Friday 29 December 2017

விடுகதையாகும் விஞ்ஞானம்

விடுகதையாகும்  விஞ்ஞானம்








விஞ்ஞான  முன்னேற்றம் என்னும் பெயரால் 
          அஞ்ஞானம் அகற்றியதாய்  கர்வம் கொண்டு 
இஞ்ஞாலம் முழுமைக்கும் துரோகம் செய்து 
          இன்னல்பல தருகின்றான் மனிதன் நாளும் 

பகுத்துண்டு பல்லுயிரை ஓம்புக வென்றான் 
          பங்காகக் குறள்தந்த வள்ளுவன் அன்று  
மிகுதியான பேராசை கொண்டே மனிதன் 
          மிச்சமுள்ள உயிர்ச் சூழல் கெடுக்கின்றானே 

அறிவியல் இவ்வுலகத்தின் ஆக்கத் திற்கே 
           அறிந்திருந்தும் அழிவுக்காய் செய்தான் மனிதன் 
தறிகெட்டுப் போகின்ற அவனை இன்றே
           தடுத்தால் மட்டும்தான் உய்யும் உலகம் 

தூரத்தை விரைவாகக் கடப்ப தற்கே 
          துரிதமாகச் செல்லுகின்ற வாகனம் படைத்தான் 
பாரத்தைக் கூட அவை  சுமக்கும் நன்றாய் 
          பாதகமாய்ப் புகை கக்கிச் சூழலும் கெடுக்கும் 

முறையற்றுப் பெருகியதன்  காரணத் தாலும் 
          மூர்க்கமாகச் செலுத்துவோரின் மதிவசத்  தாலும் 
நிறையபேரின் விலையில்லா உயிர்களை எல்லாம் 
          நிலஉலகை நீங்க வைக்கும் விபத்தின் பெயரால்.

கடினமான பாறைகளை  பிளப்ப தற்கும் 
          கச்சிதமாய் சுரங்கங்கள் அமைப்ப தற்கும்
வெடிபொருளைக் கண்டறிந்தார் அறிஞர் ஒருவர் 
         வேண்டாத தொல்லையெலாம் விளைந்தது பாரீர் !

வெடிபொருளும் பரிணாம வளர்ச்சி கொண்டே 
           வேட்டுவைக்கும் அணுகுண்டாய் மாறிய திங்கே 
கடிதினிலே முழுஉலகம் தனையும் நன்றே 
           கச்சிதமாய் அழிக்குந்திறன் அதற்கே யுண்டாம்

விந்தைமிகு மின்சக்தி தனையும் கூட 
           விபத்தாய்தான் மனிதன் அன்று கண்டுபிடித் தான் 
அந்தோமிகப் பரிதாபம் அதன் துணையின்றி 
           அணுகணமும் நகராது  அவன் வாழ்நாளில் 

தொலைதூர மனிதருடன் தொடர்பு கொள்ள 
           தொலைபேசி சாதனத்தைப் படைத்தான் இங்கே 
மலைத்துப் நின்றதுதான் மிச்சம் ஐயோ 
           மதிமயங்கி மனம் கெடுத்தது செல்போனாகி 

ஓயாமல் செல்போனில் பேசிக்கொண்டே 
            ஒருபக்கமாகத் தன்தலையை சாய்த்து நின்றே 
மாயாலோக முகநூல் கட்செவி தன்னில்
            மதிமயங்கி  மாந்தரெல்லாம்  மூழ்கு கின்றார் 

உலகனைத்தும் உள்ளங்கை தன்னில் நன்றாய் 
            உள்ளதென்று சொல்லும்    படியாகத்  தானே
வலைப் பின்னல்  ஒன்றையிங்கு மனிதன் நெய்தான் 
            வலியதொரு  இணையம்எனப் பெயரை இட்டான் 

தேடுபொறி தனிலெதனை உள்ளிட் டாலும் 
             தெளிவாகக் காட்டிடுமே  விபரம் நொடியில் 
ஊடுருவி வளருகின்ற கலைகள் போலே 
             ஒழுங்குநெறி கெடுத்துவிடும் அல்லவை  காட்டி 


விட்டில்கள் விளக்கின்மேல் வீழ்ந்தாற்போல
             வீணாக வீழ்ந்துகெடும் இளையோர் கூட்டம் 
பட்டால்தான் புத்திவரும் சிலருக் கிங்கே 
             பட்டும்கெட்டும் புத்திவரா பதர்தான் பலபேர் 

உடலுழைப்பு வேலைகளை செய்யும் பொறிகள் 
             உதவிக்காய் வந்ததென எண்ணி மாந்தர் 
கடமைகளை செய்வதற்கும் சோம்பிப் போனார்
             காலமெல்லாம் நோய்களுக்கே இரையாய் ஆனார்

நடப்பதற்கு கூட மிகப்  பெருமூச் செறிந்து
            நாக்கு தள்ளும் வண்ணம்  உடல்பெருத்தே நின்றான்
உடல்நன்றாய் இளைப்பதற்காய் அனுதினந் தோறும்
            உடற்பெயர்ச்சி எனும்பெயரில் தனைவருத்திக் கொண்டான்

இன்னும்பல இருக்கிறது எடுத்தியம்பி டவே
            இருப்பினும்நான் இத்துடனே  முடித்திட வேணும் 
சொன்னதை யெல்லாம் கேட்டு பகுத்தறிவுடனே
             செயல்பட்டு வாழ்வாங்கு வாழ்ந்திடு வீரே !

தீயிங்கு நன்மைக்கா தீமைக்கா  சொல்
              தீங்கென்பது  தீயிலில்லை விளங்கி கொள்வாய்  
நீயிங்கதைக் கையாளும் முறையா லன்றோ
              நிச்சயமாய் அதன் பலனைநிர்ணயிக் கின்றாய்

கத்தி கொண்டு காய்கனியை நாம்நறுக் கிடலாம்
              காலனையும் வரவழைக்க கழுத்தறுத் திடலாம்
புத்திகொண்டு கருமங்கள் நிறைவேற் றிட்டால்
              புவியிலிங்கு புன்னகையின்   தேசம் மலரும்

இனிமேலும் அறிவியலை ஆக்கத் திற்கே
              இட்டுச்செல்லும் பாதையிலே பயணிப்ப போமே
கனியிருக்கக் காய்கவர்வ தெதற்கு என்ற
              கனிதமிழில் மொழிகின்ற குறள்வழி நடப்போம்









































 கவிதை வளரும்...
  





   












Tuesday 26 December 2017

ஏற்புரை

ஏற்புரை 

நான் மாணவ நண்பன் பேசுகிறேன் 

அவையோர் அத்துணை பேருக்கும் என்  வணக்கம் .

ஒவ்வொரு ஆடவரின்வெற்றிக்குப்
பின்னாலும் நிச்சயம் ஒரு பெண்  இருப்பாள்.
ஆனால் இந்த ஆசிரியரின்
 ஒவ்வொரு செயலுக்கும் ,
அதன் வெற்றிக்கும் பின்னால்
என் தாயும் மனைவியும் மட்டுமல்ல .
எனது அருமை மாணவக் கண்மணிகளும்
நிச்சயம் இருக்கிறார்கள்.

அண்டமாய் அவனியாகி 
இயற்கையே உருவாய்க் கொண்டு
வாழ்வையும் இன்பத்தையும் 
ஒருங்கே அளித்துக் காக்கும் 
அறிவொனாப்பொருளாய் விளங்கும்  இறையே ...
உனக்கு என் முதல்  வணக்கம் .

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே 
முன்தோன்றிய  மூத்த மொழியாம் 
என் கன்னித் தாய்த் தமிழே
உனக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் ...!

பெற்ற  தாயும்   பிறந்த பொன்னாடும் 
நற்றவ வானினும் நனி சிறந்ததனால் 
என்னை ஈன்ற தாய்க்கும் எனதருமைத் தாய்த்திருநாட்டுக்கும் 
சிரம் தாழ்ந்த செவ்வணக்கம்.

என்னை இப் பூவுலகு கொண்டு வந்து 
அன்னை தமிழுக்கும் சித்திரக் கன்னிகைக்குமாய் 
சேவைசெய்யும் வண்ணம் கைவிரல் பிடித்து 
உலகிற்கென்னையும் எனக்கு இவ்வுலகையும் 
அறிமுகம் செய்துவைத்த என்னருமை தந்தைக்கும் 

எனக்கு எண்ணையும் எழுத்தையும் இரு கண்கள் ஆக்கி 
ஞான ஒளி ஏற்றி வைத்து தமிழ்ப் பாலை 
பக்குவமாய் ஊட்டி என்னை கவிஞனாக்கிய 
என் அத்துணை ஆசான்மார்களுக்கும்
என் அன்புசால் நல்வணக்கங்கள்...!




தமிழ்த் தாயின் தலைமகன் 
முதல் ஆசான் ...பொதிகை மலைவாழ் குறுமுனி 
அகத்தியமாமுனிக்கும் 
அவனது தலைமைச் சீடன் 
தமிழ் கூறு நல்லுலகத்திற்கும் 
தொல்லிலக்கணம் வகுத்தளித்த 
தொல்காப்பியனுக்கும் 

என்னை நன்றாய் இறைவன்  படைத்தான்
 தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே
என்று தான் பிறந்ததின தவப்பயனை 
தமிழுக்குத் தொண்டு செய்யத்தான் 
என்பதனை உணர்ந்து மூவாயிரம் பாமாலைகளை
தமிழன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தானே 
திருமந்திரம் அருளிய திருமூலனுக்கும் 
உலகுக்கெல்லாம் இறைவனாம் போல் 
எழுத்துக்களுக்கெல்லாம் நகரம்தான் முதல் என்று 
அவனிக்கெல்லாம் பகன்று நின்ற 
வள்ளுவப் பெருந்தகைக்கும் 
அவனீந்த குறுங்கவிதையான் குறளுக்கும்

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரையும் 
அறம்செய விரும்பச் சொல்லி 
ஆத்திச்சூடி பாடினாளே எங்கள் அன்பிற்கினிய 
அவ்வைப் பாட்டி ...அவளுக்கும் என் தமிழார்ந்த வணக்கங்கள்...!

 கனி தேன்  ராமாயணம் படைத்தானே 
கவிச் சக்கரவர்த்தி கம்ப நாட்டானுக்கும்
கற்போர் நெஞ்சையள்ளும்
 சிலப்பதிகாரக் காப்பியம் படைத்த 
 கவி வளவன் இளங்கோவடிகளுக்கும்  

யாமறிந்த மொழிகளிலே 
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் 
என்றே நறுக்குத் தெறித்தாற்போலக் கூறிய 
முறுக்கு மீசை முண்டாசுக் கவி பாரதிக்கும்

கனியிடை ஏறிய சுளையும் 
முற்றுகை பாகிடை  ஏறிய சாறும் 
இனியன என்றாலும் என் தாய்த் தமிழை 
அதனினும் இனியது என்பேன் என்று 
ஆணித்த தரமாய்க் கூறி 
தமிழ்ச் சுவை ருசித்த கிறுகிறுப்பில் 
மயங்கி கிடந்தானே பாட்டுக்கொரு புலவன் 
அந்த பாரதிதாசனுக்கும்

பாட்டாளிப் புலவன் பட்டுக்கோட்டையார் தொடங்கி
கவியரசு கண்ணதாசன்,
 தேமதுரத் தமிழ் வாளெடுத்து
மூன்றாம் உலக யுத்தம் புரிந்தானே
கவிப்பேரரசு வைரமுத்து ஈறாக இன்னும் இன்னும்
தமிழ் வளர்த்துக்கொண்டிருக்கும்
அத்துணை அழகிய தமிழ் மகன்களுக்கும் 
இந்த சித்திரக் கவியின்
சீர் மிகு வண்ண வணக்கங்களை
என் நாவென்னும் தூரிகைத்  தொட்டு
நயமுடனே தெரிவித்துக்கொள்கிறேன்.















