Friday 26 January 2018

கிருஷ்ணன் சார் - எனது குருநாதர்

இதுவும் ஒரு நெடிய பதிவே ...

சற்றே பொறுமையாக படிக்க வேண்டும் தோழர்களே ...

இந்நிகழ்வு நடந்து சரியாக ஒரு மாதம் ஆகிறது ...

ஆனால் பனிச்( பணி  )சுமையின் காரணமாக இப்பதிவினை மிக

தாமதமாக இடுகின்றேன்

ஒரு சிறு கதை போல் தருவதற்கு முயற்சிக்கின்றேன்


கிருஷ்ணன் சார் - எனது குருநாதர்

18-01- 2018  எனது வாழ்வில் மறக்க முடியாத மற்றொரு நாள் .

நீண்ட வருடங்கள் கழித்து எனது கணித ஆசிரியரை சந்தித்த நாள் .

1980-81.மற்றும் 81 -82 ஆம் கல்வி ஆண்டுகளில் புதுப்பேட்டை அரசு மேல்

நிலைப் பள்ளியில் 9 மற்றும் பத்தாம் வகுப்பில் நான் பயிலும்பொழுது

எங்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கிலம் போதித்தவர் .

கிருஷ்ணன் ஆசிரியர் . கோட்டலாம் பாக்கம் அக்ராகிரக

தெருவில்வாழ்ந்தவர்.

வி ஆர் எஸ்  சார் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு ஒட்டு வீடு இருக்குமே...அந்த

வீட்டில்தான் அவர் வசித்துவந்தார் .

எங்களில்  சிலர் மட்டும் தனி வகுப்புக்காக அவர் வீட்டிற்கு சென்று

படித்து வந்தோம் .

வீட்டில் அவரும் அவரது மனைவியும் மட்டும் வசித்து வந்தனர் .

குழந்தைகள் இல்லை .

அவரது அண்ணன்  மகன் ஸ்ரீதர் என்பவர் எங்களைவிடவும் வயதில் மிக

இளையவர்.அடிக்கடி  இவரது வீட்டுக்கு வந்துவிடுவார்.

அவரைத்தான் மகனாக நினைத்து வளர்த்து வந்தார் .

மிகச் சிறப்பாக போதிப்பார் .

எனக்கு ஆங்கில இலக்கணத்தில்அடிப்படையை  மிக   நன்றாக

அமைத்துக் கொடுத்தவர் .

எங்களிடமெல்லாம்  மிக அன்பானவர் .

கிரிக்கெட் ஆர்வலர் .

வானொலியில் நேரடி வர்ணனை கேட்பதில் மிகப் பிரியம் உள்ளவர்.

ஸ்ரீதரும் அவரும் கிரிக்கெட் பற்றி அடிக்கடி பேசிக்கொள்வர் .

எனக்கு எப்போதுமே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இருந்தது இல்லை .

அவர் வீட்டுக்கு படிப்பதற்கு செல்கையில் கவனித்து ..இருக்கிறேன்.!

கணிதமாகட்டும் ...அல்லது ஆங்கிலமாகட்டும் ...!

சொல்லித் தந்து விளங்க வைப்பதில் வல்லவர் ...

புரியவில்லை என எத்தனைமுறை கேட்டாலும்  சலிக்காமல் சொல்லித்

தருவார்.

படிக்காமல் ,எழுதிக்காட்டாமல்  யாரும் அவரை ஏமாற்றி விட முடியாது .

கையின் கீழ் தசையை திருகிக்கொண்டே  மெல்லிய குரலில் ஒழுங்கா

எழ்ழுத்தறியா( எழுதறியா )...என்று  வினவுவார் ...

அந்த திருகலுக்கு பயந்தே நாங்களெல்லாம் அவரது பாடங்களை

கவனமாகவே முடித்துவிடுவோம் .

அவரது அந்த கண்டிப்பான அணுகுமுறைதான் எங்களையெல்லாம்

வாழவைத்துக் கொண்டிருக்கிறது .பள்ளிப் படிப்பை முடித்தபிறகு அவரை

சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .

பணி நிறைவுக்குப்   பின்னர் விழுப்புரத்திற்கு தனது அண்ணனுடன் வசிக்க

சென்றுவிட்டார் .

அதற்குப் பிறகு அந்த தெருவில் வசித்துவரும் மீனாட்சி அக்கா -எனது

தமக்கையுடன் படித்தவர் -எப்போதாவது அவர்   மூலமே செய்திகள் வரும் .

ஒருமுறை அவரது மனைவியார் மறைந்த செய்திகூட அப்படிதான்

கேள்விப்பட்டோம்.மிக வருத்தமாக இருந்தது .

