Friday 26 October 2018

கலாஉத்சவ் -2018

                                           கலாஉத்சவ் -2018 பரிசளிப்பு விழா
26-10-2018 ,வெள்ளிக்கிழமை .
மரியாதைக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் கரங்களால்
இவ்வருட மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வெற்றி வாகை சூடி மாநில அளவில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களுக்கும்
கடந்தமுறை கோவையில் நடைபெற்ற கலாஉத்சவ் -2017 ல் பங்கேற்ற போட்டியாளர்களுக்கும்
சான்றிதழ்களும் ,பரிசுகளும் வழங்கப்பட்டன .
வெற்றி பெற்றோர் 30 ,31 தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க 29-10-2018 , திங்களன்று மதியம் உங்கள் ஆசியுடன் பயணமாகின்றனர்.


வாழ்த்துக்கள் நல்ல முயற்சி ஆனால் இந்த அரசாங்கத்திற்கும், அரசு அதிகாாிகளுக்கும், ஆசிாியா்களுக்கும் நான் சொல்ல விழைவது, எந்த ஒரு செயலும் உரிய பயிற்சி வழிகாட்டுதல் இல்லை என்றால் சோபிக்காது. வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் மாணவர்களின் எதிா்காலத்திற்கு போதாது, படிக்கின்ற அனைவருமே 100 க்கு 100 மதிப்பெண் பெறப்போவது இல்லை, இந்த நிதா்சனத்தை உணர்ந்து ஏட்டுக்கல்வியோடு, பலதுறை நுண்கலைகளை மாணவர்களுக்கு போதித்தால் மாணவா்கள் கல்வியிலும் ஆர்வம் செலுத்துவா், படிப்பு கை விட்டாலும் கலைகள் கை விடாது என்பது என் கருத்து, அவா, வேண்டுகோள். மேலும் அரசுப்பள்ளிகளில் இந்த துறை சார்ந்த அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்பதால் பெற்றோா்களும் ஆதரவு அளிப்பா்


இதே கருத்தை நானும் பள்ளியில் ஆசிரியர்களிடமும் , மாணவர்களிடமும் ...
இறைவணக்கக் கூட்டத்தில் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது பலமுறை கூறியிருக்கிறேன் .
ஆனால் எதவும் எடுபடுவதில்லை.

இது போன்ற போட்டிகள் கூட கலைகளை வளர்ப்பதற்கு அல்லது மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்வதெற்கெல்லாம் இல்லை .தனக்கு மேல் உள்ள மேலதிகாரிகளின் ஆணைகளை நிறைவேற்றுவதற்காக ,
ஏதோ கடமைக்காக ...இதற்கென ஒதுக்கப்படும்
RMSA fundஐ காலி செய்து கணக்கு காட்டுவதற்காக ஏனோதானோவென்று 
சிறிதும் சிரத்தையின்றி செய்யப்படுகின்றது என்பதே நிதர்சனம்.குறிப்பிட்ட துறையினரின் ஆலோசனைகளைப் பெறாமல், தகுந்த துறை சார்ந்த வல்லுனர்களின் நடுவர்குழு வழிகாட்டல்கள் இல்லாமல்...
மாவட்டப் போட்டிக்கும் ,மாநிலப் போட்டிக்கும் போதிய இடைவெளியின்றி ...
மாநில அளவிலான போட்டியை எதிர்நோக்க தன்னை தயார்படுத்திக் கொள்ள போதிய அவகாசத்தை போட்டியாளர்களுக்கு அளிக்காமல் எல்லாமே ஒரு அவசர கதியில் நடைபெறுகின்றன. சீக்கிரம் நடத்தித் தொலைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான் இதனை நடத்துகிறார்கள். இல்லையெனில் யார் அதிகாரிகளிடத்தில் வாங்கிக் கட்டிக்கொள்வது ?
ஏனெனில் அவர்களது நிலைமை அப்படி .
எங்களைப் போன்ற ஒருசில ஆசிரியர்கள் நம்மிடம் இந்த பணியை ஒப்படைத்துள்ளார்களே ..மாணவர்கள் நம்மை நம்பியுள்ளார்களே என்ற எண்ணத்திலும் .
ஒருவேளை மாணவர்கள் வெற்றி பெற்றால் நமக்கும் பெருமையல்லவா என்ற எண்ணத்தோடும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறார்கள்.
எப்படியோ இது பரவலான ஒரு பயனை அளிக்காவிட்டாலும் ஏதோ ஒருசில மாணவர்களின் கலைத்திறமையாவது வெளிப்படுகிறது;
பட்டை தீட்டப்படுகின்றது;
திறமை மெருகேறுகின்றது .

