Wednesday 27 March 2019

... வரும்... ஆனா வராது...!

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அரசை மட்டுமே நம்பியிராமல் பயிலும் மாணவர்களிடமும் குறைந்தபட்சக் கட்டணம் வசூலித்தால் என்ன?
வரும் பணத்தைக் கொண்டு
பெற்றோர் எதிர் பார்க்கும் எல்லா வசதிகளையும் நமக்கு நாமே என்பது போல் செய்து கொள்ள முன்வரலாமே?
கல்வி ஏன் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும்.?
அடுத்தது தனியார் பள்ளி என்ற ஆப்ஷனை ஏன் பொது மக்களுக்கு அளிக்க வேண்டும் ? அது இருப்பதால் தானே இந்த ஒப்பீட்டுச் சனியனெல்லாம் .அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எல்லாம் அரசுப் பள்ளிகளில் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டெல்லாம்...?
எனவே தனியார் கல்வி நிலையங்களுக்கு ஒரு மூடு விழா நடத்துவோம்...
அனைத்து கல்வி நிலையங்களையும் அரசே நடத்தட்டும். அங்கு படிக்கும் அனைவருக்கும் கட்டணம் வசூலிக்கட்டும்... பிறகு பாருங்கள் நடக்கும் மாற்றத்தை ...
பாவம்.. ஏழைகளும் , நடுத்தர மக்களும் பணத்திற்கு எங்கே போவார்கள் என்று ? அவர்களது நிதிநிலைமை சரியில்லையே என்ெறல்லாம் கம்பு சுத்தக் கூடாது...
பொங்கக் கூடாது...
இப்போது தனியார் பள்ளிகளிலே பணம் கட்டிப் படிப்பவர்களுக்கு எங்கிருந்து வருகிறது நிதியாதாரம்?
மின்சாரக் கட்டணம் கட்டுகிறோம் இல்லையா?
தண்ணீர் கட்டணம் கட்டுகிறோம் இல்லையா? கேபிள் டி.வி அல்லது டிஷ் கட்டணம் செலுத்துகிறோம் இல்லையா?
கேஸ் சிலிண்டர் வாங்க பணம் செலவு செய்கிறார்களா இல்லையா?
ஒவ்வொரு ஏழை வீட்டில் கூட ரீசார்ஜ் செய்கிறார்கள் இல்லையா?
டூவீலர் வைத்துக் கொண்டு எரிபொருள் நிரப்பக் கட்டணம்
செலுத்துகிறார்கள் இல்லையா?
ஒரு புது படம் ரிலீஸ் ஆச்சுன்னா தலைவனுக்கு
கட் அவுட் வச்சு பேனர் வச்சு பால் அபிஷேகம் பண்றது யாரு தெரியுமா.? மேல்தட்டு வர்க்த்தினர் அல்லது நடுத்தர வர்க்கத்தினர் கூட இல்லை. அடித்தட்டு வர்க்க இளைஞர் மற்றும் மாணவ சமுதாயத்தினர்தான்.முதல் நாள் முதல் ஷோ என்று குறைந்தது 150 ல் இருந்து அதிகம் 750 வரை செலவு செய்ய பணம் எங்கிருந்து வருகிறது.?
ஊருக்கு மூன்று கடை இருந்தும் அத்தனையிலும் முண்டியடித்து சரக்கு வாங்க ஒரு கும்பல் தினமும் அலைமோதுகிறதே... அதற்கு ஏது அவர்களுக்கு நிதி?
இதற்கு எல்லாம் செலவழிக்க முடிகிறதல்லவா
ஒரு சாமான்யனால்?
ஒரு ஏழையால் ?
அப்படியானால் அவன் தன் மகனுடைய அல்லது மகளுடைய அடிப்படைத் தேவையான கல்விக்கு ஏன் குறைந்த பட்சக் கட்டணத்தை செலுத்தக் கூடாது?
கல்வி இலவசமாக இருப்பதால் தான் அதன் அருமையாருக்கும் தெரியவில்லை. முதலில் தனியார் கல்வி நிறுவனங்களை அரசு இழுத்து மூடட்டும். அத்தனை கல்வி நிறுவனங்களுமே அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரட்டும்.. படிக்கும் அத்தனை கோடி மக்களிடமும் நாம் கே வா சே ஒரு சிறு தொகையை வருடம் ஒரு முறையோ அல்லது மாதாமாதமோ தயவு தாட்சணியம் பார்க்காது TNEB காரன் fuse புடுங்குவது போல் Fees Collect பண்ணட்டும். வருகிற தொகை நினைத்து பார்க்க முடியாத அளவு மலைப்பூட்டும் .அதனை துளி கூட ஊழல் செய்யாது அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளுக்கும் , கல்வி வளர்ச்சிக்கும் மட்டுமே செலவு செய்யட்டும்... எந்த அரசுக்காவது , அல்லது எந்த கட்சிக்காவது துணிவு வருமா?
நிச்சயம் செய்ய மாட்டார்கள்..
அதை விட்டு விட்டு அரசு ஊழியர் பிள்ளையாம்... ஆசிரியர்கள் பிள்ளையாம்... அவர்களுக்கு மட்டும் அரசுப் பள்ளிக் கல்வியாம்....யோசனை சொல்கிறார்கள் அதிபுத்திசாலிகள்...
எனது திட்டபடி செய்யட்டும்..
ஆளுனர் , முதல்வர் , துணை முதல்வர் , அமைச்சர் பெருமக்கள் , நீதியரசர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் , MLA ,MC வீட்டுப் பிள்ளைகள் , சீமான்கள் வீட்டுப் பிள்ளைகள் , சூர்யா , அஜீத் , விஜய் வீட்டுப் பிள்ளைகள் , அம்பானி ,அதானி வீட்டுப் பிள்ளைகள்.. சரவணா ஸ்டோர் வீட்டுப் பிள்ளைகள்... C K ரங்கநாதன் , ஆச்சி மசலா வீட்டுப் பிள்ளைகள் .....
அப்புறம் இந்த பத்திரிகையாளர் வீட்டுப் பிள்ளைகள் , பதிப்பகத்தார் வீட்டுப் பிள்ளைகள்..
....
....
உங்கள் வீட்டுப் பிள்ளைகள்...
எங்கள் வீட்டுப் பிள்ளைகள்... சகல தொழிலாளிகள் வீட்டுப்
பிள்ளைகள் எல்லாம் ...
...எல்லாம் .....
அரசுப் பள்ளிகளில் மட்டுமே ஒன்றாகப் படிக்கும்
நன்றாகப் படிக்கும் காலம் வரும்...
....வருமா?
... வரும்... ஆனா வராது...!
பி.கு. நமது நாட்டின் எந்த V I P யும் தன் மகனை அல்லது மகளை நம் நாட்டைத் தவிர பிற அன்னிய நாடுகளில் கல்வி பயில வைக்கக் கூடாது என்ற சட்டம் இயற்ற வேண்டும். மனித உரிமை , கல்வி உரிமை , அந்தந்த பெற்றோரின் தனிப்பட்ட உரிமை என்றெல்லாம் பொங்கக் கூடாது.
சட்டத்தின் முன் ...
இறையாண்மையின்படி...
அனைவரும் சமம்
அல்லவா?

No comments:

Post a Comment