Monday 27 July 2015

கனவு கலைந்தது

கனவு கலைந்தது 


கனவு காணச் சொன்ன எங்கள் அறிவியலே ...
நீ பிறப்பால் ஒரு இசுலாமியன் ...
உன்னால் இரும்பூது எய்தியது இசுலாம் மதம் ...!
நீ வளர்ப்பால் ஒரு தமிழன் ....!
தற்பெருமையால் தலை நிமிர்ந்தது தமிழகம் ...!
உன் கல்வி அறிவால்  மேதைமையால் 
                                                                 ஒரு இந்தியன் .....!
இதயமெங்கும் கர்வம் கொண்டது இந்தியா .....!
மதங்களைக் கடந்து மக்களின் நேசிப்பால் 
                             ஒரு சிறந்த மனிதன் ...உன்னதன் ...!
            உற்சாகம் கொண்டது உன்னால் உலகம் ....!
மாணவர்களைக் கனவு காணச் சொன்ன 
                                               எங்கள் கனவு மனிதனே ...!
             நீயே இன்று கலைந்துபோனதால் ......
                                               மனம் கனத்தது மனிதம் ...!

Sunday 26 July 2015

மலரும் நினைவுகள்

                  கடந்த மூன்று தினங்களுக்கு முன் குமரன் - என் வகுப்புத் தோழன்- 6 ஆம் வகுப்பு முதல் -10 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தவர்கள் நாங்கள் -காலச் சூழல் ...பல வருடங்களுக்குப் பின் என்னைச் சந்திக்க வந்திருந்தான் ....எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ...எனக்கு ..மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .இரண்டரை மணி நேரச் சந்திப்பு ...பழைய நினைவுகள் ...பழைய நண்பர்கள் ...வகுப்புத் தோழர்கள் ...அப்போதைய ஆசிரியர்கள் ...என எல்லாவற்றையும் பற்றி பேச்சு ...நேரம் போவதே தெரியாமல் ...
     ஆறாம் வகுப்பில் எங்கள் வகுப்பாசிரியருடன் நாங்கள்  எடுத்துக் கொண்ட குழுப்படம் பார்த்து எங்கள் பசுமையான  நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தோம் ..ரவிக்குமார் ,வாசு,M .ஆறுமுகம் ,V .ஆறுமுகம்,P .S .பாஸ்கர் ,சக்தி வேல்,நாராயணன்,அயிலு ,பாலமுருகன்,லோகநாதன் என அனைத்து வகுப்புத் தோழர்களையும் நினைவு கூர்ந்தோம் .ஆப்போதைய ஆசிரியர் -சமூக அறிவியல் -திரு .சக்கரபாணி  சாருடன் நாங்கள் அமர்ந்திருக்கிறோம்...மேலும் எங்களுக்கு வகுப்புகள் எடுத்த ......ஆங்கில ஆசிரியர்கள்  திரு அப்துல்கையூம் சார்  .திரு ஆரோக்கிய ராஜ் சார் ,தமிழ் ஆசிரியர்கள் திரு ராமநாதன் அய்யா ,சாமிநாதன் அய்யா,பொன்னுசாமி சார் ,திருமதி விஜயலட்சுமி மேடம்,திருமதி மலர்கொடி மேடம் ..சீனுவாசன் சார் என அனைத்து ஆசிரியர்களுடனான நினைவுகளையும் பகிர்ந்து மகிழ்ந்தோம் .நீண்ட வருடங்களுக்குப் பிறகு அப்துல் கையூம் சார் என்னைக் காணும் ஆவலுடன் எங்கள் வீடு தேடி வந்து பேசி மகிழ்ந்த நெகிழ்ச்சியான தருணங்கள் ...எனது மனவன்னங்கள் நூல் வெளியீட்டு விழாவிலே ஆரோக்கிய ராஜ் சார் கலந்துகொண்டு எனது முதல் பிரதியை பெற்று சிறப்பித்த மகிழ்ச்சியான நிகழ்வு ..முதலியவற்றையும் அவனுடன் பகிர்ந்துகொண்டேன்.மேலும் 10 ஆம் வகுப்பு விடுமுறையின் போது நண்பன் P .S .பாஸ்கர் உடன் சின்னப் பேட்டைக்கு குமரன் வீட்டிற்கு சென்றது ...அவர்களது வயலுக்கு சென்று நுங்கு உண்டு மகிழ்ந்தது ...குமரனின் தாயார் அன்போடு பரிமாற மதிய உணவு அருந்தியது என மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டேன் ....விடை பெரும் தருணத்தில் எனது மனவண்ணங்கள் நூலையும் அளித்து மகிழ்ந்தேன் ...மறுபடியும் தனது பணி நிமித்தம் துபாய் செல்ல உள்ள என் நண்பனை வாழ்த்தி விடை கொடுத்தேன் .நீண்ட வருடங்களுக்குப் பின் வகுப்புத் தோழி சந்தித்த நெகிழ்ச்சியான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி முக நூல் சொந்தங்களே...! 