பின்னர் கால ஓட்டத்தில் அடிக்கடி அவரைப் பற்றி நினைத்துக் கொள்வேன் .

அவரை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிட எண்ணிக்கொண்டு

இருந்தேன் .

அப்போதுதான் புதுப்பேட்டை அரசுப்  பள்ளியை  முன்னாள் மாணவர்கள்

புனரமைத்து  விழா செய்யும் ஏற்பாடுகள் நடந்தன.

திசைக்கு ஒருவராக சென்று தமக்கு பாடம் போதித்த ஆசான்களைத் தேடி

அழைப்பிதழை அளித்து விழாவுக்கு அழைத்தனர் .

விழாவில் எங்களது அனைத்து ஆசிரியர்களையும் சந்திக்கப் போகும்

ஆர்வத்தில் இருந்தேன்.

சென்னையில் வசிக்கும் சசிக்குமார் என்ற எனது ஓவிய மாணவர் - எங்கள்

பள்ளியின் முன்னாள் மாணவர் -சென்னையில் வசிப்போருக்கு அழைப்பிதழ்

கொடுக்கும் பணியை ஏற்றிருந்தார் .

அவர் மூலம் கிருஷ்ணன் சாருக்கு உடல் நலமில்லை எனவும், அவரால்

விழாவுக்கு வருகை தர இயலாது  என்று அறிந்த பொழுது சற்றே ஏமாற்றமாக

இருந்தது .

இருப்பினும் அவரது முகவரியை சசியிடம் கேட்டு பெற்றுக்கொண்டேன்.

குரோம்பேட்டை,அஸ்தினாபுரத்தில் அவர் வசித்து வந்ததாகக் கூறி

விலாசத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார்.

அந்தப் பகுதியில்தான் எனது பெரியம்மாவின் பெண் சித்ரா - எனக்கு

தங்கை- என்பவரும்வசித்து வருகிறார்.

எனது தங்கை மகளின் திருமணம் 19-01 -2018 அன்று நடைபெற இருந்ததால் ,

18 -01-2018 அன்று காலையே எங்கள் ஊரில் இருந்து கிளம்பி பகல் 1-30

மணிக்கே அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண

மண்டபத்தை அடைந்தோம்.பேருந்தில் ஏறுவதற்கு முன்பே என்

மனைவியிடம் கூறிவிட்டேன். மத்திய உணவுக்குப் பிறகு கிருஷ்ணன் சாரை

சென்று பார்த்து விட்டு வரவேண்டும் என்பதனை. எனவே மத்திய உணவு

அருந்தியதும்   அங்கிருந்த எனது  அண்ணன்  முருகன்  (எனது

பெரியம்மாவின் மகன் -இவர் என்னை விட 3 வயது மூத்தவர் ...இவரும்

கிருஷ்ணன் சாரிடம் படித்தவர்தான் .தான் இரு மாதங்களுக்கு

முன்னதாகவே சாரை சந்தித்ததாகவும் அவரது வீடு தனக்குத் தெரியும்

என்றும் தானே   அழைத்து செல்வதாகவும் கூறினார் . முன்னதாக 

கிருஷ்ணன் சாரின்    தொடர்பு  எண்ணில் தொடர்பு கொண்டு எங்களை

அறிமுகப் படுத்திக்கொண்டு

நாங்கள் மாலை அவரைப் பார்க்க வரும்  செய்தியை தெரியப் படுத்தினோம்

மூன்றரை மணியளவில் கிளம்பினோம் .முருகன் அண்ணா முன் செல்ல

நான்  எனது மனைவி எனது அத்தை மகன் கார்த்தி ஆகியோர்

முருகன் அண்ணாவை பின் தொடர்ந்தோம்.

 மரியாதை நிமித்தம் சாருக்கு வழங்குவதற்காக கொஞ்சம் பழங்களும்

ஒரு தேங்காய்ப் பூ துவாலையும்  போகும் வழியிலேயே 

வாங்கிக்கொண்டேன்

முதலில் ஒரு தெருவுக்கு அழைத்துச் சென்றார் .ஒரு வீட்டில் கேட்டை

திறந்தபடி நுழைந்தார் . நாங்களும் பின்தொடர்ந்து சென்றோம் ..

இந்த வீடுதானா  என்று வினவியபடி அவரைப் பார்த்தேன் .

ஆம் என்பதுபோல் அவர் தலையசைக்கவும்..கேட் திறக்கும் சத்தம் கேட்டு

மாடியிலிருந்து ஒரு பெண் எட்டிப் பார்த்தார் .நடுத்தர வயதிருக்கும் ...

யாரை சார் பார்க்கணும் என்றார் .

என் அண்ணனோ சற்றே குழப்பான முகத்துடன் கிருஷ்ணன் சார் வீடு....

