Tuesday 29 May 2018

ஒரு உன்னதம் உப தொழிலாகிறது -1

ஒரு உன்னதம் உப தொழிலாகிறது

இது 1999 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் , ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நான் எழுதிய ஒரு கட்டுரை .

அப்போது நான் ஆசிரியர்தான் ...ஆனால் அரசுப் பணி அல்ல .
தனியாய் ஒரு ஆங்கில நர்சரி துவக்கப் பள்ளியை நடத்தி வந்ததோடு அதே பள்ளியிலேயே கற்பித்தல் பணியையும் நடத்திவந்தேன் .என் தந்தையும்கூட ஒரு ஆசிரியர்தான் .

ஆசிரியர் பணியின் மீது ஒரு இடையறாத காதல் இருந்தது சிறுவயதிலேயே எனக்கு .

அதில் ஏகப்பட்ட கனவுகளும் ,திட்டமும் அவற்றை நிறைவேற்றத் துடிக்கும் முனைப்பும் எனக்குள் சிறுவயது முதலே இருந்தது எனலாம் .

அவற்றை எல்லாம் நான் நடத்திவந்த எனது பள்ளியில் செயல்படுத்தி ஓரளவு வெற்றியும் கண்டேன் என்றுதான் கூறவேண்டும் .

அப்போது எனது பார்வையிலான அரசுப்  பள்ளி ஆசிரியர்கள் குறித்து எனது எண்ணங்களுக்கு ஒரு கட்டுரை வடிவம் தந்தேன் .

அது சமயம்  புதுப்பேட்டை கவிஞர் . கல்விப்பணித் திலகம் திரு N .தாஜுதீன் அய்யா அவர்களின் மகன் மைதீன் அவர்கள் எனக்கு பழக்கமானார் . மாணவன் என்ற பருவத்திலிருந்து இளைஞன் என்ற வடிவத்துக்கு ... நிலைமாற்றம் அடைந்துகொண்டிருந்தவர் .துடிப்புள்ள , தேடலுள்ள அநியாயத்தைக் கண்டு கொதிக்கின்ற இள ரத்தம் கொண்டவர் .தட்டிக் கேட்பதற்கென்றே சமூகத்தின் அரண் என்ற இயக்கத்தை துவக்கியவர் .அதற்கான சின்னம் @ இலச்சினை ( logo ) கட வரைந்து தந்துள்ளேன் .அவர் நடத்திய ஒரு புரட்சி இதழ்தான் அணுகல் என்ற விளம்பர இதழ் . அனைவருக்கும் இலவசமாக வழங்கப் பட்டு வந்தது .

நான் கூட இதன் தாக்கத்தில் ஸ்வாசிகாவின் அறிவியல் அலைகள் என்ற மாத சஞ்சிகையை விளம்பர தாரர் மூலம் இலவசமாக நடத்திவந்தேன் .


அந்த அணுகல் என்னும் சஞ்சிகையில் மலர் 1  ( ஆகஸ்ட் மாதம்  வெளியானது இதழ் 1 ) 2 ஆவது இதழில்  ( செப்டம்பர் மாதம் வெளியானது )இக்கட்டுரையை வெளியிட்டு சிறப்பித்தார் தோழர் மைதீன் ..என் கட்டுரை ஒரு பத்திரிகையில் வெளிவந்தது மிக்க மகிழ்ச்சியளித்தது .

அந்தக் கட்டுரைக்கான பின்னூட்டங்களும் வாசகர் கடிதங்களாக மைதீனுக்கும் , எனது தனிப்பட்ட முகவரிக்கும் கூட வந்து என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கின .அடுத்த அணுகல் இதழில் அவையும் வெளியிடப்பட்டன .

இப்போது இக்கட்டுரை வெளியாகி 19 வருடங்கள் ஆகிவிட்டன .
அணுகல் பத்திரிகை வெளிவருவதில்லை

எனக்கு 2002 ல் அரசுப் பணி கிடைத்துவிட்டது .
மைதீன் பாண்டிச்சேரியில் வாழ்ந்துவருகிறார் ...
அவரது இலக்கிய & சமூகப் பணிகள் முக நூலில் பதிவதன் மூலம் தொடர்கிறது .

நான் இதுவரை 4 நூல்களை வெளியிட்டுள்ளேன் மேலும் மனவண்ணங்கள் என்னும் வலைப்பூ ( blog ) மூலமும் முகநூல் , ட்விட்டர் மூலமும் எனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறேன் .

நிற்க,

ஒருமுறை  மைதீன்  அவர்களை  சந்தித்தபோது சந்தேகத்துடன் கேட்டேன் .மைதீன் அணுகல் பத்திரிகையில் ஒருமுறை ஆசிரியர்  குறித்து  கட்டுரை எழுதியிருந்தேனே ...அதன் பிரதி ஏதேனும் கைவசம் வைத்திருக்கிறீர்களா?என்று சற்றே சந்தேகத்துடன்தான் கேட்டேன் .சிரித்தபடி  அதெல்லாம் பத்திரமாக இருக்கிறது ...நிச்சயம் தருகிறேன் எனக் கூறிச்சென்றார். பின்னர்  அது பற்றி சுத்தமாக மறந்துபோனேன் .

