Wednesday 13 December 2017

கனவுக்கோர் பஞ்சமில்லை

                                                   கனவுக்கோர் பஞ்சமில்லை 

மனப்பேழை காணுகின்ற கனவை எல்லாம் 
             கண போழ்தில் நனவாக்கத் துடிக்கின்றீரே
வனப்புமிகு மங்கையரைச் சேர போகும் 
             காளையெனப் பொறுமை மிக இழக்கின்றீரே 

ஏடெடுத்துப் படிக்காமல் தேர்வில் வென்று 
            மாநிலத்தில் முத்லிடத்தைப் பிடிக்கும் கனவு 
வேர்வைசிந்தி உழைக்காமல் செல்வம் சேர்த்து 
           ஓரிரவில் பில்கேட்சாய் மாறும் கனவு

மணமுடிக்கும் மங்கையவள் தந்தை வந்து 
          மணக்கொடையாய் விமானத்தை நல்கும் கனவு 
செல்லும் நெடுவழியெங்கும் ரசிகர் கூட்டம் 
          ஆர்ப்பரித்துக் கையசைக்கும் நடிகர் கனவு 

பணம் வழங்கும் எந்திரத்தின் தேவையின்றி 
           கட்டுக் கட்டாய்  பணம்புழங்கும் தங்கக் கனவு 
மருமகளைத் தன்மகளாய்த் தாங்கி நிற்கும் 
           மாமியார்கள் நிறைந்திருக்கும் மங்கலாக கனவு 

மங்கையர்தம் கணவர்களை மதித்துப் போற்றும் 
           உலகுக்கு வந்ததுபோல் உன்னதக் கனவு 
மங்கையரை ஓருயிராய் உணர்ந்து எண்ணி 
           காளையர்கள் காத்துநிற்கும் கண்ணியக் கனவு 

ஆட்சியரும் அமைச்சர்களும் தங்கள் பிள்ளை    
           கல்விபெற அரசுப்பள்ளி அணுகும் கனவு  
கடவுச் சீட்டில்லாமல்  பயணம் செய்து  
            கண்டம்விட்டுக்  கண்டம்தாவும் அபத்தக் கனவு

விருட்டென்று விண்தாவி  விண்மீன் கூட்டம் 
           தன்னோடு உரையாடும் விந்தைக் கனவு  
ஆழ்கடலின் தரைதொட்டு முத்தெ டுத்து 
           திமிங்கலத்தின் தலைவருடும் நேசக் கனவு   

வான்பொய்க்கா மழைபெய்து வளங்கள் பெருகி 
           உணவுக்கோர் பஞ்சம்வரா உண்ணத்தக்க கனவு 
முதல்மகனும் காவல் இன்றிக்  குடிமகனோடு
            சமமாகப் பயணிக்கும் சமத்துவக் கனவு 

பாரதமே தூய்மையாகத் துலங்கி நின்று 
            ஆரோக்கிய முதன்மைபெறும் அற்புதக் கனவு 
 அமெரிக்கா முதலான அத்துணை நாடும் 
             இந்தியாவின் நட்புக்கோரும் இன்புறு கனவு 

 கனவுகளே வாராத உறக்கம்  கொண்டு 
             காலையிலே கண்விழிக்கும் கற்பனைக் கனவு 
யார்க்கும் நேர்மையாக நடக்கின்ற நெஞ்சமில்லை 
              நீர்காணுகின்ற கனவுக்கோர் பஞ்சம் இல்லை  

No comments:

Post a Comment