Sunday 10 December 2017

புதுவையில் ஒரு சித்திரப் பயணம் @ பாரதிக்கு சித்திராஞ்சலி

            டிசம்பர்-11 மகாகவி பாரதியாரின்  தினத்தை முன்னிட்டு புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியாரின்  நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தில் புதுவை கவிதை வானில் என்ற அமைப்பு கவிதாஞ்சலி ,இசையாஞ்சலி மற்றும் சித்ராஞ்சலி (ஓவியம் தீட்டுதல்) ஆகியவற்றை 
09-12-2017 .சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்திருந்தது .ஏராளமான பள்ளி மாணவர்கள்,ஓவியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
           கவிதை வானில் அமைப்பின் நிறுவனர் திருமதி கலா விசு அவர்களின் அழைப்பின் பேரில் 6 ஆம் வகுப்பு மாணவர் மூவர் .7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ,8 ஆம் வகுப்பு மாணவர் மூவர் ,9 ஆம்  வகுப்பு மாணவர் மூவர்,10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்,11 ஆம் வகுப்பு மாணவர் மூவர் என  எங்கள் பள்ளி மாணவர்கள் 14  பேரை ஓவியம் வரைவதற்காகஅழைத்துச் சென்றிருந்தேன்.அனேகமாக கலந்துகொண்ட ஒரே அரசுப்பள்ளி எங்கள் பள்ளி மட்டுமே...! தனியார் பள்ளியின் மாணவர்களே அதிகம்.....ஒரு சிலரை  பெற்றோரும் அழைத்து வந்திருந்தனர்.
 அந்த இடத்திற்கு நான் செல்வதும் இதுவே முதல் முறை.அங்கிருந்த பாரதியாரின் அறிய புகைப் படங்கள், ஓவியங்கள் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தோம்.உள்ளே ஒரு ஹாலில் நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருந்தன.சிலர் இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தனர் ...!சில மாணவியர் பரத நாட்டிய நிகழ்வை நிகழ்த்தினார் ///சில மாணவர்கள் வரைந்துகொண்டிருந்தனர்.அவர்களுடன் அமர்ந்த எங்கள் பள்ளி மாணவர்களும் விதம் விதமாக ...வித்தியாசமான தோற்றங்களில் பாரதியாரை வரைந்தனர் .நான் முன்னரே வரைந்து எடுத்துச் சென்றிருந்த  பாரதியாரின் 15 வகையான ஓவியங்களை காட்சிப் படுத்தினேன்.
          முனுசாமி என்கின்ற சிற்பி களிமண்ணால்  பாரதியாரின் உருவத்தை வடிவமைத்துக் கொண்டிருந்தார் .சில ஓவியர்கள் அமர்ந்து வரையாது தொடங்கியிருந்தனர்.நானு அமர்ந்து 7 நிமிடங்களுக்குள் பாரதி மற்றும் செல்லம்மாள் இவர்களின் உருவத்தை வண்ணமாகத் தீட்டினேன்.எம் பள்ளி மாணவர்கள் சிலர் பென்சில் ஷேடிங் முறையிலும் சிலர் வண்ண ஓவியமாகவும் வரைந்தனர் .ஒரு மாணவன் மணல் கொண்டு பாரதியாரை வரைந்தான் மற்றொரு மாணவர் பருப்பு வகைகள் ,கடுகு உள்ளிட்ட பொருட்களால் அலங்கரித்து வரைந்திருந்தான் .புதுவை மற்றும் காரைக்கால் பகுதி மாணவர்கள் சிறந்த வண்ணங்களைப் பயன்படுத்தி பாரதியின் உருவத்தை ஓவியங்களாகத்  தீட்டினர் .
                மீண்டும் எனது ஓவியங்கள் அடுக்கப்பட்ட பகுதிக்கு வந்தேன்.அங்கு எனது ஓவியங்களை ஒருவர் வியந்து பாராட்டிக்கொண்டிருந்தார் .அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரைப் பற்றி அவரிடமே வினவினேன்.அவரோ மிக அமைதியாக எனது பெயர் பாரதி என்றார் .பாரதிதாசனின் பேரன் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனின் மகன் என்றும் கூறி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார் .புரட்சிக்  கவிஞர் பாரதிதாசனின் பேரன் என்பதை அறிந்து ஒருகணம் என்னுள் திகைப்பு நிலவியது...எவ்வளவு எளிமை?மறுகணம் திகைப்பு நீங்கி மகிழ்வுடன் அவரது கரம் பற்றிக் குலுக்கினேன்.மாணவர்களிடமும் 
