Friday 24 March 2017

EARTH HOURS @ PANRUTI IN INDIA

EARTH HOUR - Cities Around the World Go Dark to Raise Awareness of Clima...

Earth Hour Infographic 2017

Earth Hour 2017: The Future Starts Today

Earth Hour 2017: Ten Years of Impact

பூமி நேரங்கள்

பூமி நேரங்கள் 
அது என்ன பூமி நேரங்கள்?
               நாளுக்கு நாள் நமது ஆற்றல் நுகர்வுகள் அதி பெருக்கத்தின் காரணமாக தனது வாழ் நாளின் இறுதியை நோக்கி வேகமாக பூமியை உந்தித் தள்ளிக்கொண்டு இருக்கின்றோம். இந்த அழகிய பூமி ....அழிய .... அதாவது ,இந்த உலகப் பந்து அழிவதற்கு ....அதாவது இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான முழுத் தகுதியை இழப்பதற்கு முழுப் பொறுப்பும் யாருக்கு தெரியுமா ?அதன் கடைசி வரவான மனிதனுக்குத்தான் .
               ஆம். பூமியானது மனிதனுக்கு மட்டும் படைக்கப் படவில்லை .அதாவது பூமியில் மனிதன் மட்டும் தோன்றவில்லை .பல்லாயிரக்கணக்கான
உயிர்களும் தோன்றி உள்ளன.எல்லா உயிர்களும் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை இவ்வையகம் தன்னில் கொண்டுள்ளது . அதனை அனைத்து உயிர்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் இந்த பூமிப் பந்து அளித்துக் கொண்டு வருகிறது .
               ஆனால் ,சிந்திக்கவும் , சிரிக்கவும் தெரிந்த ஒரே உயிரினமான மனிதனுக்கு இன்னொரு குணமும் அதிகமாகிவிட்டது .
               அதுதான் பேராசை ...!
                தனக்காக மட்டும் இந்த பூமி படைக்கப் பட்டுள்ளதாக எண்ணிய மனிதன் ஆக்க சக்திகளுக்காக பயன் படுத்தவேண்டிய அறிவியலின் வளர்ச்சியை எந்த அளவுக்கு அழிவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கும் விஞ்சி பயன்[படுத்தி பல்லுயிர் பெருக்கத்திற்கான சுற்றுச் சூழலை நஞ்சாக்கிவருகின்றான்.நகரமயமாக்கல் மூலம் வனங்களை அழித்து விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் மழை மேகங்களையும் கேள்விக்குறியாக்கிவிட்டான்  .
காடுகளில் உள்ள மரங்களை வெட்டி விளை நிலமாக்கிய மனிதன் பேராசையின் எல்லைக் கூட்டுக்கே சென்று விளை நிலங்களை விலை நிலங்களாக்கிவிட்டான் ;மரங்கள் அடர்ந்த காடுகள் இருந்த  இடத்தை வேகமாக கான்கிரீட் காடுகளாக்கிவிட்டான்.
             தொழிற்சாலைகளை பெருக்கி கழிவுகளை நதிகளிலும் கடலிலும் கலக்கவிட்டு நீர்ச் சூழலை நாசமாக்கி நீர் சூழல் உயிர்களை காவு வாங்கிக் கொண்டு இருக்கிறான் .
             செயற்கை உரங்களையும் உயிர்க்கொல்லி மருந்துகளையும் இட்டு வேளாண் புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு எஞ்சியுள்ள விளை நிலங்களை
மலடாக்கி வருகின்றான் .
             தூரத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று புற்றீசல் போல நான்கு சக்கர வாகனங்களையும் , இரு சக்கர வாகனங்களையும் பெருக்கியும் , பல்வேறு தொழிற்சாலைகளைக் கட்டி தொழிற்புரட்சி என்ற பெயரில் பூமியையே மூச்சுத் திணறவைக்கும் அளவிற்கு புகை மண்டலமாக்கி காற்றுச் சூழலை மாசுபடுத்தி விட்டான் .
           இவ்வாறு எல்லா சூழல் மண்டலங்களையும் மாசு சூழ் உலகமாக்கி பிற உயிரினங்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிய மனிதன் இப்போது அட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தக் கதை என்பார்களே ...அதுபோல் தனக்கான வாழ்வாதாரத்தை தானே சுரண்டிக் கொண்டு இருக்கின்றான் .
          நுனிக் கிளையில் அமர்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டு இருக்கும் பேதைத் தனம் மட்டுமே மனிதனிடம் எஞ்சியுள்ளது. கிளை வெட்டு பட்டதும் வீழப் போவது கிளை மட்டுமல்ல .அதில் அமர்ந்து தன் சாவுக்கு தானே குழிவெட்டுவதுபோல் , கிளையை வெட்டிக்கொண்டு இருந்தானே ...அவனும் அல்லவா...?
