Sunday 14 October 2018

அ ப் பா

அ ப் பா ...!
மூன்றெமுத்தில் ஒரு மந்திரச்சொல் .
த மி ழ்
அ ம் மா
என்ற வரிசையில் உச்சரிக்கும்போதே மனம் இனித்திடும் ஒரு மந்திரச் சொல் ' அப்பா '
நீங்கள் உங்கள் தந்தையின் மேல் காதல் கொண்டவரா ?
அப்படியானால் இப்பதிவு உம்மைக் கவரும் என நம்புகிறேன்.
சுப்பாராயன் அப்பர்சாமி
எனது தந்தை .
சுப்பராயன் - ஜானகி அம்மாள் தம்பதியரின் மூன்றாவது மகன் .
இரண்டு தமக்கைகள் ,மூன்று தம்பிகள் எனும் துணை கொண்டவர்.
1939 ஆம் வருடம் , டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று பிறந்தவர் .
இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்தவர்.
மிக ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்தவர்.
அதனால் குடும்ப பாரத்தை தான் சுமந்தவர்.
முதலில் தனது தம்பிகளை படிக்க வைத்து ஆளாக்கினார்.
பின்னர் தனது மக்களான எங்களை வளர்க்கவும் படிக்க வைக்கவும்
மிகச் சிரமப்பட்டார்.
அப்பொழுதெல்லாம் ஆசிரியர்களுக்கு சொற்ப வருமானமே இருந்ததால்
பள்ளிபணி முடிந்ததும் நெசவு நெய்தும் கடுமையாக உழைத்து வருமானம் ஈட்டி எங்கள் மூவரையும் அரசுப் பணிக்குச் செல்லும் அளவுக்குத் தகுதியாக்கியவர்.
என தமக்கையை தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் முதுகலை முடிக்கச் செய்திருந்தார். விமானப் படையில் பணியாற்றிவந்த வரனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
என்னை நான் விரும்பிய ஓவியக்கலையில் தேர்ச்சி பெறவைத்து ,ஓவிய ஆசிரியருக்கான தகுதியையும் ஏற்படுத்தித் தந்திருந்தார்.
என்தங்கையை ஆசிரியர் பயிற்சி முடிக்கச்
செய்திருந்தார் .
பூர்வீக வீட்டை கூரை வீட்டில் இருந்து நல்ல வாரைகளிட்டு ஓட்டுவீடாக மாற்றியிருந்தார்.
இவ்வளவையும் அவரை ஆட்டி வைத்துக்கொண்டிருந்த ஆஸ்த்துமா என்னும் இரைப்பு நோய் தந்த துண்பத்தையெல்லாம் தாங்கி என் பாட்டி , அம்மா ,அக்கா, நான் தங்கை மற்றும் தான் என்ற எங்கள் அறுவர் கூட்டணிக் குடும்பத்தின் வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டார்.
ஒரு வழியாக அவருக்கு அளிக்கப்பட்ட தரமான சிகிச்சை & என் தாயின் கவனிப்பு என இரண்டும் கலந்த போராட்டத்தால் ஆஸ்துமா என்னும் அரக்கன் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.
ஆனால் அவருக்கு அதி தீவிர இரத்த அழுத்தமும் உள்ளுக்குள் இருந்திருக்கிறது .
குடும்பத்தை கவனிப்பதாக நினைத்து அதனை அவர் அலட்சியப்படுத்தியிருக்கலாம்.
எங்களுக்கும் அதை அவர் சொல்லவில்லை .
அக்டோபர் 4 ஆம் நாள் மாலை 6 மணியளவில் அவருக்கு மூளையில் இரத்தக் குழாய் வெடித்திருக்கிறது .ஒரு கை ஒரு கால் செயலிழக்கிறது . பதறியடித்துக் கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறுதியாக புதுவை ஜிப்மரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கிறோம்.
அதிகாலை -விடிந்தால் 5 ஆம் தேதி - 3.30 மணிக்கு அவர் உயிர் பிரிகிறது .
ஆம் ...
1991 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 5 ஆம் நாளன்று திடீரென எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இயற்கையெய்தினார்.
எங்களை விட்டு அவர் மறைந்தபொழுது அவருக்கு வயது 52.
அவர் எங்கள் நினைவில் மட்டும் வாழத்துவங்கிய நாள் அக்டோபர் ஐந்து .
அவரது ஆசியால் என் தமக்கைக்கை சுமதிக்கு மூத்த மகனாக பால மணிகண்டன் பிறந்த தினம் அக்டோபர் - 4.
அவரது ஆசியால் என் தங்கை சுஜாதாவுக்கு
ஒரே மகளாக தரணீஸ்வரி பிறந்த தினம்
அக்டோபர் -5 .
அவரது ஆசியால் ,தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் என் சிற்றப்பா மகள் இந்துமதியின் மூத்த மகளாக நீனா பிறந்த தினம் அதே அக்டோபர் -5 .
