Thursday 26 March 2015

பூமி நேரங்கள் -3

  பூமி நேரங்கள் -3


               சூழலின் சீர்கேடு மேலும் மேலும் மோசமாவதைத் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும்?
               முதலில் எல்லோரும் 'கால நிலை மாற்றம் ' என்பதகான மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று மனதார எண்ண வேண்டும்.
               ஆற்றல் நுகர்வுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்போம்.அதற்கான குறியீடுதான் மார்ச்-28 -The Earth Hourஇரவு 8-30 மணி முதல் 9-30 மணி வரை அனைத்து மின் உபயோகங்களை நிறுத்தம் செய்தல் .
                  குண்டு விளக்கிலிருந்து (இப்போது இவை அரிதாகவே பயன் படுத்துகின்றார்கள் -அநேகம் பேர் சூழல் விளக்கிற்கு -CFL அல்லது LED -க்கு மாறிவிட்டார்கள் )குழல் விளக்கு வரை அனைத்து ஒளி ஆற்றல்களையும் நிறுத்துவோம்.மின் விசிறிகள்  ,தொலைகாட்சிகள்  ,குளிரூட்டிகள் என உள்ள அத்துணை மின் நுகர்வுப் பொருட்களின் இயக்கங்களையும் கூட இந்த ஒரு மணிநேரம் நிறுத்திவைப்போம் .இது வீடுகளில் வசிப்பவர்களுக்கான குடும்பஸ்தர்களுக்கு மட்டும் என்று நினைக்க வேண்டாம் ,வியாபாரிகள் ,வர்த்தக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இதில் மனமுவந்து பெருந்தன்மையுடன் பங்கேற்க முன்வரவேண்டும் .  உயிர்  காக்கும் அத்தியாவசிய பொருட்கள் -நிறுவனங்கள் மட்டும் விதிவிலக்கு பெறட்டும். ஏனைய பொழுதுபோக்கு தளங்களான திரையரங்குகள் ,உணவகங்கள் , தங்கும் விடுதிகள் ,ஷாப்பிங் மால்கள் போன்றவை ஈறாக அனைத்து தரப்பினரும் தாமாகவே முன்வந்து மின்சார இயக்கத்தினை நிறுத்த வேண்டும்.தாவர எண்ணெய் விளக்குகள் ,மெழுகு வர்த்திகள் ஆகியவற்றின் ஒளியிலும் அந்த ஒரு மணி நேரத்தை -60 நிமிடங்களை -3600 விநாடிகளை -நமது குடும்ப உறுப்பினர்களுடன் -நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசிக் களிப்போம் .
                 சற்றே கற்பனை செய்து பாருங்கள் ! ஒருமணி நேரம் நம் வீட்டில் அனைத்து மின் நுகர்வும் நிறுத்தப் பட்டால் மிச்சமாகும் அல்லது சேகரமாகும் மின் அழகு எவ்வளவு ? நம் வீட்டில் மட்டும் இவ்வளவு மிச்சம் என்றால் ,நம் ஊர் மொத்தமும் எவ்வளவு யூனிட்  மின்சாரம் மிச்சமாகும்?நம் ஊரில் மட்டுமே இவ்வளவு மின்சார சக்தி மிச்சப்பட்டால் மாவட்டம் முழுவதும் ...மாநிலம் முழுவதும் ,,,நாடு முழுமைக்கும் ...? நாட்டிற்கே இவ்வளவு மின்சாரம் மிச்சமெனில் ஒட்டு மொத்த உலகத்திற்கும் ....?  
                  கற்பனை செய்து பாருங்கள் ! நம் தமிழகத்தில் மட்டுமோ அல்லது கடலூர் மாவட்டத்திலோ,பண்ருட்டியிலோ  மட்டும் இப்படி செய்யப் போவது இல்லை .!தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக மனித இனம் செயல் பட வேண்டிய நேரம் இது  அல்லவா?
                 அதனால் மனித இனம் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் - கண்டங்களிலும் -ஏன் ...உலகம் முழுவதுமே  அந்த ஒரு மணிநேரம் இயற்கை ஆர்வலர்களும் , தொண்டு நிறுவனங்களும் தானாகவே முன்வந்து மின்சாரத்தினை நிறுத்தி இந்த இருள் சூழ் உலகை ஒருமணி நேரம் முழுமைக்கும் இயற்கை ஒளியில் மட்டுமே மூழ்கவைக்க தயாராகிறார்கள்  .
