Sunday 31 August 2014

கருமமே கண்ணாயி னார்

               மெய்வருத்தம் பாரார் ;பசி நோக்கார்; கண்துஞ்சார் ;
           
            எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் ;-செவ்வி 
             
            அருமையும் பாரார் ;அவமதிப்பும்  கொள்ளார் ;

            கருமமே கண்ணாயி னார் -



இப்பாடல் வெண்பா வகையைச் சேர்ந்தது.
இயற்றியவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் .
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
   
      பொருள்:தாம் மேற்கொண்ட செயல்களில் கவனமாக இருப்பவர்களுக்கு மெய்வருத்தம் தெரியாது .பசி தெரியாது. தூக்கம் வராது.மற்றவர்களுக்கு தீங்கு இழைக்கும் எண்ணம் வராது.காலம் நேரம் தெரியாது.பிறர் அவமதிப்பு செய்தாலும் தெரியாது.
      அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தான் மேற்கொண்ட செயல் மட்டுமே.அதை முடிக்கும் வரை தன உடல் நோகிறதே என்று பார்க்கமாட்டார்.உறக்கம் வருகிறதே ...சிறிது  நேரம் உறங்குவோமே என்றும் நினைக்கமாட்டார் .ஒருவேளை உறங்கச் சென்றாலும்கூட அந்த செயல் அவர் கனவில் வந்து அவரை உறங்க விடாமல் செய்துவிடும்.
       இப்போதெல்லாம் நிறைய பேர் 'யாருக்கு என்ன கெடுதல் மேற்கொள்ளலாம் எவன் வாழ்வை அழிக்கலாம்' என்று சிந்திப்பதிலும் செயல்படுவதிலுமே தன முழு நேரத்தையும் வீனடிக்கின்றனரே ..சும்மா இருக்கும் மனம் சாத்தானின் வீடு  .எந்த செயலும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அவர்களுடைய மனம் இப்படித்தான் விபரீதமாக யோசிக்கும்; அதை செயல்படுத்தும்..அவர்போல் அல்லாமல் பிறருக்கு கேடு விளைவிக்கும் எண்ணம் கூட தோன்றாது. ஏனெனில் இவருக்கு தான் மேற்கொண்ட செயலை செய்வதில் முழு கவனமும் லயித்திருக்கும்.
     ஐயோ ..நேரம் கடந்துகொண்டிருக்கிறதே ....    என்று பதற மாட்டார்.ஏனெனில் அவரது முழு கவனமும் தான் மேற்கொண்ட செயலை முடிப்பதில் இருக்கும்போது காலமும் கூட அவர் கவனத்திற்கு வராது.
    பிறர் தம்மை எவ்வாறு இழித்து அவமதிப்பு செய்தாலும்கூட அதை பொருட்படுத்தமாட்டார்.அதையே நினைத்து வருந்திக் கொண்டு இருந்தால் இப்போது செய்யம் செயலை யார் முடிப்பது...?எனவே தாம் அவமானப் படுவதைக் கூட கருத்தில் கொள்ளமாட்டார். 
     இவ்வாறு உடல் வலி, உணவு,உறக்கம்,பிறருக்கு தீங்கிழைக்கும் எண்ணம் ,நேரம்,தனக்கு ஏற்படும் அவமானம் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் யார் இருக்கிறார்களோ அவரால் மட்டுமே தான் மேற்கொண்ட செயலை சிறப்பாக செய்ய முடியும் என்று சிறப்பான வழியைக் காட்டுகிறார் குமரகுருபரர். 
      இக்காலத்தில் இப்படி ஒரு கரும வீரர் ...செயல் வீரர் ...யாராவது இருக்கிறார்களா? அல்லது இருக்க முடியுமா ...?அல்லது இருக்கத்தான் விடுவார்களா....?
      அந்த மகன் குமாரகுருபரருக்கே வெளிச்சம் ...! 

No comments:

Post a Comment