆசிரியை ஒருவர் மாணவனால் கத்தியால் குத்தி பலி ... !கணினி ஆசிரியை  கன்னத்தில் மாணவர் அறைந்து காது கேட்கவில்லை ...போன்ற செய்திகள் ...சக மாணவனை குத்திக் கொன்ற மாணவன் போன்ற செய்திகள் என்றோ ஒரு நாள் வருவது போய் அன்றாட செய்திகளாய் மாறும் நிலை அருகில் இல்லை ...என்ன செய்யப் போகிறோம் நாம் ...? வெறும் சாட்சியாய் ...கையாலாகாத  தனமாய் நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர ...!

Sunday 30 November 2014

சித்தவடமடம்

          கடலூர் மாவட்டத்தில் பண்ணுருட்டி வட்டத்தில் திருவதிகைக்கு அருகில் அதாவது 7 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ளது புதுப்பேட்டை என்னும் பேரூராட்சி.அங்கு பக்கத்திலேயே கோட்டலாம்பாக்கம் என்னும் சிற்றூர். அங்கு உள்ளது சித்தவடமடம் என்னும் திருத்தலம். அதிகம் அறியப்படாத இதன் பெருமை இதோ உங்களுக்காக.
          தேவாரம் பாடிய நால்வருள் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார்.கல்யாண சுந்தரர் என்றும் ஆலால சுந்தரர் என்றும் போற்றப் படுகின்ற இவர் எம்பெருமான் தில்லை நடனமாடும் சிதம்பறேச்வரன்....திருஅதிகை உறையும் வீரட்டானத்துறை அம்மானால் மணம்  தவிழ்ந்த புத்தூர் என்னும் சிற்றூரில் திருமணம் தடுக்கப்பட்டு தடுத்தாட்கொண்ட வரலாறும் பின்னர் இறைவனால் வழிநடத்தப்பட்டு திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இறைவனை தொழுது 'பித்தா பிறை சூடி ..." என்ற பதிகம் பாடி மெய்யுருகி நின்றது பெரிய புராணத்தில் நாம் கண்டதுதான்.செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் அற்புத நடிப்பில் திருவருட் செல்வர் என்ற திரைப்படத்திலும் கண்டு ரசித்ததுதான்...பின்னர் நடந்த கதை ...இங்கு நாம் குறிப்பிட்டுள்ள சித்தவட மடத்தில் நடந்ததாக பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார்.அது என்ன கதை...?
       
           திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இறைவனை தரிசித்து பதிகங்கள் பல பாடி தொழுத நம் சுந்தரர் தம் திருமணக் கோலம் கலையாமல் திருத்துறையூரில் உள்ள சிஷ்ட குருநாதரைத் தொழுது பின் அப்போதைய ரோஜபுரி  என்னும் தற்போதைய புதுப்பேட்டை பகுதி வழியாக சிதம்பரத்திலே...சிற்றம்பலத்திலே ஆடுகின்ற நடராசப் பெருமானை கண்டு சேவிக்க எண்ணி திருவுளம் கொள்கிறார்.ஆனால் திருவதிகை வீரட்டானத்து திருத்தலத்திலே கோயில் கொண்டுள்ள வீரட்டாநேச்வரரை தரிசிக்க நினைத்தாலும் ...அங்கே உழவாரத் திருப்பணி செய்து வந்த திருநாவுக்கரசர் பெருமான் திருவடி பட்ட மண்ணை தம் பாதங்களால் தீண்ட அஞ்சிய காரணத்தால் ரோஜபுரிக்கு அருகில் கேடிலம்பாக்கம் என்னும் பகுதியை அடுத்திருந்த சித்த வட  மடத்தில் இரவு தங்குகிறார்.இரவு போஜனத்தை முடித்த சுந்தரர் வெளியில் இருந்த திண்ணை மேல் தலை வைத்துக் கன்னயர்கிறார்.உறக்கத்தின் நடுவில் தன தலிமேல் ஏதோ தீண்டப் பட்டு கண்விழித்த சுந்தரர் அது ஒரு வயதான வேதியரின் பாதம் என்பதை அறிந்து சற்றே தள்ளிப் படுக்கிறார்.ஆனால் மறுபடியும் கிழவனாரின் கால்கள் தன மேல் பட வேறு திண்ணைக்கு மாறி அங்கு துயில் கொள்கிறார்.ஆனால் அங்கும் தன உறக்கம் கெட வெகுண்டெழுந்த சுந்தரர் ஏய் கிழவா ...யார் நீ? எனக் கோபத்தோடு வினவ ... கிழவனார் ...என்னைத் தெரியவில்லையா ..என்று கேட்டு மறைய சிவபெருமான் அவ்விடத்து ரிஷப வாகனத்தில் அன்னை உமையாளோடு அம்மையப்பனாக காட்சி கொடுத்த இடம்தான் இப்போதைய கருவறை. ஆம்... இதுதான் சுந்தரருக்கு திருவடி சூட்டிய திருத்தலம்.அதைகண்டு பரவசமேய்திய சுந்தரர் ...தம்மானை அறியாத சாதியருளரோ எனத் துவங்கி பத்து பதிகங்களை திருவதிகையில் உள்ள வீரட்டானத்து இறைவனை விளித்து பாடியுள்ளார்..எனவே இது ஓர்  வைப்புத் தளம் .இங்குள்ள இறைவன் அருள்மிகு சிற்றம்பலனாதர்.இறைவி.. சிவகாம சுந்தரி.