ஆனால் பள்ளிக் கல்வி முறை (துறை?!) சிறிதும் இரக்கம் அற்றது .கலைகளை ,
தனித் திறமைகளைக் குப்பையில் போடு ...எனக்கு குறைந்த பட்சக் கற்றல் அடைவு ...குறைந்த பட்ச மதிப்பெண் கொண்டு தேர்ச்சி விழுக்காடு இவற்றைக் காட்டு ....என்பதிலேயே குறியாய் இருக்கின்றது ...இந்த கட்டளைக்குக் கட்டுப்படும் ஆசிரியப் பெருமக்களும் சற்றும் ஒத்துழைக்காத மாணவக் கண்மணிகளைக் கட்டிக்கொண்டு எப்படியாவது போர்ஷனை முடித்து தேர்ச்சி விழுக்காட்டைக் காட்டியே தீருவது என்ற எண்ணத்தில் மாரடித்து டென்ஷனாகின்றனர்.இதற்கிடையில் கலை வளர்க்கிறேன் ,தனித் திறன் கொணர்கிறேன் என்று உழைக்கும் ஆர்வம் கொண்ட (ஆர்வக்கோளாறு கொண்ட?!)
ஆசிரியர்களும் ,உண்மையிலேயே படிப்பும் நன்றாக வந்து ,கலைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் + படிப்பில் திறன் குறைந்து ,கலைத்திறன் சிறந்துவிளங்கும் மாணவர்களும் போட்டிகள் என்ற பேரில் கூத்தடிப்பதாகவே அவர்கள் கண்களுக்குத் தெரிகின்றனர் .என்ன செய்வது சுரேஷ் ...நிறைய முரண்பாடுகள் நிறைந்தது பள்ளிச் சூழல் ...?
நம்மாலான முயற்சிகளை எடுப்போம்.


உண்மை மாஸ்டர் ஆனால் இலங்கையில் சரியான முறையில் கல்வி,கலை இரண்டும் போதிக்கப்படுகிறது

