Tuesday 26 December 2017

ஏற்புரை

ஏற்புரை 

நான் மாணவ நண்பன் பேசுகிறேன் 

அவையோர் அத்துணை பேருக்கும் என்  வணக்கம் .

ஒவ்வொரு ஆடவரின்வெற்றிக்குப்
பின்னாலும் நிச்சயம் ஒரு பெண்  இருப்பாள்.
ஆனால் இந்த ஆசிரியரின்
 ஒவ்வொரு செயலுக்கும் ,
அதன் வெற்றிக்கும் பின்னால்
என் தாயும் மனைவியும் மட்டுமல்ல .
எனது அருமை மாணவக் கண்மணிகளும்
நிச்சயம் இருக்கிறார்கள்.

அண்டமாய் அவனியாகி 
இயற்கையே உருவாய்க் கொண்டு
வாழ்வையும் இன்பத்தையும் 
ஒருங்கே அளித்துக் காக்கும் 
அறிவொனாப்பொருளாய் விளங்கும்  இறையே ...
உனக்கு என் முதல்  வணக்கம் .

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே 
முன்தோன்றிய  மூத்த மொழியாம் 
என் கன்னித் தாய்த் தமிழே
உனக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் ...!

பெற்ற  தாயும்   பிறந்த பொன்னாடும் 
நற்றவ வானினும் நனி சிறந்ததனால் 
என்னை ஈன்ற தாய்க்கும் எனதருமைத் தாய்த்திருநாட்டுக்கும் 
சிரம் தாழ்ந்த செவ்வணக்கம்.

என்னை இப் பூவுலகு கொண்டு வந்து 
அன்னை தமிழுக்கும் சித்திரக் கன்னிகைக்குமாய் 
சேவைசெய்யும் வண்ணம் கைவிரல் பிடித்து 
உலகிற்கென்னையும் எனக்கு இவ்வுலகையும் 
அறிமுகம் செய்துவைத்த என்னருமை தந்தைக்கும் 

எனக்கு எண்ணையும் எழுத்தையும் இரு கண்கள் ஆக்கி 
ஞான ஒளி ஏற்றி வைத்து தமிழ்ப் பாலை 
பக்குவமாய் ஊட்டி என்னை கவிஞனாக்கிய 
என் அத்துணை ஆசான்மார்களுக்கும்
என் அன்புசால் நல்வணக்கங்கள்...!




தமிழ்த் தாயின் தலைமகன் 
முதல் ஆசான் ...பொதிகை மலைவாழ் குறுமுனி 
அகத்தியமாமுனிக்கும் 
அவனது தலைமைச் சீடன் 
தமிழ் கூறு நல்லுலகத்திற்கும் 
தொல்லிலக்கணம் வகுத்தளித்த 
தொல்காப்பியனுக்கும் 

என்னை நன்றாய் இறைவன்  படைத்தான்
 தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே
என்று தான் பிறந்ததின தவப்பயனை 
தமிழுக்குத் தொண்டு செய்யத்தான் 
என்பதனை உணர்ந்து மூவாயிரம் பாமாலைகளை
தமிழன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தானே 
திருமந்திரம் அருளிய திருமூலனுக்கும் 
உலகுக்கெல்லாம் இறைவனாம் போல் 
எழுத்துக்களுக்கெல்லாம் நகரம்தான் முதல் என்று 
அவனிக்கெல்லாம் பகன்று நின்ற 
வள்ளுவப் பெருந்தகைக்கும் 
அவனீந்த குறுங்கவிதையான் குறளுக்கும்

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரையும் 
அறம்செய விரும்பச் சொல்லி 
ஆத்திச்சூடி பாடினாளே எங்கள் அன்பிற்கினிய 
அவ்வைப் பாட்டி ...அவளுக்கும் என் தமிழார்ந்த வணக்கங்கள்...!

 கனி தேன்  ராமாயணம் படைத்தானே 
கவிச் சக்கரவர்த்தி கம்ப நாட்டானுக்கும்
கற்போர் நெஞ்சையள்ளும்
 சிலப்பதிகாரக் காப்பியம் படைத்த 
 கவி வளவன் இளங்கோவடிகளுக்கும்  

யாமறிந்த மொழிகளிலே 
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் 
என்றே நறுக்குத் தெறித்தாற்போலக் கூறிய 
முறுக்கு மீசை முண்டாசுக் கவி பாரதிக்கும்

கனியிடை ஏறிய சுளையும் 
முற்றுகை பாகிடை  ஏறிய சாறும் 
இனியன என்றாலும் என் தாய்த் தமிழை 
அதனினும் இனியது என்பேன் என்று 
ஆணித்த தரமாய்க் கூறி 
தமிழ்ச் சுவை ருசித்த கிறுகிறுப்பில் 
மயங்கி கிடந்தானே பாட்டுக்கொரு புலவன் 
அந்த பாரதிதாசனுக்கும்

பாட்டாளிப் புலவன் பட்டுக்கோட்டையார் தொடங்கி
கவியரசு கண்ணதாசன்,
 தேமதுரத் தமிழ் வாளெடுத்து
மூன்றாம் உலக யுத்தம் புரிந்தானே
கவிப்பேரரசு வைரமுத்து ஈறாக இன்னும் இன்னும்
தமிழ் வளர்த்துக்கொண்டிருக்கும்
அத்துணை அழகிய தமிழ் மகன்களுக்கும் 
இந்த சித்திரக் கவியின்
சீர் மிகு வண்ண வணக்கங்களை
என் நாவென்னும் தூரிகைத்  தொட்டு
நயமுடனே தெரிவித்துக்கொள்கிறேன்.















   

No comments:

Post a Comment