Sunday 31 August 2014

கருமமே கண்ணாயி னார்

               மெய்வருத்தம் பாரார் ;பசி நோக்கார்; கண்துஞ்சார் ;
           
            எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் ;-செவ்வி 
             
            அருமையும் பாரார் ;அவமதிப்பும்  கொள்ளார் ;

            கருமமே கண்ணாயி னார் -



இப்பாடல் வெண்பா வகையைச் சேர்ந்தது.
இயற்றியவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் .
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
   
      பொருள்:தாம் மேற்கொண்ட செயல்களில் கவனமாக இருப்பவர்களுக்கு மெய்வருத்தம் தெரியாது .பசி தெரியாது. தூக்கம் வராது.மற்றவர்களுக்கு தீங்கு இழைக்கும் எண்ணம் வராது.காலம் நேரம் தெரியாது.பிறர் அவமதிப்பு செய்தாலும் தெரியாது.
      அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தான் மேற்கொண்ட செயல் மட்டுமே.அதை முடிக்கும் வரை தன உடல் நோகிறதே என்று பார்க்கமாட்டார்.உறக்கம் வருகிறதே ...சிறிது  நேரம் உறங்குவோமே என்றும் நினைக்கமாட்டார் .ஒருவேளை உறங்கச் சென்றாலும்கூட அந்த செயல் அவர் கனவில் வந்து அவரை உறங்க விடாமல் செய்துவிடும்.
       இப்போதெல்லாம் நிறைய பேர் 'யாருக்கு என்ன கெடுதல் மேற்கொள்ளலாம் எவன் வாழ்வை அழிக்கலாம்' என்று சிந்திப்பதிலும் செயல்படுவதிலுமே தன முழு நேரத்தையும் வீனடிக்கின்றனரே ..சும்மா இருக்கும் மனம் சாத்தானின் வீடு  .எந்த செயலும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அவர்களுடைய மனம் இப்படித்தான் விபரீதமாக யோசிக்கும்; அதை செயல்படுத்தும்..அவர்போல் அல்லாமல் பிறருக்கு கேடு விளைவிக்கும் எண்ணம் கூட தோன்றாது. ஏனெனில் இவருக்கு தான் மேற்கொண்ட செயலை செய்வதில் முழு கவனமும் லயித்திருக்கும்.
     ஐயோ ..நேரம் கடந்துகொண்டிருக்கிறதே ....    என்று பதற மாட்டார்.ஏனெனில் அவரது முழு கவனமும் தான் மேற்கொண்ட செயலை முடிப்பதில் இருக்கும்போது காலமும் கூட அவர் கவனத்திற்கு வராது.
    பிறர் தம்மை எவ்வாறு இழித்து அவமதிப்பு செய்தாலும்கூட அதை பொருட்படுத்தமாட்டார்.அதையே நினைத்து வருந்திக் கொண்டு இருந்தால் இப்போது செய்யம் செயலை யார் முடிப்பது...?எனவே தாம் அவமானப் படுவதைக் கூட கருத்தில் கொள்ளமாட்டார். 
     இவ்வாறு உடல் வலி, உணவு,உறக்கம்,பிறருக்கு தீங்கிழைக்கும் எண்ணம் ,நேரம்,தனக்கு ஏற்படும் அவமானம் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் யார் இருக்கிறார்களோ அவரால் மட்டுமே தான் மேற்கொண்ட செயலை சிறப்பாக செய்ய முடியும் என்று சிறப்பான வழியைக் காட்டுகிறார் குமரகுருபரர். 
      இக்காலத்தில் இப்படி ஒரு கரும வீரர் ...செயல் வீரர் ...யாராவது இருக்கிறார்களா? அல்லது இருக்க முடியுமா ...?அல்லது இருக்கத்தான் விடுவார்களா....?
      அந்த மகன் குமாரகுருபரருக்கே வெளிச்சம் ...! 

Thursday 28 August 2014

மலர்மாலை நினைவுகள்.



என் வாழ்வின் சில சுவையான சம்பவங்களை

 தொகுத்திருக்கிறேன்.

 மறக்க முடியாத

 தவிர்க்க முடியாத நிகழ்வுகள் இவை .

 மலரும் நினைவுகளாக ...

 எனக்காக மட்டுமல்ல ...

 மலர்ந்த மலர்களை

 உங்கள் விழிகளுக்காகவும்

 இதோ...மாலையாக்கி இருக்கிறேன்...!

அணிந்து   மகிழுங்கள்  !

Wednesday 27 August 2014

ஓவியர் இராஜ இராஜன்



அவ்வைக்கு உருத் தந்த
ஆருயிர் நண்பராம்
இராஜ ராஜன் தங்களுக்கு
ஈரேழு லோகமும் கடன்பட்டு
உள்ளதனால்  மனமுவந்து
ஊனோடு உயிர் தருவர்
எழிலுறும் நும் கவின் கலைக்கே
ஏற்றம் இன்னும் பெற்றிடுவீர்
ஐய்யா உமை வாழ்த்துவதில்
ஒன்றாகக் கலையுலகம்
ஓடோடி வந்திடுமே......
ஒளவை நன்றி கூறுவளே ...!





