Monday 4 December 2017

சாரணியத்தில் எனது குருமார்கள்...

சாரணியத்தில் எனது குருமார்கள்...
                          சாரண இயக்கம் ஒரு உலகளாவிய இயக்கம் .
ஒரு முறை ஒருவன் சாரணன் ஆகிவிட்டால் உயிர் உள்ளவரை அவன் சாரணனே (    ONCE A SCOUT ALWAYS A SCOUT   )
                        நான் சாரணன் ஆனதும் கூட சுவாரஸ்யமான ஒரு தற்செயல் நிகழ்வுதான்.அன்றிலிருந்து இன்று வரை நான் என்னை ஒரு முழுமையான சாரணனாகத்தான் உணர்கிறேன்.என் சுவாசம்,குருதி ,நரம்புகள் எங்கும் சாரணன் என்ற உணர்வும் உலகளாவிய சாரண இயக்கத்தில் ஓர் அங்கம் என்ற பெருமிதமும் விரவிப்  போய் ஊறிக்  கிடக்கின்றன. படியுங்களேன் ...நான் ஒரு சாரணன் ஆன கதையை ...எனது சாரண குருமார்கள் பற்றியும் கூறுகிறேன்.

                          முதன் முதலில் புதுப்பேட்டை கிளை நூலகத்தில் 'குருளையர் படை  '(cubs )என்ற நூலை படிக்க  நேர்ந்தது .நான் அப்போது கிரஸண்ட்  ஆங்கிலப் பள்ளி -மழலையர்  தொடக்கப் பள்ளி என்ற கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருந்தேன்.1995 என்று நினைவு.அந்நூலை படிப்பதற்கு முன் எனக்கு சாரணியத்தில் துளியும் அனுபவம் கிடையாது.அந்நூலை படித்ததும் ஏதோ ஒரு ஆர்வத்தில் நானாகவே அதில் கூறியுள்ள முறைப்படி scarf  மட்டும் தைத்துக் கொண்டு பள்ளிச் சீருடைமேல் மாணவர்களை அணியச் செய்து குருளையர் உறுதிமொழி  ,நானாகவே மெட்டு அமைத்த சாரண இறைவணக்கப் பாடல்  பரம்பொருள் ஞான பக்தி தா ...( தயா கர் தான் பக்தி கா ...பாடல் எல்லாம் அப்போது எனக்கு அறிமுகமே இல்லை.)கொடிப்பாடலான பாரத சாரண சாரணியர் கொடி பண்பாய் பறக்கிறதே ...ஆகிய பாடல்களை பாடி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன்.பின்னர் எங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள ஒரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் திரு .தங்கபாண்டியன் ஐயா அவர்களை பற்றி என் தங்கை மூலம் ( எனது தங்கை  அப்போது அப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.)கேள்விப்பட்டு அவரை அழைத்து வந்து படையை முறைப்படி துவக்கினேன்.அவர் எனது ஆர்வத்தைப் பார்த்து நெல்லிக் குப்பம் என்ற ஊரைச் சார்ந்த சாம்ராஜ் என்ற மூத்த சாரணரை அறிமுகம் செய்து வைத்தார் .சாம்ராஜ் ஐயாதான் எனக்கு  'வாகுல்கள்  ' மற்றும் பேடன் பவல் அவர்களின் திரு உருவப்படம் ஆகியவற்றை வழங்கினார் .பின்னர் இருவருடங்களாக அப்படையை நடத்தி வந்தேன்.ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் அதை தொடர்ந்து நடத்த இயலவில்லை .
                        இந்நிலையில் 2001 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி னக்கு கருணை அடிப் படையில் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி  கிடைத்தது.10 தினங்கள் கடந்தன.முதல் மாத சம்பள
கவரை என்னிடம் அளிக்கும்போது அப்போதைய தலைமை ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் என்னிடம் நீங்கள் சாரண இயக்கத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . எனக்கு மகிழ்வாக இருந்தது. மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன்.
             பின்னர் 2002ல் கடலூர் தேவனாம் பட்டினம் , பீட்டர் பிஷப் கல்லூரியில் அடிப்படை  பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்தது .
