Monday 25 December 2017

நான் ஓவியன் ஆன கதை.

நான் ஓவியன் ஆன  கதை.




நான் ஒரு சித்திரக்காரன்

நான் ஒரு ஓவியக்  கலைஞன் .

நான் ஒரு ஓவிய ஆசிரியர் .

என் நாடி நரம்புகளில் குருதியோட்டந்தனில் சித்திரத்தின் மீதான காதல் கலந்து ஓடிய வண்ணம்  இருக்கின்றது .

இந்த சுவாசங்களில் நிறைந்த ஓவியக்  கலையின் மீதான ஆர்வமானது என் சிந்தையெங்கும் வியாபித்துள்ளது .

என்னை நானே திரும்பிப் பார்க்கிறேன்

என்னுள் சித்திரத்தின் மீதான ஆவல் ஒட்டிக்கொண்டது எப்படி ?

ஓவியத்தேடல் எப்போது முதல் என்னுள் துளிர்த்தது ?

தூரிகைக் கனவு என்னைத் துரத்திப் பிடித்தது  எந்தசமயம்?

இதற்கெல்லாம் விடை தேட என் நினைவுகளை சற்றே ரீவைண்ட் செய்து பார்க்கப் போகிறேன்.

 இதோ ..கால எந்திரம் பின்னோக்கிப் பயணிக்க எத்தனிக்கிறது ....!

நான் ஏறப் போகிறேன் .

நான் சித்திரப்  பிரியனான கதையை நானே எனக்குள் தேடப் போகிறேன் ....!

வண்ணங்கள் என் எண்ணமெலாம் குடியேறிய கதையை உங்களிடம் பகிர போகிறேன் .

சுவாரசியம் நிரம்பிய என் பிள்ளைப்  பருவ  நிகழ்வுகளையும்  பதின் பருவ  நிகழ்வுகளையும் பட்டியலிட்டு தரப்போகிறேன்.

என்னை காலதூரிகை ஓவியனாய் வரைந்த கதை வடிக்கப்போகிறேன் ...!

புறப்படலாமா?

என் மூன்றாம் அகவையில் தொடங்குகிறேன் நான் .

என்னை நானே உணர்ந்து நினைவுகள் நெஞ்சில் புகை மறைத்தார் போன்று படியாது படிந்திருந்த பசுமை  துவங்கிய பருவம் அது .

பிறந்தது 1967 ல் ஒரு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் ...புதன் கிழமை .

என்னை இப்புவிக்கு தந்தவர்கள் ..வரும் காலத் தூரிகைக்காய் தாரை வார்த்தவர்கள்...அப்பர்சாமி மற்றும் சுந்தரவல்லி தம்பதியினர் .

எனக்கு முன்னர் பிறந்து என்னுடன் விளையாட்டுக்காய் சண்டையிடக்  காத்திருந்த என் சகோதரி சுமதி .

நான் பிறந்து மூவாண்டுகள் கழிந்து எங்கள் பால பருவத்திற்கு பலமும் வளமும் சேர்த்திடப்  பிறந்திட்ட என் தங்கை சுஜாதா .

என் அப்பாவுடன் பிறந்த சகோதரர்கள் மூவர் .இவர்கள்தான் என் வாசிப்பு ஆர்வத்திற்கு ...சித்திரத் தேடலுக்கு களமாய் நின்றவர்கள்.

என் அன்புக்குரிய பாட்டி .என் தந்தையின் தாய் .

என்று   கூட்டத்திற்கு குறைவில்லா கூட்டுக குடும்பம் எங்களுடையது .

நான் பிறந்து வளர்ந்தது கடலூர் மாவட்டம் பலாவிற்குப் புகழ் பெற்ற  பண்ணுருட்டிக்கு அடுத்துள்ள புதுப்பேட்டை  என்னும் கிராமம் .

கிராமம் என்றதும் எதோ பாரதி ராஜா படத்தில் வரும் பற்றிக் காட்டு கிராமம் என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம் .

பெரிய பேரூராட்சி .கைத்தறி லுங்கிக்குப் பெயர் போனது .அமரர் கல்கி எல்லாம் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள் தெரியுமா?அதை அவரே தனது  நூலில் குறிப்பிட்டிருக்கிறார்,அப்படிப் பட்ட புகழ் பெற்ற  ஊர் அது.

அந்த ஊரிலே பேருந்துகள் செல்லும் பிரதான சாலையில் , கடைவீதிக்கருகில் இருந்தது எங்கள் வீடு .எங்கள் வீட்டுக்கு அருகில் காவல் நிலையமும் இருந்தது .எதிரேயே அரசுப்  பள்ளியின் ஒரு பிரிவும் இயங்கி வந்தது .தெருவில் இறங்கி மேற்காகத் திரும்பினால் காசிவிசுவ நாதர் ஆலயம் கண்களை படும் ...தினமும் கோபுர தரிசனம்தான் .

                                                                                                                  தூரிகை  வரையும் ....

























No comments:

Post a Comment