Friday 28 September 2018

அப்பாலு பத்தர் .DHINAMANI THOZHIL MALAR ARTICLE.



இது நவராத்திரி நேரம் .
தமிழ் நாட்டில் அநேக இல்லங்களில் மட்டுமல்லாது எல்லா ஆலயங்களிலும் கூட கொலு வைப்பது வழக்கம் .வழக்கம் இல்லா இல்லா வீடுகளில்கூட பொடிசுகளின் நச்சரிப்பு தாளாமல் பெயருக்காவது கொலு வைப்பது நடைமுறை ஆகிவருகிறது .

கொலு என்றாலே பொம்மைகள்தானே நினைவுக்கு வருகின்றன ?

பண்ணுருட்டியிலிருந்து மடப்பட்டு வழியாக பயணப்பட நேர்ந்தால் அங்குச்செட்டிப்பாளையம்  சிற்றூரைத்  தாண்டி செல்லும் வழியில் சேமக்கோட்டை என்னும் ஊருக்கு முன்பாக இருமருங்கிலும் நிறைய பெரிதும் சிறிதுமான பொம்மைகள்,இறைவடிவங்களைக் காணலாம் .விநாயகர் சதுர்த்தி காலங்களில் இந்த ஊரிலிருந்து மெகா சைஸ் பிள்ளையார் சிலைகள் தமிழ் நாட்டின் பலப்பகுதிகளுக்கும் , ஏன் ...வெளிமாநிலங்களுக்கும் கூட அனுப்பிவைக்கப் படுகின்றன. இவர்கள் பரம்பரையாக இத்தொழிலை செய்துவருபவர்களே .

இப்படிப்பட்ட  பெருமை உடைய பண்ணுருட்டி ,மிகப் பெரிய வர்த்தக நகரமாக விளங்கும்  பண்ணுருட்டி  ஒரு காலத்தில் பொம்மைகள் செய்வதில் புகழ் பெற்று விளங்கியது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா ?

ஆம் ..உண்மைதான் .இன்னும்கூட பாரம்பரியமாக பொம்மைகள் செய்து தரும் ...வெளிநாடுகளுக்கும் கூட பண்ணுருட்டி பொம்மைகளை விற்பனை செய்து வரும் ஒரு குடும்பம் அப்பாலு  பத்தர் தெருவிலே வசித்துவருகின்றது . வசித்துவரும் 
திரு சி.சம்பந்தம் அவர்கள் தன் குடும்பத்தாருடன் இத் தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்.

இதோ அதுபற்றிய தகவல்கள் உங்களுக்காக .

தகப்பனார் பெயர் A .சின்னசாமி பத்தர்
தாயார் பத்மாவதி அம்மாள்
பிறந்ததேதி 20-05 -1939
பாட்டனார் அப்பாலு பத்தர் .
இவர் பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் . இப்பள்ளி போர்டு ஹை ஸ்கூல் என்று  வழங்கப் பட்டு வந்தது .

அப்பாலு பத்தர்  ராமலிங்க அடிகளார் திரு உருவபொம்மையை  செய்து  தர  
அவரும் அதனை வாங்கி பொன்னான மேனியை மண்ணால் செய்தனையே  
எனக் கூறி கீழே போட்டுடைத்தார்  எனும் செய்தி 
வள்ளலார் வரலாற்றில் வருகின்றது .

அவர் வசித்து வந்த தெரு இப்போதும் அவர் பெயரினால் 
அப்பாலு பத்தர் தெரு என்றே வழங்கப்படுகிறது .
நான்கு தலைமுறைகளாக களிமண் மற்றும் காகிதக் கூழ் கொண்டு இவர்கள் செய்யும்  பொம்மைகள் உலகப்  புகழ் புகழ்பெற்றவை 
என்பது பண்ணுருட்டியில் வாழும் பலருக்கும் தெரியாது .