            தினமும் தங்க முட்டையிடும் வாத்தை வரமாகப் பெற்றவன் பேராசை மிஞ்சியமையால் ஒட்டுமொத்த வரத்தையும் ஒரே நாளில் பெரும் எண்ணம் கொண்டு வாத்தின் வயிற்றையே அறுத்தானாமே ...ஒரு மூர்க்கன் ...அந்தக் கதையாகிவிட்டது ..மனிதனின் சூழல் விரோத நடத்தைகள் .
           விளைவு ........? மனிதனின் சூழல் விரோத நடத்தைகளின் விளைவு ....?
         அமில மழை ,மழியின்மையால் கடும் வறட்சி ஒருபுறம் , அதிக மழையில் சிக்கி ஜல சமாதியாக்கும் வெள்ளக் காடு ஒருபுறம் ,எல் -நினா ,லா நினோ போன்ற காற்றுச் சூறாவளிகளும் கவர்ச்சியான பெண்களின் பெயர்களைத் தாங்கி பூமியையே புரட்டிப் போடும் பேய்க் காற்று -சுழல் காற்று ஒருபுறம் -தாவரங்களின் நண்பர்களாகிய  மண் புழுக்களும் ,நுண் பாக்டீரியாக்களும் கூட வாழத் தகுதியற்று மலடாய்ப் போன விளை நிலங்கள் ஒருபுறம் - காற்று மாசுபாட்டால் குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமயமாதல் காரணமாக துருவங்களிலே உருகும் பனியானது கடலில் கலந்து கடல் மட்டத்தை உயர்த்தி மிச்சமிருக்கும் ஒரு பங்கு நிலத்தையும் மூழ்கடிக்கத் துடிக்கும் மூர்க்கத் தனம் ஒருபுறம் -தகவல் தொழில் நுட்பமும் நேனோ தொழில் நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணைத் தொடும் செல்போன் கோபுரங்களை உண்டாக்கி இலவசமாக கதிர் வீச்சுகளை வழங்கி சிட்டுக் குருவிகளைப் போன்ற அழகுப் பறவைகளையும் இன்ன பிற உயிரினங்களையும் இருக்குமிடம் தெரியாமல் தொலைந்துபோகச் செய்தது மட்டுமல்லாமல் தனக்கும் புற்று நோயையும் - பெயரே தெரியாத - மருந்துகளே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புது புது நோய்களையும் உண்டாக்கிய அனைத்துப் பெருமையும் நம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தம் .
            அனல் மின்னாற்றல் ,நீர் மின்னாற்றல் ,சூரிய மின்னாற்றல் ,அலையாற்றல் ,புவி வெப்ப ஆற்றல் ஆகியவற்றை பயன் படுத்தி மின்சாரம் எடுக்க வக்கில்லாத மனித இனம் பூமியில் ஆங்காங்கே அணுமின் உலைகளை நிறுவி கதிர்வீச்சு அபாயம் என்னும் வலையில் பூமியை சிக்க வைத்து விட்டான் .
               தனக்கான எல்லா ஆற்றல்களும் பூமியிலிருந்தே கிடைக்கும் என்று தெரிந்துகொண்ட மனிதன் பூமித்தாயின் கர்ப்பப் பையான  நடுபூமி வரை ஊடுருவிச் சென்று நிலக்கரி ,பெட்ரோலியம் ,எரிவாயு என அனைத்தையும் சுரண்டி எடுத்துக் கொண்டு எதிர்காலத் தலைமுறையினை நிர் கதியாக்கிய  பெருமையும் நம் காலத்தவர்க்கே நிச்சயம் சேரும் .
             இது போன்று மனிதனின் சூழல் விரோத நவடிக்கைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது எங்கே போய் முடியும்....?
              அது பற்றி நமக்கென்ன அக்கறை ? நமக்கான வாழ்க்கையை நாம் அன்றாக வாழ்ந்துவிட்டுப் போகலாம் . வரும் தலை முறையினரின் வாழ்வைப் பற்றி நாம் என் கவலைப் பட வேடும் என்கிறீர்களா ?
              இந்த உலகம் இப்போது எப்படி உள்ளதோ ,இதை  விட சற்றே உன்னதமாக்கி -வாழும் சூழ்நிலையை மகிழ்ச்சிகரமானதாக்கி நம் சந்ததியருக்கு விட்டு செல்லும் பொறுப்பு நம்கையில் அல்லவா இருக்கிறது ?
              அது மட்டுமல்ல ... ! சூழல் விரோத நடவடிக்கை என்பது - சுற்றுச் சூழல் சீர்கேடு என்பது நாம் போட்ட முடிச்சு .அதை நாம்தானே அவிழ்க்க வேண்டும். !
 நம்மால் ஏற்பட்ட சிக்கலை நாம்தானே களைய வேண்டும் !