(18-09-2002 முதல் 27-09-2002 வரை)திருவாளர் N .R ,என்று அழைக்கப் படும் ராமமூர்த்தி ஐயாதான் அப்போது முகாம் தலைவராக இருந்தார் .D.R. ஐயா .இளைய குமார்  ஐயா , வேலாயுதம் ஐயா ,செந்தில் ஐயா ,வீரப்பா ஐயா ஆகியவர்களை எனக்கு பயிற்சியாளர்களாக அறிமுகம் செய்த முகாமும் அதுவே.10 நாட்கள் நடைபெற்ற முகாம் எனக்கு சாரண இயக்கத்தைப் பற்றி தெளிவானதொரு அறிமுகத்தை அளித்தது.
                  தினசரிப் பணிகள்,இறைவணக்கக் கூட்டம்,குதிரை லாட வடிவ அணிவகுப்பு,,அணிமுறை பயிற்சி,வழிநடைப் பயணம்,விதம் விதமான கைத் தட்டல்கள் ,ஊக்க ஒலிகள் ,,,விதம் விதமான சாரண விளையாட்டுகள்,சாரணப் பாடல்கள்,முடிச்சுகள்,கட்டுகள்,பாடித்தீ நிகழ்வுகள்.பவலாரின் ஆறு உடற் பயிற்சிகள்...இவை எனக்கு மற்றும் ஒரு உலகத்தை அறிமுகம் செய்தன.இவை அனைத்துமே பதின் பருவ சிறார்களை ஒரு ஆசிரியர் பால் ஈர்க்கின்ற அற்புத ...மந்திரங்கள்.அதுவும் குறிப்பாக அந்த சர்வ  சமய வழிபாட்டுக் கூட்டம் எனக்கு எல்லையில்லா சிலிர்ப்பையும் ,ஆனந்த பரவசத்தையும் ஏற்படுத்தி ஒருவித அமைதியை மனமெங்கும் வியாபிக்கவிட்டது.
                 அதுவும் திருச்சோ புரம் அண்மையில் உள்ள அரிவாள் மூக்கு என்ற இடத்திற்கு...மிகப் பெரிய மணல் மேடு ...அழகி ,சொல்ல மறந்த கதை போன்ற படங்களில் கூட அப்பகுதியை நீங்கள் பார்த்திருக்கலாம் ...கடலூர் மாவட்டத்தில் ஒரு மினியேச்சர் ஜெய் சாலமீர் பாலைவனம் போன்ற ஒரு இடம்.அங்கு  அழைத்துச் சென்ற நடை பயணம் வாழ்நாளில்  முடியாத அனுபவத்தை தந்தது .மீண்டும் மாணவப் பருவத்திற்கே எம் போன்ற ஆசிரியர்களை அழைத்துச் சென்று முழுக்க முழுக்க ஒரு மாணவனாகவே என்னை உணர வைத்த தருணங்கள் அவை.அதன் பின்னர் பலமுறை அந்த இடத்திற்கு... நண்பர்களுடன் ...குடும்பத்தாருடன்.எனது பள்ளி சாரணர்களுடன் என சென்றும் கூட அப்பயிற்சியின்போது சக பயிற்சியாளர்களுடன் சென்று வந்த அனுபவத்தின் மகிழ்ச்சி மற்ற  அனுபவங்களை பின்னுக்குத் தள்ளுவது என்னவோ நிஜம்தான்.
               அன்று தொடங்கிய எனது சாரணியத்தின் மீதான பற்று இன்று வரையிலும் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கக் காரணம் திரு .ராமமூர்த்தி  ஐயா மற்றும் திரு துரை.ராமலிங்கம் ஐயா இவர்கள் எனக்கு அளித்த அடிப்படை பயிற்சி உண்மையிலேயே மிக சிறப்பாக இருந்ததன் காரணமாகத்தான் என்றால் அது மிகை அல்ல .
              அதன் பின்னர் என் பள்ளியில் நடந்த படைக் கூட்டங்கள் அற்புதமான தருணங்களை எனக்கும் எனது சாரணர்களுக்கும் தந்ததன்  காரணமாகத்தான் இன்னும்கூட பல சாரண மாணவர்கள் என்னுடன் தொலைபேசியிலும் ,முக நூலிலும் இன்னும் தொடர்பில் உள்ளனர் .