                                                                                                           

அருள் மழை பொழியும்...!

Friday 28 November 2014

இந்தி திணிப்பு

     





 இந்தி எதிர்ப்பு ,சமஸ்கிருதம் எதிர்ப்பு ...இப்படி நம்மாட்களுக்கு எதையாவது எதிர்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்பதே ஒரு பெரிய மன வியாதியாகப் பார்க்கிறேன் நான் ...!இந்தி திணிப்பு என்பதை திணிப்பு என்று
என் எடுத்துக் கொள்கிறீர்கள்?இன்னும் ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு என்று எடுத்துக்கொள்வோமே...!அதுமட்டுமல்லாமல் வட மாநிலங்கள் பக்கம் போய் வந்தவர்களுக்கு தெரியும் ... இந்தி மொழியின் அருமையும் ... அதனை  தாம் கற்றுக் கொள்ளாமையால் பட்ட பாடுகளும்...!
     அப்படி நாம் ஒரு வேலை இந்தியை கற்றுக்கொண்டால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது. நம் தமிழ் மொழி காலங்களையும் விஞ்சி வாழும் மொழி .தமிழ்(தாய் ) மொழிமேல் பற்று வை ... பிற மொழிகளையும் கற்று வை ...என்பது மூத்தோர்கள் மொழி...!நம்மை இந்தி படிக்கவேண்டாம் என்று சொல்லி ...தமிழ் மொழியை வளர்க்கிறோம் என்று சொன்ன அரசியல்வாதிகளின் வாரிசுகள் ...வாரிசுகளின் வாரிசுகள் எல்லாரும் நவோதயா பள்ளிகளிலும் C B S E பள்ளிகளிலும் சேர்ந்து இந்தியிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்று தமிழ் மொழியில் தகராறாகி நாகரீக வளம் வருவதை நடைமுறையில் பார்த்தாலும் நமக்கெல்லாம் புத்தி வராது ...!உண்மையில் நம் அரசியல் வாதிகள் ஒன்றும் தமிழ் சேவையாற்ற அவதரிக்கவில்லை ...இந்தி திணிப்பு ...இலங்கைத் தமிழர் பிரச்சினை ,காவிரிப் பிரச்சினை ,முல்லைப் பெரியாறு பிரச்சினை ...இன்னபிற பிரசினைகளை ஊதி ஊதி பெரிதாக்கி அதில் குளிர் காய்ந்து ...அறிக்கைகள் விடுத்தது அரசியல் நடத்தி காய்கள் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.கடைசி தமிழன் இருக்கும் வரை தமிழும் இருக்கும்.அதுபோலவே கடைசி அரசியல்வாதி இருக்கும்வரை மேற்கண்ட பிரச்சினைகளும் இருந்தே தீரும். பிரச்சினைகள் தீர்ந்துவிட்டால் எப்படி அரசியல் நடத்துவது ,,....கடைசிவரையில் பிரச்சினைகளை தீரவிடாமல் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்வர் நம் அரசியல்வாதிகள் கட்சிபேதமின்றி ....! 
       நாம் இக் கூத்துகளை எல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் நகைச்சுவைக் காட்சிகளாய் எடுத்துக்கொண்டு சிரித்துத் தொலைத்துவிட்டு ...நடைமுறை வாழ்வை மனதில் கொண்டு...தமிழ் மொழின்மேல் தீராத காதல் கொண்டு ...இந்தி மொழி மட்டுமல்லாமல் முடிந்தால் இன்னும் சில மொழிகளையும் கற்றுக் கொண்டு...தமிழை ...தமிழன்னையை வாழ வைப்போம் ...!
      அது சரி ... மத்திய அமைச்சர் தருண் விஜெய் அவர்கள் இந்திமொழிமேல் மட்டும் பற்று (வெறி )வைத்து தமிழ் மொழிமேல் வெறுப்பு வைத்திருந்தால் அவையில் திருக்குறளை தன் குரலால் ஒலிக்கவைதிருப்பாரா ...தமிழ் மொழியின் சிறப்பை, திருக்குறளின் சிறப்பை ,பாரதியின் புகழை ...காசியில் அவர் வாழ்ந்த வீட்டின் சிறப்பை அவர் எவ்வளு சிலாகித்து பேசியிருக்கிறார்...பாரதி கூட யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றான்...அப்படியென்றால் அவன் பிறமொழிகளை கற்றதால் தானே அவற்றோடு நம் தமிழை ஒப்பிட முடிந்தது ...?
         அண்ணாவின் மொழிப் பற்று வாழ்க...!அவரது வாதத் திறமையை நிச்சயம் மெச்சுவோம் ....தமிழ் மொழி வாழ்க ...!ஹிந்தியையும் கற்றுக்கொண்டு பாரதமெங்கும் வளம் வருவோம் ...ஜெய் ஹிந்த் !