   

Monday 25 December 2017

மலரும் நினைவுகள்

          மலரும் நினைவுகள்



விடுமுறையைப் பயன்படுத்தி பழைய புகைப்படங்களைத் தேடியதில் சில படங்கள் கிடைத்தன ...வாழ்வின் பொற்காலங்களை நினைவு படுத்தும் பதிவுகள்....உடனே ஸ்கேன் செய்து அவற்றை தொடர்புடைய மாணவர்களின் டைம் லைனில் பகிர்ந்தேன் ...கோபி ராஜா ,விநாயக மூர்த்தி மற்றும் ராஜதுரை ஆகியோர்தான் அந்த பாக்கிய சாலிகள் ...காடாம்புலியூரில் ஆர். கே அரசுமேல்நிலைப் பள்ளியில் நான் பணியாற்றியபொழுது அங்கு படித்த என் மாணவ நட்புக்கள் ...இப்பொழுது முக நூலிலும் நட்பைத் தொடருகிறார்கள்.வேறு சில மாணவர்களின் படப்  பதிவுகள் கிடைக்கும்பொழுது அவர்களுக்கும் பகிர்வேன்.அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்தபொழுது எடுத்த பொக்கிஷமும் கிடைத்தது .அதை விடுவேனா என்ன ?

அப்பொழுது எங்கள் வகுப்பு ஆசிரியரும் சமூக அறிவியல் ஆசிரியருமான திரு சக்கரபாணி அவர்கள் ...நிறைய கதைகள் கூறுவார் என்று முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேனே ,,,எங்கள் அபிமானத்திற்குரிய ஆசிரியர் .அவர் காலடியில் சற்றே தள்ளி கழுத்தில் டை கட்டி ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறானே ...அவன் வேறு யாருமில்லை நண்பர்களே ..நானேதான் .

எனது மலரும் நினைவுகள் ....கருப்பு வெள்ளையில் ...காலத்தை வென்றவை

...!

இதில் உள்ள வகுப்புத் தோழர்கள் சிலர் எங்கள் ஊரிலேயே என்னுடன் தொடர்பில் இருந்தாலும் பலர் எங்கிருக்கிறார்களோ ...இப்பதிவு அவர்களை கண்டுபிடித்துத் தருமா?



நான் ஓவியன் ஆன கதை.

நான் ஓவியன் ஆன  கதை.




நான் ஒரு சித்திரக்காரன்

நான் ஒரு ஓவியக்  கலைஞன் .

நான் ஒரு ஓவிய ஆசிரியர் .

என் நாடி நரம்புகளில் குருதியோட்டந்தனில் சித்திரத்தின் மீதான காதல் கலந்து ஓடிய வண்ணம்  இருக்கின்றது .

இந்த சுவாசங்களில் நிறைந்த ஓவியக்  கலையின் மீதான ஆர்வமானது என் சிந்தையெங்கும் வியாபித்துள்ளது .

என்னை நானே திரும்பிப் பார்க்கிறேன்

என்னுள் சித்திரத்தின் மீதான ஆவல் ஒட்டிக்கொண்டது எப்படி ?

ஓவியத்தேடல் எப்போது முதல் என்னுள் துளிர்த்தது ?

தூரிகைக் கனவு என்னைத் துரத்திப் பிடித்தது  எந்தசமயம்?

இதற்கெல்லாம் விடை தேட என் நினைவுகளை சற்றே ரீவைண்ட் செய்து பார்க்கப் போகிறேன்.

 இதோ ..கால எந்திரம் பின்னோக்கிப் பயணிக்க எத்தனிக்கிறது ....!

நான் ஏறப் போகிறேன் .

நான் சித்திரப்  பிரியனான கதையை நானே எனக்குள் தேடப் போகிறேன் ....!

வண்ணங்கள் என் எண்ணமெலாம் குடியேறிய கதையை உங்களிடம் பகிர போகிறேன் .

சுவாரசியம் நிரம்பிய என் பிள்ளைப்  பருவ  நிகழ்வுகளையும்  பதின் பருவ  நிகழ்வுகளையும் பட்டியலிட்டு தரப்போகிறேன்.

என்னை காலதூரிகை ஓவியனாய் வரைந்த கதை வடிக்கப்போகிறேன் ...!

புறப்படலாமா?

என் மூன்றாம் அகவையில் தொடங்குகிறேன் நான் .

என்னை நானே உணர்ந்து நினைவுகள் நெஞ்சில் புகை மறைத்தார் போன்று படியாது படிந்திருந்த பசுமை  துவங்கிய பருவம் அது .

பிறந்தது 1967 ல் ஒரு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் ...புதன் கிழமை .

என்னை இப்புவிக்கு தந்தவர்கள் ..வரும் காலத் தூரிகைக்காய் தாரை வார்த்தவர்கள்...அப்பர்சாமி மற்றும் சுந்தரவல்லி தம்பதியினர் .

எனக்கு முன்னர் பிறந்து என்னுடன் விளையாட்டுக்காய் சண்டையிடக்  காத்திருந்த என் சகோதரி சுமதி .

நான் பிறந்து மூவாண்டுகள் கழிந்து எங்கள் பால பருவத்திற்கு பலமும் வளமும் சேர்த்திடப்  பிறந்திட்ட என் தங்கை சுஜாதா .

என் அப்பாவுடன் பிறந்த சகோதரர்கள் மூவர் .இவர்கள்தான் என் வாசிப்பு ஆர்வத்திற்கு ...சித்திரத் தேடலுக்கு களமாய் நின்றவர்கள்.

என் அன்புக்குரிய பாட்டி .என் தந்தையின் தாய் .

என்று   கூட்டத்திற்கு குறைவில்லா கூட்டுக குடும்பம் எங்களுடையது .

நான் பிறந்து வளர்ந்தது கடலூர் மாவட்டம் பலாவிற்குப் புகழ் பெற்ற  பண்ணுருட்டிக்கு அடுத்துள்ள புதுப்பேட்டை  என்னும் கிராமம் .

கிராமம் என்றதும் எதோ பாரதி ராஜா படத்தில் வரும் பற்றிக் காட்டு கிராமம் என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம் .

பெரிய பேரூராட்சி .கைத்தறி லுங்கிக்குப் பெயர் போனது .அமரர் கல்கி எல்லாம் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள் தெரியுமா?அதை அவரே தனது  நூலில் குறிப்பிட்டிருக்கிறார்,அப்படிப் பட்ட புகழ் பெற்ற  ஊர் அது.

அந்த ஊரிலே பேருந்துகள் செல்லும் பிரதான சாலையில் , கடைவீதிக்கருகில் இருந்தது எங்கள் வீடு .எங்கள் வீட்டுக்கு அருகில் காவல் நிலையமும் இருந்தது .எதிரேயே அரசுப்  பள்ளியின் ஒரு பிரிவும் இயங்கி வந்தது .தெருவில் இறங்கி மேற்காகத் திரும்பினால் காசிவிசுவ நாதர் ஆலயம் கண்களை படும் ...தினமும் கோபுர தரிசனம்தான் .

                                                                                                                  தூரிகை  வரையும் ....

























Sunday 24 December 2017

முகம் -100 ஒரு சித்திரச் சுனாமி

முகம் -100    ஒரு சித்திரச் சுனாமி
            
          டிசம்பர் -26 என்றதும் சுனாமி தினம்தான்  நமக்கு  நினைவுக்கு  வரும்...
           ஆனால்  அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது 23-12-2017 அன்று கடலூரில் ஒரு சுனாமி வந்தது ...
          ஹலோ ..ஹலோ ...சுனாமி என்றதும் உடனே டர்ர்ர்ரடித்து டெரர் ஆக வேண்டாம்...அது சித்திரச் சுனாமி ...
           
      கடலூரில் a r ஓவிய பயிற்சிப் பட்டறையை நடத்திவரும் ஓவியக்  கலைஞர் திரு ராஜசேகர் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டினால் கடலூர் வள்ளி விலாஸ் ரெசிடென்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஓவியக்  கண் காட்சியைத்தான்  இவ்வாறு குறிப்பிட்டேன் ...!

( இடம் - அடையாறு ஆனந்தபவன் உணவகம் அருகில்  ,நியூ சினிமா தியேட்டர் ஸ்டாப்  இறங்கவும் )

           புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்தின் பேராசிரியர் 
உயர்திரு .ராஜ ராஜன் அவர்கள் திருக் கரங்களால் துவக்கி வைக்கப்படும் பேறு பெற்றிருந்தது இக்கண்காட்சி.

         முழுக்க  முழுக்கராஜ சேகர் அவர்களின்  பயிற்சிக் கூடத்தில் அவரிடம் முறையாக சித்திரம் பயின்ற இளைஞர்களை பங்கேற்கச் செய்துள்ளார் .ஓவியர் காமராஜ்  மட்டும் இதில் விதிவிலக்கு .B .S c  கெமிஸ்ட்ரி படித்த சற்றே நடுத்தர வயதான இளைஞர் .இந்த வயதில் ஓவியம் கற்று கண்காட்சியிலும் பங்கேற்றிருக்கின்ற இவரது சித்திரக் காதலை -ஆர்வத்தை பாராட்டியே ஆக வேண்டும்.நான் போகும்போது மகன் ,மகள் என்று குடும்பமே கூட இருந்தது ...!

      மற்றும் சட்டம் பயின்றவர் ,வருமான வரித்துறை அலுவலர் என்று தொழில்முறை அல்லாத ஓவியர்களும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள்.

        9 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியும் இவர்களுள் அடக்கம்  . 

       மொத்தம் ஒன்பது பிரம்மாக்கள் இந்த 100 முகங்களை படைத்திருக்கிறார்கள்.உலகம் முழுவதிலும் உள்ள வெவ்வேறு கால கட்டத்தைச் சார்ந்த வெவ்வேறு துறையின் ஆளுமைகளை ஒரே இடத்தில் நாங்கள் சந்தித்து உரையாடும்படி செய்திருந்தார்கள்.

       ஆம்...சித்திரம் பேசுதடி என்பார்கள்.எங்களை பொறுத்தவரை அங்குள்ள சித்திரங்கள் அனைத்துமே எங்களிடம் பேசின என்றுதான் கூறவேண்டும்/.

       M .S  சுப்பு லட்சுமி ,M .S விஸ்வநாதன் ,இளைய ராஜா ,A .R ,ரகுமான் என்ற இசை ஆளுமையில் தொடங்கி  ஹிட்லர் ,காந்தி ,அண்ணா, சிவாஜி, 
எம் ஜி ஆர் ,ஜெயலலிதா ,மலாலா ,டெண்டுல்கர் , P .T . உஷா ,
பாரதி ,பாரதி தாசன் பெரியார் ,சேகு வேரா
 ,பிரபாகரன், K .பாலச்சந்தர் ,அப்துல்   கலாம் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை ..

      அதே போல் அனைத்துமே போர்ட்ரைட் என்று சொல்லப்படும் மார்பளவு ஓவியங்கள் மட்டுமே வரையப்பட்டு இருந்தன,
.        பென்சில்,சார்க்கோல் ,கலர் பென்சில் ,வாட்டர் கலர் ,போஸ்டர் கலர், ஆயில் பேஸ்டல் இவைகொண்டுமட்டுமே ஓவியங்கள் தீட்டப்பட்டு இருந்தன .

         நாங்கள் காலை சரியாக 10 மணிக்கு அரங்கிற்குள் செல்லும்போது எங்களை வரவேற்றவர்  ஓவியர் மற்றும் முக நூல் நண்பர் திரு. காமராஜ் அவர்கள்.அவர் வரைந்த இசையமைப்பாளர் M  S விஸ்வநாதனின் முகம் ...என்னப்பா ...இப்போதுதான் வந்தாயா என்று விசாரிப்பதுபோல் இருந்தது .அவ்வளவு இயல்பு ...ஆயில் பேஸ்டல் ஓவியம் .
         
இதுதவிர  வளரும் ஓவியர்களான செல்வன்.முத்துக்  குமரன்,
செலவன் யுவராஜ் ,செல்வன் ஆகாஷ் போன்றவர்களும் தங்கள் ஓவியங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர் .

ஓவியர்களின் மாஸ்டர் பீஸ் ..

