Saturday 13 May 2017

அன்னையர் தினம்

அன்னையர் தினமாம்...!
..............?
அன்னையர்க்கென்று தனியாக ஒரு தினமா?
நாம் பிறந்த வினாடி முதற்கொண்டு 
நாம் இப்புவியில் ஜீவிக்கின்ற எல்லா நாளுமே 
அன்னையர் தினமன்றோ....!
ஒவ்வொரு குழந்தையும் 
தனது தாய் மொழியில் பேசுகின்ற 
முதல் கவிதை 'அம்மா '
தினங்களையும் 
கொண்டாட்டங்களையும் 
வாழ்த்துக்களையும் கடந்தவள்அம்மா ..
அவளுக்காக ஒரு நாளை ஒதுக்குவதை விடுங்கள் ..
அவளை...நமக்கு  உயிர் கொடுத்தவளை 
நம் உயிர்  உள்ளவரையும் கொண்டாடுவோம்....!


Monday 1 May 2017

கோடைக் கால இலவச ஓவிய பயிற்சி முகாம்

        ஸ்வாசிகா இயக்கத்தின் 22 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மே -1 அன்று பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 நாட்களுக்கு கோடைக் கால இலவச ஓவிய பயிற்சி முகாம் துவங்கியது. நிறுவனர் திரு ,முத்துக் குமரன் அனைவரையும் வரவேற்றார்.
        திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திரு சேரன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கி முகாமைத் துவங்கினார்,முதல் நாளின் துவக்கத்திலேயே 160 மாணவர்கள் முகாமில் சேர்ந்துள்ளனர்.பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்தே காத்திருந்தனர் .முகாமில் ஓவிய ஆசிரியர் முத்துக் குமரன் , வேலுத்தம்பி மற்றும் சென்னை கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் விமல் ,சதிஷ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.மேலும் புதுவையை சார்ந்த ஓவியர்கள்  பலரும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
     மேலும் ,ஸ்வாசிகாவின் 22 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 22 மீட்டர் நீளமுள்ள ஒரே துணியில் 22 ஓவியர்களைக் கொண்டு 22 மணி நேரத்தில் 22 கருத்துருக்களில் 22 ஓவியங்களைத் தீட்டும் நிகழ்வு வரும் 05-05-2017 அன்று துவங்க உள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர் திரு டீ .ராஜேந்திரன் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்குகிறார்.பண்ணுருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சத்யா பன்னீர் செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சாதனை நிகழ்வைத் துவக்குகிறார். பண்ணுருட்டியின் முதுபெரும் ஓவியக்  கலைஞர் திரு ,பி .ஹரிகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு ஓவியங்களைத் தூரிகையால் துவக்குகிறார்.பண்ணுருட்டிப் பகுதியைச் சார்ந்த 22 ஓவியக்  கலைஞர்கள்  கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை அளிக்கின்றனர்.
        ஸ்வாசிகாவின் நிறுவனரும் பண்ருட்டி அரசுப்  பள்ளியின் ஓவிய ஆசிரியருமான முத்துக் குமரன் அவர்கள் தமது உறுப்பினர்களுடன் இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.