Wednesday 20 December 2017

காமிக்ஸ் காலங்கள்

காமிக்ஸ் காலங்கள்


காமிக்ஸ் படிக்கும் வழக்கம் இருக்கிறதா ...?

அதிருக்கட்டும் ...இப்போதெல்லாம் காமிக்ஸ் வருகிறதா ?

            எனது பதிண்மப் பருவங்களில் என்னை விரல்  பிடித்து  நகர்த்திக் சென்றது காமிக் புத்தகங்களே ...

             4 மற்றும்  5 ஆம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு  காமிக்ஸ் படிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது .
அதற்குக் காரணம் எனது வீட்டுச் சூழல்தான் .

            கோகுலம் புத்தகத்திலும்   கல்கி புத்தகத்திலும்  தொடராக வந்த
மூன்று மந்திரவாதிகள் ,
ஓநாய்க் கோட்டை ,
கனவா நிஜமா ,
சிலையைத் தேடி  .....எல்லாமே வாண்டு மாமா எழுதியவை...
உள்ளிட்ட பல கதைகளை பைண்ட் செய்து வீட்டில் எனக்கு கதை படிக்கும் சூழலையும் ,ஆர்வத்தையும் வளர்த்துவிட்ட எனது சித்தப்பாக்கள் கிடைத்தது எனது வரம் என்றுதான் கூறவேண்டும்.

           அதன் தொடர்ச்சியாக  5 ஆம் வகுப்பு முழு ஆண்டுப் பொதுத்தேர்வு  விடுமுறை நாட்களில் மிக ஆர்வமாக ...ஆர்வக் கோளாறாக ? ! ...ராஜாஜியின் வியாசர் விருந்து ( மகாபாரதம் ) மற்றும் சக்கரவர்த்தித் திருமகன்
( ராமாயணம்) ஆகியவற்றை படித்து முடித்திருந்தேன் .என் ஓவியம் தீட்டும் ஆர்வத்திற்கு நெய் ஊற்றி வளர்த்ததில் அந்த காவியங்களை ஓவியங்களாய் தீட்டி புத்தகத்தை அலங்கரித்த ஓவியர் வினு அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு .இவையும் கூட கல்கி வார இதழ்களில் தொடராக வந்து தொகுக்கப் பட்டவைதான் .இதில் ராமாயணத்தை இரவல் வாங்கி தொலைத்த பெருமை எனது பள்ளித் தோழன் A .N முருகன் என்பவனுக்கு உண்டு .நல்ல வேலையாய் வியாசர் விருந்து என்னிடமே உள்ளது .அதையும் கூட கரையான் வாயிலிருந்து ஒருவிதமாய்க் காப்பாற்றி வைத்திருக்கிறேன்.

          அதிருக்கட்டும் .ஆறாம் வகுப்பில் சேர்ந்தபொழுது கதை படிக்கும் வேகம் ...கேட்கும் ஆர்வம் இன்னும் இன்னும் கூடிப் போனது .
காரணம் என்ன என்கிறீர்களா?
          எங்களுக்கு சமூக அறிவியல் போதித்த ஆசிரியர் சாரங்கபாணி அவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் கண்டிப்பாக நிறைய கதைகள்  சொல்லுவார் .அதுமட்டுமன்றி அப்போது என் வகுப்புத் தோழர்களாய்  இருந்த

M .ரவிக்குமார்  (தந்தை பெயர் மாணிக்க வாசகம் .கிராம சேவக் என்ற பணி யில் இருந்தவர்-கோவில் பாளையம் வீதியில் வசித்தவர்கள்  ).மற்றும்

T .ஸ்ரீதர் (தந்தை பெயர்  தியாக ராஜன் .தலைமை ஆசிரியர் ...மனம் தவழ்ந்த புத்தூர்)  --- இருவருமே நன்றாகக் படிப்பார்கள்..பாடப் புத்தகங்களை மட்டுமல்ல ..காமிக்ஸ் புத்தகங்களையும்தான் .

           நாங்கள் மூவரும் காமிக்ஸ் பிரியர்கள்  இல்லை ..இல்லை ...காமிக்ஸ் வெறியர்கள் என்றே கூறலாம் .
எப்போதும் மறக்காமல் காமிக்ஸ் புத்தகங்கள் எங்கள் புத்தகப் பையினுள் எங்களுடன் இணைந்தே பயனாய் படும்.இரும்புக்கை மாயாவி கதைகள்  -குறிப்பாக   விரல்  மனிதர்கள் -முகமூடி மாயாவி ...மந்திரவாதி மாண்ட்ரேக் & லொதார் .ரிப் கெர்பி ... அநேகமாக இவை முத்து காமிக்ஸ் பதிப்பகம் மற்றும் லயன் காமிக்ஸ் என்று நினைவு .