K .காமராஜ்.----M .S ,விஸ்வநாதன் 

K .செங்குட்டுவன்---பிடல் காஸ்ட்ரோ 

C .சதீஷ் ------முத்து ராமலிங்க தேவர் 

M .K .அருண் பாபு --- ஆர்க்காட்  ராமசாமி  முதலியார் 

M ,முத்துக்குமரன் ---கே .ஜே .ஜேசுதாஸ் 

R .யுவராஜ் ---ஓவியர் சால்வடார் டாலி 
                 எப்பா ... மிரட்டல் பார்வையும் குத்தி நிற்கும் மீசையும் ...! ராத்திரி கனவுலயும் வந்து மிரட்டும் போல ...ஓவர் ஆல் என் ஒட்டு மொத்த ஓட்டு இந்த ஓவியத்திற்குத்தான் ...ஒரு கொசுறு  தகவல் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்துல வருகின்ற வடிவேலு  மீசை  இவரை வைத்துதான் வடிவமைத்தாராம் இயக்குனர் வசந்த பாலன் ...!

R .தினேஷ் குமார் -------இயக்குனர் கே.பாலச்சந்தர் 

P .ஆகாஷ் -------அறிஞர் அண்ணா 

செல்வி S .சத்திய வதனா--------மலாலா . 

இது எனது பார்வையில்தான் ...! உங்களை பார்வைக்கு ,ரசனைக்கு ஏற்ப உருவங்கள் மாறலாம் 

சிறப்பு ஓவியர்களே ...சிறப்பு ....! மேலும் வளர்க ! வருடந்தோறும் உங்கள் சித்திரப் படைப்புகள் தருக !
HATS OFF  ராஜசேகர் .....!

           விடுமுறை துவங்கியுள்ளதால் நிறைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்து ஓவியங்களை ரசிப்பதையும் பார்க்க முடிந்தது .

           ஓவியர்களின் இம்முயற்சிக்கு என் அன்புப்  பரிசாக  எனது மனவண்ணங்கள் -கவிதைத் தொகுப்புநூலை அளித்து விடைபெற்றேன் .

         கண்காட்சியைப் பார்வையிட்ட அனைவருக்கும் , பசுமையை வளர்த்தெடுக்கும் நோக்கில் தாவரக் கன்றுகள் பரிசளிக்கப்பட்டது பாராட்டுக்குரியது .
      
     எங்கள் பள்ளி மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு ஓவியர்களிடம் உரையாடி நிறைய அனுபவங்களை பெற்றுத் திரும்பினார்கள் என்று சொன்னால் அது மொக்கையாக இருக்குமோ என்னவோ ! எனவே தலைப்பிற்கு ஏற்பவே முடிப்பும் இருக்க வேண்டுமல்லவா ?

          நாங்கள் அனைவரும் சித்திரச் சுனாமியில் சிக்கி நீந்தி ரசித்து சிலிர்த்து  ஆர்வம் என்னும் முத்தெடுத்து வந்தாச்சு  ...!


         அப்போ நீங்க...?
   
          சீக்கிரம் போங்க ....அரையாண்டு விடுமுறையில் உங்க சுட்டீஸ அழைச்சுக்கிட்டு...! 












          















     


Saturday 23 December 2017

ஐந்தாம் யுகம்

சத்தியத்தின் அத்தியாயங்கள்
அரிச்சந்திரனோடு உடன்கட்டை ஏறிவிட்டன .
உண்மை உலகை விட்டே விரட்டப்பட்ட பிறகு
பொய் மட்டுமே இங்கு
பொன் மகுடம் சூட்டிக் கொண்டு
புவியாளத் தொடங்கிவிட்டது .
ஊழல்கள் உலகமயமாகிவிட்ட காலத்தில்
உனக்கும் எனக்கும் மட்டும்
தனியாக ஒரு வழி எதற்கு ?
பொய்யர்களின் பகட்டு வெளிச்சத்தில்
உண்மைவாதிகள் ஒருவர் கண்ணுக்கும்
தெரிய போவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம் .
இப்போதெல்லாம் நீதியே  நீதிகேட்டு
நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருக்கிறது
பொய் வழக்குகள் வாதில் வென்று
மெய் புற  முதுகு காட்டி ஓடியமைக்காய்
நீதிமன்ற வாசல் நின்று
பொய்கள் எல்லாம் கை  கொட்டி
கெக்கலித்துச் சிரிக்கும் ஓசை
வான் முட்டப் பார்க்கிறது .

புதுமையுடன் புரட்சி செய்வோம்
என்பதாகக்  கூறிக்கொண்டு
நல்லரசாய் இருந்த நாட்டை
வல்லரசுக் கனவுக்காக
வக்கணையாக பேசிப் பேசி
வகையாக இழுத்துவிட்டு
வாழ்வுக்கு ஆதாரம் என்றிருந்த
உடைமைகள் அத்தனையையும்
நோகாமல் பிடுங்கிக்கொண்டு
நோஞ்சான்  நாடாக ஆக்கிவிட்ட பெருமை என்ன?

எதிர்கால இந்தியாவை எண்ணியலாய்
மாற்றுகிறோம் என்று கூறி
இங்கு வாழுகின்ற மக்களின்
நிகழ் காலம் தன்னை
இருண்டகாலம் ஆக்கிவிட்டு
கற்காலம் தன்னை கண்முன்னே காட்டுவதாய்
கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்
காட்டுமிராண்டிக்கும்பல் இங்கு
கர்ஜித்து கர்ஜித்து
காட்டாட்சி  அல்லவா புரிந்துகொண்டிருக்கிறது ?

நலமாக இருப்பவனை
நைச்சியமாக பேசிப் பேசி
மேலும் நல்வாழ்வு அளிப்பதற்காய்
சிகிச்சைகள் தருகின்ற
மருத்துவரைப் போல  இன்று
சும்மாக் கிடந்த சங்கை
ஊதிக்கெடுத்த ஆண்டி கதையாய்
 உயிர் மட்டும் விட்டுவிட்டு
உள்ளதனைத்தும் பிடுங்கிக்கொண்டு
ஓட்டு போட்ட மக்களையெல்லாம்
ஓட்டாண்டி ஆக்கிவிட்டு
கோவணத்தை மட்டும் விட்டு
ஒருகூட்டம் ஆள்கிறது .

கொண்டதெல்லாம் இழந்துவிட்டு
ஆட்டம் கண்டு நிற்கின்றோம்
வாழ்வதற்கும்கூட இங்கு
வழி இழந்து தவிக்கின்றோம்
இருள்கவிழ்ந்து கிடக்கின்ற
நட்டநடுக்கடல் நடுவே
திசையேதும் தெரியாமல்
திகைத்திருக்கும் கலன்  போல
கலங்கரையின் வெளிச்சம் என்ற
விடியலுக்காய் காத்து நிற்கின்றோம்

இருக்கின்ற சூழலது எப்போது மாறிடுமோ
துன்ப இருள் நீக்கிடவே
 வெள்ளியும்தான் முளைத்திடுமோ
கீழ்திசையும் சிவந்து அந்த
செங்கதிரும் உதித்திடுமோ
காரிருளும் கதிரொளியின்   வரவதினால் நீங்கிடுமோ

எம்மிதயத்தில் ஒளிந்திருக்கும் ஏக்கவினா அத்தனைக்கும்
பதிலொன்றும் இல்லாத நிலைமட்டும் நீடித்தால்
இதற்கான விடிவொன்று
இந்த யுகம் தனிலே இல்லையென்றால்
புதுயுகம்ஒன்று இங்கே பிறக்கட்டும் மீண்டுமிங்கே
இந்தக் கலியுகம் முடியும் வண்ணம்
பூகம்பம் வெடிக்கட்டும்
பிரளயம் பொங்கிவந்து இந்த பூமியெல்லாம் அழியட்டும்
ஆழியிலே பேரலைகள் வானுயர எழும்பட்டும்
அக்கிரமக்  காரர்களை சுனாமி
சுருட்டிபலி வாங்கட்டும் .
அக்கிரமக்  காரர்கள் வாழ்ந்திட்ட காலத்தில்
உடன்வாழ்ந்த குற்றத்தின் தண்டனையாய்
ஆத்திரத் தாண்டவம் ஆடியாடி
அப்பாவி மக்களையும் ஊழி கொண்டு போகட்டும்
ஆவேசத் தாண்டவம் ஒருவழியாய் அடங்கட்டும்
 அதன்பிறகேனும் இங்கு ஒரு புதுயுகம் பிறக்கட்டும்
இருள்நீங்கி பூமியிலே புத்தொளியும் பரவட்டும்
மீண்டும் இந்த மண்மீது புது உயிர்கள் பிறக்கட்டும்
பரிணாம வளர்ச்சியினால் புதுமனிதம் தழைக்கட்டும் .
இனம் என்றும் மதம் என்றும் பிளவுபடா மாந்தர்கள்
அன்பு என்னும் வழிகொண்டு இந்த மண்ணை ஆளட்டும்
அப்போதேனும் அன்று மெய்  மகுடம் சூடட்டும்.
அண்டசராசரமெல்லாம் அமைதிமட்டும் நிலவட்டும்.















Friday 22 December 2017

பேரழகா பேரழிவா

பேரழகா பேரழிவா 


தூரிகை  தொட்ட  வண்ணங்கள்
துளித் துளியாய் வெண் தாளில்
விரவியதால் வெளிப்படுமாம்
சிந்தை கவர் சித்திரமும்
என்ன உன்போல் பேரழகா?

 வீசிடும்நல் தென்றலது
வேணுவதன் துளைவழியே
உள்நுழையும் காரணத்தால்
கசிந்துவரும்  கானமென்ன
உன்குரலைவிடப் பேரமுதா ?

என்னில்லத்  தோட்டத்தில்
மலர்ந்திட்ட  முல்லையதன்
மணத்தோடு கலந்துவிட்ட
ரோஜாவின் சுகந்தமென்ன
உன் மேனிகொண்ட மணத்தின்முன்
தோற்றுத்தான் போகாதா ?

கார்மேகம் தோற்கடிக்கும்
கட்டவிழ்ந்த உன் கூந்தல்
காற்றினிலே அலைவதனைக்
கண்ணுற்ற கலாபமயில்
ஆயிரங்கண் நிறைந்திட்ட
தோகைவிரித் தாடாதா ?

கமலமலர் வதனத்தில்
கயலிரண்டு இருப்பதனைக்
காணுகின்ற கொக்கினங்கள்
நீரற்ற இடந்தனிலே
கமலமேது கயல்களேது
என்றெல்லாம் ஐயம் கொண்டு
மயங்கி நிற்கும் நேரங்களில்
உன் கண்ணிமைகள் அசைந்திடவே
பதற்றமுற்றுப் பறக்காதா ?

செம்பவழச் சிப்பிக்குள்
பரல்முத்து பிறந்திடுமா
செப்புவாய் திறக்கையிலே
சீராக அசைவதென்ன
ஓரிதழைக் கொண்ட ஒரு தாமரையா
பரல் கடந்து வீசுவது பாரிஜாத நறுமணமா
என்றெல்லாம் உன்னிதழைக்
கண்டுவிட்ட செங்குமுதம்
தன்மெய்க் கூசிக் குறுகியதால்
தன சிறப்பழிந்து போகாதா ?

கதிரோனின் ஒளிவருடக்
கண்விழிக்கும் கமலமலர்
நீண்டிருக்கும் உன்னிரண்டு
கரமுடிவில் மலர்ந்திருக்கும்
காந்தள்மலர் விரல்கள் கண்டு
அழுக்காறு மிகக்கொண்டு
அழுதழுது  ஆர்ப்பரித்து
தன் காம்பின்  கழுத்தறுத்து
தான்பிறந்த பொய்கையினுள்
தன்கதையை முடிக்காதா ?

கீழ் திசையும் மேல் திசையும்
கிடக்கின்ற குன்றுகளுன்
கொங்கைகளைக் கண்டதனால்
சுயபச்சா தாபம் கொண்டு
வடிக்கின்ற கண்ணீரால்
அருவிகளும் பெருக்கெடுத்து
அதன் ஆறாத் துயர் கூற
ஆறாய் பாய்ந்தோடி
ஆர்ப்பரிக்கும் அலை கடந்து
ஆழிநீரில் கலக்காதா?

