Friday 29 December 2017

விடுகதையாகும் விஞ்ஞானம்

விடுகதையாகும்  விஞ்ஞானம்








விஞ்ஞான  முன்னேற்றம் என்னும் பெயரால் 
          அஞ்ஞானம் அகற்றியதாய்  கர்வம் கொண்டு 
இஞ்ஞாலம் முழுமைக்கும் துரோகம் செய்து 
          இன்னல்பல தருகின்றான் மனிதன் நாளும் 

பகுத்துண்டு பல்லுயிரை ஓம்புக வென்றான் 
          பங்காகக் குறள்தந்த வள்ளுவன் அன்று  
மிகுதியான பேராசை கொண்டே மனிதன் 
          மிச்சமுள்ள உயிர்ச் சூழல் கெடுக்கின்றானே 

அறிவியல் இவ்வுலகத்தின் ஆக்கத் திற்கே 
           அறிந்திருந்தும் அழிவுக்காய் செய்தான் மனிதன் 
தறிகெட்டுப் போகின்ற அவனை இன்றே
           தடுத்தால் மட்டும்தான் உய்யும் உலகம் 

தூரத்தை விரைவாகக் கடப்ப தற்கே 
          துரிதமாகச் செல்லுகின்ற வாகனம் படைத்தான் 
பாரத்தைக் கூட அவை  சுமக்கும் நன்றாய் 
          பாதகமாய்ப் புகை கக்கிச் சூழலும் கெடுக்கும் 

முறையற்றுப் பெருகியதன்  காரணத் தாலும் 
          மூர்க்கமாகச் செலுத்துவோரின் மதிவசத்  தாலும் 
நிறையபேரின் விலையில்லா உயிர்களை எல்லாம் 
          நிலஉலகை நீங்க வைக்கும் விபத்தின் பெயரால்.

கடினமான பாறைகளை  பிளப்ப தற்கும் 
          கச்சிதமாய் சுரங்கங்கள் அமைப்ப தற்கும்
வெடிபொருளைக் கண்டறிந்தார் அறிஞர் ஒருவர் 
         வேண்டாத தொல்லையெலாம் விளைந்தது பாரீர் !

வெடிபொருளும் பரிணாம வளர்ச்சி கொண்டே 
           வேட்டுவைக்கும் அணுகுண்டாய் மாறிய திங்கே 
கடிதினிலே முழுஉலகம் தனையும் நன்றே 
           கச்சிதமாய் அழிக்குந்திறன் அதற்கே யுண்டாம்

விந்தைமிகு மின்சக்தி தனையும் கூட 
           விபத்தாய்தான் மனிதன் அன்று கண்டுபிடித் தான் 
அந்தோமிகப் பரிதாபம் அதன் துணையின்றி 
           அணுகணமும் நகராது  அவன் வாழ்நாளில் 

தொலைதூர மனிதருடன் தொடர்பு கொள்ள 
           தொலைபேசி சாதனத்தைப் படைத்தான் இங்கே 
மலைத்துப் நின்றதுதான் மிச்சம் ஐயோ 
           மதிமயங்கி மனம் கெடுத்தது செல்போனாகி 

ஓயாமல் செல்போனில் பேசிக்கொண்டே 
            ஒருபக்கமாகத் தன்தலையை சாய்த்து நின்றே 
மாயாலோக முகநூல் கட்செவி தன்னில்
            மதிமயங்கி  மாந்தரெல்லாம்  மூழ்கு கின்றார் 

உலகனைத்தும் உள்ளங்கை தன்னில் நன்றாய் 
            உள்ளதென்று சொல்லும்    படியாகத்  தானே
வலைப் பின்னல்  ஒன்றையிங்கு மனிதன் நெய்தான் 
            வலியதொரு  இணையம்எனப் பெயரை இட்டான் 

தேடுபொறி தனிலெதனை உள்ளிட் டாலும் 
             தெளிவாகக் காட்டிடுமே  விபரம் நொடியில் 
ஊடுருவி வளருகின்ற கலைகள் போலே 
             ஒழுங்குநெறி கெடுத்துவிடும் அல்லவை  காட்டி 


விட்டில்கள் விளக்கின்மேல் வீழ்ந்தாற்போல
             வீணாக வீழ்ந்துகெடும் இளையோர் கூட்டம் 
பட்டால்தான் புத்திவரும் சிலருக் கிங்கே 
             பட்டும்கெட்டும் புத்திவரா பதர்தான் பலபேர் 

உடலுழைப்பு வேலைகளை செய்யும் பொறிகள் 
             உதவிக்காய் வந்ததென எண்ணி மாந்தர் 
கடமைகளை செய்வதற்கும் சோம்பிப் போனார்
             காலமெல்லாம் நோய்களுக்கே இரையாய் ஆனார்

நடப்பதற்கு கூட மிகப்  பெருமூச் செறிந்து
            நாக்கு தள்ளும் வண்ணம்  உடல்பெருத்தே நின்றான்
உடல்நன்றாய் இளைப்பதற்காய் அனுதினந் தோறும்
            உடற்பெயர்ச்சி எனும்பெயரில் தனைவருத்திக் கொண்டான்

இன்னும்பல இருக்கிறது எடுத்தியம்பி டவே
            இருப்பினும்நான் இத்துடனே  முடித்திட வேணும் 
சொன்னதை யெல்லாம் கேட்டு பகுத்தறிவுடனே
             செயல்பட்டு வாழ்வாங்கு வாழ்ந்திடு வீரே !

தீயிங்கு நன்மைக்கா தீமைக்கா  சொல்
              தீங்கென்பது  தீயிலில்லை விளங்கி கொள்வாய்  
நீயிங்கதைக் கையாளும் முறையா லன்றோ
              நிச்சயமாய் அதன் பலனைநிர்ணயிக் கின்றாய்

கத்தி கொண்டு காய்கனியை நாம்நறுக் கிடலாம்
              காலனையும் வரவழைக்க கழுத்தறுத் திடலாம்
புத்திகொண்டு கருமங்கள் நிறைவேற் றிட்டால்
              புவியிலிங்கு புன்னகையின்   தேசம் மலரும்

இனிமேலும் அறிவியலை ஆக்கத் திற்கே
              இட்டுச்செல்லும் பாதையிலே பயணிப்ப போமே
கனியிருக்கக் காய்கவர்வ தெதற்கு என்ற
              கனிதமிழில் மொழிகின்ற குறள்வழி நடப்போம்









































 கவிதை வளரும்...
  





   












No comments:

Post a Comment