             பின்னர் ஒரு வருடத்திற்குப் பின்னர் அதே தேவனாம் பட்டினம் ...அதே  பிஷப் பீட்டர் கல்லூரி ...மீண்டும் ஒரு 7 நாள் பயிற்சி ..
.(03-12-2003 முதல் 10-12-2003 வரை)இம்முறை அட்வான்ஸ் கோர்ஸ் என்ற முன்னோடி பயிற்சி .இம்முறை முகாம் தலைவராக இருந்தவர் திரு .B . R . என்று அழைக்கப் படும் பா.ராமச்சந்திரன் ஐயா - SCOUTING FOR BOYS -என்ற நூலை அழகுத் தமிழில் ...எளிய தமிழில் ...சிறுவர் சாரணியம் என்ற நூலாக மொழிபெயர்த்து வெளியிட்டாரே ...அவரேதான்.மிகவும் கண்டிப்புடன் வழி நடத்தினார் ...அவரது அணுகுமுறை எங்களுக்கு  அப்போது சிம்ம சொப்பனமாக இருந்தது என்றே  வேண்டும்.அப்போதும் D.R.  N.R. மற்றும் AIR அன்று அழைக்கப்படும் எங்கள் அனைவரின் அபிமானத்துக்கு உரிய இளைய குமார் ஆகிய மூவர்  கூட்டணி எங்களுக்கு சிறப்பான பயிற்சியை அளித்தார்கள்.செந்தில் குமார் , வேலாயுதம் ,KGR என அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் போன்றோர் பயிற்சியின் உதவியாளர்களாய் திகழ்ந்தார்கள்.அடிப்படைப் பயிற்சியில் பெறாத பல பயிற்சிகள் சிறப்பாக வழங்கப் பட்டன.DR ஐயா மூலம்தான் சாரண வழி நடைப் பயணத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அணிமுறைப் பயிற்சியின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவம் இவற்றை அறிந்தேன் .இளைய குமார் ஐயா மட்டுமே SIGNALING ,SKY WATCH   மற்றும் MAPPING  ஆகியவற்றை அவ்வளவு எளிதாய் நடத்த முடியும் .ஆக்கல்  கலையை ..கூடாரம் கட்டும் முறைகளை B . R ஐயாவிடம் இருந்து அவ்வளவு எளிதாகக் கற்றோம்.குறிப்பாக இயற்கை வண்ண ஓவியங்கள் ,அடுப்பே இல்லாத ...பாத்திரங்களே இல்லாத சமையல் ஆகியவற்றை இம் முகாமில்தான் நான் தெரிந்து கொண்டேன்.இது எல்லாமே விரைவாக சொல்ல வேண்டுமே என்று சுருக்கமாகக் கூறுகிறேன் .நடந்த சம்பவங்களை ...ஒவ்வொரு நிகழ்வாகக் கூறினால் கண்டிப்பாக ஒரு மெகா சீரியல் போல் நீண்டுகொண்டே செல்லும் ...!கண்டிப்பாக இவ்விடம் N .R அவர்கள் வேடிக்கையாகப் பாடும் சென்னாங்குன்னிக்கும் செவ்வாழை மீனுக்கும் கல்யாணமாம் கல்யாணம் .... முத்து  செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை  ஆகிய பாடல்களும்....சர்வ சமய வழிபாட்டின்போது மிக உருக்கமாகப் பாடும் சூரியன் வருவது யாராலே என்ற பாடலை குறிப்பிட்டே ஆகவேண்டும்.இதனிடையே டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று எனது முதல் திருமண நாள் கொண்டாட்டத்திற்காய் 7 ஆம் தேதி  இரவு அனுமதி பெற்று மறுநாள் காலை அதாவது 8 ஆம் தேதி காலி 9 மணிக்குள் முகாம் திரும்புவதாக ஒப்புதல் அளித்து B R அய்யாவிடம் சிறப்பு அனுமதி பெற்று பரபரவென்று முகாம் திரும்பியது தனி கதை .



                  அதன் பின்னர் எனது பள்ளியில் படைக் கூட்டம் நடத்துவது, முகாம் நடத்துவது என  ஆர்வத்துடனா அல்லது ஆர்வக் கோளாருடனா என்று  பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு எனது சாரண நடவடிக்கைகள் இருந்தன.