துடியிடையாம் கொடியிடையை
வர்ணிக்க வில்லையென்றால்
என்மீது கோபம் கொண்டு
உன்னிடைதான் இன்னும் சற்று
மெலிந்துடைந்து போய்விட்டால்
உந்தன பாரம் தாங்காமல்
உடைந்ததுவோ அல்லதுநான்
பாடாமல் போனதினால்
பட்டென்று மனமுடைந்து
மெலிவடைந்து உடைந்ததுவா
என்றெல்லாம்  தலைப்பிட்டு
தொலைகாட்சி மேடைகளில்
பாப்பையா தலைமையிலே
பட்டி மன்றம்  நடக்காதா?

வெண்பஞ்சு மேகங்கள்
வெட்கித் தலை குனியும்
மென்பாத மலரடியைக்
கண்டுவிட்ட காரணத்தால்
கொஞ்சிக் கொஞ்சி இசையெழுப்பும்
கொலுசணியை அணிந்த உந்தன்
மெத்தென்ற மெல்லடியை
நீ எடுத்து வைத்திட்டால்
புண்ணாகும் என்றஞ்சி
நீ நடக்கின்ற பாதையெங்கும்
கிடக்கின்ற கல் முள் நீக்கி
பசும்புல்லின் தரைக்கொண்டு
ஆங்காங்கே மலர் சேர்த்து
புவி கம்பளம் விரிக்காதா?

பேரண்டம் முழுதிருக்கும்
பேரழகைத் திரட்டிவந்து
பெண்ணாகச் செய்த உந்தன்
பெற்றவர்கள் நீடு வாழ்க !


பெண்ணனங்கே  நீ இங்கு
எழுந்தசைந்து நடக்கையிலே
ஒரு நடமாடும் பூக்கம்பம்
உன் கருங்குவளை விழியசைத்து
இதழ் விரித்து சிரிக்கையிலே
வருகுது பார் பூகம்பம்
உனைக் காணும் ஆடவர்தம்
உளம் அதிர்ந்துபோகிறது
உனதழகில் மயங்கி மனம்
அடுக்கு மாடிக் கட்டிடமாய்
தடதடத்து வீழ்கிறது
உனையடையா மாந்தர்தம்
மனம் விரிசல் விழுகிறது
விரிசல்கள் வழி அவர்தம்
வாழ்வனைத்தும் தொலைகிறது...!

ஐயகோ எனக்கும் ஓர்
ஐயம் உண்டு கேட்கின்றேன்
எனதின்னுயிர் போகுமுன்னர்
உரைத்திடுவாய் வாய்திறந்து
பெண்ணே என் தேவதையே
நீ ஆடவர் தம் மனம் மயக்க
வந்திட்டப்  பேரழகா ?
இல்லை ஆடவர்தம் உயிர் குடிக்க
வந்திட்டப் பேரழிவா ?






 
 


























Thursday 21 December 2017

நிழலின் தடங்கள்

நிழலின் தடங்கள்

சாம்பல் நிறச்  சாயம் பூசி
வெறிச்சிட்டுக் கிடந்த வானம்
அடர்பனியாய் சாரல்மழையை
தவிட்டின் தூறலாய்
சிந்திக்கொண்டிருக்கிறது
கேசம் கலைந்து கிடைக்கும் 
பரட்டைத்தலைக் காரனைப்போல்
விரித்த தலையை அசைத்து அசைத்து
வீசுகின்ற கூதர்க்காற்றுக்கு
மெல்ல மெல்ல அசைந்தாடி
சிலாகித்துச் சிலிர்க்கின்றன
நிற்கின்ற நெடுமரங்களெல்லாம்
மெல்லியதாய் சாரல் வாங்கி
ஈரமானது  மைதானம்  முழுமைக்கும்
சாரலின்  ஈரம்  வாங்காத
மரத்தடி மண் தரை மட்டும்
எப்போதும்போல் உலர்ந்துபோய்
கௌரவக் காதலுக்காக
காதலனைத் பறிகொடுத்த
காதலியின் மனம்போல்
வெறுமைகாட்டி விரக்தியாய் கிடக்கிறது.
நிழலுக்காய் மரம்மீது
நேசம் கொள்ளும் நான் கூட
சாரல் மீது காதல் கொண்டு
மரத்தடியைப் புறக்கணித்து
பனிப்புகை தூறலின் சாரலில்
என்னைக் கரைத்துக் கொண்டிருக்கின்றேன்.
முன்பு வெயிலின் வெம்மையொளி பட்ட
தரையெல்லாம் சாரலின்  ஈரம்...
நிழலிருந்த தரையெல்லாம்
அதன் தடத்தை நினைவுபடுத்தியபடி
உலர்மண்ணாக காட்சி கொடுக்கிறது ...
ஈர மண்ணின் எல்லை கொண்டு.
கிளர்ந்தெழும் மண் வாசனை நுகர்ந்தபடி
நானில்லாமல் வெறுமையாய் ....
  

வழியிலோர் வரவேற்பு

வழியிலோர் வரவேற்பு

இல்லத்திலிருந்து கிளம்பும்போது
கரமசைத்து புன்னகைத்து
என்னை வழியனுப்புவது என்னவோ
எனதில்லத்தரசிதான்
சாலை முனையில்
வழியிலேயே வரவேற்பவளும்
ஒருத்தி உண்டு ...நம்புங்கள்
பேருந்துச் சாலையைத் தொடுமுன்
எனக்கு சாலையிலே வரவேற்பு
வேலியோரக் குறுமரம் ஒன்று
வான்  தொடப் பார்த்து
தன் எல்லை மீறி
என் வழியில் குறுக்கிட்டு
நீல வான் பின்னணியில்
தென்றல் காற்றுக்குத்
தன தலையாட்டி என்னை
வரவேற்றுச் சிரிக்கிறது
சூரியகாந்திக்குச்  சவால்  விடும்
தன்னில் பூத்த
மஞ்சள் பூக்கள் கொண்டு
தினம் தினம் !
என்னவளிடம் சொல்லிவிடாதீர்கள்
தன சக்களத்தியாய்
தாவர இனங்களைக்கூட
ஏற்க மறுப்பவர்கள் நம் தமிழச்சிகள் ...!


வித்து

வித்து

விட்டத்தை   அண்ணாந்து
வெறித்துப்   பார்ப்பவன்
வினாடிகளை   ஒருபொழுதும்
வீண்   அடிப்பதில்லை
வித்திட்டுக்   கொண்டிருக்கலாம்   ஒருவேளை
வித்தியாசமான   கவிதைக்கான   கருப்பொருளுக்காய் !




Wednesday 20 December 2017

காமிக்ஸ் காலங்கள்

காமிக்ஸ் காலங்கள்


காமிக்ஸ் படிக்கும் வழக்கம் இருக்கிறதா ...?

அதிருக்கட்டும் ...இப்போதெல்லாம் காமிக்ஸ் வருகிறதா ?

            எனது பதிண்மப் பருவங்களில் என்னை விரல்  பிடித்து  நகர்த்திக் சென்றது காமிக் புத்தகங்களே ...

             4 மற்றும்  5 ஆம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு  காமிக்ஸ் படிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது .
அதற்குக் காரணம் எனது வீட்டுச் சூழல்தான் .

            கோகுலம் புத்தகத்திலும்   கல்கி புத்தகத்திலும்  தொடராக வந்த
மூன்று மந்திரவாதிகள் ,
ஓநாய்க் கோட்டை ,
கனவா நிஜமா ,
சிலையைத் தேடி  .....எல்லாமே வாண்டு மாமா எழுதியவை...
உள்ளிட்ட பல கதைகளை பைண்ட் செய்து வீட்டில் எனக்கு கதை படிக்கும் சூழலையும் ,ஆர்வத்தையும் வளர்த்துவிட்ட எனது சித்தப்பாக்கள் கிடைத்தது எனது வரம் என்றுதான் கூறவேண்டும்.

           அதன் தொடர்ச்சியாக  5 ஆம் வகுப்பு முழு ஆண்டுப் பொதுத்தேர்வு  விடுமுறை நாட்களில் மிக ஆர்வமாக ...ஆர்வக் கோளாறாக ? ! ...ராஜாஜியின் வியாசர் விருந்து ( மகாபாரதம் ) மற்றும் சக்கரவர்த்தித் திருமகன்
( ராமாயணம்) ஆகியவற்றை படித்து முடித்திருந்தேன் .என் ஓவியம் தீட்டும் ஆர்வத்திற்கு நெய் ஊற்றி வளர்த்ததில் அந்த காவியங்களை ஓவியங்களாய் தீட்டி புத்தகத்தை அலங்கரித்த ஓவியர் வினு அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு .இவையும் கூட கல்கி வார இதழ்களில் தொடராக வந்து தொகுக்கப் பட்டவைதான் .இதில் ராமாயணத்தை இரவல் வாங்கி தொலைத்த பெருமை எனது பள்ளித் தோழன் A .N முருகன் என்பவனுக்கு உண்டு .நல்ல வேலையாய் வியாசர் விருந்து என்னிடமே உள்ளது .அதையும் கூட கரையான் வாயிலிருந்து ஒருவிதமாய்க் காப்பாற்றி வைத்திருக்கிறேன்.

          அதிருக்கட்டும் .ஆறாம் வகுப்பில் சேர்ந்தபொழுது கதை படிக்கும் வேகம் ...கேட்கும் ஆர்வம் இன்னும் இன்னும் கூடிப் போனது .
காரணம் என்ன என்கிறீர்களா?
          எங்களுக்கு சமூக அறிவியல் போதித்த ஆசிரியர் சாரங்கபாணி அவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் கண்டிப்பாக நிறைய கதைகள்  சொல்லுவார் .அதுமட்டுமன்றி அப்போது என் வகுப்புத் தோழர்களாய்  இருந்த

M .ரவிக்குமார்  (தந்தை பெயர் மாணிக்க வாசகம் .கிராம சேவக் என்ற பணி யில் இருந்தவர்-கோவில் பாளையம் வீதியில் வசித்தவர்கள்  ).மற்றும்

T .ஸ்ரீதர் (தந்தை பெயர்  தியாக ராஜன் .தலைமை ஆசிரியர் ...மனம் தவழ்ந்த புத்தூர்)  --- இருவருமே நன்றாகக் படிப்பார்கள்..பாடப் புத்தகங்களை மட்டுமல்ல ..காமிக்ஸ் புத்தகங்களையும்தான் .

           நாங்கள் மூவரும் காமிக்ஸ் பிரியர்கள்  இல்லை ..இல்லை ...காமிக்ஸ் வெறியர்கள் என்றே கூறலாம் .
எப்போதும் மறக்காமல் காமிக்ஸ் புத்தகங்கள் எங்கள் புத்தகப் பையினுள் எங்களுடன் இணைந்தே பயனாய் படும்.இரும்புக்கை மாயாவி கதைகள்  -குறிப்பாக   விரல்  மனிதர்கள் -முகமூடி மாயாவி ...மந்திரவாதி மாண்ட்ரேக் & லொதார் .ரிப் கெர்பி ... அநேகமாக இவை முத்து காமிக்ஸ் பதிப்பகம் மற்றும் லயன் காமிக்ஸ் என்று நினைவு .

        நான் ஒரு புத்தகம் வாங்கினால் ஸ்ரீதர் ஒரு புத்தகத்தையும் ,ரவிக்குமார் ஒரு புத்தகத்தையும் வாங்க படித்தபின் மாற்றிக்கொள்வோம் .

       பின்னர்தான் எங்கள் பள்ளியிலேயே சில பல காமிக்ஸ் வாசக வட்டங்களும் இருந்தனவென்று.

       மேலும் அப்போது வந்த அம்புலிமாமா ,பாலமித்ரா ,ரத்னபாலா ,கோகுலம் உள்ளிட்ட சிறுவர்களுக்கான மாத இதழ்களையும் மேய்ந்துவிடுவோம் .அப்போது எங்கள் ஊர் வள்ளலார் மடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்த நூலகத்திலும் நாங்கள் உறுப்பினராக இருந்து வாண்டுமாமாவின் மந்திரக் கம்பளம் ,பச்சைப் புகை ,மரகதவீணை,அழகி ஆயிஷா ஆகிய புத்தகங்களையும்  ..இவை சிறுவர் நாவல்கள் ... வாசித்திருக்கிறோம்.