                 இதனை உலகில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான WWF.COM  ,SCOUT.ORG உள்ளிட்டவை ஒரு இயக்கமாகவே மாற்றி கடந்த 2011 முதல் செயல்படுத்தி வருகின்றன .விருப்பம் கொண்டு நீங்களும் இணையலாமே இந்த இயக்கத்தில்...                                                                                                       EARTH HOUR - என்ற இணைய தளத்திலும் ,முக நூல் (FACE BOOK ),டுவிட்டர் (TWITTER) பக்கங்களிலும் ,யூ டியூப் (YOU TUBE)தளத்திலும் மேலும் இதனைப் பற்றி விபரங்களை அறியலாம் .
               ஆற்றலை சேமிப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே உதாரணத்திற்காக மின்சார இயக்க நிறுத்தம் பற்றி இங்கு கூறப் பட்டுள்ளது .
  இதுபோல் ,போக்குவரத்து துறையை  எடுத்துக் கொண்டால் நான்கு சக்கர ,இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் திரவ எரிபொருளான பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் அளவுகளை நினைத்துப் பாருங்கள் .எங்கோ ஒரு சில இடங்களில் மட்டுமே மின்சேமகலங்களில் இயங்கும் அல்லது சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன .ஆனால் அவை மிக சொற்பமே .தனிப்  போக்குவரத்தினை பயன்படுத்துவதை தவிர்த்து பொது போக்குவரத்தினை பயன் படுத்தும் மனநிலைக்கு நாம் அனைவரும் ,மாறவேண்டும் .நமக்கு உடற் பயிற்சியை அளிக்கும் -சூழலுக்கு ஊறு  விளைவிக்காத மிதிவண்டிப் பயன்பாட்டை மனதார ஏற்கவேண்டும்.அதற்கு அரசும் தன்  பங்கிற்கு மிதிவண்டியை பயன்படுத்துபவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக சில சலுகைகளை அறிவிக்கலாம் .இது போல எந்த இடங்களில் -எந்த வகைகளில் -எந்த முறைகளில்  ஆற்றலை சேமிக்க இயலுமோ அந்த வழிகளில் முயல வேண்டும்.மக்களை முயலச் செய்ய வேண்டும். மரங்களை வெட்டுவோர் மீதான தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் . மரக் கன்றுகள் நடுவதை மிக மிக  .அதிகப் படுத்தவேண்டும் .குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் ---சாலை விரிவாக்கத்திற்காக நாம் வெட்டி வீழ்த்திய மரங்களின்  எண்ணிக்கையை கேட்டால் தலை சுற்றும், அதற்கான பதில் மரங்களை நட்டுப் பராமரிக்கின்றோமா என்றால்  அநேகமாக இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும் .
            எனவே மனிதன் இனிமேலாவது சுய நலத்தை தொலைத்து-ஆடம்பர வாழ்க்கையை -வசதியான வாழ்க்கையை மட்டுமே மோகிக்காமல் , சூழல் நலத்தையும் எண்ணவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளான் என்பதுதான் நிஜம் .
             
               வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
               வைத்தூறு போலக் கெடும் .
 
என்றான் வள்ளுவப் பெருந்தகை.இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மைக் காக்கும் என்பதை உணர்ந்து சூழல் விரோத நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வோம்.
                இயற்கையைப் பாதுகாப்போம் .எங்கும் மரங்களை நட்டு வைப்போம் .
 பூமி நேரங்கள் (EARTH HOUR )-இயக்கத்தில் நாமும் கலந்துகொள்வோம்.நாம் அறிந்ததைப் பிறருக்கும் பகிர்வோம் .அதற்கு முக நூல் ,டுவிட்டர் ,வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை முறையாகப் பயன்படுத்துவோம் .பூமிப் பந்தைக் காப்போம் .
                  குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கான அறைகூவல் இது . வாருங்கள் !
               உலகம் உங்கள் கைகளில் ...
               இல்லை.... இல்லை ....நமது கைகளில்


             




 .


             
               
                 

No comments:

Post a Comment