என்று இழுத்தார் .

அதற்கு அப்பெண் ஆமாம் சார் ...இந்த வீட்லதான் இருந்தாங்க .

ஆனா இப்ப இல்ல ..வேற வீடு மாறிட்டாங்க .நான் அவங்க அண்ணனோட

மகள்தான் ...என்றார் சிரித்தபடி ...

முருகன் அண்ணனும்  சிரித்தபடி நான் ஏற்கெனவே இந்த வீட்டுக்கு

வந்திருக்கிறேன் ..அதான் கொஞ்சம் குழப்பம் ஆயிடுச்சி என்றார் .

அந்த பெண் கிருஷ்ணன் சார் தற்போது குடியிருக்கும் வீட்டின் முகவரியைக்

கூற .நங்கள் நன்றி சொல்லிக் கிளம்பினோம் ....!

மீண்டும் வந்தவழியே திரும்பி சென்றோம் .அவர்கள் கூறிய மணிமேகலை

தெருவில் உள்ள முதல் அபார்ட்மெண்டில் முதல் வீட்டை அடைந்தோம்.

கதவின் அருகில் நின்று குரல் கொடுத்தேன் ...

சார் ... சார் ...

கதவு திறந்து வயதான பெண்மணி ஒருவர் எங்களை சற்றே

குழப்பத்துடன் வரவேற்றார் ..

கிருஷ்ணன் சார் வீடுதானே இது ? நான் வினவ ,

அவர் சட்டென்று .புரிந்துகொண்டு சிரித்தார் ...

வாங்கோ ...நீங்கதானே போன்  பண்ணேள் ...வாங்கோ ...உள்ளே வாங்கோ ...

சார் இருக்கார் . வாங்கோ ..என்று அழைத்தபடி எங்களை அன்புடன்

வரவேற்றார் .அவர் சாரின் அண்ணியாக இருக்கவேண்டும் .

நாங்கள் சற்றே தயங்கியபடி உள்ளே சென்றோம் .உள்ளே மிக வயதான

பெரியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் .கண்களில் தேடலோடு

எங்களை பார்த்து சிரித்தார் .வாவென்பதுபோல் தலையசைத்தார் .

நான் சட்டென்று அடையாளம் அவரை அடையாளம் கண்டேன் ...

கிருஷ்ணன் சார்தான் அவர் ...வயது கூடியிருந்தாலும் கூட நாங்கள் பார்த்துப்

பழகிய எங்கள் கிருஷ்ணன் சாரின் முகம் அப்படியேதான் இருந்தது .

சற்றே வயதான தோற்றமாக இருந்தாலும் முதுமையின் காரணத்தாலும் தன

மனைவியை இழந்ததன்  காரணத்தாலும் சுகவீனத்தின் காரணத்தாலும்

சற்றே அயற்சியாக இருந்தார் .

நான் பேசத் துவங்கினேன் .

அவருக்கு காது கொஞ்சம் கேக்காது செத்தே உரக்க பேசுங்கோ என்றார்

சாரின்  அண்ணியார் .

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன் ...

சார் ..நான் முத்துக் குமரன் 1980 --82  ல் தங்களது மாணவன் ...ஆங்கிலம்

.கணிதம் இரண்டும் தங்களிடம்தான் படித்தேன் ....குறிப்பாக  ஆங்கில

இலக்கணத்தின் அடிப்படையை தெளிவாக கற்றது தங்களிடம்தான்

என்றேன் ..புரிந்துகொண்ட படி தலையசைத்தார் .சற்றே கண்களை

மூடிக்கொண்டார் ...சிந்திப்பது போல் இருந்தது ...பழைய நினைவுகளை

மீட்டெடுக்கிறார் போலும்.தீடீரெனக் கண்களைத் திறந்தவர் .. ராமநாதன்

தறி வாத்தியார் எப்படியிருக்கார் ...அப்பாதான அவர் ...?

இல்லை சார் ...அவர் எனது பெரியப்பா .எனது அப்பாவின் பெயர் அப்பர்சாமி .

அவரும் ஆசிரியர்தான் ..ஆனா ரெண்டுபேருமே தவறிட்டாங்க சார் என்றேன் .
பிறகு எனது அக்காவின் பெயரை சொன்னேன் ,சுமதி என் அக்காதான் சார் .

உங்களிடம்  படித்தவர்தான் .என்று கூறி வீரராகவனின் அக்காவான சுமதி

அதாவது மற்றுமொரு   சுமதி அக்கா அருந்ததி அக்கா

ஆகியோரை நினைவு படுத்தினேன் .

பின்னர் எனது சக மாணவர்களான முத்துக்குமார் ,வீர ராகவன் ,வரதராஜலு

தினகரன் ஆகியோர்  குறித்து  என்னிடம் வினவினார் .