             அதற்காக இனியேனும் நமது மூளையை சற்றே கசக்கிக் கொள்ளலாமே !முதலில் எடுத்து வைக்கும் ஒருசிலரின் அடிகளால் என்ன மாற்றம் பெரிதாக வந்துவிடப் போகிறது ? என்று சிந்திக்காமல் - எதிர் கேள்விகள் கேட்காமல் --- வாதித்துக் கொண்டிராமல் - வீண் விதண்டா வாதங்களில் ஈடுபடாமல் -நேரடி செயலில் இறங்கும் நேரம் வந்துவிட்டது
              சிறுதுளி பெரிதல்லவா?
              அடி மேல் அடித்தால் ... அம்மியும் நகரும்தானே ?
              என்ன செய்யலாம் ......?
              சூழலின் சீர்கேடு மேலும் மேலும் மோசமாவதைத் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும்?
               முதலில் எல்லோரும் 'கால நிலை மாற்றம் ' என்பதகான மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று மனதார எண்ண வேண்டும்.
               ஆற்றல் நுகர்வுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்போம்.அதற்கான குறியீடுதான் மார்ச்-25 -The Earth  மார்ச்-25-The Earth  Hour - இரவு 8-30 மணி முதல் 9-30 மணி வரை அனைத்து மின் உபயோகங்களை நிறுத்தம் செய்தல் .
                  குண்டு விளக்கிலிருந்து (இப்போது இவை அரிதாகவே பயன் படுத்துகின்றார்கள் -அநேகம் பேர் சூழல் விளக்கிற்கு -CFL அல்லது LED -க்கு மாறிவிட்டார்கள் )குழல் விளக்கு வரை அனைத்து ஒளி ஆற்றல்களையும் நிறுத்துவோம்.மின் விசிறிகள்  ,தொலைகாட்சிகள்  ,குளிரூட்டிகள் என உள்ள அத்துணை மின் நுகர்வுப் பொருட்களின் இயக்கங்களையும் கூட இந்த ஒரு மணிநேரம் நிறுத்திவைப்போம் .இது வீடுகளில் வசிப்பவர்களுக்கான குடும்பஸ்தர்களுக்கு மட்டும் என்று நினைக்க வேண்டாம் ,வியாபாரிகள் ,வர்த்தக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இதில் மனமுவந்து பெருந்தன்மையுடன் பங்கேற்க முன்வரவேண்டும் .  உயிர்  காக்கும் அத்தியாவசிய பொருட்கள் -நிறுவனங்கள் மட்டும் விதிவிலக்கு பெறட்டும். ஏனைய பொழுதுபோக்கு தளங்களான திரையரங்குகள் ,உணவகங்கள் , தங்கும் விடுதிகள் ,ஷாப்பிங் மால்கள் போன்றவை ஈறாக அனைத்து தரப்பினரும் தாமாகவே முன்வந்து மின்சார இயக்கத்தினை நிறுத்த வேண்டும்.தாவர எண்ணெய் விளக்குகள் ,மெழுகு வர்த்திகள் ஆகியவற்றின் ஒளியிலும் அந்த ஒரு மணி நேரத்தை -60 நிமிடங்களை -3600 விநாடிகளை -நமது குடும்ப உறுப்பினர்களுடன் -நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசிக் களிப்போம் .
                 சற்றே கற்பனை செய்து பாருங்கள் ! ஒருமணி நேரம் நம் வீட்டில் அனைத்து மின் நுகர்வும் நிறுத்தப் பட்டால் மிச்சமாகும் அல்லது சேகரமாகும் மின் அழகு எவ்வளவு ? நம் வீட்டில் மட்டும் இவ்வளவு மிச்சம் என்றால் ,நம் ஊர் மொத்தமும் எவ்வளவு யூனிட்  மின்சாரம் மிச்சமாகும்?நம் ஊரில் மட்டுமே இவ்வளவு மின்சார சக்தி மிச்சப்பட்டால் மாவட்டம் முழுவதும் ...மாநிலம் முழுவதும் ,,,நாடு முழுமைக்கும் ...? நாட்டிற்கே இவ்வளவு மின்சாரம் மிச்சமெனில் ஒட்டு மொத்த உலகத்திற்கும் ....?  
                  கற்பனை செய்து பாருங்கள் ! நம் தமிழகத்தில் மட்டுமோ அல்லது கடலூர் மாவட்டத்திலோ,பண்ருட்டியிலோ  மட்டும் இப்படி செய்யப் போவது இல்லை .!தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக மனித இனம் செயல் பட வேண்டிய நேரம் இது  அல்லவா?
                 அதனால் மனித இனம் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் - கண்டங்களிலும் -ஏன் ...உலகம் முழுவதுமே  அந்த ஒரு மணிநேரம் இயற்கை ஆர்வலர்களும் , தொண்டு நிறுவனங்களும் தானாகவே முன்வந்து மின்சாரத்தினை நிறுத்தி இந்த இருள் சூழ் உலகை ஒருமணி நேரம் முழுமைக்கும் இயற்கை ஒளியில் மட்டுமே மூழ்கவைக்க தயாராகிறார்கள்  .