         ஒன்பதாம் வகுப்பின் இடையே ரவிக்குமாரும் . பத்தாம் வகுப்பில் ஸ்ரீதரும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு சென்றுவிட ...தோழர்கள் இல்லாவிட்டாலும் காமிக்கஸ் புத்தகங்கள் படிப்பதில் மட்டும் ஆர்வம் குறையவில்லை ...அலுப்பு தட்டவில்லை ...அந்த சமயத்தில்தான் ராணி வார இதழ் ராணி காமிக்ஸ் நூலகளை வெளியிட்டு வந்தது .அவற்றையும் ஒரு கை (?!)பார்த்திருக்கிறேன் .பின்னர் ஒன்பதாம் வகுப்பு விடுமுறையிலும் ,பத்தாம் வகுப்பு விடுமுறைகளிலும் வாசிப்பு அடுத்த தளத்திற்குச் செல்ல ஆரம்பித்தது .அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட   வரலாற்றுப் புதினங்களை படிக்க ஆரம்பித்தேன்....அதன்பிறகும்  காமிக்ஸ் புத்தகங்களை விடாமல் கிடைக்கும் போதெல்லாம் வாசித்ததுண்டு ..!

           நடுவே கூட இன்னும் சிலரை குறிப்பிட்டாக வேண்டுமே ... மறதிச் சனியன் விட்டால்தான் ...உடலுக்கு மட்டும் வயதாகிக்கொண்டே போகிறதே ...சு(ரேஷ் )பா(லா ) வை மறக்க முடியுமா ...?
         
         அத்துடன் கல்வி கோபாலகிருஷ்ணனின் பாதாள உலகில் பறக்கும் பாப்பா போன்ற கல்வி சார் புதினங்கள் ...வேப்பம் பழத்தை தேனில் கலந்து தருவது போல் நடையில் வலிக்காமல் ஊசி ஏற்றுவதை போல் அறிவியல் செய்திகளைத் தருவதில் அவருக்கு நிகர்  அவர்தான் ...
       
          அப்புறம் தமிழ் வாணனின் துப்பறியும் நாவல்கள் ...அதுவும் சங்கர்லால் கதைகள் குறிப்பாக கத்தரிக்காய் கண்டுபிடித்தான் என்ற சித்திரக்கதை அநேகமாக தமிழ்வாணன் எழுதிய ஒரே சித்திரக்கதை அதுவாகத்தான் இருக்கும் ...அவருடைய பேய்க்கதைகள் ...த்ரில்லர் நாவல்கள் குறிப்பாக ஆறு அழகிகள் , S S -66 என்ற நாவல் ...
       
            பூந்தளிர் அமர் சித்திரக்கதைகளையும் குறிப்பிட தவறிவிட்டேன் ...மகாபாரத வரிசைகள் உள்ளிட்ட பல  தொகுப்புகள் கொத்தாக உள்ளன .எடுத்தால் உடைந்து கிழிந்துவிடுமோ என்று அஞ்சும் அளவிற்க்கு ...

           
         அதன்பின்னர் 89 90 களில் என்று நினைக்கிறேன் ..திடீரென்று பார்வதி சித்திரக் கதைகள் என்ற காமிக்ஸ் மாத இதழ் வெளிவர ஆரம்பித்தது .வாண்டுமாமா மற்றும் சில எழுத்தாளர்களின் கதைகள் வரிசையாக வர ஆரம்பித்தன ...புதையல் கிடைத்த மகிழ்வில் மாதா மாதம் தவம் கிடந்து  புத்தகங்களை வாங்கி படிப்பேன்.

       பின்னர் அவைகளும் நின்றுவிட்டன .

       பின்னர் வாசிப்பு தளம் அமரர் கல்கி ,சிவசங்கரி ,சுஜாதா ,அனுராதா ரமணன் , உமா சந்திரன் ,ரா.கி. ரங்கராஜன் , புஷ்பாதங்கதுரை ,பாலகுமாரன் ,ராஜேஷ் குமார் ,ராஜேந்திரகுமார் ,பட்டுக் கோட்டை பிரபாகர் என்றெல்லாம் மாறி மாறி தாவியது ..
 
           கண்ணதாசனின் முதல் கதை நான் வசித்தது நன்றாய் நினைவில் இருக்கிறது .சிவப்புக்கல் மூக்குத்தி .மிக வசீகரித்த ஒரு புதினம் .அதைத் தொடர்ந்து அவளுக்காக ஒரு பாடல் ,ரத்தபுஷ்பங்கள் எனது தொடர்ந்து அர்த்தமுள்ள இந்துமதம் ,வனவாசம் ,மனவாசம் என கண்ணதாசனின் அனைத்து படைப்புகளையும் வாசித்திருக்கிறேன் சிறந்த  கவிஞர்,பாடலாசிரியர் என்பதை மீறி சிறந்த கதாசிரியர் , கட்டுரையாளர் என்று எனக்கு அவரைப் பற்றிய புரிதல்கள் ஏற்பட்டது அந்தக் கால கட்டத்தில்தான் .பின்னர் அவரது படைப்புகளை தேடித் தேடி வாசித்திருக்கிறேன்.

            கொத்தமங்கலம் சுப்பு என இன்னும் பல எழுத்தாளர்களை கடந்து வந்துள்ளேன் ...அதற்குத் தனியாக  ஒரு பதிவினை இட வேண்டியிருக்கும்..
ஐயையோ ...சொல்ல மறந்துவிட்டேன் ஜாவர் சீதா ராமனின் உடல் பொருள் ஆனந்தி மற்றும் மின்னல் மழை மோகினி
 
              அப்புறம் பாக்கியம் ராமசாமியின் அப்பு சாமி சீதாப்  பாட்டியின் அற்றாசிட்டிக் கதைகள் படித்து விலாநோகச் சிரித்ததை இப்போது நினைத்தாலும் விலா சற்று னோதான் செய்கிறது ....

       புத்தகங்களின் மீதான காதல் ஒரு புத்தகக் கண்காட்சி விடாமல் என்னை துரத்தியடித்தது .இப்போது என் அலுவலக அறையில் எண்ணற்ற நூல்களின் அணிவகுப்பு ...என் அறையே ஒரு நூலகமாய் ....துறைவாரியாக நூல்கள் அடுக்கப்பட்டு ...
     
          அப்புதையல்களுள் என் அபிமான காமிக்ஸ் புத்தகங்களும் ஒளிந்துள்ளன.இதோ வரும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது அவற்றை எடுத்து படிக்கப் போகின்றேன் ...என் பதின் பருவ வாசிப்பு அனுபவங்களை அவற்றுள் தேடப்  போகின்றேன்  .

         எதேச்சையாக இன்று இணையத்தில் ஒரு வலைப் பதிவில் காமிக்ஸ் குறித்த பதிவு கிடைக்க ...அது பற்றி ஆர்வம்கொண்டு வாண்டுமாமா என்று டைப்ப ஆரம்பிக்க ...
       
        அது தொடர்பான தேடலை துவங்கியபோது என் நினைவலைகள் என்னை பின்னோக்கிச் தள்ள அதன் விளைவுதான் இப்பதிவு ...

         கண்டிப்பாக  என் வயது நண்பர்கள் இப்பதிவைக் காணும்போது  அவர்கள் மனதிலும் காமிக்ஸ் அலைகள் அடிக்கலாம்...

          உங்கள் பதில்  அலைகளை  வரவேற்கிறேன் .

          அப்புறம் ...இது போன்ற புத்தகங்கள் உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள் ...விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறேன்.

         ஸ்ரீதர் ... ரவிக்குமார் ,,,நீங்கள் இருவரும் எங்கு இருக்கின்றீர்கள்?
   
         பாவம் ..இப்போதைய சிறுவர் சிறுமிகள் ...

        பாட நூல்கள் தாண்டிய வாசிப்பு அரிதாகிவிட்டது

         செல்போன் கேமிலும் ,தொலைக்காட்சித் தொடர்களிலும் தம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் .....எம்மைப் போன்ற இனிய வாசிப்பு அனுபவங்களை பெறுவது எப்போது ...?

          நூல்களை நேசிப்போம் ...வாசிப்பை  ஸ்வாசிப்போம் ...!






       



















Saturday 16 December 2017

எங்க குறைய கேளுங்க

எங்க குறைய கேளுங்க

உழவன் இங்க இல்லையின்னா
சோத்துக் கெங்க போவீங்க
கழனி யெல்லாம் காஞ்சதுன்னா
நீங்க என்ன ஆவீங்க

பண்பாட்டை காக்க னுன்னு
மெரீனாவில் கூடி னீங்க
ஜல்லிக் கட்டு போட்டியில
மாட அவுத்து விட்டீங்க

தலை நகரு டில்லியில
போராட்டம் பண்ண வந்து
உடுப்பு அவுத்து நிக்கறோமே
என்ன பண்ணப் போறீங்க

மானம் போயி டுச்சே
வயலு வீரல் விழுந்துடுச்சே
உங்க கவனமெல்லாம் திருப்பனுன்னு
எங்க மானம் பறந்திடுச்சே

நாட்டோட முதுகெ லும்பு
விவசாய மென்றெல்லாம்
ஏட்டில்  மட்டும் எழுதி வெச்சு
என்ன பண்ண கூறுமய்யா

ஓட  ஓட  விரட்டிப் புட்டு
முது கெலும்ப ஒடச்சுப் புட்டு
எழுந்தெம்ம நிக்கச் சொன்னா
எப்படிய்யா நாங்க நிப்போம்

எம்பொண்டாட்டி புள்ளைங்க
பசியாற வேணுமுன்னா
ஒண்ணுமில்ல எங்க கிட்ட
எத்த கொண்டு எங்க விக்க

    கவிதை தொடரும்....






















Friday 15 December 2017

ஆண்டிராய்டு காதல்

ஆண்டிராய்டு காதல்


பெண்ணே நீ மின்சாரம்
நான் ஆண்டிராய்டு மொபைல் போன்
என் மனமென்னும் பேட்டரியில்
உன் நினைவென்னும் சார்ஜ் இருப்பதால்தான்
என்னுள் உன் உயிர் என்னும் O .S
என்னுள் ஓயாமல் இயங்குகிறது
என் இன்பில்ட் மெம்மரியில்
உன் நினைவென்னும் M B அதிகரிக்க அதிகரிக்க
நான் ஹேங் ஆகி நிற்கின்றேன் ...
நீ என் அருகில் இல்லா  பொழுதுகளில்
என் முகமென்னும் டச் ஸ்கிரீனின்
பிரைட்னஸ் டவுன் ஆகிப் போகுதடி
உனதான காதல் என்னும் அப்ளிக்கேஷன்
என் நெஞ்சில் இன்ஸ்டால் ஆன நாள் முதலாய்
என் நினைவு,சிந்தனை ,சொல்,செயல் ,உழைப்பு
என அத்தனை அப்ளிகேஷன்களும்
அன் இன்ஸ்டால் ஆகிக்கொண்டிருக்கின்றன
என்று நான் உன்னை முதன்முதலாய் பார்த்தேனோ
அன்று என் விழிகள் என்னும் 1000 மெகா பிக்சல் காமிராவில்
படமாக்கப்பட்டாய் ;மெம்மரியில் சேவ் ஆனாய்
அப்போது முதலாய் டீ பால்டாய் இருந்த
என் முகம் என்னும் சுயம் தொலைத்தேன்
என் மனவாலில் வால்பிக்ச்சர் நீயாகிப் போனாய்
உன் பெயர் என் காதில் விழுந்த கணம் முதல்
என் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள பெயர்களெல்லாம்
உன் பெயராக அல்லவா மாறிவிட்டன
உன் விழியசைவின் மெசேஜ் வாங்கி வாங்கி
என் மெசேஜ் இன்பாக்ஸ் FULL  ஆகிப் போனதடி
நீ இல்லா என் வாழ்க்கை
சிம் இல்லா போன்  ஆகும்
என் மனமென்னும் ஸ்லாட்டில் 32 GB SD கார்டாய்
நீ என்னுடன் இணைந்துவிட்டால் போதும்
என் ஆயுள் எக்ஸ்பெண்டபிள் மெம்மரியாய்
நீண்டுகொண்டே போகும்
ஆகவே , வா என்னோடு
24 மணி நேரமும் என் மனதில் உன் நினைவால்
டாப் அப் செய்து டாப் அப் செய்து
FULL  டாக் டைமும் பேசிமுடித்து
அன்லிமிடெட்  GB களால் பிரௌசிங் செய்து
நான் ஸ்டாப்பாய் இன்பங்களை டவுன்லோட் செய்வோம்



