Thursday 21 December 2017

நிழலின் தடங்கள்

நிழலின் தடங்கள்

சாம்பல் நிறச்  சாயம் பூசி
வெறிச்சிட்டுக் கிடந்த வானம்
அடர்பனியாய் சாரல்மழையை
தவிட்டின் தூறலாய்
சிந்திக்கொண்டிருக்கிறது
கேசம் கலைந்து கிடைக்கும் 
பரட்டைத்தலைக் காரனைப்போல்
விரித்த தலையை அசைத்து அசைத்து
வீசுகின்ற கூதர்க்காற்றுக்கு
மெல்ல மெல்ல அசைந்தாடி
சிலாகித்துச் சிலிர்க்கின்றன
நிற்கின்ற நெடுமரங்களெல்லாம்
மெல்லியதாய் சாரல் வாங்கி
ஈரமானது  மைதானம்  முழுமைக்கும்
சாரலின்  ஈரம்  வாங்காத
மரத்தடி மண் தரை மட்டும்
எப்போதும்போல் உலர்ந்துபோய்
கௌரவக் காதலுக்காக
காதலனைத் பறிகொடுத்த
காதலியின் மனம்போல்
வெறுமைகாட்டி விரக்தியாய் கிடக்கிறது.
நிழலுக்காய் மரம்மீது
நேசம் கொள்ளும் நான் கூட
சாரல் மீது காதல் கொண்டு
மரத்தடியைப் புறக்கணித்து
பனிப்புகை தூறலின் சாரலில்
என்னைக் கரைத்துக் கொண்டிருக்கின்றேன்.
முன்பு வெயிலின் வெம்மையொளி பட்ட
தரையெல்லாம் சாரலின்  ஈரம்...
நிழலிருந்த தரையெல்லாம்
அதன் தடத்தை நினைவுபடுத்தியபடி
உலர்மண்ணாக காட்சி கொடுக்கிறது ...
ஈர மண்ணின் எல்லை கொண்டு.
கிளர்ந்தெழும் மண் வாசனை நுகர்ந்தபடி
நானில்லாமல் வெறுமையாய் ....
  

No comments:

Post a Comment