அவரது ஆசியால் , தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் என் சிற்றப்பாவின் மகன் கிரேப் @ பாலமுருகனின் மூத்த மகன் பிறந்த தினம் - எனது தந்தையின் பிறந்த தினமான
டிசம்பர் -1 .
அன்று என்வீட்டில் டிரான்சிஸ்டர் தவிர ஏதுமில்லை .
ஆனால்....
இன்றோ...
என் தமக்கைக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள் .
என் தந்தையின் மறைவுக்குப் பின் என் தங்கைக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள்.என் தங்கை அரசுப் பணியில் இருக்கிறார்.
என் தந்தை பணியிலிருக்கும்போதே இறந்துவிட்டதால் ,கருணையடிப்படையில்
எனக்கும் அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணி கிடைத்துவிட்டது .
திருமணமாகிவிட்டது .
நிறைவான ஊதியம் .
கொஞ்சி மகிழப் பேரக் குழந்தைகள்
பாடல்கள் கேட்டு மகிழ ஆடியோ சிஸ்டங்கள் .
படங்கள் பார்த்து மகிழ தொலைக்காட்சி.
வாசித்து மகிழ வீட்டுக்குள்ளேயே ஒரு சிறு நூலகம் .
ரசித்து மகிழ நான் வரைந்து சட்டமிட்டு மாட்டியிருக்கும் வண்ணமிகு சித்திரங்கள் ..
வேடிக்கை பார்த்திருக்க வண்ண மீன் தொட்டியும் , லவ் பேர்ட்ஸ் கூட்டமும்.
ஆடி மகிழ கொள்ளிடத்து ஊஞ்சல் .
சிலாகித்து மகிழ சுற்றிலும் வண்ண மலர் செடி கொடிகள் .
சுற்றத்துடன் பேசி மகிழ அலைபேசியும் ,திறன் பேசிகள்.
இப்படி உள்ளத்துத் தோன்றியதை உறவுகளுடனும் நட்புடனும் பகிர்ந்து மகிழ முகநூலும் இன்னும் பிற சமூக வலைத்தளங்கள்..!
இடுக்கண் நேரிடின் உடன் தோள் கொடுத்துத் தாங்கிட என் மாணவ நண்பர்கள் ..!
வாழ்ந்து மகிழ வங்கிக்கடன் பெற்றும் , பூர்வீக வீட்டை விற்றும் நான் பார்த்துப் பார்த்துக் கட்டியுள்ள கலைநயம் பொருந்திய வண்ண மயமான புதிய இல்லம்...
அந்த இல்லத்திற்கு நான் சூட்டியுள்ள பெயர் எனது பெற்றோரின் பெயர்..
தந்தை மற்றும் தாயாரின் பெயரை எனக்கு வாழ்வளிக்கும் நான் நேசிக்கும் கலையுடன் இணைத்து வைத்துள்ள அந்தப் பெயர்...
அப்பர்சாமி சுந்தரவல்லி கலாலயம்
எல்லாமிருக்கிறது ...
எல்லாமிருக்கிறது ...
ஆனால் எங்கள் பிரியமுள்ள அப்பா ...
நீங்கள் இல்லை ...நீங்கள் எங்கள் மேல் காட்டும் உங்கள் அன்பு இல்லை..பொழியும் பரிவுமில்லை .
இதையெல்லாம் கண்டு மகிழ நீங்கள் இல்லை.
நாங்கள் மகிழ்வாக வாழ்கிறோம் ..அப்பா ...
உங்களுக்குக் கிடைக்காத எல்லாமும்
எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன தந்தையே !
உங்களால் ...உங்களால் மட்டுமே ...
உங்கள் ஆசியால் மட்டுமே எங்களுக்குக்
கிடைத்துள்ள இத்தனை சந்தோஷத்தையும்
பார்த்து மகிழ தாங்கள் இல்லையே என்றெண்ணுகையில்...
இதை டைப் செய்யும் இந்த நிமிடம் விரல்கள் நடுங்கித் தடுமாறுகின்றன.
விழிகளில் நீர் திரையிடுவதை தடுக்க இயலவில்லை ..
அப்பா ..எங்கள் நினைவுகளில் வாழும் உங்களை வணங்குகின்றேன்.
சூட்சும ரூபமாய் இருந்து எங்களுக்கு ஆசி வழங்குங்கள் .
உங்கள் ஆசி எங்களை மேலும் தழைக்கச் செய்யும் ; மலரச் செய்யும் ...
உம்மை விட்டு என்றும் நீங்காத நினைவுகளுடன்...
உமது உயிரின் துளி !
சுந்தரவல்லி அப்பர்சாமி
சுமதி வெங்கடேசப் பெருமாள்
சுரேஷ் @ முத்துக்குமரன் புவனேஸ்வரி
சுஜாதா சுகுமார்.
என் வயதுள்ள நண்பர்களே உங்கள் வீட்டில் வயதான நிலையில் தாயும் தந்தையும் ஜீவித்து இருக்கிறார்களா? அல்லது ஒருவரேனும் இருக்கிறார்களா ? அவர்கள் ஆரோக்கியத்துடன், நலமுடன் இருக்கிறார்களா ? அது இறைவன் உங்களுக்கு அளித்திட்ட கொடை .காலத்தின் ஆசீர்வாதம் . அனுபவப் பேழை .அற்புதம் பொக்கிஷம் .உங்கள் குழந்தைகளைப் போல் அவர்களைப் பார்த்துக்கொள்ளுங்கள் .
அவர்கள் வயிறும் மனமும் குளிர தன் வாழ்நாளின் நிறைவுப் பகுதியை அவர்கள் வாழ்ந்து பார்க்கட்டும் .
நலமே வாழிய !






































No comments:

Post a Comment