Friday 22 December 2017

பேரழகா பேரழிவா

பேரழகா பேரழிவா 


தூரிகை  தொட்ட  வண்ணங்கள்
துளித் துளியாய் வெண் தாளில்
விரவியதால் வெளிப்படுமாம்
சிந்தை கவர் சித்திரமும்
என்ன உன்போல் பேரழகா?

 வீசிடும்நல் தென்றலது
வேணுவதன் துளைவழியே
உள்நுழையும் காரணத்தால்
கசிந்துவரும்  கானமென்ன
உன்குரலைவிடப் பேரமுதா ?

என்னில்லத்  தோட்டத்தில்
மலர்ந்திட்ட  முல்லையதன்
மணத்தோடு கலந்துவிட்ட
ரோஜாவின் சுகந்தமென்ன
உன் மேனிகொண்ட மணத்தின்முன்
தோற்றுத்தான் போகாதா ?

கார்மேகம் தோற்கடிக்கும்
கட்டவிழ்ந்த உன் கூந்தல்
காற்றினிலே அலைவதனைக்
கண்ணுற்ற கலாபமயில்
ஆயிரங்கண் நிறைந்திட்ட
தோகைவிரித் தாடாதா ?

கமலமலர் வதனத்தில்
கயலிரண்டு இருப்பதனைக்
காணுகின்ற கொக்கினங்கள்
நீரற்ற இடந்தனிலே
கமலமேது கயல்களேது
என்றெல்லாம் ஐயம் கொண்டு
மயங்கி நிற்கும் நேரங்களில்
உன் கண்ணிமைகள் அசைந்திடவே
பதற்றமுற்றுப் பறக்காதா ?

செம்பவழச் சிப்பிக்குள்
பரல்முத்து பிறந்திடுமா
செப்புவாய் திறக்கையிலே
சீராக அசைவதென்ன
ஓரிதழைக் கொண்ட ஒரு தாமரையா
பரல் கடந்து வீசுவது பாரிஜாத நறுமணமா
என்றெல்லாம் உன்னிதழைக்
கண்டுவிட்ட செங்குமுதம்
தன்மெய்க் கூசிக் குறுகியதால்
தன சிறப்பழிந்து போகாதா ?

கதிரோனின் ஒளிவருடக்
கண்விழிக்கும் கமலமலர்
நீண்டிருக்கும் உன்னிரண்டு
கரமுடிவில் மலர்ந்திருக்கும்
காந்தள்மலர் விரல்கள் கண்டு
அழுக்காறு மிகக்கொண்டு
அழுதழுது  ஆர்ப்பரித்து
தன் காம்பின்  கழுத்தறுத்து
தான்பிறந்த பொய்கையினுள்
தன்கதையை முடிக்காதா ?

கீழ் திசையும் மேல் திசையும்
கிடக்கின்ற குன்றுகளுன்
கொங்கைகளைக் கண்டதனால்
சுயபச்சா தாபம் கொண்டு
வடிக்கின்ற கண்ணீரால்
அருவிகளும் பெருக்கெடுத்து
அதன் ஆறாத் துயர் கூற
ஆறாய் பாய்ந்தோடி
ஆர்ப்பரிக்கும் அலை கடந்து
ஆழிநீரில் கலக்காதா?

துடியிடையாம் கொடியிடையை
வர்ணிக்க வில்லையென்றால்
என்மீது கோபம் கொண்டு
உன்னிடைதான் இன்னும் சற்று
மெலிந்துடைந்து போய்விட்டால்
உந்தன பாரம் தாங்காமல்
உடைந்ததுவோ அல்லதுநான்
பாடாமல் போனதினால்
பட்டென்று மனமுடைந்து
மெலிவடைந்து உடைந்ததுவா
என்றெல்லாம்  தலைப்பிட்டு
தொலைகாட்சி மேடைகளில்
பாப்பையா தலைமையிலே
பட்டி மன்றம்  நடக்காதா?

வெண்பஞ்சு மேகங்கள்
வெட்கித் தலை குனியும்
மென்பாத மலரடியைக்
கண்டுவிட்ட காரணத்தால்
கொஞ்சிக் கொஞ்சி இசையெழுப்பும்
கொலுசணியை அணிந்த உந்தன்
மெத்தென்ற மெல்லடியை
நீ எடுத்து வைத்திட்டால்
புண்ணாகும் என்றஞ்சி
நீ நடக்கின்ற பாதையெங்கும்
கிடக்கின்ற கல் முள் நீக்கி
பசும்புல்லின் தரைக்கொண்டு
ஆங்காங்கே மலர் சேர்த்து
புவி கம்பளம் விரிக்காதா?

பேரண்டம் முழுதிருக்கும்
பேரழகைத் திரட்டிவந்து
பெண்ணாகச் செய்த உந்தன்
பெற்றவர்கள் நீடு வாழ்க !


பெண்ணனங்கே  நீ இங்கு
எழுந்தசைந்து நடக்கையிலே
ஒரு நடமாடும் பூக்கம்பம்
உன் கருங்குவளை விழியசைத்து
இதழ் விரித்து சிரிக்கையிலே
வருகுது பார் பூகம்பம்
உனைக் காணும் ஆடவர்தம்
உளம் அதிர்ந்துபோகிறது
உனதழகில் மயங்கி மனம்
அடுக்கு மாடிக் கட்டிடமாய்
தடதடத்து வீழ்கிறது
உனையடையா மாந்தர்தம்
மனம் விரிசல் விழுகிறது
விரிசல்கள் வழி அவர்தம்
வாழ்வனைத்தும் தொலைகிறது...!

ஐயகோ எனக்கும் ஓர்
ஐயம் உண்டு கேட்கின்றேன்
எனதின்னுயிர் போகுமுன்னர்
உரைத்திடுவாய் வாய்திறந்து
பெண்ணே என் தேவதையே
நீ ஆடவர் தம் மனம் மயக்க
வந்திட்டப்  பேரழகா ?
இல்லை ஆடவர்தம் உயிர் குடிக்க
வந்திட்டப் பேரழிவா ?






 
 


























No comments:

Post a Comment