நடந்து முடிந்த புத்தொளிர் பள்ளி விழா குறித்தும்கேட்டுத்

தெரிந்துகொண்டார் .

இடையே அண்ணியார் எங்களுக்கு பருகுவதற்காக சூடாக பால் கொண்டு

வந்து நீட்ட  புன்னகைத்தபடி நன்றி கூறி ஆளுக்கொரு குவளை

எடுத்துக்கொண்டோம் .

ம்ம். சாப்பிடுங்க என்றார்  கிருஷ்ணன் சார் ,

பாலை பருகினோம் மிதமான சூட்டோடும் திகட்டாத இனிப்போடும்

சுவையாக இருந்தது ..

பின்னர் அவரிடம் என் செல்போனில் இருந்த பள்ளி விழா போட்டோக்களை

காண்பித்தேன் .அதில் இருந்த சீனிவாசன் சார் ,வத்சலா மேடம் .சாமிநாதன்

சார் (தமிழ் அய்யா ) டாக்டர் ராமானுஜம் அய்யா ,பழனி சார் ( ஆங்கிலம்)

மாரியப்பன் சார் (உடற்கல்வி இயக்குனர்) ஆகியோர்களைக் காண்பித்தேன் .

.மிக மகிழ்ச்சியடைந்தார் ...

என்னால்தான் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது என்றுகூறினார்

வருத்தம் தோய்ந்த குரலில் ...

சற்று நேரம் மெளனமாக இருந்தார் .. பின்னர் மீண்டும் கேட்டார் . புலவர்

ராமநாதன் ,உமாபதி அய்யா இவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்

என்றார் ஆர்வத்துடன் .அவர்கள் காலமான செய்தியையைக் கூறியதும்

மீண்டும் மௌனமானார் .

சூழ்நிலையின் இறுக்கத்தை குறைப்பதற்காக நான் ஸ்ரீதர் குறித்தும்

கிரிக்கெட் கமென்டரி கேட்டு மகிழும் நினைவுகள் குறித்தும் பேசத்

துவங்கினேன்.அந்த நேரம் அறையின் உள்ளிருந்து கிருஷ்ணன் சாரின்

அண்ணன்  வந்து எங்களை வரவேற்றார் .நாங்கள் மீண்டும்  அவரிடம்

எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம் .

பின்னர் நான் வாங்கி வந்த வெண்ணிறப் பூத்துவாலையை அவருக்குப்

போர்த்து  பழங்களை நானும் என் மனைவியும் அவரிடம் கொடுத்தோம் .

பின்னர் பாதங்கள் பணிந்து ஆசி பெற்றோம் .மேலும் அவரது அண்ணன்

அண்ணி பாதங்களையும் பணிந்து ஆசி பெற்றோம்.

வந்து சென்றதன் நினைவுகளை  செல்போனில் காட்சிகளாகப்

பதிந்துகொண்டோம் .காட்சிகளை செல் போனில் பதிய கிருஷ்ணன் சாரின்

அண்ணனுடைய பேரன் எங்களுக்கு உதவினான் .

(முதல் வீட்டில் எங்களுக்கு விலாசம் சொன்னாரே ...அவருடைய மகன் )

பின்னர் அவர்கள் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினோம் சுமார் 35

வருடங்களுக்கு முன்னர் எங்களுக்கு கல்வி புகட்டிய ஆசானை சந்தித்து

பேசியது மிக்க மகிழ்வாகவும் மன நிறைவாகவும் இருந்தது ...இன்னும்

சில நாட்களில் மீண்டும் ஒருமுறை அவரை சந்திக்க வேண்டும் .

என் மனவண்ணங்கள் நூலை, மகாபாரதம் நூலை  அவருக்கு

அளித்து ஆசிபெறவேண்டும் ...என எண்ணியபடி

 என் மனைவியுடனும் அண்ணனுடனும் பேருந்து நிலையம்

நோக்கி நடக்கத் துவங்கினேன் .....

ஆம் ...


இராமனுக்கு ஒரு வசிட்டரும் ,கண்ணனுக்கு சாந்தீபனியும் ,

அர்ஜுனனுக்கு ஒரு துரோணரும் ,கர்ணனுக்கு ஒரு பரசுராமரும் போல

எல்லா மாந்தருக்கும்  ஒரு சிறந்த தலையாய குரு

இப்புவியில் அவதரிக்கத்தான் செய்கிறார் ...!


குரு பிரம்மா

குரு விஷ்ணு

குரு தேவோ மஹேஸ்வரஹ ...

குரு சாட்சாத் பர பிரம்மா

தஸ்மை ஸ்ரீ    குரவே   நமஹ !





































No comments:

Post a Comment