Sunday 14 October 2018

அ ப் பா

அ ப் பா ...!
மூன்றெமுத்தில் ஒரு மந்திரச்சொல் .
த மி ழ்
அ ம் மா
என்ற வரிசையில் உச்சரிக்கும்போதே மனம் இனித்திடும் ஒரு மந்திரச் சொல் ' அப்பா '
நீங்கள் உங்கள் தந்தையின் மேல் காதல் கொண்டவரா ?
அப்படியானால் இப்பதிவு உம்மைக் கவரும் என நம்புகிறேன்.
சுப்பாராயன் அப்பர்சாமி
எனது தந்தை .
சுப்பராயன் - ஜானகி அம்மாள் தம்பதியரின் மூன்றாவது மகன் .
இரண்டு தமக்கைகள் ,மூன்று தம்பிகள் எனும் துணை கொண்டவர்.
1939 ஆம் வருடம் , டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று பிறந்தவர் .
இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்தவர்.
மிக ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்தவர்.
அதனால் குடும்ப பாரத்தை தான் சுமந்தவர்.
முதலில் தனது தம்பிகளை படிக்க வைத்து ஆளாக்கினார்.
பின்னர் தனது மக்களான எங்களை வளர்க்கவும் படிக்க வைக்கவும்
மிகச் சிரமப்பட்டார்.
அப்பொழுதெல்லாம் ஆசிரியர்களுக்கு சொற்ப வருமானமே இருந்ததால்
பள்ளிபணி முடிந்ததும் நெசவு நெய்தும் கடுமையாக உழைத்து வருமானம் ஈட்டி எங்கள் மூவரையும் அரசுப் பணிக்குச் செல்லும் அளவுக்குத் தகுதியாக்கியவர்.
என தமக்கையை தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் முதுகலை முடிக்கச் செய்திருந்தார். விமானப் படையில் பணியாற்றிவந்த வரனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
என்னை நான் விரும்பிய ஓவியக்கலையில் தேர்ச்சி பெறவைத்து ,ஓவிய ஆசிரியருக்கான தகுதியையும் ஏற்படுத்தித் தந்திருந்தார்.
என்தங்கையை ஆசிரியர் பயிற்சி முடிக்கச்
செய்திருந்தார் .
பூர்வீக வீட்டை கூரை வீட்டில் இருந்து நல்ல வாரைகளிட்டு ஓட்டுவீடாக மாற்றியிருந்தார்.
இவ்வளவையும் அவரை ஆட்டி வைத்துக்கொண்டிருந்த ஆஸ்த்துமா என்னும் இரைப்பு நோய் தந்த துண்பத்தையெல்லாம் தாங்கி என் பாட்டி , அம்மா ,அக்கா, நான் தங்கை மற்றும் தான் என்ற எங்கள் அறுவர் கூட்டணிக் குடும்பத்தின் வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டார்.
ஒரு வழியாக அவருக்கு அளிக்கப்பட்ட தரமான சிகிச்சை & என் தாயின் கவனிப்பு என இரண்டும் கலந்த போராட்டத்தால் ஆஸ்துமா என்னும் அரக்கன் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.
ஆனால் அவருக்கு அதி தீவிர இரத்த அழுத்தமும் உள்ளுக்குள் இருந்திருக்கிறது .
குடும்பத்தை கவனிப்பதாக நினைத்து அதனை அவர் அலட்சியப்படுத்தியிருக்கலாம்.
எங்களுக்கும் அதை அவர் சொல்லவில்லை .
அக்டோபர் 4 ஆம் நாள் மாலை 6 மணியளவில் அவருக்கு மூளையில் இரத்தக் குழாய் வெடித்திருக்கிறது .ஒரு கை ஒரு கால் செயலிழக்கிறது . பதறியடித்துக் கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறுதியாக புதுவை ஜிப்மரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கிறோம்.
அதிகாலை -விடிந்தால் 5 ஆம் தேதி - 3.30 மணிக்கு அவர் உயிர் பிரிகிறது .
ஆம் ...
1991 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 5 ஆம் நாளன்று திடீரென எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இயற்கையெய்தினார்.
எங்களை விட்டு அவர் மறைந்தபொழுது அவருக்கு வயது 52.
அவர் எங்கள் நினைவில் மட்டும் வாழத்துவங்கிய நாள் அக்டோபர் ஐந்து .
அவரது ஆசியால் என் தமக்கைக்கை சுமதிக்கு மூத்த மகனாக பால மணிகண்டன் பிறந்த தினம் அக்டோபர் - 4.
அவரது ஆசியால் என் தங்கை சுஜாதாவுக்கு
ஒரே மகளாக தரணீஸ்வரி பிறந்த தினம்
அக்டோபர் -5 .
அவரது ஆசியால் ,தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் என் சிற்றப்பா மகள் இந்துமதியின் மூத்த மகளாக நீனா பிறந்த தினம் அதே அக்டோபர் -5 .