அவரை அறிமுகப்படுத்தினேன்.அவருக்கு என்னுடைய மனவண்ணங்கள் நூலை நினைவுப் பரிசாக வழங்கினேன்.அவர் முன்னிலையில் பாரதியாரைப் பற்றிய கவிதை ஒன்றை வாசித்து,பின்னர் பாருக்குள்ளே நல்ல  என்ற பாரதியாரின் பாடலைப் பாடினேன்.நான் வரைந்த பாரதி செல்லம்மாளின் ஓவியத்தை அதன் வரைநேரம் அறிந்து வியந்து பாராட்டினார் .தந்து தாத்தா பாரதிதாசனின் உருவங்களையும் அவரது பிறந்த தினத்தையொட்டி அவரது படங்களை வரையுமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார்.அவருடன் நின்று எம் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்களுடன் குழுப்படமும் எடுத்துக்கொண்டோம்.
              பின்னர் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்கள் .முக்கியமாக சிற்பி முனுசாமி மற்றும் சித்திரக் கவிஞர் ரவி உள்ளிட்ட பல ஓவியர்களின் அறிமுகத்திற்கு காரணமாக இருந்தது இந்நாள்.மாணவர்களுக்கும் இது புது அனுபவம். தாங்கள் வண்ணங்களை பயன்படுத்துவதில் உள்ள நிலைமை பற்றியும் அறிந்துகொண்டனர். 
புதுவைப் பள்ளி மாணவர்களை போல வித்தியாசமான வண்ணங்களை,  வண்ணம் தீட்டும் உபகரணங்களை  வாங்கவும் ஆர்வம் கொண்டனர்.எங்களுக்கு அழைப்பு விடுத்து அறிய வாய்ப்பை அளித்த  திருமதி கலா விசு உள்ளிட்ட அனைவரிடமும் விடைபெற்றபோது பகல் 2.30 மணி .
                பின்னர் புதுவைப் பகுதியின் பிரபல ஓவியர் நண்பர் சுகுமாரன் அவர்களோடு தொடர்பு கொண்டு புதுவையில் அன்றைய தினம் நடைபெறுகின்ற ஓவியக்  கண்காட்சிகள் குறித்துக் கேட்டறிந்தேன்.மாணவர்களின் புதுவை விஜயம் மேலும் அவர்களுக்கு பலனளிக்க வேண்டுமே.அவர்களது ஆர்வம் ஓவியக் கலையின் மீது இன்னும் அதிகரிக்கவேண்டும் அல்லவா .அதனால் அருகிலிருந்த ஓவியக்  கண்காட்சி அரங்கிற்கு அவரே வந்திருந்து அழைத்துச் சென்றார்.
                பிரபல ஓவியர் புதுவை முனுசாமி அவர்களின் கண்காட்சி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில்(மேஷன் பெருமாள் ஹோட்டல் ) நடைபெற்றுக்கொண்டிருந்தது .அங்கு சென்று ஓவியங்களை பார்வையிட்டோம் அனைத்துமே நவீன ஓவியங்கள்.அக்ரலிக் மற்றும் என்னை வண்ணம் கொண்டு தீட்டப்பட்டவை.ரியலிசம் பற்றி மட்டுமே அறிந்திருந்த எம் பள்ளி மாணவர்கள் ஓவியங்களின் புதிய பரிமாணங்கள் கண்டு ...புதிய தளங்கள் கண்டு வியந்து பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து அமரன் ஆர்ட் கேலரிக்கு சுகுமாரன் எங்களை அழைத்துச் சென்றார். அங்கும் பல எண்ணற்ற விதம் விதமான ஓவியங்களை பார்வையிட்டனர்.நிச்சயம் அவர்களது ஓவியம் வரைவதன் மீதான தாகம் அதிகரித்து இருக்கும் .அமரன் ஆர்ட் கேலரியில் பண்ணுருட்டிப் பகுதியில் கிடைக்கப் பெறாத பல வண்ணம் தீட்டும் உபகரணங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.வாய்ப்புள்ள மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டனர்.
              பின்னர் சுகுமாரன் சாருக்கு நன்றி கூறி மணக்குள விநாயகர் கோவிலைதரிசித்து ,அரவிந்தர் ஆசிரமம் சென்று அன்னை சமாதியின் அருகில் கண்மூடி தியானித்து ,புதுவைக்கு கடற்கரையின் காற்றை அனுபவித்து ...அண்ணல் காந்திசிலைக்கு ஹாய் சொல்லி ...நேரு பூங்காவின் ஆயி மண்டபத்தினருகில் ஓய்வெடுத்து புதுவையிடமிருந்து விடைபெறும் நேரம் சரியாக மாலை 6.30.குறிப்பாக மாணவன் பரத் என்பவனைத் தவிர மீதமுள்ள 13 பேருக்குமே இதுதான் புதுவைக்கு முதற் பயணம்...புதுவை மாநகருக்குள் நடத்திய சித்திரப்  பயணம்  நிச்சயம் மறக்கவே முடியாத ஆனந்த அதிசய அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.கண்டிப்பாக அடுத்தமுறை இவர்களை புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்திற்கு அழைத்து வரவேண்டும்.அது அவர்களது ஓவியக்  கலையின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டும் அல்லவா ?




No comments:

Post a Comment