Wednesday 19 November 2014

வாழ்க நீ எம்மான் !

      நான் பணியாற்றும் பண்ணுருட்டி அரசு மேல் நிலைப் பள்ளியின் 

வெளி மதில் சுவற்றில் கண்ட கண்ட சுவரொட்டிகளை ஓட்டுவதை 

தடுப்பதற்காக முக நூல் நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் 

நிதி உதவியோடு 23 தலைவர்கள் மற்றும் சான்றோர்களின் உருவ 

ஓவியங்களை ஓவியர் சண்முகம் மூலமாக தீட்டினோம் . அரசு 

மேல்நிலைப் பள்ளியின் சுவரா இது என்று அவ்வழியே 

செல்வோறேல்லாம் வியந்து பாராட்டினர் .பத்திரிகைகளும் அது குறித்து 

பாராட்டி செய்திகள் வெளியிட்டன .அந்த வழியே செல்லும் பொது 

மக்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் கலை விருந்தளித்த ஓவியங்கலின் 

கதியைத்தான் நீங்கள் மேலே காண்கிறீர்கள்.குறிப்பாக நம் தேசத் தந்தை 

காந்தியடிகளின் திரு உருவத்தின் மேல் சமூக விரோதிகள் சிலர் 

செய்திருக்கும் கிறுக்கல்களைப் பாருங்கள்.செய்தது பொது மக்களா 

அல்லது மாணவர்களா என்று எங்களுக்கு தெரியவில்லை .ஆனால் 

பார்க்கும்போதெல்லாம் வேதனையாக இருக்கிறது.எப்போதும் 

நடமாட்டமுள்ள சாலை .. எதிர் புறங்களில் கடைகள்... இருந்தும் 

எப்போது இப்படி செய்கிறார்கள்...? ஒருவேளை ஊரெல்லாம் அடங்கிய 

பின் காத்திருந்து இப்படி செய்கிறார்களா?இதை தடுப்பதற்கு எதாவது 

வழி உள்ளதா...? அல்லது திருடனைப் பார்த்து திருந்த வேண்டுமா ... 

