Wednesday 28 February 2018

பெயர்ச் சொல் மட்டுமல்ல - நிலா

பெயர்ச் சொல் மட்டுமல்ல - நிலா 

நிலவு 

திங்கள் 

வெண்மதி 

சந்திரன் 

அம்புலி  ...

என நீளும் 

பெயர்ச் சொல் மட்டுமா நிலா ...?

அல்ல ...அல்ல..

அது கவிஞருக்கெல்லாம் 

கவிதைகள்  நெய்திட  கருப்பொருளாகி 

அவர்தம் மனதைத் தூண்டுமோர் 

                                                    வினைச் சொல் !

விண்மீன்கள் இடையில் 

மகாராணிபோல் 

வான்தனில் உலவிடும் 

                                                   இடைச் சொல் !


பெண்களின் அழகினைக் 

கவிதையில் பேசி

கவின் உரித்துக் காட்டிடும் 

                                                 உரிச்  சொல்  !


நாம் நடக்கும் வேளையில் 

நம்முடன் நகர்ந்து 

திரும்பும் திசையில் 

நம்மை நோக்கிச் சிரிக்கும் 

                                                   திசைச் சொல் !

ஆதியில் தோன்றி 

அந்தம் காணா 

அற்புத வரம் பெற்று வந்திட்ட 

                                                  உயிர்ச் சொல் !

இரு எழுத்துக்கள் மட்டும் 

கொண்ட கவிதையாய் 

நம்மை மகிழ்விக்கும் ஒரு 

                                                  தமிழ்ச்  சொல்  !

ஆம்...!

வெறும் பெயர்ச் சொல் மட்டுமல்ல... நிலா !

நம் நிலா !






No comments:

Post a Comment