Tuesday, 26 August 2014

மரணம்

மரணம் 
  
  உயிர்
  தன் உடல் என்னும் கூட்டை விட்டு 
  கிளம்பிச் செல்லும் 
  திரும்ப வரா தீர்த்த யாத்திரை.

  வாழ்க்கை என்னும் 
  வேடந்தாங்கல் விட்டு 
  உயிர்ப் பறவை தேடியோடும் 
  கண்காணா தூர தேசம் .

  அரசனையும் 
  ஆண்டியையும் 
  சமமாக்கும் 
  காலதேவனின் கடைசி அஸ்திரம் .
  
 கடனைத் 
 திருப்பித் தர முடியாத  
 கடன்காரர்கள் எடுக்கும் 
 கடைசி முடிவு.

 காதல் தோல்வி கண்ட 
 கன்னியரும் காளையரும் 
 தேடியோடும் 
 கடைசிப் புகலிடம்.

 கனவுகள் ஏதும்  
 நடுவே வந்து 
 கலங்க வைக்காத 
 கடைசி உறக்கம்.

வாழ்க்கை என்னும் 
முழுநீள நாவலின்  
முடிவைச் சொல்லும்
முற்றுப் புள்ளி.

 

No comments:

Post a Comment