        நான் ஒரு புத்தகம் வாங்கினால் ஸ்ரீதர் ஒரு புத்தகத்தையும் ,ரவிக்குமார் ஒரு புத்தகத்தையும் வாங்க படித்தபின் மாற்றிக்கொள்வோம் .

       பின்னர்தான் எங்கள் பள்ளியிலேயே சில பல காமிக்ஸ் வாசக வட்டங்களும் இருந்தனவென்று.

       மேலும் அப்போது வந்த அம்புலிமாமா ,பாலமித்ரா ,ரத்னபாலா ,கோகுலம் உள்ளிட்ட சிறுவர்களுக்கான மாத இதழ்களையும் மேய்ந்துவிடுவோம் .அப்போது எங்கள் ஊர் வள்ளலார் மடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்த நூலகத்திலும் நாங்கள் உறுப்பினராக இருந்து வாண்டுமாமாவின் மந்திரக் கம்பளம் ,பச்சைப் புகை ,மரகதவீணை,அழகி ஆயிஷா ஆகிய புத்தகங்களையும்  ..இவை சிறுவர் நாவல்கள் ... வாசித்திருக்கிறோம்.

         ஒன்பதாம் வகுப்பின் இடையே ரவிக்குமாரும் . பத்தாம் வகுப்பில் ஸ்ரீதரும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு சென்றுவிட ...தோழர்கள் இல்லாவிட்டாலும் காமிக்கஸ் புத்தகங்கள் படிப்பதில் மட்டும் ஆர்வம் குறையவில்லை ...அலுப்பு தட்டவில்லை ...அந்த சமயத்தில்தான் ராணி வார இதழ் ராணி காமிக்ஸ் நூலகளை வெளியிட்டு வந்தது .அவற்றையும் ஒரு கை (?!)பார்த்திருக்கிறேன் .பின்னர் ஒன்பதாம் வகுப்பு விடுமுறையிலும் ,பத்தாம் வகுப்பு விடுமுறைகளிலும் வாசிப்பு அடுத்த தளத்திற்குச் செல்ல ஆரம்பித்தது .அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட   வரலாற்றுப் புதினங்களை படிக்க ஆரம்பித்தேன்....அதன்பிறகும்  காமிக்ஸ் புத்தகங்களை விடாமல் கிடைக்கும் போதெல்லாம் வாசித்ததுண்டு ..!

           நடுவே கூட இன்னும் சிலரை குறிப்பிட்டாக வேண்டுமே ... மறதிச் சனியன் விட்டால்தான் ...உடலுக்கு மட்டும் வயதாகிக்கொண்டே போகிறதே ...சு(ரேஷ் )பா(லா ) வை மறக்க முடியுமா ...?
         
         அத்துடன் கல்வி கோபாலகிருஷ்ணனின் பாதாள உலகில் பறக்கும் பாப்பா போன்ற கல்வி சார் புதினங்கள் ...வேப்பம் பழத்தை தேனில் கலந்து தருவது போல் நடையில் வலிக்காமல் ஊசி ஏற்றுவதை போல் அறிவியல் செய்திகளைத் தருவதில் அவருக்கு நிகர்  அவர்தான் ...
       
          அப்புறம் தமிழ் வாணனின் துப்பறியும் நாவல்கள் ...அதுவும் சங்கர்லால் கதைகள் குறிப்பாக கத்தரிக்காய் கண்டுபிடித்தான் என்ற சித்திரக்கதை அநேகமாக தமிழ்வாணன் எழுதிய ஒரே சித்திரக்கதை அதுவாகத்தான் இருக்கும் ...அவருடைய பேய்க்கதைகள் ...த்ரில்லர் நாவல்கள் குறிப்பாக ஆறு அழகிகள் , S S -66 என்ற நாவல் ...
       
            பூந்தளிர் அமர் சித்திரக்கதைகளையும் குறிப்பிட தவறிவிட்டேன் ...மகாபாரத வரிசைகள் உள்ளிட்ட பல  தொகுப்புகள் கொத்தாக உள்ளன .எடுத்தால் உடைந்து கிழிந்துவிடுமோ என்று அஞ்சும் அளவிற்க்கு ...

           
         அதன்பின்னர் 89 90 களில் என்று நினைக்கிறேன் ..திடீரென்று பார்வதி சித்திரக் கதைகள் என்ற காமிக்ஸ் மாத இதழ் வெளிவர ஆரம்பித்தது .வாண்டுமாமா மற்றும் சில எழுத்தாளர்களின் கதைகள் வரிசையாக வர ஆரம்பித்தன ...புதையல் கிடைத்த மகிழ்வில் மாதா மாதம் தவம் கிடந்து  புத்தகங்களை வாங்கி படிப்பேன்.