Tuesday 26 August 2014

மரணம்

மரணம் 
  
  உயிர்
  தன் உடல் என்னும் கூட்டை விட்டு 
  கிளம்பிச் செல்லும் 
  திரும்ப வரா தீர்த்த யாத்திரை.

  வாழ்க்கை என்னும் 
  வேடந்தாங்கல் விட்டு 
  உயிர்ப் பறவை தேடியோடும் 
  கண்காணா தூர தேசம் .

  அரசனையும் 
  ஆண்டியையும் 
  சமமாக்கும் 
  காலதேவனின் கடைசி அஸ்திரம் .
  
 கடனைத் 
 திருப்பித் தர முடியாத  
 கடன்காரர்கள் எடுக்கும் 
 கடைசி முடிவு.

 காதல் தோல்வி கண்ட 
 கன்னியரும் காளையரும் 
 தேடியோடும் 
 கடைசிப் புகலிடம்.

 கனவுகள் ஏதும்  
 நடுவே வந்து 
 கலங்க வைக்காத 
 கடைசி உறக்கம்.

வாழ்க்கை என்னும் 
முழுநீள நாவலின்  
முடிவைச் சொல்லும்
முற்றுப் புள்ளி.

 

Monday 25 August 2014

Sunday 24 August 2014

மன வண்ணங்கள்: புளியஞ்சோலை

மன வண்ணங்கள்: புளியஞ்சோலை: திருச்சி ,துறையூருக்கு அருகில் உள்ள பிக்னிக் ஸ்பாட் புளியஞ்சோலை. கொல்லி மலையின் அடிவாரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும்  இடம்.பாறைகள் ஊ...

புளியஞ்சோலை

திருச்சி ,துறையூருக்கு அருகில் உள்ள பிக்னிக் ஸ்பாட் புளியஞ்சோலை.

கொல்லி மலையின் அடிவாரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் 

இடம்.பாறைகள் ஊடே நடந்து இரண்டு கிலோ மீட்டருக்கும் மேல் சென்றால் 

வரும் ரம்மியமான பொய்கை ... சல சலக்கும் ஓடை ...கொல்லி மலையின் 

ஆகாய கங்கை அருவியின் மிச்ச எச்சமான  மூலிகை சுமந்து ஓடிவரும் 

சில்லென்ற தண்ணீரிலே நீராடுவது ஓர் இனிய அனுபவம். இரண்டு மூன்று 

பேராக செல்வதைவிட பத்து  பதினைந்து பேர் கொண்ட குழுவாக செல்வது 

ஆபத்துக்களை தவிர்க்கும்.ஆங்காங்கு உடைந்து கிடக்கும் உற்சாக பான 

பாட்டில்கள் நம்மை துணுக்குறச் செய்தாலும்....இயற்கை கொஞ்சும் 

மலைகளும் ,மரங்களும் ,பசுமையும்,நீரோடைகளும் சூரிய ஒளியை வாங்கிப் 

பிரதிபலிக்கும் பள பள பாறைகளும் நம்மை கிறங்கடிக்கவும் செய்கின்றன .

நீங்களும் ஒருமுறை கண்டு குளிக்கலாமே...சாரி...கண்டு களிக்கலாமே!















Saturday 23 August 2014

ஆயிஷா நடராசன்

     ஆயிஷா நடராசன் அய்யா அவர்கள்  பால சாஹித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதியுள்ள விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது .கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி பண்ருட்டியில் நடைபெற்ற ஸ்வாசிகாவின்  தேசிய அறிவியல் தின விழாவன்று அவருக்கு சிறந்த அறிவியல் புனை கதை வித்தகர் என்ற விருது எங்களால் வழங்கப் பட்டது.
      அதனைத் தொடர்ந்து இவர் பெரும் விருது இது . நேற்றிரவு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த போது மிக்க மகிழ்ச்சி தெரிவித்த அவர் "பரவாயில்லை முத்துக்குமரன் ...நீங்கள் முந்திக் கொண்டுவிட்டீர்கள் ...விருது வழங்குவதில்" என்று சிலாகித்ததோடு அல்லாமல் தான் எழுதியுள்ள 'நாகா 'என்ற சாரண இயக்கம் தொடர்பான ஒரு நவீன நூலை பத்து சாரணர்களுக்கு  பரிசாக வழங்குவதாக மகிழ்ச்சியாக அறிவித்தார் .அவர் இயற்றிய ஆயிஷா குறு நாவலை பல பிரதிகள் வாங்கி பல ஆசிரியர்களுக்கு அளித்துள்ளது எங்கள் ஸ்வாசிகா  இயக்கம்.பால சாகித்ய அகாடமி விருது பெற்று  தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள நம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு ஆயிஷா நடராஜன் அய்யாவிற்கு  வாழ்த்துக்களை தெரிவிப்போம்

                                                                           

                                                                      

                                                                       

                                                                          

                                                                          

                                                                          

                                                                         

                                                                         

Friday 22 August 2014

பள்ளிக்கல்வியின் இன்றைய நிலை

மாணவர் பணி ...மகத்தான பணி .
மாணவன் என்போன் மாண்புடையோன்.
ஆனால் இன்றைய மாணவர்களின் மாண்பு கேள்விக் குறியாகிக் கொண்டு வருகின்றது.
           மாணவர்கள் அனைவரும் மதிப்பெண்களைத் துரத்துகிறார்கள் .அப்படி மதிப்பெண்களை குறிவைத்து அவர்களை விரட்டுவது யார் தெரியுமா...?
பள்ளி நிர்வாகம் ,தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்,பெற்றோர்...ஏன் அரசே கூட மாணவர்களை மதிப்பெண்களைக் குறி வைத்துதான் விரட்டுகிறது .மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள், நோட்டுகள் ,வண்ணப்பெட்டிகள், வரைகநிதப்பெட்டிகள், படப் பயிற்சி ஏடுகள்,அறிவியல் செய்முறைப் பயிற்சி ஏடுகள் ,மிதிவண்டி ,லேப் டாப் ,மதிய உணவு, சீருடை ,கல்வி உதவித்தொகை இன்னும் பல கணக்கில்லாத பொருட்கள் அனைத்தையும்  இலவசமாக அளிப்பதன் மூலம் பெற்றோகளின் அத்தனை சுமைகளையும் தான் ஏற்றுக்கொண்டதன் மூலம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தாம் செய்ய வேண்டிய கடமையினை மறக்கடித்த ..ஏன் மழுங்கடித்த பெருமை நம் அரசையே சாரும்.அது மட்டுமல்ல .தம் பிள்ளைகளின் கல்விக்காக சாதாரணன் செய்ய வேண்டிய கடமையை ,,அதற்கான தொகையை அரசு மதுக்கடைகளை நோக்கி மடை மாற்றிய பெருமையும் அரசையே சேரும்.
          அது மட்டுமா ....மாணவனுக்கு வங்கி கணக்கு துவங்க வேண்டுமா ... வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிய வேண்டுமா ...இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டுமா ... சாதி சான்றிதழ் வழங்க வேண்டுமா ... இலவச புத்தகங்கள் ... நோட்டுகள்... சீருடைகள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட குடோனில் இருந்து கொண்டு வரவேண்டுமா ...அவற்றை பட்டுவாடா செய்ய வேண்டுமா ...சாதி வாரியாக ...இன வாரியாக ...பால் வாரியாக ....மாற்றுதிரனாளிகள் பட்டியல் வாரியாக ...அரசு வழங்கும் இலவசப் பொருட்களை பெற்ற பயனாளிகளின்  பெயர்கள் வாரியாக புள்ளி விபரங்களை கேட்கும்போதெல்லாம் அள்ளி அள்ளி தெளிக்க வேண்டுமா ...கூப்பிடு ஆசிரியர்களை ... !இதெல்லாம் செய்தது போக மீதம் நீரம் கிடைத்தால் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம் .நடத்தாமல் போகலாம். ஆனால் பாடம் நடத்தியதாக நோட்ஸ் ஆப் லெசன் -பாடக் குறிப்பேடு -இருந்தால் போதுமானது .எல்லாம் ரெக்கார்டாக இருக்க வேண்டும் நம் அதிகாரிகளுக்கு .மாணவர்களுக்கான சிறப்புக் கையேடு ..அதாவது படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கான முக்கிய வினாக்கள் அடங்கிய ...மீண்டும் மீண்டும் கேட்கப்படும் வினாக்களுக்கான தொகுப்பேடு ...அதை வைத்து மாணவர்களை எந்திரத் தனமாக மதிப்பெண்களைப் பெறுவதற்குத் தயார்படுத்தும் தனியார் பள்ளிகளை மிஞ்சி விட்டது நமது கல்வித்துறை .பாவம் அது என்ன செய்யும் ...கல்வி அமைச்சர்களுக்கு கல்வி இயக்குனரும் ..உதவி இயக்குனரும் பதில் சொல்ல வேண்டும். அவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும்,மாவட்டக் கல்வி அலுவலரும் பதில் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும் . அவர்களுக்கு ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும் ..ஆனால் ஒன்று மட்டும்  இருக்கிறது...மாணவர்கள் யாருக்கும் பதில் சொல்லவும் தேவை இல்லை ... பயப்படவும் தேவை இல்லை ....
                                                                                                                          நிலை தொடரும் ...!