தெரியவில்லை ... !நண்பர்களிடம் இதை வேதனையோடு பகிர்கிறேன் .... !

வாழ்க அந்த கயவர்களின் தேச பக்தி ...வந்தே மாதரம் ...ஜெய் ஹிந்த் !




Saturday 25 October 2014

கனவு

புதிதாய் பூத்த பொன் காலைப் பொழுது ....

கண்விழித்துப் பார்த்தேன் ...

என் ஜன்னலுக்கு வெளியே மழை ....

விடியல் ... கனவிலா ...?

கனவு பலிக்குமா ...?


Sunday 12 October 2014

கனவுகள்

எத்தனையோபேர் கனவுகளும் 

உழைப்பும் சேமிப்பும் 

அடகுத் தாலியும் 

வங்கிக்கடனும் 

துருப்பிடித்துப்போய் 

கேட்பார் அற்றுக் கிடக்கின்றன

காவல்துறை வளாகத்தில் 

இருசக்கர வாகனங்கள் ...! 


விந்தைதான்

விந்தைதான் 

வேண்டாம்  என்று 

வெறுப்புடன் வீசி எறிகிறபோது 

குப்பையாவதெல்லாம்

வறியவர்கள்

விரும்பிச் சேகரிக்கும்போது 

செல்வமாகின்றனவே ...!

விந்தைதான் ! 

 

 

 

Tuesday 7 October 2014

அரிவாள் மூக்கு

கடலூர் சிதம்பரம் சாலையில் ...

திருச்சோபுரத்திற்கு அருகே உள்ளது 

அரிவாள் மூக்கு என்ற சிற்றுலாத் தலம் 

(சுற்றுலா அல்ல  -சிற்றுலா -பிக் நிக் ஸ்பாட் ) 

ஒரு குட்டி ஜெய் சல்மீர் பாலைவனத்தை 

நம் கண்முன் காணலாம் ஜெய்ப்பூர் போகாமலேயே ...

ஒருபுறம் பறந்து விரிந்த 

காற்று விளையாடிக்களித்த மணலலை படிந்த 

நிலப்பரப்பு ஒரு சிறு குன்றுபோல்...

மறுபுறம் அழகான வளைந்து 

அரிவாளை நினைவூட்டும் நதி நீரோட்டம் ...

கண்கொள்ளாக் காட்சிதான்  ...

குடும்பத்துடன் சென்று கண்டு விளையாடிக் களிக்க 

அதிகம் செலவு வைக்காத 

மன நிறைவை ...இயற்கையான குளிர்ந்த தென்றலை 

தவழவிடும் தளம்.

மாலை மூன்று மணிக்குமேல் ஆறு மணிவரை

ரம்மியமாக காட்சி அளிக்கும் இடம் 

அதற்குப் பின் அதாவது இருட்டியபின் சற்றே அச்சத்தை தோற்றுவிக்கும் ..

திருச்சோ புர நாதர் கோவிலும் வணங்கி மகிழத்தக்க திருத்தலம் .

அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது சிவலிங்க மூர்த்தி 

நால்வரால் பாடப்பட்டது .

ஒருமுறை சென்று வரலாமே! 


Add caption











விசாரிப்பு

நிலையறியாது படுக்கையில் நான் ...

சாளரம் வழியே 

தன்  கிரணக் கரம் நுழைத்து 

நலம் விசாரிக்கிறது நிலா !




நேர்மறை

எத்தனைதான் 

எட்டி எட்டி மிதித்தாலும் 

முன்னோக்கி மட்டுமே 

நகரக் கற்றிருக்கிறது 

மிதிவண்டி ....!




பாலபிஷேகம்

ஆலய வாசலில் 

ஏழைக் குழந்தை 

அழுகிறது பாலுக்காய் 

உள்ளே இறைவனுக்குப் 

பாலபிஷேகம்