அவரது ஆசியால் , தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் என் சிற்றப்பாவின் மகன் கிரேப் @ பாலமுருகனின் மூத்த மகன் பிறந்த தினம் - எனது தந்தையின் பிறந்த தினமான
டிசம்பர் -1 .
அன்று என்வீட்டில் டிரான்சிஸ்டர் தவிர ஏதுமில்லை .
ஆனால்....
இன்றோ...
என் தமக்கைக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள் .
என் தந்தையின் மறைவுக்குப் பின் என் தங்கைக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள்.என் தங்கை அரசுப் பணியில் இருக்கிறார்.
என் தந்தை பணியிலிருக்கும்போதே இறந்துவிட்டதால் ,கருணையடிப்படையில்
எனக்கும் அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணி கிடைத்துவிட்டது .
திருமணமாகிவிட்டது .
நிறைவான ஊதியம் .
கொஞ்சி மகிழப் பேரக் குழந்தைகள்
பாடல்கள் கேட்டு மகிழ ஆடியோ சிஸ்டங்கள் .
படங்கள் பார்த்து மகிழ தொலைக்காட்சி.
வாசித்து மகிழ வீட்டுக்குள்ளேயே ஒரு சிறு நூலகம் .
ரசித்து மகிழ நான் வரைந்து சட்டமிட்டு மாட்டியிருக்கும் வண்ணமிகு சித்திரங்கள் ..
வேடிக்கை பார்த்திருக்க வண்ண மீன் தொட்டியும் , லவ் பேர்ட்ஸ் கூட்டமும்.
ஆடி மகிழ கொள்ளிடத்து ஊஞ்சல் .
சிலாகித்து மகிழ சுற்றிலும் வண்ண மலர் செடி கொடிகள் .
சுற்றத்துடன் பேசி மகிழ அலைபேசியும் ,திறன் பேசிகள்.
இப்படி உள்ளத்துத் தோன்றியதை உறவுகளுடனும் நட்புடனும் பகிர்ந்து மகிழ முகநூலும் இன்னும் பிற சமூக வலைத்தளங்கள்..!
இடுக்கண் நேரிடின் உடன் தோள் கொடுத்துத் தாங்கிட என் மாணவ நண்பர்கள் ..!
வாழ்ந்து மகிழ வங்கிக்கடன் பெற்றும் , பூர்வீக வீட்டை விற்றும் நான் பார்த்துப் பார்த்துக் கட்டியுள்ள கலைநயம் பொருந்திய வண்ண மயமான புதிய இல்லம்...
அந்த இல்லத்திற்கு நான் சூட்டியுள்ள பெயர் எனது பெற்றோரின் பெயர்..
தந்தை மற்றும் தாயாரின் பெயரை எனக்கு வாழ்வளிக்கும் நான் நேசிக்கும் கலையுடன் இணைத்து வைத்துள்ள அந்தப் பெயர்...
அப்பர்சாமி சுந்தரவல்லி கலாலயம்
எல்லாமிருக்கிறது ...
எல்லாமிருக்கிறது ...
ஆனால் எங்கள் பிரியமுள்ள அப்பா ...
நீங்கள் இல்லை ...நீங்கள் எங்கள் மேல் காட்டும் உங்கள் அன்பு இல்லை..பொழியும் பரிவுமில்லை .
இதையெல்லாம் கண்டு மகிழ நீங்கள் இல்லை.
நாங்கள் மகிழ்வாக வாழ்கிறோம் ..அப்பா ...
உங்களுக்குக் கிடைக்காத எல்லாமும்
எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன தந்தையே !
உங்களால் ...உங்களால் மட்டுமே ...
உங்கள் ஆசியால் மட்டுமே எங்களுக்குக்
கிடைத்துள்ள இத்தனை சந்தோஷத்தையும்
பார்த்து மகிழ தாங்கள் இல்லையே என்றெண்ணுகையில்...
இதை டைப் செய்யும் இந்த நிமிடம் விரல்கள் நடுங்கித் தடுமாறுகின்றன.
விழிகளில் நீர் திரையிடுவதை தடுக்க இயலவில்லை ..
அப்பா ..எங்கள் நினைவுகளில் வாழும் உங்களை வணங்குகின்றேன்.
சூட்சும ரூபமாய் இருந்து எங்களுக்கு ஆசி வழங்குங்கள் .
உங்கள் ஆசி எங்களை மேலும் தழைக்கச் செய்யும் ; மலரச் செய்யும் ...
உம்மை விட்டு என்றும் நீங்காத நினைவுகளுடன்...
உமது உயிரின் துளி !
சுந்தரவல்லி அப்பர்சாமி
சுமதி வெங்கடேசப் பெருமாள்
சுரேஷ் @ முத்துக்குமரன் புவனேஸ்வரி
சுஜாதா சுகுமார்.
என் வயதுள்ள நண்பர்களே உங்கள் வீட்டில் வயதான நிலையில் தாயும் தந்தையும் ஜீவித்து இருக்கிறார்களா? அல்லது ஒருவரேனும் இருக்கிறார்களா ? அவர்கள் ஆரோக்கியத்துடன், நலமுடன் இருக்கிறார்களா ? அது இறைவன் உங்களுக்கு அளித்திட்ட கொடை .காலத்தின் ஆசீர்வாதம் . அனுபவப் பேழை .அற்புதம் பொக்கிஷம் .உங்கள் குழந்தைகளைப் போல் அவர்களைப் பார்த்துக்கொள்ளுங்கள் .
அவர்கள் வயிறும் மனமும் குளிர தன் வாழ்நாளின் நிறைவுப் பகுதியை அவர்கள் வாழ்ந்து பார்க்கட்டும் .
நலமே வாழிய !






