உனக்குள் உன்னதம்

                                                             உனக்குள் உன்னதம் 

உலகம் பல நேரங்களில் 
திறமைசாலிகளைத் திரும்பிப் பார்ப்பதில்லை 
வெற்றியாளர்களை மட்டுமே விரும்பிப் பார்க்கின்றது 
நிரம்பப் போற்றுகின்றது
சாதாரணன் செய்வது சாதனையேயானாலும் 
உலகின் கண்ணுக்கு அவை சாதாரணங்களே
ஒருசிலர் செய்யும் சாதாரணங்கள் கூட 
பெரும் சாதனைகளாகவே போற்றப்படுகின்றன
என்ன செய்யப்படுகின்றது என கவனிக்க 
உலகம் ஒருபொழுதும் தயாராயில்லை 
யாரால் செய்யப்படுகின்றது என்பதனையே 
உற்று நோக்குகிறது இவ்வுலகம் 
உலகம் உன்னை உற்றுப்பார்க்கிறதா
ஊர் உன்னைப் போற்றுகின்றதா 
உதறிவிடு அக்கவலைகளை 
உலகம் உன்னைப் பார்க்கிறதோ இல்லையோ 
உன்னுள் உள்ள உள்மனம் 
உன்னை உற்றுப் பார்க்கின்றது 
உன் செயல்களை உன் மனம் பாராட்டும் 
உன் மனம் பாராட்ட உற்சாகம் ஊற்றெடுக்கும் 
உற்சாகம்  ஊற்றெடுக்க 
உன்னதங்கள் பெருகிவிடும் 
உன்னதங்கள் வான் முட்ட 
ஊரெல்லாம் உனைப் பார்க்கும் 
உலகுனை ஒருநாளில் நிச்சயமாய்
உன்னை நன்றாய் உற்றுப்பார்க்கும் 

  

Wednesday 13 December 2017

போதும் காதலை வாழ விடு

                                                போதும் காதலை  வாழ விடு


விடியுது விடியுது புதுயுகம் பிறக்குது
          சாதி  இருளுக்கு விடையைக் கொடு
அன்று தொடங்கி   இன்று வரைக்கும்
          காதலுக்கு அழிவில்லை கவலை விடு

சாதியின் பெயரால் காதலைப் பிரிக்கும்
         கயமை உறவை எரித்து விடு
காதலுக் கெதிராய் எவர்வந் தாலும்
         கதையை முடிப்போம் வாளை எடு

சாதி வெறியினால் ஆணவக் கொலைகள்
         புரிவோர் சிரங்களை அறுத்து எடு
காதலின் உணர்வுகள் கயவர்கள் அறியட்டும்
        அதுவரை  அவர்களைப் புடைத்து எடு

காளையின் உரிமை மீட்க்கக்  கிளம்பிய
        மெரீனாக் கடலே வந்து விடு
காதலைக்  காத்திட   வேண்டும் உடனே
         இளையோர் படையே ஒன்று படு

சாதிகள் ஆயிரம் ஆயினும் கூட
         செந்நீர் ஒன்றே அறிந்து விடு
ஏனைய சாதிகள் அழித்திவ் வுலகில்
         காதலர் சாதியை வாழ விடு

உலகே திரண்டு காதலை எதிர்த்தால்
         பிரபஞ்சம் முழுதும் பொசுக்கி விடு
காதலர் உயிரை எடுத்தது போதும்
         போதும் காதலை வாழ விடு.


இது   காதலர்களின்  தேசிய கீதம்








பாரதிக் கனவு

                                                                   பாரதிக் கனவு

ஏனைய  தொழில்கள்  எல்லாம்
             கிடக்கட்டும்   பக்க   மாக
ஏர்த்தொழில்   மட்டும்   இங்கே
             இருக்கட்டும்   முதன்மை   யாக

விளைநிலம்   எல்லாம்   இங்கே
            விண்முட்டும்   கான்கிரீட்   காடாய்
வீணாக்கி   விட்டதற்   காய்
             பரிகாரம்   தேடு   இன்றே

கடல்மணல்    வெளிகள்   எல்லாம்
            நெற்காடாய்   செய்வோம்    நாமே
கடலெல்லாம்   கழனி   ஆக்கும்
             தொழில்நுட்பம்    தேடு    வோமே

வான்நோக்கும்   மொட்டை   மாடி
             முழுத்திலும்    விதைகள்   தூவி
காய்கறி   கீரை   கனிகள்
              விளைவிக்கும்  செயலாற்   றிடுவோம்

செயற்கைக்கோள்   கொண்டு   நாட்டை
              படமாக     எடுத்திட்     டாலும்
பசுமைநன்     நீலம்      தவிர
              நிறமேதும்   தெரிய   வேண்டாம்

வயிற்றுக்குச்   சோறிட   வேண்டும்
              இங்குவாழும்   மனிதருக்    கெல்லாம்
என்றபா    ரதியின்     கனவை
               நிறைவேற்    றுவோம்நாம்    வாரீர் !

கனவுக்கோர் பஞ்சமில்லை

                                                   கனவுக்கோர் பஞ்சமில்லை 

மனப்பேழை காணுகின்ற கனவை எல்லாம் 
             கண போழ்தில் நனவாக்கத் துடிக்கின்றீரே
வனப்புமிகு மங்கையரைச் சேர போகும் 
             காளையெனப் பொறுமை மிக இழக்கின்றீரே 

ஏடெடுத்துப் படிக்காமல் தேர்வில் வென்று 
            மாநிலத்தில் முத்லிடத்தைப் பிடிக்கும் கனவு 
வேர்வைசிந்தி உழைக்காமல் செல்வம் சேர்த்து 
           ஓரிரவில் பில்கேட்சாய் மாறும் கனவு

மணமுடிக்கும் மங்கையவள் தந்தை வந்து 
          மணக்கொடையாய் விமானத்தை நல்கும் கனவு 
செல்லும் நெடுவழியெங்கும் ரசிகர் கூட்டம் 
          ஆர்ப்பரித்துக் கையசைக்கும் நடிகர் கனவு 

பணம் வழங்கும் எந்திரத்தின் தேவையின்றி 
           கட்டுக் கட்டாய்  பணம்புழங்கும் தங்கக் கனவு 
மருமகளைத் தன்மகளாய்த் தாங்கி நிற்கும் 
           மாமியார்கள் நிறைந்திருக்கும் மங்கலாக கனவு 

மங்கையர்தம் கணவர்களை மதித்துப் போற்றும் 
           உலகுக்கு வந்ததுபோல் உன்னதக் கனவு 
மங்கையரை ஓருயிராய் உணர்ந்து எண்ணி 
           காளையர்கள் காத்துநிற்கும் கண்ணியக் கனவு 

ஆட்சியரும் அமைச்சர்களும் தங்கள் பிள்ளை    
           கல்விபெற அரசுப்பள்ளி அணுகும் கனவு  
கடவுச் சீட்டில்லாமல்  பயணம் செய்து  
            கண்டம்விட்டுக்  கண்டம்தாவும் அபத்தக் கனவு

விருட்டென்று விண்தாவி  விண்மீன் கூட்டம் 
           தன்னோடு உரையாடும் விந்தைக் கனவு  
ஆழ்கடலின் தரைதொட்டு முத்தெ டுத்து 
           திமிங்கலத்தின் தலைவருடும் நேசக் கனவு   

வான்பொய்க்கா மழைபெய்து வளங்கள் பெருகி 
           உணவுக்கோர் பஞ்சம்வரா உண்ணத்தக்க கனவு 
முதல்மகனும் காவல் இன்றிக்  குடிமகனோடு
            சமமாகப் பயணிக்கும் சமத்துவக் கனவு 

பாரதமே தூய்மையாகத் துலங்கி நின்று 
            ஆரோக்கிய முதன்மைபெறும் அற்புதக் கனவு 
 அமெரிக்கா முதலான அத்துணை நாடும் 
             இந்தியாவின் நட்புக்கோரும் இன்புறு கனவு 

 கனவுகளே வாராத உறக்கம்  கொண்டு 
             காலையிலே கண்விழிக்கும் கற்பனைக் கனவு 
யார்க்கும் நேர்மையாக நடக்கின்ற நெஞ்சமில்லை 
              நீர்காணுகின்ற கனவுக்கோர் பஞ்சம் இல்லை  

