Wednesday 28 February 2018

இரவு எழுதிய கவிதை

                                                    இரவு எழுதிய கவிதை


மங்கையர் முகமது உவமை கூறிட

                வானது தந்திடும்  ஓர் கொடையோ

மாதம் இருமுறை வளர்ந்தும் தேய்ந்தும்

               வாழ்வது உணர்த்திடும் தத்துவமோ



ஏழைகள் இல்ல இருளது நீக்கிட

               இலவச ஒளியுமிழ் விளக் கதுவோ

ஏகன் தன்முடி அணியாய்த்  தரித்திடும்

              மூன்றாம் பிறையாம்  நிலவதுவோ



ஏழிரு நாட்கள் வளர்ந்து மறுநாள்

               வெண்சுடர் வீசிடும் பௌர்ணமியோ

ஏழிரு நாட்கள் தேய்ந்து அமா

                வாசையாய்  இருண்டிடும் கோளதுவோ


நம்மனம் கொண்ட தனிமை நீக்கிட

                 இரவினில் துணைவரும் நட்பதுவோ

நாடெல்லாம் தாண்டக் கடவுச் சீட்டே

                தேவைப் படாத பறவை யதோ


காரிருள் கூந்தலில்  விண்மீன் வைரங்கள்

               பூட்டி ஒளிர்ந்திடும் பெண்ணனங்கோ

கவின்மிகு குமுத மலரது மலரத்தன்

              கிரணக் கரம்தரும் தாயவளோ


காதலர்க் கெல்லாம் உணர்வினைத் தூண்டிட

               காலம் ஏற்றிய விடிவிளக்கோ

கவிகளுக் கெல்லாம் கருப் பொருளாக

               இரவது எழுதிய கவிதையிதோ 










No comments:

Post a Comment