ஆம் பண்ணுருட்டி பலாப் பழத்துக்கு ,முந்திரிக்கு மட்டும்தான் 
புகழ்பெற்றது என  அனைவரும் நினைத்திருப்போம் .
அனால் இது காகிதக் கூழ் பொம்மைகளுக்கு கூடப் பெயர்பெற்றதுதான் .
பின்னர் வந்த பலா ,முந்திரி இவை பொம்மையின் புகழை 
பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றே கூறவேண்டும் .
இவரது குடும்பம் செய்து தரும் கலை நயம் மிக்க ,அழகான ,பலவர்ணங்கள் கொண்ட பொம்மைகளுக்கு பொம்மைகளுக்கு ஏக கிராக்கி. குறிப்பாக பிரௌன் நிற அல்சேஷன் நாய் பொம்மைகள் ,
செட்டியார் பொம்மைகள் ,தவழும் பாலகிருஷ்ணன் ,
உண்ணாமுலையம்மன் சமேத திருவண்ணாமலையார் ,
அலர்மேலு மங்கை சமேத வெங்கடேசப்பெருமாள் உள்ளிட்ட பொம்மைகள் 
உலகப் பிரசித்தி .
கடோதகஜன் செட் ,கும்பகர்ணன் செட்,  ,
தசாவதார செட் ,சரஸ்வதி ,
 மாட்டித் தொங்கவிடும் கணபதி ,ஆலிலைக் கண்ணன் 
போன்றவையும் புகழ்பெற்றவையே .

இவற்றுள் காகிதக் கூழ் கொண்டு செய்யப்பட்ட 
மீனாட்சிக் கல்யாணம் பொம்மை உயர்திரு சம்பந்தம் அய்யாவுக்கு 
1992-93 ஆம் வருடத்தில் பூம்புகார் ஸ்டேட் அவார்டு பெற்றுத் தந்தது .

தமிழ் நாட்டில் பாரம்பரியமாக கொலு வைத்துக் கொண்டிருக்கும் 
அத்துனைபேர் இல்லங்களிலும் 
இவர்கள் செய்து அளித்த பொம்மைகள் கட்டாயம் இருக்கும் .
இன்னமும் இவர்களுக்கு பல ஆர்டர் வந்தாலும்கூட 
நபர்களின் பற்றாக குறையால் இவர்கள் 
சிலவற்றை மட்டுமே செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே இவர்களை  பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் 
தேசிய அளவில் நடைபெறும் கலாஉத்சவ் என்ற போட்டிக்காக 
தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் பற்றிய தேடலில் 
எனது பள்ளி மாணவர்களுடனான எனது கலைப் பயணத்திற்கான ,
காகிதக் கூழ் பொம்மைகள் பற்றிய 
ஒரு ஆவணப் படத்திற்காக இவர் வீட்டிற்குச் சென்றபோதுதான் 
நானும் இவரைப் பற்றியும் 
இவர் செய்துவரும் பொம்மைகளின் சிறப்பு பற்றியும் 
நன்கு தெரிந்துகொண்டேன்.

இவருக்கு S . பிரகாஷ்,S .மகேஷ் பாபு ,
S .லட்சுமிநாராயணன்  மகன்களும் உள்ளனர் .
புகழ் பெற்ற பத்திரிகை ஓவியர் மணியம் செல்வன் இவரது உறவினர் .
இவரது மூன்றாம் தலைமுறை இப்போது 
கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறது .
இவருக்குப் பிறகும் இக்கலை அழியாது பண்ணுருட்டிக்கு புகழ் சேர்க்க 
இக்கலையை அடுத்துவரும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு  
ஆர்வம் கொண்ட மாணவச் செல்வங்களுக்கு 
கற்றுத்தந்து அழிந்து கொண்டிருக்கும் 
இக்கலையை புதுப்பித்து உயிர்ப்போடு 
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் 
என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை

இவரது கலைத் திறமையைப் பாராட்டி  , 
பண்ணுருட்டிக்கு புகழ் சேர்த்துவரும் 
இவரது பொம்மைகளின் அழகை பாராட்டி
இவருக்கு பண்ணுருட்டி ,புதுப்பேட்டையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நமது ஸ்வாசிகா இயக்கம் திரு .சம்பந்தம் அவர்களுக்கு 
வாழ்நாள் சாதனைக் கலைஞர் என்ற பெருமை மிகு 
விருதினை அளித்துப் பாராட்டியது 
அவர்   தனது துறையில் மேலும் பல சாதனைகள் படைக்கவும்
நலமாக வாழ நல்லஆரோக்கியத்தையும் வழங்க இறைவனை வேண்டுகிறோம் .

கலைகளில் சாதனை படைக்க  முதுமை ஒரு   தடையல்ல  
என்பதை நிரூபித்து வரும் சம்பந்தம் அய்யாவை 
நீங்களும் வாழ்த்தலாமே !

No comments:

Post a Comment