Sunday 10 December 2017

பாரதிக்கு வந்தனம் 

புதுவையில் ஒரு சித்திரப் பயணம் @ பாரதிக்கு சித்திராஞ்சலி

            டிசம்பர்-11 மகாகவி பாரதியாரின்  தினத்தை முன்னிட்டு புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியாரின்  நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தில் புதுவை கவிதை வானில் என்ற அமைப்பு கவிதாஞ்சலி ,இசையாஞ்சலி மற்றும் சித்ராஞ்சலி (ஓவியம் தீட்டுதல்) ஆகியவற்றை 
09-12-2017 .சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்திருந்தது .ஏராளமான பள்ளி மாணவர்கள்,ஓவியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
           கவிதை வானில் அமைப்பின் நிறுவனர் திருமதி கலா விசு அவர்களின் அழைப்பின் பேரில் 6 ஆம் வகுப்பு மாணவர் மூவர் .7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ,8 ஆம் வகுப்பு மாணவர் மூவர் ,9 ஆம்  வகுப்பு மாணவர் மூவர்,10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்,11 ஆம் வகுப்பு மாணவர் மூவர் என  எங்கள் பள்ளி மாணவர்கள் 14  பேரை ஓவியம் வரைவதற்காகஅழைத்துச் சென்றிருந்தேன்.அனேகமாக கலந்துகொண்ட ஒரே அரசுப்பள்ளி எங்கள் பள்ளி மட்டுமே...! தனியார் பள்ளியின் மாணவர்களே அதிகம்.....ஒரு சிலரை  பெற்றோரும் அழைத்து வந்திருந்தனர்.
 அந்த இடத்திற்கு நான் செல்வதும் இதுவே முதல் முறை.அங்கிருந்த பாரதியாரின் அறிய புகைப் படங்கள், ஓவியங்கள் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தோம்.உள்ளே ஒரு ஹாலில் நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருந்தன.சிலர் இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தனர் ...!சில மாணவியர் பரத நாட்டிய நிகழ்வை நிகழ்த்தினார் ///சில மாணவர்கள் வரைந்துகொண்டிருந்தனர்.அவர்களுடன் அமர்ந்த எங்கள் பள்ளி மாணவர்களும் விதம் விதமாக ...வித்தியாசமான தோற்றங்களில் பாரதியாரை வரைந்தனர் .நான் முன்னரே வரைந்து எடுத்துச் சென்றிருந்த  பாரதியாரின் 15 வகையான ஓவியங்களை காட்சிப் படுத்தினேன்.
          முனுசாமி என்கின்ற சிற்பி களிமண்ணால்  பாரதியாரின் உருவத்தை வடிவமைத்துக் கொண்டிருந்தார் .சில ஓவியர்கள் அமர்ந்து வரையாது தொடங்கியிருந்தனர்.நானு அமர்ந்து 7 நிமிடங்களுக்குள் பாரதி மற்றும் செல்லம்மாள் இவர்களின் உருவத்தை வண்ணமாகத் தீட்டினேன்.எம் பள்ளி மாணவர்கள் சிலர் பென்சில் ஷேடிங் முறையிலும் சிலர் வண்ண ஓவியமாகவும் வரைந்தனர் .ஒரு மாணவன் மணல் கொண்டு பாரதியாரை வரைந்தான் மற்றொரு மாணவர் பருப்பு வகைகள் ,கடுகு உள்ளிட்ட பொருட்களால் அலங்கரித்து வரைந்திருந்தான் .புதுவை மற்றும் காரைக்கால் பகுதி மாணவர்கள் சிறந்த வண்ணங்களைப் பயன்படுத்தி பாரதியின் உருவத்தை ஓவியங்களாகத்  தீட்டினர் .
                மீண்டும் எனது ஓவியங்கள் அடுக்கப்பட்ட பகுதிக்கு வந்தேன்.அங்கு எனது ஓவியங்களை ஒருவர் வியந்து பாராட்டிக்கொண்டிருந்தார் .அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரைப் பற்றி அவரிடமே வினவினேன்.அவரோ மிக அமைதியாக எனது பெயர் பாரதி என்றார் .பாரதிதாசனின் பேரன் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனின் மகன் என்றும் கூறி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார் .புரட்சிக்  கவிஞர் பாரதிதாசனின் பேரன் என்பதை அறிந்து ஒருகணம் என்னுள் திகைப்பு நிலவியது...எவ்வளவு எளிமை?மறுகணம் திகைப்பு நீங்கி மகிழ்வுடன் அவரது கரம் பற்றிக் குலுக்கினேன்.மாணவர்களிடமும் 
அவரை அறிமுகப்படுத்தினேன்.அவருக்கு என்னுடைய மனவண்ணங்கள் நூலை நினைவுப் பரிசாக வழங்கினேன்.அவர் முன்னிலையில் பாரதியாரைப் பற்றிய கவிதை ஒன்றை வாசித்து,பின்னர் பாருக்குள்ளே நல்ல  என்ற பாரதியாரின் பாடலைப் பாடினேன்.நான் வரைந்த பாரதி செல்லம்மாளின் ஓவியத்தை அதன் வரைநேரம் அறிந்து வியந்து பாராட்டினார் .தந்து தாத்தா பாரதிதாசனின் உருவங்களையும் அவரது பிறந்த தினத்தையொட்டி அவரது படங்களை வரையுமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார்.அவருடன் நின்று எம் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்களுடன் குழுப்படமும் எடுத்துக்கொண்டோம்.
              பின்னர் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்கள் .முக்கியமாக சிற்பி முனுசாமி மற்றும் சித்திரக் கவிஞர் ரவி உள்ளிட்ட பல ஓவியர்களின் அறிமுகத்திற்கு காரணமாக இருந்தது இந்நாள்.மாணவர்களுக்கும் இது புது அனுபவம். தாங்கள் வண்ணங்களை பயன்படுத்துவதில் உள்ள நிலைமை பற்றியும் அறிந்துகொண்டனர். 
புதுவைப் பள்ளி மாணவர்களை போல வித்தியாசமான வண்ணங்களை,  வண்ணம் தீட்டும் உபகரணங்களை  வாங்கவும் ஆர்வம் கொண்டனர்.எங்களுக்கு அழைப்பு விடுத்து அறிய வாய்ப்பை அளித்த  திருமதி கலா விசு உள்ளிட்ட அனைவரிடமும் விடைபெற்றபோது பகல் 2.30 மணி .
                பின்னர் புதுவைப் பகுதியின் பிரபல ஓவியர் நண்பர் சுகுமாரன் அவர்களோடு தொடர்பு கொண்டு புதுவையில் அன்றைய தினம் நடைபெறுகின்ற ஓவியக்  கண்காட்சிகள் குறித்துக் கேட்டறிந்தேன்.மாணவர்களின் புதுவை விஜயம் மேலும் அவர்களுக்கு பலனளிக்க வேண்டுமே.அவர்களது ஆர்வம் ஓவியக் கலையின் மீது இன்னும் அதிகரிக்கவேண்டும் அல்லவா .அதனால் அருகிலிருந்த ஓவியக்  கண்காட்சி அரங்கிற்கு அவரே வந்திருந்து அழைத்துச் சென்றார்.
                பிரபல ஓவியர் புதுவை முனுசாமி அவர்களின் கண்காட்சி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில்(மேஷன் பெருமாள் ஹோட்டல் ) நடைபெற்றுக்கொண்டிருந்தது .அங்கு சென்று ஓவியங்களை பார்வையிட்டோம் அனைத்துமே நவீன ஓவியங்கள்.அக்ரலிக் மற்றும் என்னை வண்ணம் கொண்டு தீட்டப்பட்டவை.ரியலிசம் பற்றி மட்டுமே அறிந்திருந்த எம் பள்ளி மாணவர்கள் ஓவியங்களின் புதிய பரிமாணங்கள் கண்டு ...புதிய தளங்கள் கண்டு வியந்து பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து அமரன் ஆர்ட் கேலரிக்கு சுகுமாரன் எங்களை அழைத்துச் சென்றார். அங்கும் பல எண்ணற்ற விதம் விதமான ஓவியங்களை பார்வையிட்டனர்.நிச்சயம் அவர்களது ஓவியம் வரைவதன் மீதான தாகம் அதிகரித்து இருக்கும் .அமரன் ஆர்ட் கேலரியில் பண்ணுருட்டிப் பகுதியில் கிடைக்கப் பெறாத பல வண்ணம் தீட்டும் உபகரணங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.வாய்ப்புள்ள மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டனர்.
              பின்னர் சுகுமாரன் சாருக்கு நன்றி கூறி மணக்குள விநாயகர் கோவிலைதரிசித்து ,அரவிந்தர் ஆசிரமம் சென்று அன்னை சமாதியின் அருகில் கண்மூடி தியானித்து ,புதுவைக்கு கடற்கரையின் காற்றை அனுபவித்து ...அண்ணல் காந்திசிலைக்கு ஹாய் சொல்லி ...நேரு பூங்காவின் ஆயி மண்டபத்தினருகில் ஓய்வெடுத்து புதுவையிடமிருந்து விடைபெறும் நேரம் சரியாக மாலை 6.30.குறிப்பாக மாணவன் பரத் என்பவனைத் தவிர மீதமுள்ள 13 பேருக்குமே இதுதான் புதுவைக்கு முதற் பயணம்...புதுவை மாநகருக்குள் நடத்திய சித்திரப்  பயணம்  நிச்சயம் மறக்கவே முடியாத ஆனந்த அதிசய அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.கண்டிப்பாக அடுத்தமுறை இவர்களை புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்திற்கு அழைத்து வரவேண்டும்.அது அவர்களது ஓவியக்  கலையின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டும் அல்லவா ?




அக்னிக் குஞ்சே என் அன்பான ..பாரதியே.!

அக்னிக் குஞ்சே என் அன்பான ..பாரதியே.!

பாரதத் திருநாட்டின் கவிப் புதல்வனே 
பாரதத்தை பார்க்கே திலகமாக்கி சூட்டி மகிழ்ந்த பாரதியே 
சுதந்திரச் சூரியனின் கதிர்களை பேரொளியை 
பாரதத்தில் பரவாமல் தடுத்திட்ட ஆங்கிலேயக் காடுகளை 
விடுதலை உணர்வை கவிதை  நெருப்புகளாய் வீசியெறிந்து 
வனமழித்த எம் அக்கினிக் குஞ்சே ...
வெந்து தணிந்தது காடு...உன்னால்
வந்தது ஆனந்த சுதந்திரம் அன்று....!

ஆனால்...அந்தோ 
இன்று கொள்ளையர் கூட்டத்தால் காரிருளில் மூழ்கி 
கதிரொளியாம் ஆனந்தம் தொலைத்து  
கதியற்றுக் கிடக்கிறாள் பாரதத் தாய் 
அவள் இன்னல் களைய வேண்டாமா ?
இன்னுமேன் தயக்கம்....?
ஊழல் பேய்களை ஓட ஓட விரட்ட 
உன் துணை வேண்டும் எமக்கு .

அக்கினிக் குஞ்சே என் அன்பான பாரதியே ..
விண்ணுலகம் துறந்து வா ...!
அழைக்கிறோம் விரைந்து வா...!
எமை நோக்கிப் பறந்து வா ...!
மீண்டும் ஒருமுறை பிறந்து வா...!
அக்கினிக்  குஞ்சே என் அன்பான பாரதியே ...!
மீண்டும் நீ பிறந்து வா ...!





Monday 4 December 2017

சாரணியத்தில் எனது குருமார்கள்...

சாரணியத்தில் எனது குருமார்கள்...
                          சாரண இயக்கம் ஒரு உலகளாவிய இயக்கம் .
ஒரு முறை ஒருவன் சாரணன் ஆகிவிட்டால் உயிர் உள்ளவரை அவன் சாரணனே (    ONCE A SCOUT ALWAYS A SCOUT   )
                        நான் சாரணன் ஆனதும் கூட சுவாரஸ்யமான ஒரு தற்செயல் நிகழ்வுதான்.அன்றிலிருந்து இன்று வரை நான் என்னை ஒரு முழுமையான சாரணனாகத்தான் உணர்கிறேன்.என் சுவாசம்,குருதி ,நரம்புகள் எங்கும் சாரணன் என்ற உணர்வும் உலகளாவிய சாரண இயக்கத்தில் ஓர் அங்கம் என்ற பெருமிதமும் விரவிப்  போய் ஊறிக்  கிடக்கின்றன. படியுங்களேன் ...நான் ஒரு சாரணன் ஆன கதையை ...எனது சாரண குருமார்கள் பற்றியும் கூறுகிறேன்.