அழகு

கவிதை பேசும் கண்கள்
வெள்ளையுள்ளம் கொண்ட கருப்பழகன் 
முதுகில்சேர்த்து அணைத்திட்ட 
தனது தம்பிப் பாப்பாவின் மீதான 
பாசம் தேங்கிய அழகு 
...
...
உள்ளம் கொள்ளை போகுதே !




சிந்திக்க வைக்கும் வாதம் .

சொன்னா கேட்டாதானே ?
திணிப்பதுதான் கல்வி ...
அதுவே நடைமுறை ...
உரலுக்குள் தலையை விட்டுவிட்டபின் உலக்கையைப் பற்றிக் கேள்வி என்ன ?
....
.....


யாழ் அறக்கட்டளை
Muthukumaran Suresh:சொன்னா கேட்டாதானே ?
*****கேட்கும் வரை சொல்லிக்கொண்டே இருப்போம் ஐயா.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
(A continuous hard hammering can move even large stones )
*********************************************************************
திணிப்பதுதான் கல்வி ...அதுவே நடைமுறை ...
***இது தான் நடைமுறையா?????.ஏற்று கொள்ள முடியவில்லை ஐயா உங்களின் கருத்தை.
திணிப்பதற்கு கல்வி என்ன குழந்தைக்கு ஊட்டும் உணவா என்ன.இல்லை சர்வாதிகாரமா என்ன.
ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடி கறக்கிற மாட்டை பாடிக்கறக்கணும்....இந்த பழமொழி ஐந்தறிவு ஜீவன்களுக்கு மட்டும் அல்ல. ஆறறிவு ஜீவன்களுக்கும் தான்.
FORCEFUL FEEDING DOES NOT GIVE RESULTS.உட்கொள்ளமாட்டார்கள்.துப்பி விடுவார்கள்.
உட்கொள்ள வைப்பது திறமையா... துப்பவைப்பது திறமையா????
எல்லா மாணவர்களுக்கும் அவரவரின் புரிந்து கொள்ளும் மனநிலைக்கு ஏற்றவாறு கவனமெடுத்து சொல்லித்தர வேண்டும். வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் முதல் ரேங்க் எடுக்க வைப்பதென்பது ஆசிரியருக்கு மிகவும் கடினமான செயல். ஆனால் அனைத்து மாணவர்களையும் பாஸ் பண்ண வைப்பது எளிது.
தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்த கோழிப்பண்ணை கல்வி முறைக்கு நீட் எனும் அரக்கன் சிறந்த ஆப்பினை சொருகி விட்டுட்டான்.
கெட்டதிலும்(நீட்) ஒரு நல்லது(கோழிப்பண்ணை கல்வி முறை ஒழிப்பு) நடந்துள்ளதில் மகிழ்ச்சி.
தற்போதைய நம் கிராமப்புற கல்வி நிலைக்கு, நீட் தேர்வின் வருகைக்கு பின் மருத்துவக்கல்வி என்பது நமது கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனி என்கிற துயரமான நிலை ஆகிவிட்டது.
பல்லுள்ளவர்கள் பக்கோடா சாப்பிடுகிறார்கள் என்பது போல் ஆகிவிட்டது மருத்துவ படிப்பு.
உரலுக்குள் தலையை விட்டுவிட்டபின் உலக்கையைப் பற்றிக் கேள்வி என்ன ?
****************************************************************
****கேள்வி கேட்கணும்.கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்.மெளனமாக இருப்பதெல்லாம் சம்மதம் என்று எண்ணிவிடக்கூடாது....
....
....



