Saturday 23 December 2017

ஐந்தாம் யுகம்

சத்தியத்தின் அத்தியாயங்கள்
அரிச்சந்திரனோடு உடன்கட்டை ஏறிவிட்டன .
உண்மை உலகை விட்டே விரட்டப்பட்ட பிறகு
பொய் மட்டுமே இங்கு
பொன் மகுடம் சூட்டிக் கொண்டு
புவியாளத் தொடங்கிவிட்டது .
ஊழல்கள் உலகமயமாகிவிட்ட காலத்தில்
உனக்கும் எனக்கும் மட்டும்
தனியாக ஒரு வழி எதற்கு ?
பொய்யர்களின் பகட்டு வெளிச்சத்தில்
உண்மைவாதிகள் ஒருவர் கண்ணுக்கும்
தெரிய போவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம் .
இப்போதெல்லாம் நீதியே  நீதிகேட்டு
நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருக்கிறது
பொய் வழக்குகள் வாதில் வென்று
மெய் புற  முதுகு காட்டி ஓடியமைக்காய்
நீதிமன்ற வாசல் நின்று
பொய்கள் எல்லாம் கை  கொட்டி
கெக்கலித்துச் சிரிக்கும் ஓசை
வான் முட்டப் பார்க்கிறது .

புதுமையுடன் புரட்சி செய்வோம்
என்பதாகக்  கூறிக்கொண்டு
நல்லரசாய் இருந்த நாட்டை
வல்லரசுக் கனவுக்காக
வக்கணையாக பேசிப் பேசி
வகையாக இழுத்துவிட்டு
வாழ்வுக்கு ஆதாரம் என்றிருந்த
உடைமைகள் அத்தனையையும்
நோகாமல் பிடுங்கிக்கொண்டு
நோஞ்சான்  நாடாக ஆக்கிவிட்ட பெருமை என்ன?

எதிர்கால இந்தியாவை எண்ணியலாய்
மாற்றுகிறோம் என்று கூறி
இங்கு வாழுகின்ற மக்களின்
நிகழ் காலம் தன்னை
இருண்டகாலம் ஆக்கிவிட்டு
கற்காலம் தன்னை கண்முன்னே காட்டுவதாய்
கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்
காட்டுமிராண்டிக்கும்பல் இங்கு
கர்ஜித்து கர்ஜித்து
காட்டாட்சி  அல்லவா புரிந்துகொண்டிருக்கிறது ?

நலமாக இருப்பவனை
நைச்சியமாக பேசிப் பேசி
மேலும் நல்வாழ்வு அளிப்பதற்காய்
சிகிச்சைகள் தருகின்ற
மருத்துவரைப் போல  இன்று
சும்மாக் கிடந்த சங்கை
ஊதிக்கெடுத்த ஆண்டி கதையாய்
 உயிர் மட்டும் விட்டுவிட்டு
உள்ளதனைத்தும் பிடுங்கிக்கொண்டு
ஓட்டு போட்ட மக்களையெல்லாம்
ஓட்டாண்டி ஆக்கிவிட்டு
கோவணத்தை மட்டும் விட்டு
ஒருகூட்டம் ஆள்கிறது .

கொண்டதெல்லாம் இழந்துவிட்டு
ஆட்டம் கண்டு நிற்கின்றோம்
வாழ்வதற்கும்கூட இங்கு
வழி இழந்து தவிக்கின்றோம்
இருள்கவிழ்ந்து கிடக்கின்ற
நட்டநடுக்கடல் நடுவே
திசையேதும் தெரியாமல்
திகைத்திருக்கும் கலன்  போல
கலங்கரையின் வெளிச்சம் என்ற
விடியலுக்காய் காத்து நிற்கின்றோம்

இருக்கின்ற சூழலது எப்போது மாறிடுமோ
துன்ப இருள் நீக்கிடவே
 வெள்ளியும்தான் முளைத்திடுமோ
கீழ்திசையும் சிவந்து அந்த
செங்கதிரும் உதித்திடுமோ
காரிருளும் கதிரொளியின்   வரவதினால் நீங்கிடுமோ

எம்மிதயத்தில் ஒளிந்திருக்கும் ஏக்கவினா அத்தனைக்கும்
பதிலொன்றும் இல்லாத நிலைமட்டும் நீடித்தால்
இதற்கான விடிவொன்று
இந்த யுகம் தனிலே இல்லையென்றால்
புதுயுகம்ஒன்று இங்கே பிறக்கட்டும் மீண்டுமிங்கே
இந்தக் கலியுகம் முடியும் வண்ணம்
பூகம்பம் வெடிக்கட்டும்
பிரளயம் பொங்கிவந்து இந்த பூமியெல்லாம் அழியட்டும்
ஆழியிலே பேரலைகள் வானுயர எழும்பட்டும்
அக்கிரமக்  காரர்களை சுனாமி
சுருட்டிபலி வாங்கட்டும் .
அக்கிரமக்  காரர்கள் வாழ்ந்திட்ட காலத்தில்
உடன்வாழ்ந்த குற்றத்தின் தண்டனையாய்
ஆத்திரத் தாண்டவம் ஆடியாடி
அப்பாவி மக்களையும் ஊழி கொண்டு போகட்டும்
ஆவேசத் தாண்டவம் ஒருவழியாய் அடங்கட்டும்
 அதன்பிறகேனும் இங்கு ஒரு புதுயுகம் பிறக்கட்டும்
இருள்நீங்கி பூமியிலே புத்தொளியும் பரவட்டும்
மீண்டும் இந்த மண்மீது புது உயிர்கள் பிறக்கட்டும்
பரிணாம வளர்ச்சியினால் புதுமனிதம் தழைக்கட்டும் .
இனம் என்றும் மதம் என்றும் பிளவுபடா மாந்தர்கள்
அன்பு என்னும் வழிகொண்டு இந்த மண்ணை ஆளட்டும்
அப்போதேனும் அன்று மெய்  மகுடம் சூடட்டும்.
அண்டசராசரமெல்லாம் அமைதிமட்டும் நிலவட்டும்.















No comments:

Post a Comment