                          முதன் முதலில் புதுப்பேட்டை கிளை நூலகத்தில் 'குருளையர் படை  '(cubs )என்ற நூலை படிக்க  நேர்ந்தது .நான் அப்போது கிரஸண்ட்  ஆங்கிலப் பள்ளி -மழலையர்  தொடக்கப் பள்ளி என்ற கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருந்தேன்.1995 என்று நினைவு.அந்நூலை படிப்பதற்கு முன் எனக்கு சாரணியத்தில் துளியும் அனுபவம் கிடையாது.அந்நூலை படித்ததும் ஏதோ ஒரு ஆர்வத்தில் நானாகவே அதில் கூறியுள்ள முறைப்படி scarf  மட்டும் தைத்துக் கொண்டு பள்ளிச் சீருடைமேல் மாணவர்களை அணியச் செய்து குருளையர் உறுதிமொழி  ,நானாகவே மெட்டு அமைத்த சாரண இறைவணக்கப் பாடல்  பரம்பொருள் ஞான பக்தி தா ...( தயா கர் தான் பக்தி கா ...பாடல் எல்லாம் அப்போது எனக்கு அறிமுகமே இல்லை.)கொடிப்பாடலான பாரத சாரண சாரணியர் கொடி பண்பாய் பறக்கிறதே ...ஆகிய பாடல்களை பாடி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன்.பின்னர் எங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள ஒரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் திரு .தங்கபாண்டியன் ஐயா அவர்களை பற்றி என் தங்கை மூலம் ( எனது தங்கை  அப்போது அப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.)கேள்விப்பட்டு அவரை அழைத்து வந்து படையை முறைப்படி துவக்கினேன்.அவர் எனது ஆர்வத்தைப் பார்த்து நெல்லிக் குப்பம் என்ற ஊரைச் சார்ந்த சாம்ராஜ் என்ற மூத்த சாரணரை அறிமுகம் செய்து வைத்தார் .சாம்ராஜ் ஐயாதான் எனக்கு  'வாகுல்கள்  ' மற்றும் பேடன் பவல் அவர்களின் திரு உருவப்படம் ஆகியவற்றை வழங்கினார் .பின்னர் இருவருடங்களாக அப்படையை நடத்தி வந்தேன்.ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் அதை தொடர்ந்து நடத்த இயலவில்லை .
                        இந்நிலையில் 2001 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி னக்கு கருணை அடிப் படையில் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி  கிடைத்தது.10 தினங்கள் கடந்தன.முதல் மாத சம்பள
கவரை என்னிடம் அளிக்கும்போது அப்போதைய தலைமை ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் என்னிடம் நீங்கள் சாரண இயக்கத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . எனக்கு மகிழ்வாக இருந்தது. மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன்.
             பின்னர் 2002ல் கடலூர் தேவனாம் பட்டினம் , பீட்டர் பிஷப் கல்லூரியில் அடிப்படை  பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்தது .
(18-09-2002 முதல் 27-09-2002 வரை)திருவாளர் N .R ,என்று அழைக்கப் படும் ராமமூர்த்தி ஐயாதான் அப்போது முகாம் தலைவராக இருந்தார் .D.R. ஐயா .இளைய குமார்  ஐயா , வேலாயுதம் ஐயா ,செந்தில் ஐயா ,வீரப்பா ஐயா ஆகியவர்களை எனக்கு பயிற்சியாளர்களாக அறிமுகம் செய்த முகாமும் அதுவே.10 நாட்கள் நடைபெற்ற முகாம் எனக்கு சாரண இயக்கத்தைப் பற்றி தெளிவானதொரு அறிமுகத்தை அளித்தது.
                  தினசரிப் பணிகள்,இறைவணக்கக் கூட்டம்,குதிரை லாட வடிவ அணிவகுப்பு,,அணிமுறை பயிற்சி,வழிநடைப் பயணம்,விதம் விதமான கைத் தட்டல்கள் ,ஊக்க ஒலிகள் ,,,விதம் விதமான சாரண விளையாட்டுகள்,சாரணப் பாடல்கள்,முடிச்சுகள்,கட்டுகள்,பாடித்தீ நிகழ்வுகள்.பவலாரின் ஆறு உடற் பயிற்சிகள்...இவை எனக்கு மற்றும் ஒரு உலகத்தை அறிமுகம் செய்தன.இவை அனைத்துமே பதின் பருவ சிறார்களை ஒரு ஆசிரியர் பால் ஈர்க்கின்ற அற்புத ...மந்திரங்கள்.அதுவும் குறிப்பாக அந்த சர்வ  சமய வழிபாட்டுக் கூட்டம் எனக்கு எல்லையில்லா சிலிர்ப்பையும் ,ஆனந்த பரவசத்தையும் ஏற்படுத்தி ஒருவித அமைதியை மனமெங்கும் வியாபிக்கவிட்டது.
                 அதுவும் திருச்சோ புரம் அண்மையில் உள்ள அரிவாள் மூக்கு என்ற இடத்திற்கு...மிகப் பெரிய மணல் மேடு ...அழகி ,சொல்ல மறந்த கதை போன்ற படங்களில் கூட அப்பகுதியை நீங்கள் பார்த்திருக்கலாம் ...கடலூர் மாவட்டத்தில் ஒரு மினியேச்சர் ஜெய் சாலமீர் பாலைவனம் போன்ற ஒரு இடம்.அங்கு  அழைத்துச் சென்ற நடை பயணம் வாழ்நாளில்  முடியாத அனுபவத்தை தந்தது .மீண்டும் மாணவப் பருவத்திற்கே எம் போன்ற ஆசிரியர்களை அழைத்துச் சென்று முழுக்க முழுக்க ஒரு மாணவனாகவே என்னை உணர வைத்த தருணங்கள் அவை.அதன் பின்னர் பலமுறை அந்த இடத்திற்கு... நண்பர்களுடன் ...குடும்பத்தாருடன்.எனது பள்ளி சாரணர்களுடன் என சென்றும் கூட அப்பயிற்சியின்போது சக பயிற்சியாளர்களுடன் சென்று வந்த அனுபவத்தின் மகிழ்ச்சி மற்ற  அனுபவங்களை பின்னுக்குத் தள்ளுவது என்னவோ நிஜம்தான்.
               அன்று தொடங்கிய எனது சாரணியத்தின் மீதான பற்று இன்று வரையிலும் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கக் காரணம் திரு .ராமமூர்த்தி  ஐயா மற்றும் திரு துரை.ராமலிங்கம் ஐயா இவர்கள் எனக்கு அளித்த அடிப்படை பயிற்சி உண்மையிலேயே மிக சிறப்பாக இருந்ததன் காரணமாகத்தான் என்றால் அது மிகை அல்ல .
              அதன் பின்னர் என் பள்ளியில் நடந்த படைக் கூட்டங்கள் அற்புதமான தருணங்களை எனக்கும் எனது சாரணர்களுக்கும் தந்ததன்  காரணமாகத்தான் இன்னும்கூட பல சாரண மாணவர்கள் என்னுடன் தொலைபேசியிலும் ,முக நூலிலும் இன்னும் தொடர்பில் உள்ளனர் .
             பின்னர் ஒரு வருடத்திற்குப் பின்னர் அதே தேவனாம் பட்டினம் ...அதே  பிஷப் பீட்டர் கல்லூரி ...மீண்டும் ஒரு 7 நாள் பயிற்சி ..
.(03-12-2003 முதல் 10-12-2003 வரை)இம்முறை அட்வான்ஸ் கோர்ஸ் என்ற முன்னோடி பயிற்சி .இம்முறை முகாம் தலைவராக இருந்தவர் திரு .B . R . என்று அழைக்கப் படும் பா.ராமச்சந்திரன் ஐயா - SCOUTING FOR BOYS -என்ற நூலை அழகுத் தமிழில் ...எளிய தமிழில் ...சிறுவர் சாரணியம் என்ற நூலாக மொழிபெயர்த்து வெளியிட்டாரே ...அவரேதான்.மிகவும் கண்டிப்புடன் வழி நடத்தினார் ...அவரது அணுகுமுறை எங்களுக்கு  அப்போது சிம்ம சொப்பனமாக இருந்தது என்றே  வேண்டும்.அப்போதும் D.R.  N.R. மற்றும் AIR அன்று அழைக்கப்படும் எங்கள் அனைவரின் அபிமானத்துக்கு உரிய இளைய குமார் ஆகிய மூவர்  கூட்டணி எங்களுக்கு சிறப்பான பயிற்சியை அளித்தார்கள்.செந்தில் குமார் , வேலாயுதம் ,KGR என அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் போன்றோர் பயிற்சியின் உதவியாளர்களாய் திகழ்ந்தார்கள்.அடிப்படைப் பயிற்சியில் பெறாத பல பயிற்சிகள் சிறப்பாக வழங்கப் பட்டன.DR ஐயா மூலம்தான் சாரண வழி நடைப் பயணத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அணிமுறைப் பயிற்சியின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவம் இவற்றை அறிந்தேன் .இளைய குமார் ஐயா மட்டுமே SIGNALING ,SKY WATCH   மற்றும் MAPPING  ஆகியவற்றை அவ்வளவு எளிதாய் நடத்த முடியும் .ஆக்கல்  கலையை ..கூடாரம் கட்டும் முறைகளை B . R ஐயாவிடம் இருந்து அவ்வளவு எளிதாகக் கற்றோம்.குறிப்பாக இயற்கை வண்ண ஓவியங்கள் ,அடுப்பே இல்லாத ...பாத்திரங்களே இல்லாத சமையல் ஆகியவற்றை இம் முகாமில்தான் நான் தெரிந்து கொண்டேன்.இது எல்லாமே விரைவாக சொல்ல வேண்டுமே என்று சுருக்கமாகக் கூறுகிறேன் .நடந்த சம்பவங்களை ...ஒவ்வொரு நிகழ்வாகக் கூறினால் கண்டிப்பாக ஒரு மெகா சீரியல் போல் நீண்டுகொண்டே செல்லும் ...!கண்டிப்பாக இவ்விடம் N .R அவர்கள் வேடிக்கையாகப் பாடும் சென்னாங்குன்னிக்கும் செவ்வாழை மீனுக்கும் கல்யாணமாம் கல்யாணம் .... முத்து  செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை  ஆகிய பாடல்களும்....சர்வ சமய வழிபாட்டின்போது மிக உருக்கமாகப் பாடும் சூரியன் வருவது யாராலே என்ற பாடலை குறிப்பிட்டே ஆகவேண்டும்.இதனிடையே டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று எனது முதல் திருமண நாள் கொண்டாட்டத்திற்காய் 7 ஆம் தேதி  இரவு அனுமதி பெற்று மறுநாள் காலை அதாவது 8 ஆம் தேதி காலி 9 மணிக்குள் முகாம் திரும்புவதாக ஒப்புதல் அளித்து B R அய்யாவிடம் சிறப்பு அனுமதி பெற்று பரபரவென்று முகாம் திரும்பியது தனி கதை .



                  அதன் பின்னர் எனது பள்ளியில் படைக் கூட்டம் நடத்துவது, முகாம் நடத்துவது என  ஆர்வத்துடனா அல்லது ஆர்வக் கோளாருடனா என்று  பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு எனது சாரண நடவடிக்கைகள் இருந்தன.
                   அதன்பின்னர்தான் சாரணர் கையேடு என்ற தொகுப்பு நூலை DR ஐயா ,N .R ஐயாஇவர்கள் முன்னிலையில் காடாம்புலியூர் அரசு  பள்ளியில் நடைபெற்ற ஒரு முகாமில் வெளியிட்டேன் .
                   அரசுப் பள்ளியில் பணி  புரியும்  ஆசிரியர்களின் பங்களிப்போடும் நன்கொடையாளர்கள் துணை கொண்டும் மூன்று நாட்கள் பயிற்சி முகாம்களை மாவட்ட பொறுப்பாளர்களைக் கொண்டும்  சகா சாரண ஆசிரிய சகோதரர்களைக் கொண்டும் வருடந்தோறும் நடத்தி வருகிறேன்..எனது இம்முயற்சியில் இரு முறை மட்டுமே சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது
                 மேலும் இந்த இடையறாத முயற்சிகளும் சாரண மாணவர்களின் ஒத்துழைப்போடும் ஆற்றிவரும் பணிகளும்,எனது சாரண குருமார்களின் ஆசியும் எனக்கு MESSENGERS OF PEACE STAR -2014 என்ற சர்வ தேச விருதை  பெற உதவி செய்துள்ளன.அவ்வாறு எனக்கு இவ்விருது கிடைக்க எனக்குப் பரிந்துரை செய்த தேசிய சாரநாத் பொறுப்பாளர்களான 
திரு  கிருஷ்னமூர்த்தி ,திரு மது சூதன் ஆவலா , திரு .சரத் ராஜ் ஆகியோருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.
                 மற்றுமொரு பயிற்சி சாரண ஆசிரியர் பெற வேண்டிய மிக உயர்ந்த பயிற்சியான இமய வனக் கலைப்  பயிற்சி...இதை நான் பெற்றது உதகை மாவட்டம் குன்னூரில் ...நல்ல கோடை வெயில் கொளுத்தும் மே மாதம் ...குளு குளு என ஒரு பயிற்சி மாநிலப் பயிற்சி மையத்தில் ...அப்போது முகாம் தலைவராக இருந்தவர் மாநிலப் பயிற்சி ஆணையர் திரு C ,அண்ணாமலை அய்யா அவர்கள்.அங்கும்கூட கேத்தி நோக்கிய வழிநடைப் பயண அனுபவமும் கூடாரங்களில் மற்றும் மர வீடுகளில் (HUT) தங்கிய அனுபவமும் மறக்க முடியாதவை.
                அதன் பின்னர் மத்திய பிரதேசம் பச்மரியில்  தேசியப் பயிற்சி மையத்தில் நான் பங்கேற்ற
RE UNION FOR HIMALAYAN WOOD BADGE .முகாம் ..முகாம் தலைவராக திரு சலீம் குரேஷி ஐயா ..இம்முகாம் பற்றிய அனுபவங்கள் நிச்சயம் தனிப் பதிவுதான்.விரைவில்....
                இவ்வாறு எனக்குள் உறைந்த இந்த சாரண உணர்வுதான் நான் புதியதாகக் கட்டியுள்ள என் வீட்டின் வெளிப் புறச் சுவரில்  உலக சாரணர் சின்னத்தையும் ,பாரத சாரண சாரணியர் சின்னத்தையும் வடிவமைக்கச் செய்தது எனலாம்.
                மிக நீண்டுவிட்டது அல்லவா ...! சரி ...செய்திக்கு வருகிறேன் .27.11.2017 அன்று நடைபெற்ற சாரண ஆசிரியர்கள் பொதுக்குழுக் கூட்டத்திற்கு எனது குருமார்கள் இருவர் ஒருங்கே வருகை தந்திருந்தனர்.இருவரையும் ஏக காலத்தில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.இதோ அந்நினைவாக அவர்களுடன் எடுத்துக்கொண்ட விண்ணப் படம் ...அப்படம் நோக்கியபோது என்னுள் எழுந்த நினைவுகள் ..எண்ண  அலைகள்தான் ...அதன் வெளிப்பாடுதான் இப்பதிவு ...