அடடா...!சிந்திக்க வைக்கும் வாதம் .
இன்று நேற்றல்ல ...பல ஆண்டுகளாக நம் போன்ற எண்ண ஓட்டமுள்ள பலரின் கருத்தும் இதுதான்.
திணிப்பதுதான் கல்வி .
திணிக்கப்படுவதுதான் கல்வி .(ஆசிரியர்களால்)
திணித்துக்கொள்வதுதான் கல்வி .(மாணவர்களால்)
இதுதான் நடைமுறை .
இதுதான் நடைமுறை !
இதுவும் கூட திணிக்கப்பட்டதுதான்
ஆசிரியர்களின் மேல்...
இதைத்தான் நடைமுறையாக்கி
காலம் காலமாகத்
தொடர்ந்து செய்து வருகிறது நமது கல்வித்துறை @ கல்விமுறை .
ஏற்றுக்கொள்ள முடியவில்லை இல்லையா உங்களால் ...?
உங்களால் மட்டுமல்ல ...எங்களைப் போல அல்லது நம்மைப்போல பல ஆசிரியர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான் .
ஆனால் இதுதான் கல்வி ; இப்படித்தான் நடைமுறை ; இதுதான் வினாத்தாள் ; இதுதான் தேர்வு ..இப்படியெல்லாம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒரு பழக்கத்திற்கு கொண்டுவந்தவிட்டு ...
அதை நடைமுறைப்படுத்தவுமே இங்கு ஆசிரியர்கள் பணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதற்குத்தான் ஊதியமே வழங்கப்படுகிறது .
பெற்றோர் சமுதாயமும் இதற்கு முழுமையான அங்கீகாரம் அளித்து தன் குழந்தைகளை திணிக்கப்படும் கல்விமுறைக்கு அர்ப்பணித்துவிட்டது.
அவர்கள் பெற்று அளிக்கும் கொள்ளையோ கொள்ளையான மதிப்பெண்கள் தரும் போலிப் பெருமையை மட்டுமே கொண்டாடும் ஒரு சமூகத்தை , ஊடகம் சார் வட்டத்தை நன்கு வசதியாக உருவாக்கிக்கொண்டுவிட்டோம் நாமெல்லாம்.
உயர்கல்விகளெல்லாம்கூட
இதனையொட்டியே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன;
வடிவமைக்கப்படுகின்றன.
இந்நிலையில் மாணவர்களை சுயமாகச் சிந்திக்க வைக்கின்ற , பாடத் திட்டம் , பாட நூல்கள் தாண்டி பல உபயோகமான கருத்துக்களை உரையாடல்களாக முன்னெடுக்கின்ற, வினாக்களை எழுப்ப சுதந்திரமான சூழல்களை தனது வகுப்பறைக்குள் ஏற்படுத்தித் தருகின்ற ஆசிரியர்கள் தற்செயலாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றினாலும்கூட, இவர்களெல்லாம் உடனுக்குடன் சக ஆசிரியர்களாலும் ,
தலைமை ஆசிரியாலும் தட்டி அல்லது தலையில் குட்டி , மார்க்க பாரு ,ரிசல்ட்ட காட்டு என்ற ரீதியில் அவர்களையும்கூட தமது வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவதுதே அவர்களின் சாமார்த்தியம்.
...
....
இன்னும் நிறைய இருக்கிறது எழுத ...
இதற்கு முன் நான் எழுதிய கமென்ட் விரக்தியில் எழுதியது .
முதலில் பல பள்ளிகளில் உள்ள நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா?
பயன்படுத்த அனுமதிக்கப்
படுகிறார்களா?
ஓவியம் உள்ளிட்ட கலைசார்ந்த திறனுள்ள மாணவர்களை ,நிறைய மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கு நிகராக வைத்துக் கொண்டாடுகிறதா பள்ளிச் சூழலும் சமுதாயச் சூழலும்.?
இதுபோன்ற ஆதங்கமான எண்ணற்ற பல கேள்விகள் எனக்குள்ளும் ,ஏன் பல ஆசிரியர்களுக்குள்ளும் உறைந்துள்ளன ; மறைந்துள்ளன நண்பரே .ஆனால் நானும் தங்களைப்போல்தான்.
ஊதுற சங்கை ஊது ...விடியும்போது விடியட்டும் என்ற சிந்தனை கொண்டவன்..
என் எண்ணங்களை , சிந்தனைகளை மாணவர்கள் மனதிலே கொண்டு போய் சேர்க்கத்
தவறுவதில்லை ,வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.
நன்றி நண்பரே..

தாய்மை

தாய்மை என்பது உடல் சார்ந்து மட்டுமல்ல.
உளம் சார்ந்ததும் கூட.
அது ஒரு உணர்வு .
பால்வேற்றுமை காணாது.
எத்தனையோ ஆண்கள் தாயுமானவனாக 
இருக்கிறார்கள்.
எத்தனையோ பெண்கள் தாய்மை உணர்வு தொலைத்து அசுரகுணம்
கொண்டிருக்கிறார்கள்.
இவரை நான் திருநங்கையாகப் பார்க்கவில்லை .
தாய்மையின் உச்ச உணர்வு கொண்ட மனிதராகப் பார்க்கிறேன்.
வாழ்த்துகள் தாய்மையே..!
வளர்க மனிதம்...!



மாடித் தோட்டம் அமைப்பு





இன்று விருதாசலம் மண்டல ஆராய்ச்சி மையத்தில் ## தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ## முந்திரி ஆராய்ச்சிப் பண்ணை# மாடித் தோட்டம் அமைப்பு & பராமரிப்பு பற்றிய ஒரு பயிற்சி & கருத்தரங்கு நடைபெற்றது. பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது .
சிறந்த ஒருங்கிணைப்பு .உண்மையிலேயே மிகப் பயனுள்ள தகவல்கள்.கூடுதலாக ஒரு தகவல் கையேடு வேறு அளித்தார்கள். இது போன்ற பயிற்சிகள் மிக தொலை தூரத்தில் அமைக்காமல் குறிப்பிட்ட மண்டலங்களில் மையம் அமைத்து பயிற்சி பற்றிய தகவலைப் பரவலாக்கி பெரும்பான்மையான இல்லத்தரசிகள் பங்கேற்கும்படி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

36 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா கேரக்டர் இதற்கான விழிப்புணர்வை ஓரளவு ஏற்படுத்தியிருந்தாலும்கூட சரியான வழிவகைகள் அவர்களுக்குத் தெரியவில்லை .இது போன்ற பயிற்சிகள் பலர் வீட்டு மொட்டை மாடிகளை பசுமையாக்கும்.அந்தந்த வீடுகளின் ,தரமான இயற்கை உரம் போட்டு ,இயற்கையான பூச்சிக் கொல்லிகள் தெளித்து வளர்க்கப்பட்ட காய்கறிகள் அவர்களது தேவைகளை தன்னிறைவு செய்யும்.காய்கறிக்கான செலவுகளைக் குறைக்கும் .ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாவதற்கு ஒரு அடி எடுத்து வைத்ததாக இருக்கும் .தொடர்புடைய அதிகாரிகள் கவனிப்பார்களா ?

சிற்பி ஜெயராமன் ஐயா

சிற்பி ஜெயராமன் ஐயா!
சித்திரச் சாதனையாளர்
விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர்.
பாரதியார் பல்கலைக்கூடத்தின் முன்னாள் முதல்வர்
இசை ஞானமும் ,கவிதை புனையும் ஆற்றலும் ஒருங்கே கொண்ட கோட்டோவிய மேதை !
புதுவை  ஓவிய ஆளுமைகளில் மிக முக்கியானவர்களுள் ஒருவர்.
இசை ,நடனம்,ஓவியம் என மூன்று கலைகளை ஒரு புள்ளியில் இணைத்தவர்.
மனுஷன் பாரதியான இவர்
மகாகவி பாரதியாரை
இசையின் ஜதி லயத்தோடு
தன் கரங்களை அதி வேகத்தோடு அபிநயிக்கச்செய்து
சித்திர ரூபமாய்தீட்டி
பார்வையாளரை அசரச் செய்தவர்.
எனது மானசீக குருமார்களுள் ஒருவர்.
நேற்றைய தினம் எனது குடும்பத்தின் உறவு ஒன்று விடைபெற்றுச் சென்றது .ஆம் எங்கள் பாசத்திற்குரிய , சென்னையில் வசித்து வரும் சிறிய தந்தையார் சிவப்பிரகாசம் ( எ)எங்களை விட்டுப் பிரிந்தார். அத்துயரில் இருந்து மீளுமுன் எனது கலைக்குடும்பத்தின் ஒரு தூண் சரிந்த செய்தி பேரிடியாய் தலையில்.
ஆம் சிற்பி ஐயா மறைந்தார் என்னும்
வலி மிகுஞ்செய்தி .
தாளவில்லை மனம் .
உம்முடனான எனது இனிய தருணங்களை அசை போடுகிறேன்.
எங்கள் ஸ்வாசிகாவின் ஓவியப் பயிற்சி முகாமில் தங்கள் கண்காட்சி ..
உரைவீச்சு நடந்த இனிய தருணங்கள் ..
எனது சித்திரங்களைக் கண்ணுற்று வாழ்த்தி மகிழ்ந்த தருணங்கள்...
இனி எப்போது மீண்டும் வாய்க்கும் என ஏக்கத்துடன் நாங்கள்...
நீங்கள் வாழ்ந்த்காலத்தில் நாங்களும் வாழ்ந்த இனிய ,பெருமை மிகு தருணங்கள்....
நான் பணி புரியும் பள்ளியில் தங்கள் பாதம் பட்ட புனித மிகு தருணங்கள் ...
இவை மூலம் எம் நெஞ்சில் என்றும் தூரிகை வாசமாய் நீடு வாழ்வீர் நீர்...
போய்வாருங்கள் ...
ஐயா !

ஐ .ஏ.எஸ் அகடமி சங்கர் அவர்களின் தற்கொலை

ஐ .ஏ.எஸ் அகடமி சங்கர் அவர்களின் தற்கொலை நிகழ்வு ...!
அன்றாடம் செய்தி ஊடகங்களில் சர்வ சாதாரணமாகக் கடந்து போகும் ஏதோ ஒரு நிகழ்வல்ல .
நாம் இனிமேலும் வாளாவிராது இதிலிருந்து புதியதாய் பாடம் கற்றே ஆக வேண்டிய ஒரு முக்கிய துர்நிகழ்வு .
நாடெங்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு நமக்கு ஒன்றை நன்கு புலப்படுத்தியுள்ளது .
ஏட்டுச் சுரைக்காய் கல்விமுறையின் படுதோல்வியை உலகுக்கு பறை சாற்றியது மீண்டுமொரு முறை !
எத்துனை பெரிய
கல்வியாளராய் இருப்பினும் ,
பல்லாயிரக்கணக்கான
திறமைசாலிகளை உருவாக்கியிருப்பினும் ...வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ,
பிரச்சனைகளை சந்திக்க,அவற்றோடு
போராடி வென்று வாழ அல்லது தோற்றுப்போய் இயைந்து வாழும் மனோதிடத்தைக் கற்றுத் தாராத கல்விமுறை எதற்கிங்கு ?
விட்டுக்கொடுத்து வாழும் பேரன்பை போதிக்காத ...
இவ்வுலகில் வாழ்வின் பாதையில் நம்முடன் சமநடை பயிலும் உறவு & நட்பின் குறைகளை சகித்து வாழும் ,அந்தக் குறைகளோடு அவர்களை அரவணைத்து வாழும் மனப்பக்குவத்தை முதிர்விக்காத ..
ஈகோ எனும் ஈட்டியை தன் கால்களின் கீழாக போட்டு நசுக்கி சக துணைக்கு அனபுடன் கலந்த மரியாதையைத் தந்து பழகும் செப்படி வித்தையைக்
கற்றுத் தராத ...
கல்வி முறை எதற்குத்தான் ?
வெற்றுப் பணம்காய்ச்சி மரமாய் நம்மை வார்த்து
எடுத்துக்கொள்ளவா ?
பல்லாயிரக்கணக்கான ஆளுமைகளை உருவாக்கிய ஓர் ஆளுமை
சாதாரண ஒரு குடும்பபச் சிக்கலில் சிக்கி உயிர் மாய்த்துக் கொண்டதே!
அந்தோ ..!
ஆழ்ந்த இரங்கல்கள்.!
இனியேனும் பள்ளிகளில்
அறிவியல் ,கணிதவியல்,வரலாறு & புவியியல் .....இதெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக , வாழ்வியல் என்று ஏதேனும் ஒன்றிருந்தால் அதைக் கற்றுக் கொடுப்போம் !
மதிப்பெண்கள் எடுக்க முனைப்பு காண்பிக்க மாணவர்களை தயார்படுத்துவதை விடுத்து ,தமது விலைமதிப்பில்லா உயிரை ,தமது வாழ்வை நேசிப்பதற்கு ,
கற்றுக்கொடுப்போம்!
தோல்விகளுக்குத் துவண்டு போகும் மனநிலையை விடுத்து ,தோல்விகளை வெறும் அனுபவங்களாக எண்ணி சர்வ சாதாரணமாகக் கடந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இயல்பான மன உறுதியைக் கற்பிப்போம்.
ஆகையால் எம் கல்வித்துறை கணவான்களே ...
பேரறிவு வித்தகர்களே ..
இதற்கு ஏதாவது புதிதாய் ஒரு பாடத்திட்டம் தயாரிப்பீர்களாக !