                   அதன்பின்னர்தான் சாரணர் கையேடு என்ற தொகுப்பு நூலை DR ஐயா ,N .R ஐயாஇவர்கள் முன்னிலையில் காடாம்புலியூர் அரசு  பள்ளியில் நடைபெற்ற ஒரு முகாமில் வெளியிட்டேன் .
                   அரசுப் பள்ளியில் பணி  புரியும்  ஆசிரியர்களின் பங்களிப்போடும் நன்கொடையாளர்கள் துணை கொண்டும் மூன்று நாட்கள் பயிற்சி முகாம்களை மாவட்ட பொறுப்பாளர்களைக் கொண்டும்  சகா சாரண ஆசிரிய சகோதரர்களைக் கொண்டும் வருடந்தோறும் நடத்தி வருகிறேன்..எனது இம்முயற்சியில் இரு முறை மட்டுமே சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது
                 மேலும் இந்த இடையறாத முயற்சிகளும் சாரண மாணவர்களின் ஒத்துழைப்போடும் ஆற்றிவரும் பணிகளும்,எனது சாரண குருமார்களின் ஆசியும் எனக்கு MESSENGERS OF PEACE STAR -2014 என்ற சர்வ தேச விருதை  பெற உதவி செய்துள்ளன.அவ்வாறு எனக்கு இவ்விருது கிடைக்க எனக்குப் பரிந்துரை செய்த தேசிய சாரநாத் பொறுப்பாளர்களான 
திரு  கிருஷ்னமூர்த்தி ,திரு மது சூதன் ஆவலா , திரு .சரத் ராஜ் ஆகியோருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.
                 மற்றுமொரு பயிற்சி சாரண ஆசிரியர் பெற வேண்டிய மிக உயர்ந்த பயிற்சியான இமய வனக் கலைப்  பயிற்சி...இதை நான் பெற்றது உதகை மாவட்டம் குன்னூரில் ...நல்ல கோடை வெயில் கொளுத்தும் மே மாதம் ...குளு குளு என ஒரு பயிற்சி மாநிலப் பயிற்சி மையத்தில் ...அப்போது முகாம் தலைவராக இருந்தவர் மாநிலப் பயிற்சி ஆணையர் திரு C ,அண்ணாமலை அய்யா அவர்கள்.அங்கும்கூட கேத்தி நோக்கிய வழிநடைப் பயண அனுபவமும் கூடாரங்களில் மற்றும் மர வீடுகளில் (HUT) தங்கிய அனுபவமும் மறக்க முடியாதவை.
                அதன் பின்னர் மத்திய பிரதேசம் பச்மரியில்  தேசியப் பயிற்சி மையத்தில் நான் பங்கேற்ற
RE UNION FOR HIMALAYAN WOOD BADGE .முகாம் ..முகாம் தலைவராக திரு சலீம் குரேஷி ஐயா ..இம்முகாம் பற்றிய அனுபவங்கள் நிச்சயம் தனிப் பதிவுதான்.விரைவில்....
                இவ்வாறு எனக்குள் உறைந்த இந்த சாரண உணர்வுதான் நான் புதியதாகக் கட்டியுள்ள என் வீட்டின் வெளிப் புறச் சுவரில்  உலக சாரணர் சின்னத்தையும் ,பாரத சாரண சாரணியர் சின்னத்தையும் வடிவமைக்கச் செய்தது எனலாம்.
                மிக நீண்டுவிட்டது அல்லவா ...! சரி ...செய்திக்கு வருகிறேன் .27.11.2017 அன்று நடைபெற்ற சாரண ஆசிரியர்கள் பொதுக்குழுக் கூட்டத்திற்கு எனது குருமார்கள் இருவர் ஒருங்கே வருகை தந்திருந்தனர்.இருவரையும் ஏக காலத்தில் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.இதோ அந்நினைவாக அவர்களுடன் எடுத்துக்கொண்ட விண்ணப் படம் ...அப்படம் நோக்கியபோது என்னுள் எழுந்த நினைவுகள் ..எண்ண  அலைகள்தான் ...அதன் வெளிப்பாடுதான் இப்பதிவு ...

No comments:

Post a Comment