Monday 17 April 2017

மோஹனம் கிராமியக் கலை விழா

மோஹனம் கிராமியக் கலை விழா 

     15-04 -2017 ,சனி மற்றும் 16-04-2017 ஆகிய தேதிகளில்  ஆரோவில் மாதிரி கிராமத்தில் மோஹனம் கலை பண்பாட்டு அமைப்பு ,புதுவை சுற்றுலாத் துறை மற்றும்  கலை புதுவை பண்பாட்டு இயக்கம் இணைந்து நடத்திய கிராமக் கலை விழாவில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது .
        கவிதை கணேசன் அய்யாவுடன் நானும் சென்றிருந்தேன்.புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு ஷாஜஹான் அவர்கள் கலைவிழாவை தொடங்கி ,கண்காட்சியையும் திறந்து வைத்தார். சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் அக்கா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற கவிதாயினி திருமதி மீனாட்சி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர் .
        என் அன்பு பரிசாக அனைவருக்கும் நான் இயற்றி வெளியிட்ட மனவண்ணங்கள் நூலை பரிசளித்தேன்.உடன் வளர்ந்து வரும் ஓவியக்  கலைஞன்  லட்சாராமன் மற்றும் 4 சாரண மாணவர்களும் பங்கேற்றனர்.
          கவிதை கணேசன் ஐயா பாரம்பரிய நெல் வகைகள் 250 & பாரம்பரிய பொருட்கள் மற்றும்    அரிய பொருட்கள் கண்காட்சியினை அமைத்து இருந்தார் .
            நான்   ஓவியக்  கண்காட்சியினை அமைத்து இருந்ததோடு வருகை புரிந்த அப்பகுதி கிராம மாணவர்களுக்கு ஓவியம் வரையவும் வண்ணம் தீட்டவும் பயிற்சி அளித்தேன்.
           களிமண்  சிற்பம் (சுடுமண் )செய்தல்,கலைப் பொருட்கள் கண்காட்சி ,கைவினைப் பொருட்கள் கண்காட்சி ,பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சி ,பாரம்பரிய பானங்கள் உள்ளிட்ட அரங்குகள் இடம் பெற்றிருந்தன .மேலும் புதுவை பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் மற்றும் புதுவைப் பகுதி ஓவியர்கள் வருகை தந்து இருநாட்களும் ஓவியங்கள் வரைந்தனர் .
         மோகனம் குழுவின்  ஒருங்கிணைப்பாளர்திரு பாலு ,திரு. முருகன் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் .வெளி நாடு சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்து ஆர்வத்தோடு பார்வையிட்டனர் .
         நாள் முழுதும் மாணவர்களின் பரதநாட்டியம்,நாட்டுப் புறக் கலை நடனங்கள்,நாடகங்கள் என ஒருபுறம் அசத்த இரவு நேரத்தில் புகழ்பெற்ற வீணை ,புல்லாங்குழல் ,வயலின் இசைக் கலைஞர்களின் பாரம்பரிய ,கர்னாடக மெல்லிசை விருந்தும் நடைபெற்றன.பள்ளி மாணவர்களுக்கும் ,கிராமப் பெண்களுக்கும் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி பரிசளித்து மகிழ்வித்தனர் விழாக் குழுவினர்.
             பருப்பு அடை ,நவதானிய உருண்டை ,சுழியன் ,குழிப்  பணியாரம்,கேழ்வரகுப் புட்டு, சிகப்பரிசி புட்டு,பல்வகை தானிய சுண்டல்கள் உள்ளிட்ட கிராமங்களில் மட்டும் கிடைக்கும் உணவு வகைகள் கண்காட்சி அரங்கில் கிடைக்கும் போது விட்டுவைக்கலாமா ..அனைத்து வகைகளையும் ஒரு கை ...மன்னிக்கவும் ..ஒரு வாய் பார்த்தேன் .
              பொதுவாக ஒரு அரங்கினுள் நடைபெறும் விழாக்களை விட இதுபோன்ற கிராமச் சூழலில் ,மரங்கள் அடர்ந்த திறந்த வெளியில் காற்றோட்டமான இடத்தில் , ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலைவிழா மனத்தைக் கொள்ளை கொண்டது நிஜம்.
             














மோஹனம் ....வளர்க உமது அறக்கட்டளை ....! செழிக்கட்டும் தமிழர் கலாச்சாரமும் பண்பாடும்....!

No comments:

Post a Comment