ஆனால் ,அன்றைய அணுகல் பத்திரிகையின்  ஒரு ஒளிநகல் ஒன்று மைதீன் மூலம் சமீபத்தில் கிடைத்தது .வீட்டுக்கே வருகை தந்து கொடுத்துவிட்டுப் போனார் .

அக்கட்டுரையை வாசித்தேன் .வியந்தேன் .

எழுதிய அன்றைய நாளுக்கும் 19 வருடங்கள் கழித்து அக் கட்டுரையை வாசிக்கிற இன்றைய நாளினுக்குமான நீண்ட இடைவெளியில் ஆசிரியர் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் என்னென்ன ?

 நினைத்துப் பார்க்கிறேன் ...
கண்ணுக்கு கெட்டியதூரம் வரையிலும் முன்னேற்றம் ஒன்றும் காட்சியளிக்கவில்லை .

மாறாக ஆசிரியர்களின் மேல் அள்ளிப் பூசப்படும் சேற்றின் அளவுதான் அதிகரித்திருக்கிறது .

அவர்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கும் சுமைகள்தான் அதிகமாயிருக்கின்றன .

வெகு தூரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நம்பிக்கை நட்சத்திரங்கள் காட்சியளித்தாலும் கூட வெறுமை வேதனை அளிப்பதாகவே உள்ளது .

ஆசிரியப்பணி இன்னும் கடினமாய் இருக்கிறது .

கடினமாக ஆக்கப்பட்டு இருக்கிறது .

ஒருமுறை  பள்ளியில் ஒரு வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த மாணவர்களிடம்  நீங்கள் எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறீர்கள் என்று வினவியபோதுமருத்துவர்  , பொறியாளர் , காவல்துறை ,  விளையாட்டு வீரர்,ஓவியத்துறை ,திரைப்பட இயக்குனர்  ,  இன்னும் பிற துறைகளின் பெயர் வந்ததே தவிர   ஒருமாணவர்கூட   நான் ஆசிரியராகப் போகிறேன் என்று சொல்லவே  இல்லை .இது பற்றி அம்மாணவர்களிடம் நான்  காரணம்கேட்டபோது ஒரு மாணவன் எழுந்து நமுட்டுச் சிரிப்புடன் சொன்ன பதில் இது .

சார்...நாங்களே உங்கள இந்த பாடுபடுத்தறோமே ...எதிர்காலம் எப்படியிருக்குமோ தெரியல ...பாவம் சார் நீங்கல்லாம் ...வாத்தியாருங்கள  எங்கள மாதிரி பசங்க ரொம்பவே ஓட்டறாங்க ... அடங்க மாட்டேன்றாங்க ...ஆனா எங்களுக்கு எங்களுக்கு உங்க அளவுக்கெல்லாம் பொறுமையில்லை சார் ...அதான் வாத்தியார் வேலைய நினைச்சாலே ஜெர்க் ஆகிறோம் சார் .

எப்படியிருக்கிறது  பாருங்கள் ...!ஆசிரியர்  பணியின் மீதான மாணவர்களின் பார்வை  ...!

மாணவர்களின் பார்வை மட்டுமா ...ஒட்டுமொத்த சமுதாயத்தின் பார்வையும்கூட நாறித்தானே போய்விட்டது ...
சாரி ...மாறித்தானே போய்விட்டது...!

ஆம் ..!

ஆசிரியர்களுக்கான சமுதாய மரியாதை மிக வேகமாக சறுக்கிக் கீழிறங்கிக்கொண்டிருக்கிறது .

ஒத்துழைப்பே வழங்காத பெற்றோர் ,  ஆசிரியர்களை ஏளனப் பார்வை பார்த்து எதற்குமே கட்டுப் பட மறுத்து தத்தாரிகளாகிக் கொண்டிருக்கும் மாணவர் கூட்டம் , கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது கட்டளைகளை மட்டுமே பிறப்பிக்கும் கல்வி அதிகாரிகள் , இடையில் அவர்களை விழி பிதுங்க வைக்கும் கல்வி சாராத பணிகளான ஆதார் கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை பணி ,தேர்தல் பணி ,ரேஷன் கார்டு ..என இன்ன பிற புள்ளிவிவர சேகரிப்புப் பணிகள் உயர் மதிப்பெண்கள் மற்றும் 100 %  தேர்ச்சி விழுக்காடு துரத்தும் அழுத்தம் ...பேனை பெருமாளாக்கி பெருமாளை  பேயாகக் காட்டி TRB ஏற்றத்துடிக்கும் ஊடகங்கள் ...என இன்னும் இன்னும் சொல்லமுடியாத இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஆசிரியர்கள் ...!

 என்ன செய்யலாம் ...?

சரி ...அதற்குமுன் நான் எழுதியிருந்த அக்கட்டுரையை வாசிப்போமா ...?

                                                                                                                        ( வாசிப்போம் ...)






























No comments:

Post a Comment