Sunday 19 July 2015

அன்புள்ள அறிவியல் !

 அன்புள்ள அறிவியல் !

அன்பே நீ அருகில் வருகிறாய்! 
அருகில் வர வர 
நான் உறைந்து போகிறேன் 
இன்னும் அருகில் வருகிறாய் 
நான் உருகிப் போகிறேன் 
என்னை நெருங்கிவிட்டாய் 
நான் கொதித்துப் போகிறேன் 
இதோ ...என்னை தொட்டுவிட்டாய் 
நான் வெடித்துப் போகிறேன் 
வெடித்ததிலே சிதறியது  துண்டாய் என்னுள்ளம் 
ஒவ்வொரு சில்லிலும் 
கண்ணாடித் துண்டுகள்  உருவம் காட்டுவதுபோல் 
...இதோ சில்லென்ற உன் விரல் ஸ்பரிசம் 
சிதறிப் போன என் சிந்தனைகள் 
ஒருங்கு கூடுகின்றன 
என் எதிரே நீ !
உன் எதிரே நிற்பது நானா ?
என் நினைவுகளின் இடுக்குகள் எங்கும் 
நீக்கமற நிறைந்திருக்கும் 
நிகழ் கால நிஜமே ... 
நான் வடிவில் நீ ! 
 அன்பே ....!
நான் ஜடப்பொருளா 
எனக்கும் நிலை மாற்றம் உண்டா ?
நீரும் நானும் ஒன்றா ?
நீர்...வெப்பம்  குளிர்ந்து உறையும் ...
 நீர் ...வெப்பம் நெருங்க 
உருகிக் கொதிக்கும் ...!
அன்பே நீ குளிரா வெப்பமா ?
என்னை உறைய வைக்கின்றாய் ஒரு கனம் 
என்னை உருகச் செய்கிறாய் மறு கனம் 
உருகிய நான் கொதிக்கவும் செய்கிறேன் !
நல்ல வேலை ... நான் ஆவியாகவில்லை !
நீ நெருங்க நெருங்க நான் வெப்பநிலை கூடிப்போனேன் 
செல்ஷியஸ் ஏறிப்போனேன் 
கொதித்துப் போன என்னை குளிர வைத்த கிராதகியே !
இன்னும் ஒரு பார்வை 
நீ எனை நோக்கி வீசிவிட்டால் 
உருகாமல் வெடிக்காமல் 
ஆவியாய் பதங்கமாவேன் 
கற்பூர ஆவி போன்றே 
லேசாக மெல்ல மெல்ல மேலேழுவேன் 
உன் நாசித் துவாரத்தின் வழி செல்வேன் 
உல் சென்று நுரையீரல்களில் பரவி 
உதிரத்தில் கலந்தோடி 
உன் அணுக்களில் சென்றமர்ந்து 
உன் ஆவியோடு சங்கமித்து 
தன்மயமாய் ஆகிடுவேன் ..!
தன்யனாய் ஆகிடுவேன் ...!