                 இதனை உலகில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான WWF.COM  ,SCOUT.ORG உள்ளிட்டவை ஒரு இயக்கமாகவே மாற்றி கடந்த 2011 முதல் செயல்படுத்தி வருகின்றன .விருப்பம் கொண்டு நீங்களும் இணையலாமே இந்த இயக்கத்தில்...                                                                                                       EARTH HOUR என்ற இணைய தளத்திலும் ,முக நூல் (FACE BOOK ),டுவிட்டர் (TWITTER) பக்கங்களிலும் ,யூ டியூப் (YOU TUBE)தளத்திலும் மேலும் இதனைப் பற்றி விபரங்களை அறியலாம் .
               ஆற்றலை சேமிப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே உதாரணத்திற்காக மின்சார இயக்க நிறுத்தம் பற்றி இங்கு கூறப் பட்டுள்ளது .
  இதுபோல் ,போக்குவரத்து துறையை  எடுத்துக் கொண்டால் நான்கு சக்கர ,இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் திரவ எரிபொருளான பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் அளவுகளை நினைத்துப் பாருங்கள் .எங்கோ ஒரு சில இடங்களில் மட்டுமே மின்சேமகலங்களில் இயங்கும் அல்லது சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன .ஆனால் அவை மிக சொற்பமே .தனிப்  போக்குவரத்தினை பயன்படுத்துவதை தவிர்த்து பொது போக்குவரத்தினை பயன் படுத்தும் மனநிலைக்கு நாம் அனைவரும் ,மாறவேண்டும் .நமக்கு உடற் பயிற்சியை அளிக்கும் -சூழலுக்கு ஊறு  விளைவிக்காத மிதிவண்டிப் பயன்பாட்டை மனதார ஏற்கவேண்டும்.அதற்கு அரசும் தன்  பங்கிற்கு மிதிவண்டியை பயன்படுத்துபவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக சில சலுகைகளை அறிவிக்கலாம் .இது போல எந்த இடங்களில் -எந்த வகைகளில் -எந்த முறைகளில்  ஆற்றலை சேமிக்க இயலுமோ அந்த வழிகளில் முயல வேண்டும்.மக்களை முயலச் செய்ய வேண்டும். மரங்களை வெட்டுவோர் மீதான தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் . மரக் கன்றுகள் நடுவதை மிக மிக  .அதிகப் படுத்தவேண்டும் .குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் ---சாலை விரிவாக்கத்திற்காக நாம் வெட்டி வீழ்த்திய மரங்களின்  எண்ணிக்கையை கேட்டால் தலை சுற்றும், அதற்கான பதில் மரங்களை நட்டுப் பராமரிக்கின்றோமா என்றால்  அநேகமாக இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும் .
            எனவே மனிதன் இனிமேலாவது சுய நலத்தை தொலைத்து-ஆடம்பர வாழ்க்கையை -வசதியான வாழ்க்கையை மட்டுமே மோகிக்காமல் , சூழல் நலத்தையும் எண்ணவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளான் என்பதுதான் நிஜம் .
             
               வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
               வைத்தூறு போலக் கெடும் .
   
என்றான் வள்ளுவப் பெருந்தகை.
               இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மைக் காக்கும் என்பதை உணர்ந்து சூழல் விரோத நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வோம்.
                இயற்கையைப் பாதுகாப்போம் .எங்கும் மரங்களை நட்டு வைப்போம் .
 பூமி நேரங்கள் (EARTH HOUR )-இயக்கத்தில் நாமும் கலந்துகொள்வோம்.நாம் அறிந்ததைப் பிறருக்கும் பகிர்வோம் .அதற்கு முக நூல் ,டுவிட்டர் ,வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை முறையாகப் பயன்படுத்துவோம் .பூமிப் பந்தைக் காப்போம் .
                  குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கான அறைகூவல் இது . வாருங்கள் !
               உலகம் உங்கள் கைகளில் ...
               இல்லை.... இல்லை ....நமது கைகளில்







Earth Hour 2017: Protect Our Planet with Pocoyo