       பின்னர் அவைகளும் நின்றுவிட்டன .

       பின்னர் வாசிப்பு தளம் அமரர் கல்கி ,சிவசங்கரி ,சுஜாதா ,அனுராதா ரமணன் , உமா சந்திரன் ,ரா.கி. ரங்கராஜன் , புஷ்பாதங்கதுரை ,பாலகுமாரன் ,ராஜேஷ் குமார் ,ராஜேந்திரகுமார் ,பட்டுக் கோட்டை பிரபாகர் என்றெல்லாம் மாறி மாறி தாவியது ..
 
           கண்ணதாசனின் முதல் கதை நான் வசித்தது நன்றாய் நினைவில் இருக்கிறது .சிவப்புக்கல் மூக்குத்தி .மிக வசீகரித்த ஒரு புதினம் .அதைத் தொடர்ந்து அவளுக்காக ஒரு பாடல் ,ரத்தபுஷ்பங்கள் எனது தொடர்ந்து அர்த்தமுள்ள இந்துமதம் ,வனவாசம் ,மனவாசம் என கண்ணதாசனின் அனைத்து படைப்புகளையும் வாசித்திருக்கிறேன் சிறந்த  கவிஞர்,பாடலாசிரியர் என்பதை மீறி சிறந்த கதாசிரியர் , கட்டுரையாளர் என்று எனக்கு அவரைப் பற்றிய புரிதல்கள் ஏற்பட்டது அந்தக் கால கட்டத்தில்தான் .பின்னர் அவரது படைப்புகளை தேடித் தேடி வாசித்திருக்கிறேன்.

            கொத்தமங்கலம் சுப்பு என இன்னும் பல எழுத்தாளர்களை கடந்து வந்துள்ளேன் ...அதற்குத் தனியாக  ஒரு பதிவினை இட வேண்டியிருக்கும்..
ஐயையோ ...சொல்ல மறந்துவிட்டேன் ஜாவர் சீதா ராமனின் உடல் பொருள் ஆனந்தி மற்றும் மின்னல் மழை மோகினி
 
              அப்புறம் பாக்கியம் ராமசாமியின் அப்பு சாமி சீதாப்  பாட்டியின் அற்றாசிட்டிக் கதைகள் படித்து விலாநோகச் சிரித்ததை இப்போது நினைத்தாலும் விலா சற்று னோதான் செய்கிறது ....

       புத்தகங்களின் மீதான காதல் ஒரு புத்தகக் கண்காட்சி விடாமல் என்னை துரத்தியடித்தது .இப்போது என் அலுவலக அறையில் எண்ணற்ற நூல்களின் அணிவகுப்பு ...என் அறையே ஒரு நூலகமாய் ....துறைவாரியாக நூல்கள் அடுக்கப்பட்டு ...
     
          அப்புதையல்களுள் என் அபிமான காமிக்ஸ் புத்தகங்களும் ஒளிந்துள்ளன.இதோ வரும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது அவற்றை எடுத்து படிக்கப் போகின்றேன் ...என் பதின் பருவ வாசிப்பு அனுபவங்களை அவற்றுள் தேடப்  போகின்றேன்  .

         எதேச்சையாக இன்று இணையத்தில் ஒரு வலைப் பதிவில் காமிக்ஸ் குறித்த பதிவு கிடைக்க ...அது பற்றி ஆர்வம்கொண்டு வாண்டுமாமா என்று டைப்ப ஆரம்பிக்க ...
       
        அது தொடர்பான தேடலை துவங்கியபோது என் நினைவலைகள் என்னை பின்னோக்கிச் தள்ள அதன் விளைவுதான் இப்பதிவு ...

         கண்டிப்பாக  என் வயது நண்பர்கள் இப்பதிவைக் காணும்போது  அவர்கள் மனதிலும் காமிக்ஸ் அலைகள் அடிக்கலாம்...

          உங்கள் பதில்  அலைகளை  வரவேற்கிறேன் .

          அப்புறம் ...இது போன்ற புத்தகங்கள் உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள் ...விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறேன்.

         ஸ்ரீதர் ... ரவிக்குமார் ,,,நீங்கள் இருவரும் எங்கு இருக்கின்றீர்கள்?
   
         பாவம் ..இப்போதைய சிறுவர் சிறுமிகள் ...

        பாட நூல்கள் தாண்டிய வாசிப்பு அரிதாகிவிட்டது

         செல்போன் கேமிலும் ,தொலைக்காட்சித் தொடர்களிலும் தம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் .....எம்மைப் போன்ற இனிய வாசிப்பு அனுபவங்களை பெறுவது எப்போது ...?

          நூல்களை நேசிப்போம் ...வாசிப்பை  ஸ்வாசிப்போம் ...!






       



















4 comments: