Friday 1 June 2018

சன் பைன் ஆர்ட்ஸ் ஓவிய முகாம்

சன் பைன் ஆர்ட்ஸ் ஓவிய முகாம்



சன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி ,யாத்ரா ஆர்ட் பவுண்டேஷன் & பசுமை புதுச்சேரி  ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து அண்மையில் அதாவது  வியாழன்  ( 31-05-2018) அன்று பசுமை  தலைப்பிலான  ஓவிய முகாமை நடத்தின .அதுமட்டுமன்றி 31-08-2018 முதல் 10-06-2018 வரையிலும்  நடைபெறும் வண்ணம்  குழுக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .




சன் பைன் ஆர்ட்ஸ் அகாடமியின் தலைவர்  திரு  ரவி அவர்கள் அழைப்பின் பேரில் ஓவியக் கண்காட்சி பங்கேற்பாளராகவும் ,விழாவிற்கான விருந்தினராகவும் சென்றிருந்தேன் .

உடன் எங்கள் பகுதியில் உள்ள ஓவிய ஆர்வம் உள்ள எட்டு மாணவர்களையும் உடன்  அழைத்துச்  சென்று இருந்தேன் .

இடம் : யாத்ரா ஆர்ட் பவுண்டேஷன் ,குயிலாப் பாளையம் ,ஆரோவில் .
ஆரோவில் நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பேசிக்கொண்டே  பாத யாத்திரை மூலம் யாத்ராவை அடைந்தோம் .
நல்ல பசுமையான இயற்கைக் சூழல் . சிலு சிலுவென காற்றை அள்ளிவீசும் மரங்கள் ...என்னை பறி என்று என் கைகளைத்  வண்ணம் காய்த்துத் தொங்கிய மாமரங்கள் ,பண்ணுருட்டியில்தான் நான் வளர்வேனா ...இங்கும் பார் என்னை என்று கூவி அழைத்த காய்களால் நிறைந்த பலா மரங்கள் என இயற்கை கொஞ்சும் சூழல் ...!

ஓவியர்கள் இளமுருகன் ,மதிவாணன் ,ரவி ஆகியோர் எங்களை வரவேற்று உபசரித்தனர் .இவர்கள் ஏற்கெனவே நாங்கள் நடத்திய ஓவிய பயிற்சி முகாமில் கலந்துகொண்டு எங்கள் பகுதி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள்.இவர்களுடன் ஓவியர்கள் திருமதி பூங்கொடி , தீப லக்ஷ்மி ஆகியோரையும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு பல புதிய ஓவியர்களின் அறிமுகமும் கிடைத்தது கூடுதல் நிறைவு .

காலை 10-30 மணியளவில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு துவங்கியது .ஓவியர்களுக்கும் , மாணவர்களுக்கும் ( வளரும் ஓவியர்களுக்கு) ஓவியம் தீட்டுவதர்கான வெள்ளை சார்ட் தரப்பட்டது . வருகை தந்திருந்த 50 க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பசுமை  என்கின்ற தலைப்பில் ஓவியங்களை தீட்ட ஆரம்பிக்க ,மாலை நடைபெறும் கண்காட்சி துவக்கவிழாவுக்கான ஓவியங்களை காட்சிப் படுத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

மாணவர்கள் தங்களுக்கு பிடித்த இடத்தில அமர்ந்து வெள்ளைக் காகிதத்தை பச்சை வர்ணங்கள் கொண்டு தூரிகையால் அலங்கரிக்க ஓவியர்கள் மற்றொருபுறம் அமர்ந்து கலக்க ஆரம்பித்தார்கள் ...வண்ணங்களும் கலக்கல்தான் ...ஓவியங்களும் கலக்கல்தான் .

பகல் 1-30 மணியளவில் அனைவருக்கும் சுவையான  உணவு பச்சைப் பசேலென்ற தலைவாழையிலையில் அன்பு சேர்த்து பரிமாறப்பட்டது .

யாத்ரா சீனிவாசன் அவர்களின் குடும்பமே பம்பரமாக சுழன்று உபசரித்துக் கொண்டிருந்தது .

உணவுக்குப் பின்னர் மீண்டும் கலைப்பணி துவங்கியது .ஒவ்வொருவராக ஓவியங்களை நிறைவு செய்து அளிக்க அவையும் காட்சிப்படுத்தப் பட்டன .

புதுவை மண்ணானது வளரும் ஓவியர்களுக்கு ஒரு சிறந்த களம் அமைத்துக் கொடுக்கின்றது .ஆனால் எம் பகுதி மாணவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் மிகக் குறைவு .எனவே என்னுடன் வந்த மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்வாகவும் , வித்தியாசமான அனுபவமாகவும் ...அதுவும் ஒரு நாள் முழுக்க ஓவிய சூழலிலிலேயே இருந்த மாற்று நிகழ்வாகவும் மனதை ஆக்கிரமித்தது எனலாம் .

மாலை 5.30 மணியளவில் விழா துவங்கியது .

புதுவை முதல்வரின் பாராளு மன்ற செயலர் மேதகு   K .லட்சுமி நாராயணன்           அவர்கள் கலந்துகொண்டு ஓவியக்  கண்காட்சியைத் திறந்துவைத்தார் .அவரே தனது கரங்களால் குத்துவிளக்கினை ஒளியூட்டத் துவங்க ,மேலும் புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்தின் முதல்வர் Dr. திரு. P .v .பிரபாகரன் அவர்கள், நான் ,யாத்ரா சீனுவாசன் ,சன் பைன் ஆர்ட்ஸ் ரவி ஆகியோர் தொடர்ந்து குத்துவிளக்கினை ஒளியூட்டினோம் .பின்னர் விருந்தினர்கள் அனைவரும் ஓவியங்களை பார்வையிட தமது ஓவியங்கள் குறித்த விளக்கங்களை  ஒவ்வொரு ஓவியரும் அளித்தனர் . பின்னர் முறைப்படி மேடையில் விழா துவங்கியது . யாத்ரா சீனுவாசன் அவர்கள் சிரித்த முகத்துடன் தனது சிறப்பான கணீர் குரலில் நிகழ்வுகளைத் தொகுத்தவிதம் அருமையோ அருமை . முதல் நிகழ்வாக யாத்ரா கலைக்குழுவினரின் பரத  நாட்டியம் , வீணை இசை நிகழ்வுஎன  துவக்கமே கலை காட்டியது..மன்னிக்கவும் ..! களைகட்டியது  ...

பின்னர் விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடையை அலங்கரிக்க அழைக்கப் பட அந்த மரங்கள் சூழ்ந்த இயற்கையான மேடை அமைப்பு விருந்தினர்களால் நிறைந்தது .

சன் ரவி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் .
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர் .யாத்ரா சீனிவாசனின் சிறுகதை தொகுப்பு நூலும் ஓவியர்       அவர்களின் ஓவியம் தொடர்பான நூலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன .
ஓவியக் கலை குறித்த உரைவீச்சு வாழ்த்துரையானது .
நாடாளுமன்றச்  செயலரின் பேச்சு அவரது அரசியல் தாண்டிய கலைஆர்வத்தையும் ,ஈடுபாட்டையும் ரசனையையும் வெளிப்படவைத்தது எனலாம் .

தொடர்ந்து பங்கேற்ற அனைத்து ஓவியர்களுக்கும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட பங்கேற்ப்புச் சான்றிதழும் அவரது கரங்களால் வழங்கப்பட்டன.

இந்தக் கலை விழா நிறைவடையும் நேரம் நெருங்க சன்  பைன் ஆர்ட்ஸ் செயலர் திரு மதிவாணன் அவர்கள் நன்றியுரைக்க 7.30மணியளவில் எங்களது கலைக் குளியல் நிறைவுபெற்றது .

விழா நிகழ்வுகள் முடிந்து வெளிவரும்போது என் மனதில் தோன்றிய வினா இதுதான்.ஒருகாலத்தில் கலை வளர்த்தெடுத்தது இத் தமிழ் மண்...ஆனால் இப்போதோ .ஓவியம் மற்றும் கலை சார்ந்த  நிகழ்வுகள் தமிழ் மண்ணில் அதிகம் முன்னெடுக்கப்படுவதில்லை ...அப்படியே எங்காவது ஒருசில தனியார் அமைப்புகள் இப்படிப்பட்ட நிகழ்வுகளை நடத்தினாலும் அரசு , அரசியல்வாதிகள்அல்லது அரசு சார்ந்த அமைப்பினரோ அல்லது ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை .இதுபோன்ற கலை சார்ந்த நிகழ்வுகள் நமது சமூக சூழலில் நடைபெறவேண்டும் .தனியார் தொண்டு நிறுவனங்கள் , ரோட்டரி ,அரிமா போன்ற சர்வதேச அமைப்புகள் தாங்கள் நடத்தும் மருத்துவ முகாம்களைத் தாண்டி  இதுபோன்ற கலை , ஓவிய முகாம்களை அவ்வப்போது அமைத்து வளரும் கலைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தமுனைய வேண்டும் .அரசும் இது போன்ற நிகழ்வுகளை  வார விடுமுறை நாட்களில் நடத்த யோசிக்கலாம் .மத்திய அரசு நடத்தும் கலா உத்சவ் ஒரு முன்னோடி நிகழ்வு என்றாலும் கூட அடிக்கடி நடத்தப்படுவது இல்லை .மாவட்ட நிர்வாகமும் ,உள்ளாட்சி அமைப்புகளும் கூட இப்படிப்பட்ட கலை நிகழ்வுகளை அவ்வப்போது நடத்தும்போது வளரும் பருவத்தினர் பயன்பெறுவதோடு நமது கலை பூமி கலவர பூமியாகாமல் கலைவளர்க்கும் பூமியாகும் ...யோசிப்பார்களா...நமது ஆட்சியாளர்களும் ...மக்கள் நலம் சார்ந்த சிந்தனையாளர்களும் ...?


















































No comments:

Post a Comment